- கீழடி அகழாய்வில் கிடைக்கும் பழங்கால மண்பாண்டங்களுக்கு என்ன பெயர் வைக்கலாம்? 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய பொருட்கள் காணக் கிடைத்ததுபோல் சமகாலத்தில் அவற்றுக்கு வழங்கிய பெயர்கள் என்ன என்பது நமக்கு எட்டாது.
- மண்ணில் செரித்துப்போகும் பொருட்கள் கிடைக்கின்றன; காலம் எளிதில் அரித்துவிடாத சொல் கிடைப்பதில்லை!
- இந்தப் பொருட்களின் பயனை வைத்து ஆய்வாளர்கள் அவற்றை விவரிக்கவோ, பெயர் கொடுக்கவோ வேண்டும்.
- புதிதாகச் சொற்களைச் செய்துகொள்வதைத் தவிர்க்க இயலாது. ஆனாலும், இப்படிச் சொல்லாக்கம் செய்வதில் ஒரு பிரச்சினை இருப்பதையும் தொல்லியல் ஆர்வலர்கள் கவனிக்க வேண்டும்.
மொழியில் தெரியும் மரபு
- ஏற்கெனவே சொல் இருந்திருக்கிறதா என்று பார்ப்பதைவிட புதிய சொல் செய்துகொள்வதில் நமக்கு முனைப்பு அதிகம். இது மரபுத் தொடர்ச்சியை மொழி வழியே அடையாளம் காணும் வாய்ப்பைக் குறைக்கிறது.
- கீழடியில் கண்டெடுத்த ஒரு மண்பாண்டத்தை ‘சுடுமண் தாங்கி’ என்று குறிப்பிடுகிறார்கள். பானை தன்தரையில் நிற்காமல் பிரிமணைபோல் அதைத் தாங்கிக்கொள்ளப் பயன்படுத்தும் பொருள்.
- இப்போதும் புழக்கத்தில் இருக்கும் இதற்குக் ‘கலவடை’ என்று பெயர். உடைந்த பானையின் தலைப் பகுதியைக் கவிழ்த்து வைத்து, இந்தக் கலவடையை உருவாக்கிக்கொள்வார்கள்.
- கீழடியில் கண்டெடுத்தது இதற்காகவே தனியாகச் செய்யப்பட்டதாகத் தெரிவதுதான் சிறப்பு. தொழிலுக்கு வெளியே இருந்து பார்ப்பவரின் மொழி எழுத்துக்குள் வந்து தொழிலுக்குள் இருக்கும் மொழியை மேக்கரித்துவிடுவது வழக்கம். அப்போது தொழிலுக்கு உள்ளேயே இருப்பவர்கள் தங்கள் மொழிக்குத் தாங்களே அந்நியமாகி விடுகிறார்கள்.
அச்சுப் போட்ட மண்பாண்டம்
- ‘சிவப்பு நிறப் பானை ஓடுகள்’, ‘வண்ணம் தீட்டப்பட்டது’, ‘அலங்கரிக்கப்பட்டது’ என்றும் சிலவற்றைச் சொல்கிறார்கள்.
- மண்பாண்டங்கள் இரண்டு வகை. திருகையில் பாண்டங்களைச் செய்து, வெயிலில் பதமாக உலர்த்துவார்கள். தூர் திறந்தவாறுதான் இருக்கும்.
- உட்புறமாக அணைவுக்கு ஒரு கருங்கல்லைப் பிடித்துக்கொண்டு, வெளிப்புறத்தில் பலகையால் தட்டித் தட்டிப் பெரிதாக்கிக்கொள்வது பெருவாரியான வகை. இந்த வகையை ‘தட்டு’ என்பார்கள்.
- இரண்டாவது வகை, திருகையில் செய்து அறுத்து அப்படியே உலர்த்தி, சுட்டு எடுத்துக் கொள்வது. சிறியதாகவே, அழகாகச் செய்யப்படும் இவற்றைத் தட்டிப் பெருக்க வேண்டியதில்லை. இந்த வகையை ‘அறுப்பு’ என்பார்கள். இவற்றைச் செய்பவர்களை ‘சிட்டிக் குயவர்’ என்று அழைத்தார்கள்.
- ‘அறுப்பு’ வகைப் பாண்டங்களுக்குக் கருக்கு ஏற்ற ஒரு முறை உண்டு. சுடும்போது அவை அந்திச் சூரியனாகப் பழுக்கும். அப்போது மூட்டத்தைக் கலைத்து உமியை விசிறினால் அவை நாவற்பழமாகக் கறுத்துவிடும். இவற்றை ‘கருஞ்சூளைப் பாண்டம்’ என்பார்கள்.
- முதல் வகையைச் சுடுவதற்காகச் சூளையில் அடுக்கும் முன்பு வெள்ளைச் செம்மண், சிவப்புச் செம்மண் என்று இரண்டு செம்மண் கரைசலைப் பூசுவார்கள். இப்படித்தான் அவை சிவப்பு நிறப் பானை ஓடுகளாகின்றன. இரண்டு வகைப் பாண்டங்களிலும் கழுத்தில் பொன் சரடுகள்போல் இழைப்பு இருக்கும்.
- சிவப்பு வகையில் மட்டும் இந்த இழைப்புக்குக் கீழே உள்ள நெஞ்சடியில் அச்சுப் பதித்து அலங்கரிப்பார்கள். இதற்காக மரத்தில், மாட்டுக் கொம்பில் செய்த குந்துவை, கோரை, தேர் என்ற பெயருள்ள அச்சுகள் உண்டு.
நெஞ்சடியில் தமிழி
- கவனிக்க வேண்டியது என்னவென்றால், அச்சுப் போட்ட பாண்டங்களில் தமிழி (தமிழ் பிராமி) எழுத்து பொறிக்க முடியாது. எழுத்துப் பொறிக்க வேண்டுமானால், அவை அச்சுப் போடாத மொழுக்கம் பானைகளாகவே இருக்க வேண்டும்.
- கருஞ்சூளைப் பாண்டங்களில் எழுத்து இருப்பதாகத் தெரியவில்லை. தட்டு வகைப் பாண்டங்கள் உலரும்போது, ஒரு பதத்தில் தமிழியைப் பொறிக்க முடியும்.
- அப்போது பொறித்தால் எழுத்துகள் பிசிறில்லாமல் இருந்திருக்கும். சூளையில் வைக்கும் போது பூசும் செம்மண்ணை இரண்டு சுற்று கூடுதலாகப் பூசினால் பாண்டத்தின் நெஞ்சடி இலை கனத்துக்குப் பதமாகிவிடும். அப்போதும் தமிழியைக் கீற இயலும். அந்த முறையில் கீழடி ஓடுகளில் தெரியும் பிசிறோடு எழுத்துகள் அமையலாம்.
- அரிக்கமேட்டுப் பானை ஓடுகளில் ‘வேளார்’ என்ற சொல் இருப்பதாக ஐராவதம் மகாதேவன் சொல்லியுள்ளார்.
- இந்தச் சொல் இப்போது வரை கொள்ளிடக் கரைக்குத் தெற்கே உள்ள குயவர்களின் சாதி பட்டமாகும். கீழடியில் கண்ட தமிழிப் பெயர்களை இந்தப் பின்னணியில் எப்படியெல்லாம் விளங்கிக் கொள்ளலாம் என்பதை ஆராய வேண்டும்.
- கீழடி ஓடுகளில் ‘துளையிடப்பட்ட பானை ஓடு’ என்பதாக ஒன்று. அண்மைக் காலம் வரை சோறு வடிப்பதற்கு மண்ணாலான வடிதட்டு இருந்தது சிலருக்காவது நினைவிருக்கும்.
- அடுப்பு, கிணற்று உறைகளை வெறும் களிமண்ணால் செய்யாமல், கூளமண்ணால் செய்வது வழக்கம். ‘கூளமண்’ என்பது களிமண்ணோடு கூளம், கருக்காய், உமியைச் சேர்த்துப் பிசைந்து வருவதாகும்.
- மதுரை அருங்காட்சியகத்தின் கீழடி அடுப்பும் கிணற்று உறையும் களிமண்ணால் செய்ததாகத் தெரிகின்றன. கூளமண் உருப்படிகளானால் இந்நேரம் மண்ணுக்குள் செரித்துப் போயிருக்கும்.
- வெறும் களிமண்ணால் ஆனதால்தான் சுடுமண் உருவங்கள் இப்போதும் கிடைக்கின்றன. ஆனால், வெறும் களிமண்ணில் சிறிய உருவங்களைத்தான் செய்வார்கள்.
- பிற்காலத்துப் பெரிய குதிரை, கடவுள் சிலைகளைப் போல் அன்றைய உருவங்களும் கூளமண் சிலையானால் அவை மண்ணில் செரித்துப்போயிருக்கலாம்.
தாழி கவிழ்ப்பது இதுதானா?
- பொதுவாக, ஈமத் தாழிகளை எப்படிச் செய்திருப்பார்கள் என்று ஊகிக்கலாம். நெஞ்சடி வரை அவற்றைத் திருகையில் செய்து, தலைகீழாகக் கவிழ்த்து வைத்து, வெயிலில் உலர்த்தியிருக்க வேண்டும்.
- திறந்திருக்கும் தூர் உலர உலர, அந்தாயம் அந்தாயமாக மண்ணைச் சேர்த்துத் தட்டி, பெருக்கியிருப்பார்கள். இதனால்தான், தாழிகள் வாழைப்பூ வடிவில் கூம்பாக இருக்கின்றன. பெரிய தாழியை முழுதுமாகத் திருகையில் செய்ய முடியாது.
- செய்து, சுட்டு எடுப்பதற்கு நான்கு நாட்களாகலாம். புறநானூற்றுப் பாடல் ஒன்றில் வருவதுபோல், இறந்த பின் ஒருவருக்குத் தாழி செய்யக் கோருவது அவ்வளவு சாத்தியமில்லை.
- மற்ற பாண்டங்களைப் போல் இந்த மதமதக்கா பானைகளைச் செய்து, சரக்காக வைத்துக்கொள்ளும் வழக்கம் இருந்தது என்பதும் சந்தேகமே. தொல்லியல் ஆய்வு ஒரு பண்பாட்டுத் தொடர்ச்சியை அனுமானித்துக்கொண்டு இயங்கும்.
- அந்தத் தொடர்ச்சிக்குப் பொருட்கள் எப்படி ஆதாரமோ அதைப் போலவே அவற்றின் பெயர்களும் ஒரு சான்று. வகைப்படுத்தவும் விவரிக்கவும் இப்போது புழங்கும் சில பெயர்களைக் காட்டினேன். அந்தந்தத் தொழிலில் புழங்கும் சொற்களைப் பகிர்ந்துகொண்டு உருவாகும் ஆய்வு மொழி இன்னும் செறிவானதாக இருக்குமே!
நன்றி: இந்து தமிழ் திசை (14 - 06 – 2021)