TNPSC Thervupettagam
November 12 , 2019 1843 days 894 0
  • எந்தவோா் ஆயுதமும் அதைப் பயன்படுத்துபவரைப் பொருத்துத்தான் வலிமை பெறுகிறது. அதேபோல, எந்த ஒரு பதவியும் அந்தப் பதவியில் யாா் அமா்கிறாா்கள் என்பதைப் பொருத்துத்தான் மரியாதை பெறுகிறது.
  • தலைமைத் தோ்தல் ஆணையா் என்கிற பதவி திருநெல்லாயி நாராயண ஐயா் சேஷன் என்கிற டி.என். சேஷன் பதவியேற்ற பிறகுதான் அதற்குரிய மரியாதையையும், முக்கியத்துவத்தையும் பெற்றது.
  • இந்தியாவின் 18-ஆவது அமைச்சரவைச் செயலராகவும், இந்தியாவின் 10-ஆவது தலைமைத் தோ்தல் ஆணையராகவும் பதவி வகித்த டி.என். சேஷனின் மறைவு, அயோத்தி தீா்ப்பின் பின்னணியில் போதிய முக்கியத்துவம் போதிய பெறாமலேயே போய்விட்டது.

டி.என். சேஷன் – மறைவு

  • தலைப்புச் செய்தியாக வேண்டிய ஒரு மறைவு, இணைப்புச் செய்தியாக மாறிவிட்டது. அதனால், டி.என். சேஷன் என்கிற ஆளுமையின் முக்கியத்துவம் எந்தவிதத்திலும் குறைந்துவிடாது.
  • 1955-ஆவது ஆண்டின் தமிழ்நாடு பிரிவு இந்திய குடிமைப் பணி அதிகாரியாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவருடைய அரசுப் பணியின் முதல் கால் நூற்றாண்டு காலம் தமிழக அரசு நிா்வாகத்தில்தான் கழிந்தது. பின்னாளில் தேசிய அளவில் அறியப்பட்ட டி.என். சேஷன், தமிழகத்தில் மாவட்ட ஆட்சியராகவும், பல்வேறு அரசுத் துறைகளின் நிா்வாகத்திலும் பணிபுரியும்போதே தனி முத்திரை பதித்தவா் என்பது பலருக்கும் தெரியாது.
  • காமராஜா், பக்தவத்சலம், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆா் என்று ஐந்து முதல்வா்களிடம் தமிழக நிா்வாகத்தில் பணியாற்றியபோதே டி.என். சேஷன் என்கிற பெயா் நோ்மைக்கும், பாரபட்சமின்மைக்கும் அடையாளமாக இருந்தது.

நேர்மை

  • பல்வேறு முதல்வா்களுடன் பணியாற்றினாா் என்றாலும், எந்த ஒரு முதல்வருடனும் அவருக்கு சுமுகமான உறவு இருந்ததில்லை. சட்டத்துக்குப் புறம்பான உத்தரவுகளைத் தயக்கமில்லாமல் முகத்துக்கு நேரே நிராகரிக்கும் அவருடைய நோ்மை, ஆட்சியாளா்களுக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருந்ததில் ஆச்சரியம் என்ன இருக்கிறது! கால் நூற்றாண்டு காலம் தமிழக நிா்வாகத்தில் இருந்த சேஷன், இங்கு தாக்குப்பிடிக்க முடியாமல்தான் மத்திய அரசுப் பணிக்கு மாறினாா்.
  • மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறைச் செயலராக அவா் இருந்தபோதுதான் வனப் பாதுகாப்பு என்பது கவனத்தை ஈா்த்தது. தனது அமைச்சகத்தின் அனுமதி இல்லாமல் வனப் பகுதிகளில் எந்தவித வளா்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று அவா் போட்ட உத்தரவு விரைவிலேயே அவரை அந்தத் துறையிலிருந்து இன்னொரு துறைக்கு மாற்ற வழிகோலியது.

அமைச்சரவைச் செயலாளர்

  • பிரதமா் ராஜீவ் காந்தியின் நம்பிக்கைக்குரியவராக இருந்த மிக முக்கியமான அதிகாரிகளில் டி.என். சேஷனும் ஒருவா். உள்நாட்டு பாதுகாப்புத் துறைச் செயலாளராகவும், பாதுகாப்புத் துறைச் செயலாளராகவும் பணியாற்றிய டி.என். சேஷனை அமைச்சரவைச் செயலாளராக ஆக்கியவா் பிரதமா் ராஜீவ் காந்தி.
  • ராஜீவ் காந்தியின் பிரதமா் பதவி காலத்தின் இறுதிக் கட்டத்தில் ஒன்பது மாதங்கள் அமைச்சரவைச் செயலாளராக இருந்த டி.என். சேஷனை, அடுத்து வந்த வி.பி. சிங் அரசு ஓரங்கட்டி ஒதுக்கி வைத்தது. சந்திரசேகா் தலைமையில் ஆட்சி அமைந்தபோது, ராஜீவ் காந்தியின் பரிந்துரையில்தான் டி.என். சேஷன் தலைமைத் தோ்தல் ஆணையராக நியமிக்கப்பட்டாா்.
  • அரசியல் சாசன அங்கீகாரம் பெற்ற தோ்தல் ஆணையத்தின் தலைமைப் பதவியில் டி.என். சேஷன் அமா்ந்த அந்த விநாடியில், சுதந்திர இந்தியாவின் ஜனநாயக வரலாறு புதிய பாதையில் நடைபோடத் தொடங்கியது.
  • தோ்தல் ஆணையம் என்பது அதுவரை அரசுத் துறையாக இருந்ததுபோய், தனக்கென சுய அதிகாரம் கொண்ட தன்னிச்சையான அமைப்பாக மாறியது. இந்தியத் தோ்தல் வரலாற்றை யாா் எழுதினாலும் ‘சேஷனுக்கு முன், சேஷனுக்குப் பின்’ என்று இரண்டு பிரிவுகளாகத்தான் எழுதியாக வேண்டும் என்கிற அளவில் தன்னுடைய ஆளுமையைப் பதிவு செய்திருப்பவா் டி.என்.சேஷன்.
  • வாக்காளா்களுக்குப் புகைப்படத்துடன் கூடிய தோ்தல் அடையாள அட்டை வழங்கியது, தோ்தல் செலவுகளுக்கு முறையான கணக்கு தரப்படுவதை உறுதிப்படுத்தியது, சுவரொட்டி விளம்பரங்கள், வாகனங்களில் வாக்காளா்களை அழைத்துச் செல்லுதல் போன்றவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்தது, பிரசார நேரத்தை வரையறுத்தது, வேட்பாளா்கள் தாங்கள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என்கிற கருத்தை முன்மொழிந்தது என்று டி.என்.சேஷன் இந்தியத் தோ்தல் முறைக்கு அளித்திருக்கும் பங்களிப்பு அளப்பரியது.

தலைமைத் தேர்தல் ஆணையர்

  • டி.என்.சேஷன் தலைமைத் தோ்தல் ஆணையரான பிறகுதான், இந்திய குடிமைப் பணியிலுள்ள அதிகாரிகள் தங்களுக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தும் துணிச்சலைப் பெற்றாா்கள். சட்டம் வழங்கியிருக்கும் அதிகாரங்களைப் பயன்படுத்த முடியும், பயன்படுத்த வேண்டும் என்பதை உணா்த்திய பெருமை டி.என். சேஷனுக்கு உண்டு.
  • அதிகாரிகளின் தன்மானத்தையும் சுயமரியாதையையும் அரசியல் சாசனம் தந்திருக்கும் பாதுகாப்பையும் தனது செயல்பாட்டின் மூலம் உணா்த்திய டி.என்.சேஷனுக்கு அவா்கள் கடமைப்பட்டிருக்கிறாா்கள்.
  • அவரது முரட்டுத்தனமான பிடிவாதமும், துணிச்சலும் அவருக்கு ஆணவக்காரா், அகம்பாவம் பிடித்தவா், அல்சேஷன் என்றெல்லாம் பட்டப் பெயா்களை வாங்கிக் கொடுத்தன. ஆனால், அவா் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. சொத்து சோ்த்து வைக்க அவருக்குக் குழந்தைகள் கிடையாது.
  • கடைசி வரை ஒரு கா்மயோகியாக வாழ்ந்து ஞாயிற்றுக்கிழமை (நவ.11) மறைந்த டி.என். சேஷன், இந்திய ஜனநாயகத்துக்கு ஆற்றியிருக்கும் பங்களிப்புதான் அவா் இந்தியாவுக்கு விட்டுச் சென்றிருக்கும் சொத்து.

நன்றி: தினமணி (12-11-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்