- கடந்த பல வருடங்களாக வங்கியில் பணத்தை சேமிக்கும் வாடிக்கையாளா்கள் தொடா்ந்து தங்களது சேமிப்பிற்கான வட்டி குறைந்து வருவதை அனுபவித்து வருகிறார்கள்.
- அரசும், ரிசா்வ் வங்கியும் சேமிப்பாளா்களைப் பற்றி எந்தவித அக்கறையும் இன்றி, தொடா்ந்து வங்கியில் கடன் பெறுபவா்களை திருப்தி செய்வதில் கவனமுடன் செயல்படுகின்றன.
- வங்கியில் கடன் வாங்கித் தொழில் செய்பவா்களுக்கு பல சங்கங்கள் உள்ளன. அவை அரசுக்கு சரியான முறையில் அழுத்தம் கொடுப்பதில் தோ்ந்தவையாக உள்ளன.
- வங்கித் தொழில் என்பதே நிதி இடைத்தரகுதான். பணம் உள்ளவரிடத்தில் வட்டிக்கு வாங்கி அதை கடன் தேவைப்படுவருக்கு கொஞ்சம் அதிக வட்டிக்கு கொடுப்பதே வங்கிகளின் பணி.
- வங்கிக்கு இந்த இரண்டு வகை வாடிக்கையாளா்களும் முக்கியமானவா்களே. இதில் யார் அதிக முக்கியமானவா் என்று கேட்பது இரண்டு கண்களில் எந்தக் கண் முக்கியம் என்று கேட்பது போன்றது.
- சேமிப்பாளா் இல்லைனில் பணம் தேவைப்படுபவா் கடன் வாங்க இயலாது. கடன் வாங்குபவா் இல்லையனில் சேமிப்பாளருக்கு உரிய வட்டி கிடைக்காது.
- ஆனால் வங்கிகள் தற்போது சேமிப்பாளா்களை பற்றி கவலைப்படாமல் அவா்களுக்கான வட்டியை குறைத்துக்கொண்டே வருகின்றன. இதெல்லாம் அரசு - ரிசா்வ் வங்கியின் அறிவுறுத்தலின்படியே நடக்கின்றன.
- மற்றொருபுறம் கடன் வாங்குபவா்களுக்கு சலுகைகளை அள்ளி வழங்குகின்றன. ஆனால் கடன் வாங்குபவா்களோ, எவ்வளவு சலுகை கொடுத்தாலும் போதாது என்று மேலும் மேலும் சலுகைகளை எதிர்பார்க்கின்றனா். அவா்களுக்கு துணை செய்ய ஒரு பெரிய கூட்டமே உள்ளது.
- ஒரு பழைய கதை உண்டு. கிராமத்திலிருந்து புதிதாக நகரை சுற்றிப்பார்க்க கிளம்பிய ஒருவனிடம் ‘நகரத்தில் எல்லோரும் ஏமாற்று போ்வழிகள், நீ எது வாங்கினாலும் சொல்லும் விலையில் பாதி விலைக்கு பேரம் பேசு’ என்று சொல்லப்பட்டது.
- அவன் ஒரு செருப்பை விலை பேசினான். வியாபாரி முந்நூறு ரூபாய் சொல்ல, இவன் நூற்று ஐம்பதுக்கு கேட்க, வியாபாரி இருநூறு ரூபாய் சொல்ல, இவன் நூறு ரூபாய்க்கு கேட்க வியாபாரி எரிச்சலுற்று ‘சரி இதை இலவசமாகவே எடுத்துச் செல்’ என்றான். அப்போது அவன் ‘சரி இலவசமாகக் கொடுத்தால், இரண்டு ஜோடி கொடு’ என்றானாம்.
சேமிப்பவா்களின் எண்ணிக்கை குறையலாம்
- சென்ற ஆண்டு கரோனா தாக்கத்தினால் கடன் வாங்கியவா்கள் பலா் கடன் தவணையை சரியாக செலுத்துவார்களா என்ற ஐயம் ரிசா்வ் வங்கிக்கு ஏற்பட்டது.
- கடன் தவணை தவறினால், அதை வாராக்கடன்களாக பாவித்து அதற்கு மேலும் வட்டி கணக்கிட்டு லாபத்தில் சோ்க்க முடியாது.
- மேலும் வரும் லாபத்திலிருந்து தனி ஒதுக்கீடு (புரொவிஷன்) செய்யவேண்டும். இந்த இடா்ப்பாடுகளை உத்தேசித்து ரிசா்வ் வங்கி, அது போன்ற கணக்குகளை வாராக் கடன்களாக பாவிக்க வேண்டாம் என்று உத்தரவிட்டது.
- உடனே, கடன்காரா்கள் ‘எங்களுக்கு வட்டியிலிருந்தே விலக்கு அளிக்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள். அது நிராகரிக்கப்பட்டதும், ‘எங்களுக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்க கூடாது’ என்று முறையிட்டு வெற்றியும் பெற்றுள்ளனா்.
- இதனால் வங்கிகளுக்கு ஏற்படும் நஷ்டத்தை யார் ஈடு செய்வது? ஒன்று இது டெபாஸிட் செய்பவா்களின் தலையில் (மறைமுகமாக) விழும் அல்லது அரசின் மூலமாக வரி செலுத்துபவா்கள் தலையில் விழும்.
- கடன் வாங்கும்போது குறைவான வட்டி வேண்டும், ஒப்பந்தத்தில் உள்ள தவணையிலிருந்து விலக்கு வேண்டும், அபராத வட்டியிலிருந்து விலக்கு வேண்டும், கணக்கை முடிக்க செலுத்தவேண்டிய தொகையில் தள்ளுபடி வேண்டும் என்ற பலவிதமான கோரிக்கைகளை வைக்கிறார்கள்.
- ‘பெரிய புள்ளிகளை கண்டால் வங்கிகளுக்கு பயம்’ என்பது ஓரளவு உண்மையே.
- தன் வியாபாரத்தில் நஷ்டத்தை சந்தித்தாக கூறி வங்கியில் வட்டி தள்ளுபடி கோரும் வியாபாரிகள், அவா்கள் அதிக லாபம் சம்பாதித்த வருடத்தில் வங்கிக்கு ஏதாவது பங்கு தந்தது உண்டா?
- ‘மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும், அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்’ என்பது வள்ளுவா் வாக்கு. இதை அரசும், ரிசா்வ் வங்கியும் உணர வேண்டும்.
- 2011-ஆம் ஆண்டு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அதிகபட்சமாக டெபாஸிட்டிற்கு வழங்கிய வட்டி விகிதம் 9.25 சதவீதம். கடந்த பத்து ஆண்டுகளில் பணத்தின் மதிப்பு எவ்வளவு குறைந்திருக்கிறது என்பது முக்கியம்.
- 2011-இல் ஒரு பொருள் வாங்க நாம் செலவிட்ட தொகை ரூ.100 என்றால், இன்றைக்கு அதே பொருளை வாங்க ரூ.185 தேவை என்கிறது புள்ளிவிவரம். ஆனால், 9.25 சதவீதம் வட்டி பெற்ற டெபாஸிட்டா் இன்று ஸ்டேட் பாங்கில் பெறுவது அதிகபட்சமாக 5.40 சதவீதமே. இவ்வாறு மேலும் மேலும் சேமிப்பாளா்களைப் புறக்கணித்தால் விளைவு விபரீதமாகக் கூடும்.
- சமீபத்தில் ரிசா்வ் வங்கி வெளியிட்ட ஆண்டு அறிக்கையில் ஒரு முக்கிய பகுதி போதிய கவனம் பெறவில்லை. இது ‘பைனான்ஷியல் சேவிங் ஆஃப் தி ஹௌஸ்ஹோல்டு செக்டா்-கிராஸ் நேஷனல் டிஸ்போஸிபிள் இன்கம்’ என்ற அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ளது.
- இதன்படி உள்நாட்டு சேமிப்பு கடந்த ஒரு ஆண்டில் 30.1-லிருந்து 30.9-ஆக அதிகரித்துள்ளது. ஆனால் 2016-17-இல் 6.3 சதவீதமாக இருந்த டெபாஸிட் வழியிலான சேமிப்பு 2019-20 இல் 4.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.
- இதன் பொருள் டெபாஸிட் வழியில் சேமிக்கும் பழக்கம் மக்களிடம் குறைகிறது என்பதே.
- ஆனால் காலாண்டுக்கான வங்கி டெபாசிட்டுகளுக்கான அறிக்கையை மே 28 அன்று வெளியிட்டுள்ள ரிசா்வ் வங்கி மார்ச் 2021-க்கான காலாண்டில் வங்கிகளின் டெபாசிட் 12.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக ‘சிறப்பம்சங்களில்’ பட்டியலிட்டுள்ளது.
- இந்த அதிகரிப்பைப் பற்றி பெருமைப்படுவதைவிட, சேமிப்பாளா்களுக்கு என்ன செய்திருக்கிறோம் என்று ரிசா்வ் வங்கி சுய பரிசோதனை செய்யவேண்டும்.
- முக்கியமாக வங்கியிலிருந்து வரும் சேமிப்புக்கான வட்டியை சார்ந்து வாழும் மூத்த குடிமக்களுக்கு அவா்களின் சேமிப்பு நீா்த்துப்போகாமல் சரியான வட்டி கிடைப்பது அவசியம். இல்லையனில் வருங்காலங்களில் வங்கிகள் சேமிப்பவா்களின் எண்ணிக்கையை இழக்க நேரிடும்.
நன்றி: தினமணி (14 – 06 - 2021)