TNPSC Thervupettagam

சொற்களால் வந்த சிறை!

November 3 , 2024 66 days 94 0

சொற்களால் வந்த சிறை!

  • ஆனாலும், இந்தத் தமிழ்க் கவிஞர்களுக்கு - அன்றும் சரி, இன்றும் சரி - கடவுள் பற்றி கொஞ்சங்கூட பயமே இல்லைபோல் தெரிகிறது.
  • ஆதியில் -‘தண்டமிழ் மூன்றும் வல்லோன்’ - ஆலவாய்ப் பெருமானே பாட்டெழுதிக் கொண்டுவந்தாலும், ‘வையை நாடவன்’ சங்க மண்டபத்தில் (‘நூலாய்ந்தோர் வைகும் திருந்தவைக்களத்தில்’) வழுவு பாடல் (‘சொற்குற்றமின்று, வேறு பொருட்குற்றம்’’) – பொருட்பிழை - எனப்பட்டது. ‘வெகுண்ட நீள்சடையப் பெருமானைக் குன்றென நேரெதிர் நின்று, ‘நெற்றிக் கண் திறப்பினும், ‘’பாடல் குற்றங் குற்றமே” (கவிக்குற்றம்) என அப்பெருமானிடமே தமிழ்ச் சமர்புரிந்தான், ‘விளைவு நோக்கான்’ எமதூர் நக்கீரன். நற்றமிழுக்காக நக்கீரன் நெற்றிக்கண் நெருப்புக்கிரையானதும், பொசுக்கிய இறையே பூந்தமிழால் கனிந்து, பொற்றாமரைக் குளத்திருந்து நக்கீரனை மீண்டெழ வைத்ததெல்லாம் நாமறிந்த கதையல்லவா?
  • தலைமுறை தலைமுறையாகத் தமிழ்ப் புலவர்கள் பலருக்கு நக்கீரத் துணிச்சல் நைந்து போகாமல் படர்ந்தே வருகிறது போலும்.
  • ‘வன் தொண்டர்’ சுந்தரர், திருவெண்ணெய்நல்லூரில்‌, அன்றைக்கு எடுத்த எடுப்பிலேயே, சற்றும் தயங்காமல், சிவபெருமானையே ‘பித்தா’ என்றழைத்தார். (பிறைசூடி பெருமானே அருளாளா"); சுந்தரர் அழைத்த அந்தப் பித்தனுக்குக் ‘’காடுடைய சுடலைப்பொடி பூசி’’யவன் என்று அடையாள அட்டை வழங்கினார் ஞானசம்பந்தர்; சுந்தரரை, சம்பந்தரை, ‘வேதப் பனுவலும் பயனுமான’, மூவரில் முன்னோன், கோபித்துக்கொள்ளவேயில்லையே!
  • ‘சரிதான், இவனை (சிவனை) எவ்வளவு வேண்டுமானாலும் வச்சு செய்யலாம், தாங்குவான்’ என்ற நினைப்போடு, பின்னர் வந்த காளமேகப் புலவரோ சிவபெருமானின் மொத்தக் குடும்பத்தையுமே சகட்டுமேனிக்குக் ‘கலாய்’த்தார் கவித் தமிழால். அழகன், அறுபடைகொண்டான், தமிழ் முருகனின் தந்தை (சிவன்), தாய் (உமை), மாமன் (திருமால்), அண்ணன் (விநாயகன்) ஆகிய அனைவருக்கும் கவி காளமேகம் வழங்கியுள்ள கௌரவப் பட்டங்களைப் பாருங்கள்.
  • அப்பன் இரந்துண்ணி, யாத்தாள் மலைநீலி
  • ஒப்பரிய மாமனுறி திருடி, சப்பைக்கால்
  • அண்ணன்பெருவயிறன் ஆறுமுகத்தானுக்கிங்
  • கெண்ணும் பெருமையிவை.
  •  (இந்தக் கௌரவப் பட்டமளிப்பு விழாவில் ஏனோ பிரம்மனைக் கௌரவிக்கவில்லை கவி(யாளுநர்), வேந்தர் காளமேகம்.)
  • அவரே இன்னொரு பாடலில், ‘மலைநீலி’ உமை, மதுரை மீனாட்சி, பெருவயிறன் விநாயகனைப் பெற்றெடுத்த ‘கூடல் தொன்மை’யைக்- கீழடிக்கு முன்பே– தோண்டியெடுத்ததைச், சொல்லவா சொல்லவா என்று சுற்றிலுங் கேட்டு, வரலாற்றுக் குறிப்பொன்றும் வழங்கிச் சென்றிருக்கிறார் பாருங்கள்.
  • ‘’நல்லதொரு புதுமை நாட்டிற் கண்டேனதனைச்
  • சொல்லவா சொல்லவா சொல்லவா - தொல்லை
  • மதுரை விக்கினேச்சுரனை மாதுமையாள் பெற்றாள்
  • குதிரை விற்க வந்தவனைக்கூடி’’
  • இவர்கள்தான் இப்படியென்றால், இக்காலத் தமிழ்க் கவிஞர்களும் ‘ரொம்பத் தில்’லாத்தான்’ எழுதுறாங்க.
  • காளமேகங் ‘கலாய்த்துப், போனால் போகட்டும்’ என்று போகவிட்ட ’சூரசம்ஹாரன், வேல்வீரன் கந்தனைக் கவியரசு கண்ணதாசன், ஏதோ தெருவில் பார்க்காமல் போகிற பள்ளிநாள் நண்பனை நட்புரிமையோடு பின்னாலிருந்து சட்டையைப் பிடித்திழுத்து ‘நறுக்’னு நாலு கேள்வி கேட்பவரைப்போல,''என்னடா தமிழ்க்குமரா... என்னை நீ மறந்தாயோ? நான் பார்த்ததும் பொய் என்றால், நீ வந்ததும் பொய் என்றால் பக்தியின் விலை என்னடா?'' (திரைப்படம்; 'மனிதனும் தெய்வமாகலாம்'', 1975) என்று எகத்தாளமாகக் கேட்கிறார்.
  • முருகனைப் போடா, வாடா, என்றழைத்ததோடு நில்லாமல், கடவுளைக் ‘கல்லாய்ப் போனவன்’ என்று சொன்னால் விடுவார்களா இப்போ? (காவி பறக்கும்; ஆவி பறக்கும்!) ஆனால், கவிஞன் கடவுள் கல்லாகிப் போய்விட்டதைச் சந்தேகமில்லாமல் தான் உறுதிப்படுத்திக் கொண்டுவிட்டதுபோல, அதற்கான காரணம் என்ன என்று மட்டும் பொதுப்பந்தியில் கேள்விப் ‘பாயசம்’ ஊற்றுகிறார். நல்லவேளை,''கடவுள் ஏன் கல்லானார்?'' ('திரைப்படம் - என் அண்ணன்') என்று கேள்வி எழுப்பி, உடனே அவரே, ''மனம் கல்லாய் போன மனிதர்களாலே'' என்று வடையாக, இல்லை, விடையாகப் பரிமாறிவிட்டார்!
  • ‘கல்லானான்’ கடவுளை- ‘எல்லா உயிர்க்கும் அருளாளனாக அறியப்பட்டிருக்கும் கடவுளைக்- ‘கடன்காரன்’ என்று கூசாமல் வசைபாட அசுரத் துணிச்சல் பெற்றிருக்க வேண்டும் அல்லவா இந்தச் செட்டிநாட்டுச் சிறுகூடல்பட்டியான்? கடவுள் இவருக்குக் கடன் பட்டிருக்கிறாராம்! ''கடவுள் என் வாழ்வில் கடன்காரன். கவலைகள் தீர்த்தால் கடன் தீரும்'' (திரைப்படம் - 'நீதி' ,1972, பாடல் - நாளைமுதல் குடிக்கமாட்டேன்) என்கிறாரே? முன்பொருநாள் சுந்தரரைச் சிக்க வைக்கச் சிவபெருமான் சான்று காட்டிய ‘மூல ஓலை’’போல,  இவர் கடவுளையே சிக்கவைக்கும் ‘கடன் பத்திர ஓலை’யேதும் கைவசம் வைத்திருப்பாரோ? செட்டு நாட்டாரல்லவா? கடன் எப்படி ஏற்பட்டது? அந்தக் ‘கடனை வஜா’ (தள்ளுபடி) செய்வதற்கான வழி என்ன? என்றும் கடவுளுக்குக் கன்டிஷன் போடுகிறான் கவிஞன். ‘என் கவலைகளைத் தீர்த்துவிட்டு வந்து நில். ‘அட்மின்’ எனக்குத் தெரியாமல் உன் பெயரில் எழுதிவிட்ட ‘கடன்காரன்’ பட்டியலில் இருந்து உன் பெயரை நீக்கி விடுகிறேன்‘ என்று சலுகை நீட்டுகிறான்.
  • கடவுள்‘கடன்காரன்’ என்ற பட்டத்தோடு கடந்து சென்றுவிடாமல், கூடுதலாகக், (கொசுறாக), அபாண்டமாக, ‘இறைவன் கொடியவன்’ என்று இரட்டைப் பட்டமாக (Dual Degree) வேறு வாரிவழங்குகிறானே ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ ஆக்கியோன்.''பெண்ணைப் படைத்துக் கண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே'' என்று (திரைப்படம்: புதிய பறவை, எங்கே நிம்மதி என்ற பாடல்) குற்றச்சாட்டுப் படித்திருப்பதையும் கேட்டீர்களா, நாட்டோரே?
  • இப்படிச் ‘சாற்றப்பட்ட’ பல்வேறு பிரிவுகளில் கடவுளைக் குற்றவாளியாகவே உறுதி செய்துவிட்டுக் -''கண்களின் தண்டனை காட்சி வழி, காட்சியின் தண்டனை காதல் வழி, காதலின் தண்டனை கடவுள் வழி'' என்று எழுதிய கவிஞர், இறுதியில், ''கடவுளைத் தண்டிக்க என்ன வழி?'' என்று நம்மையே மாட்டிவிடுவதுபோல் கேட்டுச் சென்றுவிட்டாரே.
  • நாம் இந்தக் கேள்விக்குப் பதில் தெரிந்தாலும்,சொல்லவோ, எழுதவோ துணிய மாட்டோம் என்பது கவிஞருக்குத் தெரியும். அதனால் அவரே தண்டனைத் தீர்ப்பும் தனியே எழுதிவிட்டார்.
  • என்ன தண்டனை கடவுளுக்கு?
  • ஒரேயொரு கவிதைக்காக
  • பாலஸ்தீனப் பெண் கவிஞர் டாரின் டட்டூருக்கு வழங்கப்பட்டதுபோல் இரண்டரையாண்டுச் சிறைவாசமா?
  • இலங்கைத் தீவு இளங்கவிஞன் மன்னாரமுதுக்கு (அஹ்னாப் ஜெஸிம்) பரிசளிக்கப்பட்டிருக்கிற, வழக்கை நிலுவையில் வைத்துப், பத்தொன்பது மாதச் சித்திரவதைச் சிறையா?
  • ரஷியக் கவிஞன் ஆர்டெம் கமர்டினுக்குக் கிடைத்திருக்கும் நிறை வதைகளும் ஏழாண்டுச் சிறையுமா?
  • இங்கே நாம் காணவிருக்கும் இன்னொரு கவிஞனுக்கு வழங்கப்பட்டிருக்கும் வாழ்க்கையைப் புரட்டக்கூடிய வகைதொகையற்ற தண்டனையா?
  • இல்லையே!
  • இதோ கவிஞரளித்த வித்தியாசத் தண்டனை விவரம்:
  • ‘பிறவியிலான்’ கடவுள்  பிறப்பெடுக்க வேண்டும். அப்போதுதான் உயரே இருப்பவனுக்குக் கீழே உழலும் மாந்தர் வாதை யாவும் விளங்கும் என்பதாக,''கடவுள் மனிதனாகப் பிறக்கவேண்டும்; அவன் காதலித்து வேதனையில் வாடவேண்டும்'' (வானம்பாடி) என்று சாபமிடுவதுபோல் கடுந்தண்டனைத் தீர்ப்பெழுதினான்.
  • ‘தூணிலும் இருப்பார்; துரும்பிலும் இருப்பார்’ என்று கூறப்படும் கடவுளுக்குத் தண்டனை கொடுத்துப் பதவியும் இழக்கச் செய்துவிட்டு, குடியிருந்த வீட்டையுங் காலிசெய்யத் தாக்கீது அளித்ததுபோல , ''ஒரு கோவில் இல்லாமல் தெய்வமும் இல்லை. ஒரு தெய்வம் இல்லாமல் கோவிலும் இல்லை’’ என்றெழுதிவிட்டு. மேலும் கூடுதலாக, ‘தெய்வத்தையும் கோவிலையும் ஏதோ மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து மாற்றிவிட்டது போல, ‘’நீ எந்தன் கோவில்; நான் அங்கு தீபம், தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல'' ('இதயகமலம்') என்று புதிய ‘பிறப்பொக்கும்’ பாடுகிறானே.
  • கண்ணதாசனுக்குப் பின் வந்து, கண்ணதாசன் போலவே கவியாண்டு, திரையுமாண்டு விரைந்தேகிய நா. முத்துக்குமாரும் கண்ணதாசன் மரபின் தொடர்ச்சியாகவே ‘கடவுள் என்னடா கடவுள்?’ என்ற பாணியிலேயே, ‘’தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்… தந்தை அன்பின் முன்னே…
  • தாலாட்டுப் பாடும் தாயின் அன்பும்…
  • தந்தை அன்பின் பின்னே.’ ’என்று புதுவிதி செய்தான். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற ‘பழைய ஏற்பாட்டை’, திரையிசைத் தமிழால் எளிதாக, ஓசையில்லாமல் நெம்பி இடமாற்றம் செய்து புதிய ஏற்பாடாக முன்வைத்த நா. முத்துக்குமார், நற்றமிழ்ச் சாதுரியன்.
  • நல்லவேளை இந்தக் கவிஞர்களெல்லாம் தமிழ்நாட்டில் பிறந்தார்கள்; தப்பித்தார்கள், தண்டனையில்லாமல்! தமிழால் நிந்தித்தாலும் தானேற்றுக் கொள்வேன்; தண்டிப்பேனோ? என்று கடவுளும் இங்கே தமிழ் வளர்ச்சிக்கு தலை நீரூற்றியிருக்கிறார்.
  • இவர்கள் எல்லாம் ஜோர்தானில் பிறந்திருக்க வேண்டும்; சேதி தெரிந்திருக்கும்.
  • என்ன சேதி?
  • வாங்க... பார்க்கலாம்.
  • இதுக்குத்தானே இவ்வளவு நீண்ட முகப்பு!
  • ஜோர்தான் நாட்டு விமான நிலைய வருகை மண்டபத்தில் "ஜோர்தான் , சிறிய நாடு, பெரிய யோசனைகள்..."என்றொரு விளம்பரப் பதாகை இருப்பதாக அறிகிறோம். உண்மைதான். சிறிய நாடு என்பது உண்மை. பெரிய யோசனைகள் என்பதும் உண்மையாக இருக்கலாம்தான். ஆனால், யோசனைகள், யோசனைகளாகவே நிற்கின்றன போலும். எதுவும் செயலாக மாற்றப்படவில்லை, குற்றமற்ற குற்றத்திற்கு கடுமையான தண்டனை என்பது உள்பட.
  • மன்னாராட்சி - மக்களாட்சி (Monarchial Democracy) எனும் இரட்டைப்பாடு அரசியல்; வானளாவிய அதிகாரங்கொண்ட மன்னர்; பாதி நியமனங்களும் பாதி தேர்தலும் நிரப்பும் வகையான வித்தியாசக் கலவை நாடாளுமன்றம்; மதச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றுத் தடைகள் அதிகமில்லை என வெளியுலகப் பூச்சுக் காட்டி, உள்ளே இஸ்லாமிய மத முஃப்திகள் (Mufti) சொற்படிதான் செயல்பாடு என்ற நாட்டின் நடைமுறைகளில் நிறையச் சிவப்புக் கோடுகள் (Red lines) உண்டு.
  • மக்களாட்சியின் நான்காம் தூண் பத்திரிகைகள் / ஊடகங்கள் (Press, the fourth pillar of democracy) என்பதெல்லாம் ஜோர்டானுக்குப் பொருந்தாது. ‘நான்காம் தூணும்’ சிவப்புக் கோடுகளுக்குக் கட்டுப்பட்டே நிற்கிறது. ‘ராஜா, ராயல்டி, ராணுவம்’ போன்ற அரசியல் சிவப்புக் கோடுகளை யாரும் (யாரும்) கேள்வி கேட்பதேயில்லை. (அரண்மனைக்குள் அடங்காப் புயலாய்ப் புகுந்து, ‘தேரா மன்னா’ என்று தமிழ்ப் பெண்ணொருத்தி மன்னன் முகத்துக்கு நேராகக் கைநீட்டி முழங்கியிருக்கிறாள் மாமதுரையில் அன்று. இன்று ஜோர்தானில் கேட்டால் தலையிருக்காது.)
  • ஜோர்தானிய அரசியலமைப்பு கருத்து சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. 2007-ல் திருத்தப்பட்ட வெளியீட்டுச் சட்டத்தின் (Law on Publications) கீழ் எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் இனி சிறைத்தண்டனைக்கு ஆளாக மாட்டார்கள் என்ற உறுதியும் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அளிக்கப்பட்டிருக்கும் இந்த உறுதி அடிக்கடி அழிக்கப்படுகிறது என்பதே ஜோர்தானில் நிதர்சனம். இஸ்லாமே அதற்கு உதாரணம்.

என்ன நடக்கிறது அங்கே?

  • இஸ்லாம் சம்ஹான் (Islam Samhan) வயது 27 (2008-ல்). தான் காதலித்த நாடியா என்ற பெண்ணைத் திருமணம் செய்து, மூன்று வயது மகன் வார்டு, இரண்டு மாதங்கள் ஆன மகள் ஜெய்து ஆகிய இரு சிறு குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ள ஜோர்தானிய கவிஞன். உள்ளூர், அரபு மொழித் தனியார் நாளிதழான அல் அரப் அல் யான் (Al Arab Al Yawn newspaper) பத்திரிகையில் கலாச்சாரப் பகுதி ஆசிரியராகப் (cultural news editor) பணி. தன் காதல் மனைவியை நினைத்து, காதலிற் கசிந்து, அவருக்கே (நாடியா) சமர்ப்பணமளித்து அரபுமொழிக் கவிதைத் தொகுப்பு "ரஹாகேத்தேல்" (ஆங்கிலத்தில் சிலர் ‘In a Slim Shadow’ என்று குறிப்பிடுகின்றனர்.) ஒன்றை 2008 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் வெளியிட்டார். பிடித்தது சனி! (ஜோர்தானிலும் ‘சனி’ இருக்குமோ?)
  • மனித உரிமைகள் மற்றும் பேச்சு சுதந்திரத்தை மதிக்கும் ஒரு நாடாகச் சர்வதேச அரங்கில் ஒரு தோற்றத்தை ஜோர்தான் முன்வைத்தாலும், உள்ளே இருப்பதென்னவோ ஈறும் பேனுமே. இதோ, இஸ்லாம் சம்ஹான் வழக்கே எடுத்துக்காட்டு.
  • 2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், ஜோர்தான் நாட்டுப் பத்திரிகை மற்றும் வெளியீட்டுத் துறையால் வழக்கு ஒன்று இஸ்லாம் சம்ஹான் மீது தாக்கல் செய்யப்பட்டது, அக் 21, 2008-ல் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். முதற்கட்டமாகப் பதினைந்து நாள் சிறைத்தண்டனையில் நான்கு நாள்கள் தற்காலிமாக ஒரு சிறையில் அடைக்கப்பட்டார். அச்சிறையில் உளவியல் ரீதியாகத் துன்புறுத்தப்படுவதற்காகவே, வழக்கமான நடைமுறைகள் மீறப்பட்டுக் கற்பழிப்புக் குற்றவாளிகள், கொலைக்குற்றம் புரிந்தவர்களுடன் சேர்த்து சம்ஹான் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கு எப்படி வந்தது?

  • யாரோ ஒரு நபர், தான் சம்ஹானுடைய கவிதைகளைப் படித்ததாகவும் அக்கவிதைகளில் மத உணர்வுகளைப் புண்படுத்தும் விஷயங்கள் இருப்பதாகவும் அம்மோன் நியூஸ் (en.ammonnews.net) என்ற இணையதளத்தில் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரையைப் படித்த ஜோர்டானின் மிக உயர்ந்த ஆன்மிகத் தலைவரான கிராண்ட் முஃப்தி - 2006-ல் அரச ஆணைப்படி நியமிக்கப்பட்டவர் - சம்ஹானின் கவிதை நூலுக்கு எதிராகப் பேசியதுடன், சம்ஹான் தரப்பில் எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல், தன்னிச்சையாகச் சம்ஹானுக்கு எதிராக ஒரு ஃபத்வா (Fatwa) அறிவிப்புச் செய்தார். இந்த கிராண்ட் முஃப்தி, அவ்காஃப் அமைச்சகத்தின் ஊடாக இமாம்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்குகின்ற நிலையிலிருப்பவர்.
  • இஸ்லாம் சம்ஹான் தனது காதல் மனைவிக்குச் சமர்ப்பணம் (அதுவே மதவாதிகளுக்கு ஆத்திரம்) செய்திருக்கும் நூல் "ரஹாகேத்தேல்" (நேரடியாக அரேபிய மொழியிலிருந்து தமிழில், ஒரு நிழலின் நளினம்) மார்ச் 2008-க்கு முந்தையது. அந்நூலில் குறிப்பிட்ட சில வாசகங்களில் கவிஞர் எழுதியிருப்பது தெய்வ நிந்தனை செய்திருப்பதாகக் குற்றம்சாட்டி முஸ்லிம் சகோதரர்கள் மற்றும் ஜோர்தானிய முப்தி தலைமையில் ஒரு பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இந்த பிரசாரத்தின் விளைவாகத்தான் சம்ஹான் மீது வழக்குத் தொடரப்பட்டு முதலில் 21அக்டோபர் 2008 அன்று 15 நாள்கள் தடுத்து வைக்கப்பட்டான்.
  • சம்ஹான் நூல் அதிகாரப்பூர்வமாகத் தடைசெய்யப்பட்டது. ஜோர்டானில் எழுதப்பட்ட, அச்சிடப்பட்ட (வெளியிடப்பட்ட) கவிதை வெளிப்பாடு குறித்து ஒரு மத அதிகாரம் தலையிடுவது 2008-ல்தான் முதல்முறையாகும்.

எதற்காக வழக்கு?

  • முதன்மையான குற்றச்சாட்டு: இஸ்லாம் சம்ஹானின் கவிதைத் தொகுப்பில், ஒரு கவிதையில் - காதல் கவிதையில் – குரான் குறித்த உருவகங்களுடன் கலந்த சில காதல் வரிகள் மற்றும் கிரேக்க புராணங்களில் தீங்கு விளைவிக்காத கடவுள்கள் போன்ற சொற்களைப் பயன்படுத்திய பகுதிகள் காணப்படுவதால், அவை "இஸ்லாமை, தீர்க்கதரிசிகளை, மதஉணர்வுகளை அவமதிக்கும்" செயல். ஆகவே, "மதஉணர்வுகளை அவமதித்தல்" குற்றச்சாட்டுகளில் இது அடங்கும் என்பதாக வழக்கு (அதாவது மத வசனங்களைப் பாலியல் / காதல் அர்த்தங்களுடன் தவறாகக் கலப்பதன் மூலம் இஸ்லாத்தை அவமதித்ததாகக் கூறுகிறது அந்த வழக்கு.) உண்மையில், சம்ஹானின் படைப்பில் எந்த தீர்க்கதரிசிகளையும் அல்லது மதத்தலைவர்களையும் பெயரிட்டுக் குறிப்பிடவில்லை. ஒரு இருபத்தேழு வயது இளங்கவிஞனின் கவிதையை, இலக்கியப் படைப்பை இப்படி அணுகினால், என்னதான் எழுத முடியும்? (ஆண்டவனையே தன் ஆளனாகப் பாவித்த ஆண்டாளுக்குச் ஜோர்டானில் மாளும் வரை சிறைதான்!)
  • இரண்டாவதாக வைக்கப்படும் குற்றச்சாட்டு: சம்ஹான் தனது கவிதை நூலை வெளியிட, பத்திரிகை மற்றும் வெளியீட்டுத் துறையிடமிருந்து அனுமதி பெறவில்லை என்பது. சம்ஹான் நூல் வெளியிடும் முன்பே தான் அனுமதி பெற்றதாகவும், புத்தகம் வெளியிட்டு எட்டு மாதங்கள்தான் ஆகியிருப்பதாகவும், நாட்டின் கலாச்சார அமைச்சகம்கூட அந்த நூலின் 50 பிரதிகளை வாங்கியிருப்பதாகவும் ஆதாரங்களுடன் மன்றில் வழக்குரைஞர் மூலம் தாக்கல் செய்யப்பட்டது.
  • விசாரணையில் சம்ஹான் தரப்பில், நூல் எந்த வகையிலும் இஸ்லாமைப் புண்படுத்தவில்லை என்பதையும், கவிதை வரிகள் உருவகமாகத்தான் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. குறுக்கு விசாரணையின்போது, அரசுத்தரப்பு சாட்சிகளில் பலர் குறிப்பிடப்படும் கவிதைகளை முழுதாகப் படிக்கவேயில்லை என்பது மிக வெளிப்படையாகத் தெரிந்தது.

தீர்ப்பு என்ன?

  • இஸ்லாம் சம்ஹானுக்கு ஜூன் 22, 2009-ல் நீதிமன்றத்தால் ஒரு வருடம் சிறைத்தண்டனை, கூடுதலாக 14,000 அமெரிக்க டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கை மேல்முறையீடு செய்ய சம்ஹான் தரப்பில் திட்டமிட்டிருந்த நிலையிலும், ஜோர்தானின் கிராண்ட் முப்தியே சம்ஹானுக்கு எதிராகப் ஃபத்வா பிறப்பித்துள்ளதால், "அரசர் தலையீடு" (Royal Intervention) இல்லாமல் வெற்றிபெற முடியும் எனச் சம்ஹானுக்கே நம்பிக்கையில்லை என்கிறார்கள் கவிஞனைப் பேட்டி கண்டவர்கள்.
  • கிராண்ட் முஃப்தி பிறப்பித்த ஃபத்வா, நீதிமன்றத் தீர்ப்பு ஆகியவற்றின் கூட்டு விளைவாகச் சம்ஹானும் அவனது குடும்பத்தினரும் மிக மிக, அதிக விலை கொடுக்க நேர்ந்தது. முதலில் சம்ஹானின் வேலை போயிற்று. ஃபத்வா அறிவிப்புக்குப் பின் வரும் நாட்கள் பெரும்பான்மை இஸ்லாமிய மக்கள், சம்ஹானை ஒரு "நாய்", "விசுவாச துரோகி" என்று அவமதிக்கும் நாள்களாகிவிட்டன. அலுவல் சகாக்களும், நட்பும் உறவும் – ஏன், சம்ஹானின் மைத்துனர்கள்கூட- ஃபத்வாவுக்குப் பயந்து ஒதுங்கிக் கொண்டதால், முற்றிலும் தனிமையில் வாழும் சூழல் அவனுக்கும் குடும்பத்தாருக்கும்.
  • சொந்த மதத்தினரால் பலவகைச் சமுதாயத் துன்புறுத்தல்கள், அனுதினமும் மத மதுப்பிரியர்களின் கொச்சை அச்சுறுத்தல்கள் என்பவற்றோடே அவனது குடும்பத்தார் வாழ்கின்றனர். மேலும், ஆபத்தாக அவர் வாழுமிடம் ஜோர்தானின் மிகவும் பழமைவாத சர்க்கா பகுதி. குடியிருக்கும் வீடுமறைந்த அல்கொய்தா தலைவர் அபுமொசாத் அல்சர்காவியின் முன்னாள் இல்லத்திலிருந்து சிறுதொலைவே. இவற்றால்தான் குறிப்பாக அச்சுறுத்தப்பட்டு உணர்வதாக சம்ஹான் ரகசியமாகப் பேட்டி எடுத்தவர் ஒருவரிடம் தெரிவித்திருக்கிறார்.
  • ஜூன் 22 தீர்ப்பைத் தொடர்ந்து, ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் தனக்கு ஏதாவதொரு வழியில் உதவுமாறு பத்திரிகையாளர்களின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் மையத்தை சம்ஹான் அணுகியபோது, அவர்கள் ‘’உங்கள் வழக்கு"கவிதை சம்பந்தப்பட்டது, பத்திரிகை தொடர்பானது அல்ல’’ என்று ஆரம்பத்தில் நழுவிக் கொண்டார்கள். ஆனால், அவரது (முன்னாள்) முதலாளி ஹடாசர் ஹான் சமஹானுக்கு உறுதியுடன் துணை நின்றார்.பின்னர் பன்னாட்டு அமைப்புகளின் ஆதரவு திரள்வதைக் கண்டு ஆரம்பத்தில் நழுவ முயன்ற அமைப்பும் சம்ஹானுடன் சேர்ந்து நின்றது.
  • இதுமட்டுமில்லை.
  • தன் பெயரிலேயே ‘இஸ்லாம்’ இணைத்து வைத்திருக்கும் கவிஞன் இஸ்லாமியச் சட்டப்படி தற்போது இஸ்லாமியர் இல்லை.
  • எப்படி என்கிறீர்களா?
  • கிராண்ட் முஃப்தியால் ‘விசுவாச துரோகி’ (‘காஃபிர்’) என்ற அறிவிப்புச் செய்திருப்பதால்.
  • இந்து மதத்தைப் பின்பற்றுபவரை ‘இந்து’ என்கிறோம்; கிறிஸ்துவத்தைப் பின்பற்றுபவரை ‘கிறிஸ்துவர்’ என்கிறோம். அதேபோல்தான் இஸ்லாத்தைப் பின்பற்றுபவரைக் குறிக்க ‘முஸ்லிம்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இந்து, கிறிஸ்துவர் என்ற பதங்களுக்கு எதிர்ப்பதத்தைக் குறிக்க நேரடி வார்த்தைகள் இல்லை. ஆனால், ‘முஸ்லிம்’ என்ற அரபிச் சொல்லுக்கு எதிர்ப்பதம் உண்டு; அதுதான் ‘காஃபிர்’ என்ற சொல். அதாவது முஸ்லிம் அல்லாத எவரையும் குறிக்க காஃபிர் என்று சொன்னாலும் ஒன்றே.
  • மேலும், நீதிமன்ற வழக்கில் சம்ஹான் குற்றவாளி என்று மேல்முறையீட்டில் இறுதித் தீர்ப்பளிக்கப்பட்டுச் சிறைவாசத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தால், ஜோர்தானில் உள்ள இஸ்லாமிய சட்டத்தின்படி (காஃபிர்) சம்ஹான் தனது மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும், மேலும் அவளையோ அல்லது அவர்களின் குழந்தைகளையோ மீண்டும் அணுகக் கூடாது.
  • கெய்ரோவைத் தலைமைத் தளமாகக் கொண்ட அரபு நெட்வொர்க் உள்பட, உலகளாவிய மனித உரிமைகள் குழுக்கள், எழுத்தாளர்கள் அமைப்புகள் முதலியன சம்ஹானின் வாழ்க்கையையே புரட்டிப் போடக்கூடிய இத்தகைய  தண்டனையைக் கண்டித்தன. ஜோர்தானின் மிகப்பெரிய வெளிநாட்டு உதவி வழங்குநரான அமெரிக்காவும் ஜோர்தானைத் தன் மனித உரிமைகள் அறிக்கையில் கடுமையாக விமர்சித்தது. இந்த சம்பவம் "துக்கங்களின் கடைசி" நிகழ்வாக இருக்க வேண்டும் எனப் பல்வேறு நாட்டுக் கவிஞர்கள் ஒரு கூட்டறிக்கையில் கேட்டுக்கொண்டனர். ஜோர்தான் அரசாங்கம் சமீபத்தில் பிரதமர் அலுவலகத்தில் எழுத்தாளர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்ட வெளியீடுகள் ஆலோசனைக் குழு ஒன்றை அமத்திருக்கிறது. நிலைமைகள் சீராகுமா?
  • ஜோர்தானில் இஸ்லாம் சம்ஹானின் கைது இலக்கிய உலகில், குறிப்பாகக் கவிதைப் பரப்பில் பெருங்கவலைக்குரிய நிகழ்வாகும். ஏனெனில், இந்த நிகழ்வு தனிமனிதனின் சுதந்திரம், படைப்பாற்றல் ஆகியவற்றுக்குச் சம்பந்தமில்லாமல் முட்டுக்கட்டை போடுகிறது. கவிஞர்கள் தத்தமது மொழிகளில் தனித்துவமான குணாதிசயங்களைக் கொண்ட ஒரு உருவக மொழியை நம்பியிருப்பவர்கள், கையாள்பவர்கள். பெரும்பாலான மக்கள் பயனாக்குவதுபோலச் சாதாரணமுறையில் மொழியை அவர்கள் கைக்கொள்வதில்லை.
  • சம்ஹான் விஷயத்தில், கடவுள்கள் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார். அது அரபு மொழியுடன் தொடர்புடைய சொல் அல்ல; கிரேக்க புராணங்களுடன் தொடர்புடையது. அதுவும் ஒரு உருவகம் மட்டுமே. கவிஞனின் சில வரிகள், ‘தனிமை’ பற்றிப் பேசுகின்றன. அத்தனிமையைத் தீர்க்கதரிசி ஏகாந்தத்துடன் (தனிமையுடன்) உருவகமாகக் கவிஞர் ஒப்பிட்டிருக்கின்றார். (ஒரு நெற்றிக்கண் என்ன ? உடல் முழுதும் இந்திரன்போல் கண்கொண்டு திறந்தாலும் அஞ்சான் நானென நக்கீரர் முழங்கியதாகப் பரஞ்சோதி முனிவர் உருவகப்படுத்தினாரே முன்தோன்றிய நம்மொழியில்!)
  • கவிதை அல்லது இலக்கியத்தில் எந்தவொரு சிறப்பு அறிவையும் மொழியாளுந் திறனுங் கொண்டிராத மத அதிகாரக் கழுதை, கவிதைக் கற்பூரவாசனையை எப்படி அறிய முடியும்?ஜோர்டானில் மட்டுமல்ல உலகின் எந்த மூலையிலும், கவிதை வெளிப்பாட்டின் எந்தவொரு வடிவத்திலும் மத அதிகாரம் தலையிடுவதென்பதை மனித உரிமைக் களத்தில் தீரமுடன் நின்று தூள்தூளாக்கித் தூக்கியெறிய - இஸ்லாம் சம்ஹான் சார்பில் -பிரகடனப்படுத்தும் கடப்பாடு மாந்தர் யாவர்க்கும் உண்டு.

நன்றி: தினமணி (02 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்