- கரோனாவை எதிர்கொள்ளலில் இப்போது நம் கவனம் கோரி மேலும் ஒரு விஷயம் வந்திருக்கிறது. ‘சைலன்ட் ஹைப்பாக்சியா!’ கரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவது ஏற்கெனவே தெரிந்த விஷயம்.
- இதில் ஒரு புதிய போக்கு காணப்படுவதுதான் இப்போதைய பிரச்சினை. இயல்பாக நம் ரத்தத்தில் 95-100% வரை ஆக்ஸிஜன் இருக்க வேண்டும். அப்போதுதான் இதயம், மூளை, சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகள் முறையாகச் செயல்படும். நாம் ஒரு நாளைக்கு 21,600 முறை சுவாசிப்பது இதற்குத்தான்.
சைலன்ட் ஹைப்பாக்சியா
- பொதுவாக, இந்த அளவு 95%-க்கும் கீழே குறைந்துபோனால் அதற்குப் பெயர் ‘ஹைப்பாக்சியா’. சாதாரணமாக இந்த நிலைமை உள்ளவர்களுக்கு ஏங்கி மூச்சுவிடுவது, மூச்சுவிடுவதில் சிரமம், நடந்தால் அசதி போன்ற அறிகுறிகள் உடனே தோன்றிவிடும்.
- சிகிச்சை பெற்று குணமாகிவிடுவார்கள். இப்போது ஏற்படும் விபரீதம் என்னவென்றால், கரோனா நோயாளிகளில் 10-ல் 2 பேருக்கு 70-80%-தான் ஆக்ஸிஜன் அளவு இருக்கிறது.
- ஆனாலும், மூச்சுத்திணறல் இருப்பதில்லை. தங்கள் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்துள்ள விவரம் தெரியாமலும், உடலில் நடந்துகொண்டிருக்கும் ஓர் அமைதியான யுத்தத்தை அறியாமலும் அவர்கள் எப்போதும்போல் நடமாடிக்கொண்டிருக்கின்றனர்.
- ஆனால், அடுத்த சில நாட்களில் திடீரென்று மூச்சுத்திணறலுக்கு உள்ளாகிறார்கள். உடனடியாக உடலில் பல உறுப்புகள் செயலிழக்க ஆரம்பித்துவிடுகின்றன. அவற்றை மீட்டெடுக்க அவர்களைத் தீவிர சிகிச்சைப் பிரிவில் உடனடியாக அனுமதிக்க வேண்டிய அளவுக்கு நிலைமை மோசமாகிவிடுகிறது. இந்த நிலைமையை ‘சைலன்ட் ஹைப்பாக்சியா’ அல்லது ‘ஹேப்பி ஹைப்பாக்சியா’ என்கிறார்கள்.
- நம் ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவை அறிய இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று, ரத்தக் குழாயிலிருந்து ரத்தத்தை எடுத்து ‘ரத்த-வாயு அளவு’க் கருவியில் கொடுத்து அறிவது. இது மருத்துவமனையில்தான் சாத்தியப்படும்.
- அடுத்த வழி இது: ‘பல்ஸ் ஆக்ஸிமீட்டர்’. இது பார்ப்பதற்கு ஒரு சிறிய தீப்பெட்டி அளவில்தான் இருக்கும். இதன் பிரிமுனையில் நம் விரலை நுழைத்துக்கொண்டால் ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவை உடனே காண்பித்துவிடும்.
- இருமல், காய்ச்சல், கடும் உடல் வலி போன்ற லேசான அறிகுறிகள் தோன்றும்போதே வீட்டில் ‘பல்ஸ் ஆக்ஸிமீட்டர்’ கொண்டு ஆக்ஸிஜன் அளவை அளந்துகொள்ள வேண்டும்.
- தினமும் 4 மணி நேர இடைவெளியில் 6 முறை பார்த்துக்கொள்ள வேண்டும். ஆக்ஸிஜன் அளவு 95%-க்குக் குறையும்போது மருத்துவரிடம் சென்றுவிடுவது அவசியம்.
- கரோனாவைப் பொறுத்த அளவில் எவ்வளவு விரைவில் நோயைக் கண்டறிந்து சிகிச்சை பெறுகிறோமோ அந்த அளவுக்கு அதற்குப் பலியாவதும் தடுக்கப்பட்டுவிடும்.
- எனவேதான், இந்தப் புதிய மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டிருக்கிறது. ‘சைலன்ட் ஹைப்பாக்சியா’ வந்துவிட்டாலே உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பயப்பட வேண்டாம்.
- பயனாளிக்கு ‘சைலன்ட் ஹைப்பாக்சியா’ இருப்பது மருத்துவமனைக்கு வந்த பிறகு தெரிந்துகொள்ளும்போது, அவருடைய ஆரோக்கியம் மோசமான நிலைமைக்குச் சென்றுவிடுவதைத் தடுக்கவே இதைப் பின்பற்றச் சொல்கிறார்கள்.
- மக்கள் கரோனாவால் பலியாவதற்கு சுவாச நோய், உடற்பருமன், நீரிழிவு, இதயநோய், சிறுநீரக நோய், ரத்தம் உறைதல், உறுப்புகள் செயலிழப்பு எனப் பல காரணங்கள் இருக்கின்றன.
- அவற்றுள் ‘சைலன்ட் ஹைப்பாக்சியா’வும் ஒன்று. ‘சைலன்ட் ஹைப்பாக்சியா’வுக்குத் தரமான சிகிச்சை உள்ளது.
- அந்த சிகிச்சையை உரிய நேரத்தில் பெற வேண்டும் என்பதுதான் முக்கியம். மாரடைப்புச் சிகிச்சையில் ‘கோல்டன் ஹவர்’ என்று இருப்பதை இங்கு நினைவுகொள்ளலாம். அந்தப் பொன்னான நேரத்தைச் சாமானியரும் அறிய உதவுகிறது, ‘பல்ஸ் ஆக்ஸிமீட்டர்’.
பல்ஸ் ஆக்ஸிமீட்டர்
- வீட்டில் இப்போது வெப்பமானி, குளுக்கோமீட்டர் போன்றவற்றை முதலுதவிப் பெட்டியில் வைத்திருப்பதுபோல இனி ‘பல்ஸ் ஆக்ஸிமீட்ட’ரையும் வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, இந்தக் கருவியின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டிருக்கிறது.
- இந்தியாவில் தரமான ‘பல்ஸ் ஆக்ஸிமீட்டர்’ ஒன்றின் விலை ரூ.4,000 அளவுக்கு இருக்கிறது. இப்போது இது வெளிநாடுகளிலிருந்துதான் இறக்குமதியாகிறது.
- இவற்றை சாமானியர்களும் வாங்குவதற்கு ஏற்ப குறைந்த விலையில் கிடைக்கும் சூழலை அரசு உண்டாக்க வேண்டும். அதிகமான அளவில் இறக்குமதி, வரி விலக்கு போன்றவற்றின் வழி வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் கருவிகளைக் குறைக்கலாம்.
- ஆனால், எவ்வளவு சீக்கிரம் இயலுமோ அவ்வளவு சீக்கிரம் உள்நாட்டிலேயே இவற்றைத் தயாரிப்பதற்கான ஏற்பாடுகளையும் அரசு முன்னெடுக்க வேண்டும்.
நன்றி: தி இந்து (18-06-2020)