TNPSC Thervupettagam

செஸ் ஒலிம்பியாட்: இந்தியாவின் காலம்!

September 27 , 2024 109 days 211 0

செஸ் ஒலிம்பியாட்: இந்தியாவின் காலம்!

  • நூறு ஆண்டு வரலாறு கொண்ட செஸ் ஒலிம்பியாட்டில், முதல் முறையாக ஆடவர், மகளிர் என இரண்டு அணிகளும் ஒருசேர தங்கம் வென்றதன் மூலம் இந்தியா மகத்தான சாதனையைப் புரிந்துள்ளது. 2022 இல் சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டில் இரண்டு அணிகளும் வெண்கலத்தை மட்டுமே கைப்பற்றியிருந்த நிலையில், தற்போது இரண்டு அணிகளும் தங்கம் வென்று சாதித்துள்ளன.

நூறு ஆண்டு வரலாறு:

  • செஸ் ஒலிம்பியாட் என்பது இரண்டு ஆண்டுகளுக்கொரு முறை உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளைச் சேர்ந்த செஸ் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் மிகப் பெரிய போட்டி. இந்த ஆண்டு ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்று முடிந்த செஸ் ஒலிம்பியாட்டில் 190 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
  • 'சுவிஸ்' விதிமுறைப்படி நடக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஒவ்வோர் அணியும் மொத்தம் 11 சுற்றுகளில் விளையாட வேண்டும். ஒவ்வொரு சுற்றின் முடிவில் சமபலத்துடன் அதிகப் புள்ளிகளைப் பெறும் அணிகளுடன் அடுத்தடுத்த சுற்றுகளில் மோத வேண்டும். 11 சுற்றுகளின் முடிவில் அதிகப் புள்ளிகளைக் குவித்து முதலிடம் பிடிக்கும் அணிக்குத் தங்கம், இரண்டாமிடத்துக்கு வெள்ளி, மூன்றாமிடத்துக்கு வெண்கலம் வழங்கப்படும்.
  • மாரத்தான் போல நீளும் இந்தத் தொடரில்தான் முதல் முறையாகத் தங்கப் பதக்கத்தை இந்திய ஆடவர், மகளிர் அணிகள் வென்று வந்திருக்கின்றன. ஆடவர் அணியில் குகேஷ், பிரக்ஞானந்தா (தமிழ்நாடு), அர்ஜுன் எரிகைசி (தெலங்கானா), விதித் குஜராத்தி (மகாராஷ்டிரம்), ஹரிகிருஷ்ணா பென்டாலா (ஆந்திரம்) ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். மகளிர் அணியில் வைஷாலி (தமிழ்நாடு), துரோனவள்ளி ஹரிகா (ஆந்திரம்), திவ்யா தேஷ்முக் (மகாராஷ்டிரம்), வந்திகா அகர்வால், டானியா சச்தேவ் (டெல்லி) ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

ஆடவர் அணி ஆதிக்கம்:

  • ஆடவர் அணியின் வெற்றி மகத்தானது. இந்தத் தொடர் முழுவதுமே ஆடவர் அணி ஒரு போட்டியிலும் தோல்வியடையாமல் ஆதிக்கம் செலுத்தியது. மொத்தம் உள்ள 11 சுற்றுப் போட்டிகளில் 10 வெற்றிகளைப் பெற்று 21 புள்ளிகளை ஆடவர் அணி பெற்றது. கடந்த செஸ் ஒலிம்பியாட்டில் தோல்வியடைந்த உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக மட்டும் ஆடவர் அணி டிரா செய்தது.
  • இந்தத் தொடரில் இந்திய வீரர்கள் தங்களுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கியதால், இந்த வெற்றி சாத்தியமானது. 10ஆவது சுற்றில் அமெரிக்காவை எதிர்கொண்ட இந்திய அணி 2.5-1.5 என்கிற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் அமெரிக்க வீரர் - ஃபேபியானோ கருவானாவை குகேஷ் வீழ்த்தினார்.
  • ஆனால், இதனையடுத்து நடைபெற்ற போட்டியில் அமெரிக்க வீரர் வெஸ்லி சோவிடம் பிரக்ஞானந்தா தோல்வியைத் தழுவினார். என்றாலும், இறுதியாக நடைபெற்ற போட்டியில் அர்ஜூன் எரிகைசி, அமெரிக்காவின் லெனியர் டோமின்குயிசை வீழ்த்தி வெற்றியைப் பதிவுசெய்தார். இதனால், 10ஆவது சுற்றில் இந்தியாவின் முன்னிலை நீடித்தது.
  • இறுதிச் சுற்றான 11ஆவது சுற்றில் இந்திய அணி ஸ்லோவேனியாவை வீழ்த்தியதன் மூலம் 21 புள்ளிகளைக் குவித்து வெற்றியைத் தழுவியது. இப்படித் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி இந்திய வீரர்களுக்குத் தங்கப் பதக்கம் சாத்தியமானது. இத்தொடரில் ஒருபோட்டியில்கூடத் தோல்வியைத் தழுவாத அர்ஜுன் எரிகைசி லைவ் ரேட்டிங்கில் 2797.2 புள்ளிகளுடன் உலகின் டாப் 3 வீரராக உருவெடுத்தது இன்னொரு தனிச்சிறப்பு.

சாதித்த மகளிர் அணி:

  • சென்னையில் 2022இல் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடரில் ஆடவர் அணியைப் போலவே மகளிர் அணியும் வெண்கலப் பதக்கமே வென்றிருந்தது. இந்த முறை ஆடவர் அணி தங்கம் வென்ற அடுத்த சில மணி நேரத்தில் மகளிர் அணியும் தங்கத்தை வென்று சாதனையைப் படைத்தது.
  • ஆடவர் அணியைப் போல அல்லாமல் மகளிர் அணி, கடைசிக் கட்டம் வரை திக்திக் மனநிலையில்தான் விளையாடியது. 10 சுற்றுகளின் முடிவில் இந்திய மகளிரணி 17 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது. ஆனால், கஜகஸ்தானும் 17 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில்தான் இருந்தது. இந்த அணிகளைத் துரத்திக் கொண்டு 16 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் அமெரிக்கா இருந்தது.
  • எனவே, தங்கப் பதக்கத்தை வெல்லப் போவது யார் என்கிற கேள்வி எழுந்தது. ஆனால், இந்தியாவுக்குப் போட்டியாக இருந்த கஜகஸ்தானும் அமெரிக்காவுமே இந்தியா தங்கம் வெல்ல உதவின. இறுதிச் சுற்றில் கஜகஸ்தானும் அமெரிக்காவும் விளையாடிய போட்டி டிராவில் முடிந்தது. எனவே, அது இந்தியாவுக்கு வசதியாகப் போனது. இறுதிச் சுற்றில் இந்திய அணி அசர்பைஜானை எதிர்த்து விளையாடி 3.5 – 0.5 புள்ளிகள் கணக்கில் தோற்கடித்தது. இதனால், இந்திய மகளிர் அணி 20.5 புள்ளிகளைக் குவித்து தங்கத்தை உறுதி செய்தது.
  • செஸ் ஒலிம்பியாட்டில் 2014இல் முதல் முறையாக இந்தியா வெண்கலப் பதக்கத்தை வென்றது. அதன்பிறகு கரோனா காலத்தில் 2020இல் ஆன்லைனில் நடைபெற்ற ஒலிம்பியாட் போட்டியில் ரஷ்யாவுடன் இணைந்து இந்தியா தங்கப் பதக்கத்தைப் பகிர்ந்துகொண்டது. 2022இல் சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய ஆடவர், மகளிரணி வெண்கலப் பதக்கங்களை வென்றன. என்றாலும் நேரடியாகப் பங்கேற்று இந்தியா தங்கம் வெல்லாத குறை நீடித்தது. அந்தக் குறையை ஆடவர், மகளிர் அணிகள் இன்று ஒருசேர போக்கியுள்ளன.

நன்றி: இந்து தமிழ் திசை (27 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்