- நடைபெற்றுக்கொண்டிருக்கும் சென்னை இசைவிழாவில் எந்தக் கச்சேரியிலாவது ஹார்மோனியத்தைப் பார்த்திருக்கிறீர்களா? ‘நமது சங்கீதத்தில் பக்கவாத்தியமாக ஹார்மோனியம்பயன்படுத்துவதற்கு நான் எதிராகவே இருக்கிறேன். நமது ஆசிரமத்திலிருந்து அது முற்றிலுமாக வெளியேற்றப்பட்டுவிட்டது. அகில இந்திய வானொலியிலிருந்தும் அதைக் கைவிடச் செய்தால், இந்திய இசை உலகிற்குப் பெரிய சேவையாக அது இருக்கும்’ - கொல்கத்தா வானொலி நிலையத்துக்கு ரவீந்திரநாத் தாகூர் எழுதிய கடிதத்தின்(19.1.1940) ஒரு பகுதி இது. ‘சங்கீத சிந்தனை’ என்கிற தாகூரின் தொகுப்பில் இக்கடிதம் இடம்பெற்றிருக்கிறது.
- தாகூர் மட்டுமல்ல, மேற்கத்திய இசை வல்லுநரான ஜான் போல்ட்ஸ் (1880–1939) போன்றோரும் இந்திய இசையோடு ஹார்மோனியத்தைக் கலப்பதை விரும்பவில்லை. ‘ஹார்மோனியம் இந்தியத் தன்மையும் இசைத்தன்மையும் அற்ற இசைக் கருவி’ என்று அவர் எழுதினார் (‘தி இந்தியன்லிஸனர்’, 22-6-1938). அகில இந்திய வானொலியில் இன்றும் ஒலிக்கும் அடையாள இசையை வால்டர் காஃப்மேனுடன் இணைந்து உருவாக்கியவர் போல்ட்ஸ். ஹார்மோ னியத்துக்கு எதிரான அவரது கட்டுரையின் தலைப்பு ‘Harm-monium’.
‘ஆபாசமான வாத்தியம்’
- ஹார்மோனியம் இந்திய வாத்தியம்அல்ல; அது மேற்குலகிலிருந்து 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவுக்குள் நுழைந்தது. அலெக்சான் மரிடி பெய்ன் என்ற பிரெஞ்சுக்காரரின் பெயரில் ஹார்மோனியத்தின் வடிவமைப்பு உரிமை இருக்கிறது. திரினி என்ற பிரெஞ்சுக்காரர் கண்டுபிடித்த கருவி என்று தமிழறிஞர் மு.அருணாசலம் எழுதியுள்ளார்.
- ‘மெலாடியான்’, ‘ரீட்’, ‘ஆர்கன்’, ‘பம்ப் ஆர்கன்’ என்னும் பெயர்களாலும் ஹார்மோனியம் அழைக்கப்படுகிறது. தமிழ்ப் பெயரை ஏனோ இதுவரை பெறவில்லை. ஜான் போல்ட்ஸின் மனைவியான மாட் மெக்கார்த்தி (1882-1967) இந்திய இசையில் மட்டுமல்ல, மேற்கத்திய இசையிலும் ஹார்மோனியத்தின் பயன்பாட்டை எதிர்த்தவர்.சாவி பயன்படுத்தப்படும் இசை வாத்தியங்கள் தம்முடையவலிமையான இசையால் வாய்ப்பாட்டுத் திறனை வீழ்த்திவிடும் என்பது அவரது கருத்து.
- இதைச் சொல்வதற்கு ஐரிஷ் பெண்மணியான மெக்கார்த்திக்கு என்ன தகுதி என்று நீங்கள் நினைக்கலாம். அவர் வயலின் கற்றவர் மட்டுமல்ல, அன்னிபெசன்ட்டுடன் வந்து நான்கு ஆண்டுகள் இந்தியாவில் தங்கி இந்திய இசையைப் பயின்றவரும்கூட. அரசியல் தலைவரும் அறிவாளருமான நேருவும் ஹார்மோனியத்தை மறுத்தார்.
- “இந்த ஆபாசமான வாத்தியத்தைப் பகிஷ்கரிப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ளப்படும்” என்ற நம்பிக்கையை விடுதலைக்குமுன்பே தெரிவித்தவர் அவர். கல்வி வல்லுநரும் பின்னாளில் அரசியலுக்கு வந்தவருமான டாக்டர் ஜாகீர் ஹுசைன், ஜாமியா மில்லியா இஸ்லாமியக் கல்லூரித் தலைவராக இருந்தபோது ஹார்மோனியத்தைத் தடை செய்யலாம் என்று அகில இந்திய வானொலிக்குக் கடிதம் எழுதினார்.
கைவிடாத கலைஞர்கள்
- இத்தகைய கருத்துகளால் தார்மிகப் பலம் பெற்ற அகில இந்திய வானொலி, 1940 மார்ச் ஒன்றாம் தேதி தன் நிகழ்ச்சிகளில் ஹார்மோனியத்தைத் தடைசெய்தது. வானொலி நிலையம் நடத்திவந்த ‘இந்தியன் லிஸனர்’ இதழில் தடையை ஆதரிக்கும் கட்டுரைகளும் தொடர்ந்து வெளியாகின.
- ‘ஹெர்-மோனியம்’ (Herr-monium) என்ற தலைப்புடன் கேலிச்சித்திரமும் அதில்வெளியானது. ‘ஒரு சர்வாதிகாரியின் எழுச்சியும் வீழ்ச்சியும்’என்ற தலைப்பிட்டு ஹார்மோனியத்தைப் பற்றிப் போர்க்காலத்துக்குப் பொருத்தமான ஒரு நிகழ்ச்சியையும்கூட அது ஒலிபரப்பியது (13.4.1940).
- எனினும் சாதாரண இசைஞர்கள் ஹார்மோனியத்தைக் கைவிடவில்லை. அதைத் திரும்பவும் வானொலிக்குள் கொண்டுவரப் போராடினர். பிரிட்டிஷ் இந்தியாவில் விதிக்கப்பட்ட தடை, விடுதலை அடைந்த இந்தியாவிலும் நீடித்தது. வல்லப பாய் படேல், ஆர்.ஆர்.திவாகர், பி.வி.கேஸ்கர் போன்ற ஒலிபரப்புத் துறை அமைச்சர்களைச் சந்தித்துக் கோரிக்கைகளைக் கலைஞர்கள் வைத்தனர்.
- கோபால ரெட்டி ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்தபோது, புணேயில் வைத்து முற்றுகை இடப்பட்டார். எனினும் அமைச்சகத்தின் உறுதி தளரவில்லை. 1930இல் ஹார்மோனியத்தைத் தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய நேரு, சுதந்திரத்துக்குப் பின்னர் வானொலியில் தடையை நீட்டிக்க முடிந்ததைத் தவிர, நாடு முழுவதற்குமான தடையை அவரால் விதிக்கவே முடியவில்லை. இது ஹார்மோனிய ஆதரவாளர்களின் வலிமையை உணர்த்துகிறது.
- பாரதியும் ஹார்மோனிய இசையை விரும்பாதவர்தான். “ஒரு வீட்டிலே ஹார்மோனியம் வாசித்தால் பக்கத்தில் 50 வீடுகளுக்கு அது கேட்கும். அறியாதவன் தன் அறியாமையை வீட்டில் இருந்தபடியே இரண்டு மூன்று வீதிகளுக்குப் பிரச்சாரம் பண்ண வேண்டுமானால், அதற்கு இந்தக் கருவியைப் போல உதவி வேறொன்றும் இல்லை.
- வீணையைத் தவறாக வாசித்தால் வீட்டில் உள்ள ஜனங்களுக்கு மாத்திரம்தான் துன்பம். ஹார்மோனியம் ஒரு தெரு முழுவதையும் கெடுத்துவிடுகிறது. ஒரு தேசத்தாரின் செவியைக் கெடுத்து, சங்கீத உணர்ச்சி குறையும்படி செய்ய வேண்டுமானால், கிராமம் தோறும் நான்கைந்து ஹார்மோனியம் பரவும்படி செய்தால் போதும்” - (‘சங்கீத விஷயம்’ கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி பாடல்கள், எட்டாம் தொகுதி).
- அந்நிய வஸ்து என்பதற்காகப் பாரதி ஹார்மோனியத்தை எதிர்க்கவில்லை. இந்திய இசையின் நுட்ப அம்சங்களை அது மழுங்கச்செய்கிறது என்பதே மற்றவர்களைப் போல அவரது குற்றச்சாட்டும். பிடில் என்று பெயர் படைத்திருந்த வயலினைப் பாரதி எதிர்த்ததாகத் தெரியவில்லை.
இசைக் கலைஞர்களின் அடையாளம்
- ஹார்மோனிய ஆதரவாளர்களின் கோரிக்கை வலுப்பெற்றதை அடுத்து ஹார்மோனியத்தின் மீதான தடையை வானொலி 1970இல் விலக்கிக்கொண்டது. ஆனால், செவ்வியல் கலைஞர்களின் ஒவ்வாமை மட்டும் இன்றும் நீடிக்கிறது. எஸ்.ஜி.காசி ஐயர் உள்பட சில பிரபல இசைவாணர்களும் ஹார்மோனியத்தைப் பயன்படுத்தினர் என்பது வேறு.
- எனினும் இளையராஜா, எம்.எஸ்.விஸ்வநாதன், தேவா போன்ற திரை இசைக் கலைஞர்கள் ஹார்மோனியத்துடன் காட்சி தருகின்றனர். அதன் மூலம்தான் பாடகர்களுக்குப் பாடல் சொல்லித் தந்தனர் / தருகின்றனர். சமயச் சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியார் பேசிக் கொண்டிருக்கையில் இடையில் அடிக்கடி பாட முயற்சிப்பார்.
- அவரது குரலின் கரகரப்பைக் குறைத்துப் பாடலை நம் மனத்துக்குக் கொண்டுசெல்வது அவர் கையில் எப்போதும் இருக்கும் ஹார்மோனியம்தான். அந்தக் கால மேடைப் பாடகர்கள், வீதியில் சுற்றித் திரியும் ஏழைக் கலைஞர்கள், சினிமாவில் வாய்ப்புக் கேட்டு அலையும் இசைக் கலைஞர்கள் போன்ற எளியவர்களோடு எப்போதும் காட்சி தருவது ஹார்மோனியம்தான்.
- கமகம் குழையக் குழைய வராவிட்டால் என்ன, கச்சேரியில் பயன்படுத்தாவிட்டால் என்ன, பாடல் கற்றுக்கொள்ளவும் சாதகம் செய்யவும் ஹார்மோனியம் என்றும் பயன்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது, இருக்கட்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (01 – 01 – 2024)