- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் சொத்துகள் தொடர்பான நீண்டகால மூலதன ஆதாய (எல்டிசிஜி) வரியை 20 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக குறைத்தார். அது மக்களுக்கு பலன் அளிக்க கூடியதுதான். ஆனால், அதேநேரத்தில் 2001-02-ம் நிதியாண்டுக்குப் பிறகு வாங்கிய மனைகள், வீடுகள், கடன்பத்திரங்கள் உள்ளிட்டவற்றுக்கான இண்டக்சேஷன் முறையை நிதியமைச்சர் நீக்கியது நடுத்தர மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
- அதேசமயம், 2001-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்பு வீடு, மனை, பங்கு, கடன் பத்திரங்களை வாங்கியவர்களுக்கு இந்தப் புதிய இண்டக்சேஷன் முறை ரத்து பொருந்தாது என்பதையும் நிதியமைச்சர் பட்ஜெட்டில் தெளிவுபடுத்தினார். இண்டக்சேஷன் குறியீட்டு முறை என்பது பல ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய ஒரு சொத்தை தற்போது விற்க நேரிடும்போது, பணவீக்கத்தின் விளைவை பிரதிபலிக்கும் வகையில் முதலீட்டின் கொள்முதல் விலையை சரி செய்வதற்கான நடைமுறையாகும்.
- இந்த குறியீட்டு முறை நடுத்தர மக்களுக்கு பெரிதும் பயன் அளிப்பதாக இருந்தது. தற்போது, இந்த முறை பட்ஜெட்டில் நீக்கப்பட்டுள்ளது. இதனால், 2001-02 நிதியாண்டுக்குப் பிறகு சொத்துகளை வாங்கியவர்கள் மிகவும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. கூடுதலாக பல லட்சம் ரூபாயை அவர்கள் வரியாக அரசுக்கு வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
- காஸ்ட் இன்ப்ளேசன் இண்டெக்ஸ் எனப்படும் சிஐஐ குறியீட்டு எண்ணை வருமான வரித் துறை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. கடந்த 2001-02-ம் ஆண்டு இந்த குறியீடு 100 என்று நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது பணவீக்கத்துக்கான குறியீடு 363-ஆக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை ஆராய்ந்து இந்த குறியீட்டை வருமான வரி துறை நிர்ணயம் செய்கிறது.
- மூலதன ஆதாய வரி கணக்கீட்டில், குறியீட்டுடன் இணைந்த 20 சதவீதம் வரி விதிக்கப்படும் பழைய முறை சிறந்ததா அல்லது குறியீடு இல்லாமல் 12.5 சதவீத புதிய வரி விதி்ப்பு முறை சிறந்ததா என்பது தற்போது பேசுபொருளாகியுள்ளது. எது சிறந்தது என்பதை உதாரணத்தின் மூலம் கண்டறியலாம்.
பழைய முறை (இண்டக்சேஷன் உடன் 20% வரி):
- ஒருவர் 2009 ஜனவரியில் ரூ.50 லட்சத்துக்கு குடியிருப்பு ஒன்றை வாங்குகிறார். பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு 2024 ஜூலை 26-ல் ரூ.1.5 கோடிக்கு (3 மடங்கு அதிகமாக) அந்த குடியிருப்பை விற்பனை செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
- பழைய குறியீட்டு முறையின்படி 15 ஆண்டுகளுக்கு முன்பு அவர் செலுத்திய ரூ.50 லட்சம் இன்றைக்கு பணவீக்கத்தின் அடிப்படையில் ரூ.1.32 கோடியாக கருதப்படுகிறது. விற்பனை விலையான ரூ.1.5 கோடியிலிருந்து இதனை கழிக்கும்பட்சத்தில் நிகர லாபம் அல்லது மூலதன ஆதாயம் என்பது ரூ.17.5 லட்சமாக மட்டுமே கணக்கிடப்படும். இதற்கு 20 சதவீத வரி விதிக்கப்படும்பட்சத்தில் ரூ.3.5 லட்சம் மட்டுமே மூலதன ஆதாய வரியாக அரசுக்கு அவர் செலுத்த வேண்டியிருக்கும். அவருக்கு ரூ.14 லட்சம் லாபம் கிடைக்கும்.
புதிய முறை (இண்டக்சேஷன் இல்லாமல் 12.5% வரி):
- மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட குறியீடு இல்லாத புதிய முறையின்படி இந்த விற்பனையை கணக்கீடு செய்யும்பட்சத்தில் அவருக்குக் கிடைத்த மூலதன ஆதாயம் ரூ.1 கோடியாக கணக்கிடப்படும். இதற்கு 12.5 சதவீத வரி விதிக்கப்படும்பட்சத்தில் ரூ. 12.5 லட்சத்தை மூலதன ஆதாய வரியாக அரசுக்கு செலுத்த வேண்டியிருக்கும். அதாவது பழைய முறையை விட புதிய முறையில் மூலதன ஆதாய வரியானது ரூ.9 லட்சம் அதிகமாக இருக்கும். ஒரு சொத்தை வாங்கி 15 ஆண்டுகள் வைத்திருத்து விற்றதற்கு வெறும் ரூ.5 லட்சம் மட்டுமே லாபமாக கிடைக்கும்.
- அதேசமயம், பழைய முறையில் நமக்கு கிடைத்த லாபம் ரூ.14 லட்சமாக இருந்திருக்கும். ஆக, குறியீடு இல்லாத புதிய கணக்கீடு முறையில் சொத்து விற்பனையாளருக்கு ரூ.9 லட்சம் அளவுக்கு இழப்பு ஏற்படுகிறது. ஆனால், வீட்டின் விலை 10 மடங்கு அதிகரித்துள்ளதை மேற்கோள்காட்டி புதிய வரி முறையே சிறந்தது என வருவாய் துறை செயலர் விளக்கம் அளித்துள்ளார்.
- அதேநேரம், 6 மடங்கு அல்லது அதற்கும் கீழான மூலதன பெருக்கத்தை கணக்கில் கொண்டால் பழைய சிஐஐ குறியீட்டு விலை நிர்ணய முறைதான் சிறந்தது என்பது உதாரணங்களின் மூலம் தெளிவாகியுள்ளது. சென்னையைப் போன்ற முக்கிய நகரங்களை தவிர ஏனைய நகரங்களில் சொத்தின் விலை 15 - 20 ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரித்திருக்க வாய்ப்பில்லை என்பதே யதார்த்தம்.
- அப்படியிருக்கையில் இந்த புதிய வரிவிதிப்பு முறை எப்படி நடுத்தர மக்களுக்கு பயனளிப்பதாக இருக்கும்? தனிநபர் வருமான வரி விதிப்பை போல மூலதன ஆதாய வரி விதிப்பையும் எளிமைப்படுத்த வேண்டும் என்ற அரசின் நோக்கத்தில் தவறில்லை. ஆனால், அதற்கு வரி விகிதத்தை குறைக்க வேண்டுமே தவிர, வரி விதிப்புக்கான விலை நிர்ணய முறைகளை சீரமைப்பது ஏற்கத்தக்க முடிவாக இருக்காது. அனைவரையும் சமதளத்தில் வைத்து பார்ப்பதுதான் சரியான வரிவிதிப்பு திட்டமாக இருக்கும்.
- சொத்துகளை விற்று அதை மீண்டும் மறு மூலதன முதலீடு செய்யாமல், வெளிநாடுகளில் குடியேறுதல், மருத்துவம், திருமணம் உள்ளிட்ட தனிப்பட்ட காரணங்களுக்காக சொத்துகளை விற்போருக்கு இந்த தி்ட்டம் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, பணவீக்க குறியீடுடன் கூடிய பழைய வரி விதிப்பை முறையை அரசு மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பதே நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பு. புதிய வரிவிதிப்பு முறையை திரும்பப் பெற்று அரசு அதை நிறைவேற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (29 – 07 – 2024)