TNPSC Thervupettagam

செவிலியர்களின் குரலுக்குச் செவி சாய்ப்போம்

October 12 , 2023 470 days 315 0
  • தமிழக அரசு மருத்துவமனைகளிலும், கிராமப்புற, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பணியாற்றுகின்ற செவிலியர்கள், கடந்த சில நாள்களாக உண்ணா நிலைப் போராட்டம், முற்றுகைப் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அரசுப் பணியில் இருந்தாலும் நிரந்தரமற்ற தொழிலாளர்களாகவும், ஒப்பந்தத் தொழிலாளர்களாகவும் குறைவான சம்பளத்துக்குப் பணியாற்றும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மக்களின் உடல் நலம், உயிர்ப் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்துகிற பணியைச் செய்கின்ற செவிலியர்களுக்கு ஏன் இந்த நிலை?

சமமற்ற சம்பளம்

  • சுகாதாரம் - மருத்துவப் பணிகளைச் சிறப்பாக நிறைவேற்றுவதில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. பொது மருத்துவம், தனியார் மருத்துவ வசதிகள் இங்குதான் அதிகமாகஉள்ளன. தரமான சிகிச்சை தருவதில் முதலிடத்தில் இருந்தாலும், செவிலியர்களின் உழைப்பை மேலாண்மை செய்வதில் தமிழகம் 28ஆவது இடத்தில்இருக்கிறது. அப்படி என்றால், அந்த அளவுக்கு அவர்களிடமிருந்து உழைப்பு சுரண்டப்படுகிறதா எனும் கேள்வி எழுகிறது.
  • தமிழக ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் செவிலியர்களில் 55% பேர்தான் நிரந்தரப் பணியாளர்கள். மற்றவர்கள், தொகுப்பூதியம் பெறும் தற்காலிக, ஒப்பந்தத் தொழிலாளர்கள்தான். தமிழகம் எங்கும் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாகத் தேர்வு நடத்தப்பட்டு, ஏறக்குறைய 10 ஆயிரம் செவிலியர்கள் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிக்கு அமர்த்தப்பட்டனர். இரண்டு வருடங்களுக்குள் பணி நிரந்தரம் செய்யப்படும் என்று கூறித்தான் அவர்களுக்குப் பணி ஆணை வழங்கப்பட்டது. அந்த நம்பிக்கை பொய்த்துவிட்டது.
  • நிரந்தரப் பணியாளர்களாக ஆக்கப்பட்ட சொற்ப எண்ணிக்கையிலான செவிலியர்கள் மட்டும் ரூ.48 ஆயிரம் ஊதியம் பெறுகிறார்கள். தொகுப்பூதியம் நிர்ணயிக்கப்பட்ட தற்காலிக செவிலியர்கள் ரூ.18 ஆயிரம் மட்டுமே பெறுகிறார்கள். ஒரே மாதிரியான பணியைச் செய்தாலும் ஒரு தரப்பினருக்கு மட்டும் ஊதியம் குறைவு என்பது அறமற்றது. எனவே, இதை விசாரித்த உயர் நீதிமன்றம் செவிலியர்களுக்கு, ‘சம வேலைக்குச் சம ஊதியம்வழங்க வேண்டும் என்று 2018ஆம் ஆண்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால், அந்த உத்தரவை இன்று வரை தமிழக அரசு நிறைவேற்றவில்லை.

தொடரும் வேதனைகள்

  • கரோனா காலகட்டத்தில் அவசரத் தேவைக்காக 2,500 செவிலியர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள். இரண்டு ஆண்டுகள்அவர்கள் பணி செய்து முடித்த பிறகு, அவர்களுக்கு வேலையில்லை என்று சொல்லி வீட்டுக்குஅனுப்பிவிட்டது அரசு. அவர்களும் வாரியத்தின் மூலம் முறையாகத் தேர்வு எழுதிப் பணிக்கு வந்தவர்கள். தமிழ்நாட்டில் சுமார் 17,000 நிரந்தரப் பணியிடங்களும், மேலும் 13,000 தொகுப்பூதியத்துக்கு உரிய பணியிடங்களும் காலியாக உள்ளன.
  • வயது மூப்புடன் தற்காலிகப் பணியாளர்களாகச் சேர்ந்த செவிலியர்கள், காலம் முழுவதும் குறைவான சம்பளத்துடன் தற்காலிகப் பணியாளர்களாகவே பணிசெய்து வேலையைவிட்டு ஓய்வுபெற வேண்டிய சூழலும் இருக்கிறது. இதனால், பலர் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில், மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதைப் பார்க்க முடிகிறது. அவர்கள் ஓய்வுபெறும்போது எந்தவிதமான பலனும் இல்லாமல் வெறும் கையுடன்தான் வீட்டுக்குச் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது.

தேசிய மருத்துவ ஆணையம்  

  • இந்தியப் பொது சுகாதார நிறுவனங்களின் பரிந்துரைகளின்படி, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்பப் பணி செய்யும் செவிலியர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் இல்லை. ஓர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் குறைந்தது 4 செவிலியர்களாவது வேலை செய்ய வேண்டும். அப்போதுதான் சுழற்சி முறைப்படி அவர்கள் பணிசெய்து தொடர்ந்து 24 மணி நேரமும் பணி நடப்பதற்கு உகந்த சூழல் நிலவும். ஆனால், தற்போது ஒருவர் அல்லது இருவர்தான் பணி செய்கிறார்கள்.
  • ஒருவர் விடுப்பில் சென்றால் அவரது வேலைச் சுமை இன்னொருவரின் தலையில் விழும். இதனால் சில நேரம் 12 மணி முதல் 18 மணி நேரம் வரையும் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் செவிலியருக்கு ஏற்படுகிறது. அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய வார விடுமுறை, மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு போன்றவை எல்லாம் தடைபட்டுப் போகின்றன. நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பது என்பது அந்தந்த நேரத்தில் செய்து முடிக்க வேண்டிய பணி. அதை ஒருபோதும் தள்ளிப்போட முடியாது.

சொந்த வாழ்க்கையிலும் சோகம்

  • மற்ற துறைகளில் பணியாற்றுகின்ற அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு கொடுக்கப்படுகிறது. ஆனால், காலம் முழுவதும் மற்றவருக்குப் பிரசவம் பார்க்கிற செவிலியர் ஒருவர் தன்னுடைய பிரசவத்துக்காகச் செல்லும்போது, அவருக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை கிடைப்பதில்லை.
  • இதனால் பொருளாதாரத்தில் சிக்கலுக்கு உள்ளாகி, குடும்பத்தில் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் அவர்கள், நான்கு மாதக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு மீண்டும் தற்காலிக வேலைக்குத் திரும்பும் கொடுமை நீடிக்கிறது. வேலை செய்கின்ற இடத்தில் பச்சிளம் குழந்தையையும் பார்த்துக்கொள்ள வேண்டும். நோயாளிகளுக்குச் சிகிச்சையும் அளிக்க வேண்டும். இது எவ்வளவு துயரம்!
  • தொகுப்பூதியம் பெறும் செவிலியர்களுக்கு வருடம்தோறும் பணி மாற்றம் செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுவதில்லை. தொலைதூரத்தில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை செய்வதால், வீட்டில் பிள்ளைகளை வளர்ப்பது, வீட்டு வேலைகளைப் பார்ப்பது கடினமாகிவிடுகிறது.
  • குடும்பம், கணவன், பிள்ளைகளை விட்டுவிட்டுத் தொலைவில் பணி செய்கின்ற செவிலியர்கள் பணியிடம் மாறுவதற்கான கனவோடு காத்திருக்கிறார்கள். பணியிட மாற்றம் கிடைக்காதபோது, குடும்பத்தில் கணவன்-மனைவி இடையே சண்டை ஏற்பட்டு எத்தனையோ குடும்பங்கள் பிரிந்து கிடப்பதையும் பார்க்க முடிகிறது.

பாதுகாப்பின்மை

  • ஆரம்ப சுகாதார நிலையங்களில் தன்னந்தனியாகப் பணியாற்றுகிற செவிலியர் களுக்குப் பணிப் பாதுகாப்பு இல்லாத சூழலும் நிலவுகிறது. ஏனென்றால், தொலைதூரத்தில் இருக்கும் கிராமங்களில் சில ஆண்கள் குடித்துவிட்டு வேண்டுமென்றே செவிலியரிடம் சண்டை போடுவதற்காக வருவது வழக்கம். வேறு சில அச்சுறுத்தல்களும் இருக்கின்றன.
  • கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஓர் ஆண் குடிபோதையில் நோயாளி போல நடித்து, செவிலியரைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிய சம்பவம் நடந்திருக்கிறது. அதேபோல திருச்சியில் உள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் தனியாக இருப்பதைக் கண்டு, கத்தி முனையில் அவரை மிரட்டி தங்கச் சங்கிலியைச் சிலர் பறித்துச்சென்றுள்ளனர். இப்படியான ஒரு சூழலில், சமூகமும் அரசும் செவிலியர்களின் பிரச்சினைகளை மனித உரிமைப் பிரச்சினைகளாகப் பார்க்க வேண்டும்.
  • தன்னலம் மறந்து, பிறர் நலத்துக்காகக் கடுமையாக உழைக்கும் செவிலியர்கள் மன நிறைவுடன் இருந்தால்தான் மருத்துவப் பணியைத் தரமுள்ள பணியாக செய்ய முடியும். எல்லாருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை என்று சொல்லும் திராவிட மாடல் ஆட்சியைத் தமிழக அரசு நடத்திக்கொண்டிருக்கிறது.
  • ஆளும்கட்சி கொடுத்த தேர்தல் வாக்குறுதி 356இல் குறிப்பிட்டதுபோல மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாகப் பணியில் அமர்த்தப்பட்ட எல்லா செவிலியர்களையும் நிரந்தரப் பணியாளர்களாக மாற்ற வேண்டும். அதன் மூலம் அவர்கள் வாழ்விலே ஒளி ஏற்ற வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (12 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்