TNPSC Thervupettagam

சொன்னால் மட்டும் போதாது!

November 19 , 2020 1347 days 653 0
  • பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளை ஒன்றன் பின் ஒன்றாக மத்திய அரசு முன்னெடுத்து வருவது பாராட்டுக்குரியது. ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியிருப்பதுபோல, மத்திய அரசு இதுவரை அளித்திருப்பது நிவாரணம் தானே தவிர, ஊக்குவிப்பு அல்ல என்பது சரியல்ல.
  • அதே நேரத்தில், மிகப் பெரிய அளவில் பல்லாயிரம் கோடிகளை வாரி வழங்கிவிட்டோம் என்று நிதியமைச்சகம் சொல்வதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
  • ஊக்குவிப்பும், நிவாரணமும் ஒருபுறம் இருந்தாலும், இன்னொருபுறம் மத்திய அரசு சில மானியங்களை அறிவித்து முக்கியமான துறைகளின் இயக்கத்தை முடுக்கிவிட எத்தனித்திருப்பதை மறுக்க முடியாது.
  • குறிப்பாக, உரத் தயாரிப்புத் துறையும், சர்க்கரை உற்பத்தித் துறையும் அரசின் சிறப்புக் கண்ணோட்டத்தைப் பெற்றிருக்கின்றன. அதே நேரத்தில், அரசின் அறிவிப்புகளுக்கும், செயல்பாடுகளுக்கும் உள்ள இடைவெளி அந்தத் துறைகள் சுறுசுறுப்படைவதை தடுக்கின்றன என்கிற உண்மையை மத்திய அரசு உணர வேண்டும்.
  • எவ்வளவு நன்றாகத் திட்டமிட்டாலும்கூட, ஒரு செயல்பாட்டின் வெற்றி அதை நடைமுறைப்படுத்துவதில்தான் இருக்கிறது.
  • நரேந்திர மோடி அரசின் மிகப் பெரிய பலவீனம், சொல்லுக்கும் செயலுக்கும் இடையே காணப்படும் இடைவெளி. அரசியல் தலைமையால் திட்டங்களைத்தான் அறிவிக்க முடியும். அதை செயல்படுத்தும் பொறுப்பு நிர்வாகத்துடையது. நிர்வாக மெத்தனத்தாலும், தவறான வழிகாட்டுதலாலும் பல முயற்சிகள் தடம் புரள்கின்றன.
  • உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ஏற்கெனவே நல்ல முறையில் இயங்கும் துறைகளை மேலும் வலுவடைய வைத்து, உற்பத்தியில் புதிய முதலீடுகளை ஈர்ப்பது என்பதுதான் நோக்கம்.

பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கான முயற்சி

  • உலக நாடுகள் சீனாவை அகற்றி நிறுத்த எத்தனிக்கும் இந்த நேரத்தில், சில துறைகளை ஊக்குவிப்பதன் மூலம் ஏற்றுமதிகளை அதிகரிக்க முடியும் என்று அரசு எதிர்பார்க்கிறது.
  • அந்த திட்டத்தின் கீழ், சர்க்கரை உற்பத்தித் துறை சிறப்பு முக்கியத்துவத்தைப் பெற்றது. அதன்படி, அதிகரித்த ஏற்றுமதியில் 6% தொகையை ஊக்கத் தொகையாக வழங்குவதாகக் கடந்த செப்டம்பர் மாதம் அரசு அறிவித்தது.
  • அரசு அறிவித்த டன்னுக்கு ரூ.10,448 ஊக்க உதவித்தொகையின் காரணமாக, நடப்பு நிதியாண்டின் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் 5.65 மில்லியன் டன் சர்க்கரை ஏற்றுமதியாகி இருக்கிறது. இதற்கு அரசு அளித்திருக்க வேண்டிய ஊக்கத்தொகை சுமார் ரூ.5,900 கோடி. ஆனால், இதுவரை ரூ.900 கோடிதான் வழங்கப்பட்டிருக்கிறது.
  • கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 மில்லியன் (40 லட்சம்) டன் சர்க்கரை கையிருப்பு வைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதற்காக செய்யப்படும் முதலீட்டின் வட்டியும், சேமிப்புக் கிடங்குகளில் வைப்பதற்கான தொகையும் அரசால் வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதற்காக வழங்கப்பட்டிருக்க வேண்டிய ரூ.1,676 கோடியில், இதுவரை சுமார் ரூ.300 கோடி மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது.
  • உற்பத்தியாளர்களுக்கு அரசு வாக்குறுதி அளித்ததுபோல, ஊக்கத்தொகை, மானியம், வட்டித் தள்ளுபடி, கடனுதவி போன்றவற்றை வழங்காமல் போகும்போது அரசின் நாணயம் கேள்விக்குறியாகிறது.

பணப்புழக்கம் அதிகரிக்க வேண்டும்

  • அரசின் உத்தரவாதத்தை நம்பி முதலீடு செய்தவர்கள் மட்டுமல்லாமல், புதிய முதலீட்டாளர்களும் அரசின் அறிவிப்புகளை சட்டை செய்ய மாட்டார்கள்.
  • சர்க்கரை உற்பத்தியாளர்களை விடுங்கள், மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையே முறையாக வழங்கப்படவில்லை எனும்போது அரசின் நம்பகத்தன்மையே கேள்விக்குறியாகிறது.
  • இதுபோல குறித்த நேரத்திலும், முழுமையாகவும் தரப்பட வேண்டிய மானியம், உதவித்தொகை போன்றவை மத்திய - மாநில அரசுகளால் வழங்கப்படாமல் இருப்பது புதிதொன்றுமல்ல.
  • இந்த நிதியாண்டின் தொடக்கத்தில் உணவு, உரத்துக்காக தரப்பட வேண்டிய மானியத்தொகை மட்டும் ரூ.3 லட்சம் கோடி. அதேபோல, தனியார் மின் உற்பத்தியாளர்களுக்கு மாநிலங்களின் மின்சார வாரியங்கள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.1,25,000 கோடி. இப்படியிருக்கும்போது உற்பத்தித் துறை புத்துயிர் பெற வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.
  • உர உற்பத்தியாளர்களைப் பொருத்தவரை, அவர்கள் காட்டில் திடீரென்று அடை மழை பெய்திருக்கிறது. ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த ரூ.71,350 கோடிக்கும் மேலாக, இப்போது 2020}21 நிதியாண்டில் ரூ.65,000 கோடி வழங்க இருக்கிறது நரேந்திர மோடி அரசு.
  • இதன் மூலம், இதற்கு முன்னால் தரப்பட வேண்டிய மானிய நிலுவைத் தொகையான ரூ.48,000 கோடி தரப்படுவதுடன் இந்த நிதியாண்டுக்கு கணக்கிடப்பட்டுள்ள மானியத்தொகையான ரூ.80,000 கோடியும் வழங்கப்பட இருக்கிறது.
  • உற்பத்தித் துறைகளுக்குத் தரப்பட வேண்டிய தொகை, புதிதாக அறிவிக்கப்பட்ட உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் மூலம் வழங்கப்படும்போது, அதனுடன் நிலுவையில் இருக்கும் பழைய பாக்கித் தொகையும் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
  • ஏற்கெனவே உரத் தயாரிப்பு நிறுவனங்கள், தயாரிப்புச் செலவைவிடக் குறைவாக தங்களது பொருள்களை விற்க வேண்டிய நிலையில் இருக்கின்றன என்பதை மறந்துவிடக் கூடாது.
  • பொருளாதாரம் சுறுசுறுப்படைய வேண்டுமானால், மக்கள் மத்தியில் பணப்புழக்கம் அதிகரிக்க வேண்டும். பணப்புழக்கம் அதிகரிப்பதற்கு அரசு வழங்க வேண்டிய மானியங்களையும், உதவித் தொகைகளையும் உடனடியாக வழங்க வேண்டும்.

நன்றி: தினமணி (19-11-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்