PREVIOUS
செவ்வாய் கிரகத்துக்கு போட்டி போட்டு விண்கலங்களை அனுப்பும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன.
நிகழ் ஜூலை மாதத்தில் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தின் அல் அமல் (ஹோப்), சீனாவின் தியான்வென்-1 ஆகிய விண்கலங்கள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்கா, தனது "பெர்செவரன்ஸ்' விண்கலத்தை ஜூலை 30-ஆம் தேதி அனுப்பத் திட்டமிட்டுள்ளது. ஜப்பான் 2024-ஆம் ஆண்டு விண்கலத்தை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
உலக நாடுகளின் இதுவரையிலான விண்வெளி ஆராய்ச்சியில் அதிக திட்டங்கள் செவ்வாய் கிரகத்தை நோக்கியே அமைந்துள்ளன.
அதற்குக் காரணம், சூரிய மண்டலத்தில் பூமிக்கு மிக அருகில் இருக்கும் கிரகம் செவ்வாய் என்பதுதான். அத்துடன், செவ்வாய் ஒரு காலத்தில் தண்ணீர் நிறைந்தும் வெப்பமாகவும் அடர்த்தியான வளிமண்டலமாகவும் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
பூமியைப் போன்ற அம்சங்களை வெகுவாகக் கொண்டிருக்கும் ஒரு கிரகம் என்றால் அது செவ்வாய்தான். ஆதலால் செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
பூமியும் செவ்வாயும்
பூமியும் செவ்வாயும் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நெருங்கி வரும். அதாவது 34 மில்லியன் மைல் தொலைவுக்குக்கூட நெருக்கமாக வரும். நிகழாண்டு அந்த நிகழ்வு நடைபெறுவதால், பயணத் தொலைவை சுருக்கும் வகையிலும் எரிபொருள் செலவைக் குறைக்கும் வகையிலும் செவ்வாய் கிரக திட்டத்துக்காக இந்தக் காலகட்டத்தை ஐக்கிய அரபு அமீரகம், சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள் தேர்ந்தெடுத்துள்ளன.
செவ்வாய் கிரக திட்டங்களின் முதன்மையான நோக்கம், அங்கு உயிர்கள் இருந்தனவா என்று அறிவதும், அக்கிரகம் அடைந்துள்ள மாற்றங்களையும் அங்கு மனிதர்களைக் குடியேற்ற முடியுமா என்பதையும் கண்டறிவதுதான்.
செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்பும் திட்டத்தை 1960-ஆம் ஆண்டிலேயே அப்போதைய சோவியத் ரஷியா தொடங்கிவிட்டது என்றாலும், 1964, நவம்பர் 28-ஆம் தேதி அமெரிக்காவின் "மேரினர்-4' விண்கலம்தான் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட முதல் விண்கலம் ஆகும்.
மங்கள்யான்
செவ்வாய் கிரக திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிய அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய யூனியன் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது. 2013, நவம்பர் 5-ஆம் தேதி "இஸ்ரோ' அனுப்பிய "மங்கள்யான்' விண்கலம் இன்றுவரை செயல்படுகிறது.
குறைந்த செலவில் (ரூ.450 கோடி) விண்கலத்தை அனுப்பிய நாடு என்ற பெருமை மட்டுமல்ல, முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற நாடு என்கிற பெருமையும் இந்தியாவுக்கு உள்ளது.
வேற்றுக் கிரக திட்டத்துக்கு விண்கலத்தை அனுப்புவதற்குத் தேவையான வடிவமைப்பு, மேலாண்மை, இயக்கம் ஆகிய தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது குறித்து ஆராய்வது இத்திட்டத்தின் முதன்மையான நோக்கம்.
செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு, கனிமங்கள், வளிமண்டலம் தொடர்பாக ஆராய்வது மற்றொரு திட்டம். இரண்டையும் "மங்கள்யான்' வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறது.
செவ்வாய் கிரக திட்டங்கள்
அரபு தேசத்தில் முதல் நாடாக செவ்வாய்க்கு கடந்த ஜூலை 20-ஆம் தேதி அல் அமல் ("ஹோப்') விண்கலத்தை அனுப்பி வரலாறு படைத்தது ஐக்கிய அரபு அமீரகம். இந்த விண்கலம் ஜப்பானில் உள்ள ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. 2021, பிப்ரவரி மாதம் இந்த விண்கலம் செவ்வாய் கிரக சுற்றுப்பாதையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. செவ்வாய் கிரகத்தில் தரையிறங்காமல், அல் அமல் விண்கலத்தின் ஆர்பிட்டர் செவ்வாயின் வளிமண்டலத்தை ஆண்டு முழுவதும் ஆராயும்.
சீனாவின் முதல் செவ்வாய் கிரக திட்டம் தியான்வென்-1. "சொர்க்கத்துக்கான கேள்விகள்' என்கிற பொருள் கொண்ட இந்த விண்கலம் கடந்த ஜூலை 23-ஆம் தேதி வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
தலா ஒரு ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகியவற்றைக் கொண்டுள்ள இந்த விண்கலம், 2021, பிப்ரவரியில் செவ்வாய்கிரகத்தைச் சென்றடைந்து, செவ்வாயில் மண்ணின் தடிமன் குறித்தும் துணை அடுக்குகள் குறித்தும் ஆராயும்.
அடுத்ததாக, அமெரிக்கா தனது "பெர்செவரன்ஸ்' விண்கலத்தை ஜூலை 30-ஆம் தேதி செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது. ஆர்பிட்டர், லேண்டர்,
ரோவர் ஆகியவற்றைக் கொண்டுள்ள இந்த விண்கலம், செவ்வாயில் கடந்த காலங்களில் உயிர்கள் வாழ்ந்ததற்கான சூழல் இருந்ததா என்பதை ஆராய்வதுடன், நுண்ணுயிரிகள் வாழ்ந்தனவா என்ற ஆராய்ச்சியையும் மேற்கொள்ளவுள்ளது.
சிறப்பம்சமாக இந்த விண்கலத்தில் 1.8 கிலோ எடை கொண்ட சிறிய ஹெலிகாப்டரும் பொருத்தப்படுகிறது. விண்கலத்தின் லேண்டர் தரையிறங்கியதும், அதன் அடிப் பகுதியிலிருந்து இந்த ஹெலிகாப்டர் வெளியே வந்து பறந்து ஆய்வு மேற்கொள்ளும். வேற்று கிரகத்தில் பறக்கப் போகும் முதல் ஹெலிகாப்டர் என்கிறபெருமையையும் பெறப் போகிறது.
இதுவரையிலான செவ்வாய் கிரக திட்டங்களில் 50 சதவீதம் தோல்வியே கண்டுள்ளது. பெரும்பாலான திட்டங்கள் வெற்றி பெறுவதற்கு, ஆய்வுத் தகவல் பரிமாற்றம், செலவுப் பகிர்வு உள்ளிட்டவை அவசியம். அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான், கனடா ஆகியவை சேர்ந்து சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளன.
இதை முன்மாதிரியாகக் கொண்டு செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கென, சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட வேண்டும்.
அதன்மூலம் பல நாடுகளின்தொழில்நுட்பங்கள், ஆய்வுத் தகவல்கள், திட்டச் செலவுகள் பகிரப்பட்டு செவ்வாய் கிரக திட்டங்களில் பெரும்பாலானவை வெற்றியடைய வாய்ப்பு ஏற்படும். இதுஉலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் பலரின் கருத்து.
இப்போதைய ஆளில்லாத் திட்டங்களின் உச்சமாக, செவ்வாய் கிரகத்தில் மனிதர்களைத் தரையிறக்குவது இருக்கும். அதில் எந்த நாடு வெற்றி பெற்றாலும், அந்தவெற்றி மனித குலத்துக்கே பெருமையாக அமையும்.
நன்றி: தினமணி (27-07-2020)