TNPSC Thervupettagam

சொல்லப் போனால்... அதானியில் தொடங்கி அம்பேத்கர் வரை!

December 22 , 2024 7 hrs 0 min 7 0

சொல்லப் போனால்... அதானியில் தொடங்கி அம்பேத்கர் வரை!

  • நவ. 25 முதல் டிச. 20 வரையிலான நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் முடிந்துவிட்டது. மக்களவை 54.5 சதவிகிதமும் மாநிலங்களவை 40 சதவிகிதமும் ஆக்கபூர்வமாகச் செயல்பட்டதாக (ஆங்கிலத்தில் Productivity – ப்ரொடக்டிவிட்டியாம், செயல்திறனோ அல்லது ஏதாவது உற்பத்தித் திறனோ புரியவில்லை) நாடாளுமன்றமே சொல்லிவிட்டது.
  • என்ன, அரசியல் தெரிந்த அல்லது பேசுகிற மக்களுக்கு மட்டும் (பெரும்பாலான மக்கள்தொகை இதைப் பற்றியெல்லாம் கவலையேபடுவதில்லை; கவலைப்பட நேரமுமில்லை) ஒருவேளை தேசிய அளவிலான தொடர்ச்சியான ஒரு  என்டர்டெயின்மென்ட் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கொஞ்சூண்டு வருத்தம் இருக்கலாம்.
  • கூட்டத் தொடரே முதல் கோணல் மாதிரிதான் தொடங்கியது. அமெரிக்க நீதிமன்றத்தில் லஞ்சம் கொடுத்ததாக அதானி குழுமத்தின் கௌதம் அதானி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு பதிந்த விஷயத்தை முதல் நாளிலேயே எதிர்க்கட்சிகள் எழுப்ப கூச்சல் குழப்பத்துடன் மக்களவையும் மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது.
  • அடுத்தடுத்த நாள்களில் மணிப்பூர் கலவரம், சம்பல் நகர வன்முறை எல்லாம் சேர்ந்துகொண்டுவிட்டன. நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்த, ஆளுங்கட்சியோ கண்டுகொள்ளவேயில்லை; பிறகென்ன, கூச்சல் குழப்பம் ஒத்திவைப்புதான்.
  • [திடீரென ஒரு நாள், அதானி விவகாரம் என்பது ஒரு தனியார் நிறுவனத்துக்கும் அமெரிக்க நீதித்துறைக்கும் இடையிலான ஒன்று. அரசுக்குத் தொடர்பில்லை என்று கூறிவிட்டார் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்].
  • அதானி பிரச்சினையை எதிர்க்கட்சிகள் எழுப்பினால், இந்திய அரசியலில் அமெரிக்க பணக்காரர் சோரஸ் பற்றி ஆளுங்கட்சியினர் எழுப்பினர்.
  • இதனிடையே, வரலாற்றில் இதுவரையில்லாத வகையில் மாநிலங்களவைத் தலைவர் (குடியரசுத் துணைத் தலைவர்) ஜகதீப் தன்கர் மீதே நம்பிக்கையில்லா தீர்மானத்துக்காக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நோட்டீஸ் அளித்தனர். பின்னர், அதை மாநிலங்களவைத் துணைத் தலைவர் நிராகரித்தார். அடுத்த கூட்டத் தொடரிலும் மீண்டும் நோட்டீஸ் அளிக்கப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
  • இந்தத் தொடரில் சர்ச்சைக்குரிய ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சட்டத் திருத்த மசோதாவைத் தாக்கல் செய்யத் தீர்மானம் நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்தி,  எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்குப் பிறகும் நிறைவேற்றவும் செய்தது ஆளுங்கட்சி. ஆனால் என்ன, இதற்கான வாக்கெடுப்பையே மின்னணு வாக்குப் பதிவில் சரியாக நடத்த முடியாமல் போய்விட்டது! மசோதாவோ நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது!
  • வாக்கெடுப்பு நாளில் தங்கள் கட்சியைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் அவைக்குக் கட்டாயம் வந்துவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தியும்கூட அவைக்கு வராத கட்சி எம்.பி.க்கள் 20 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியது பாரதிய ஜனதா கட்சி. அந்த நாளில் அவைக்கு வராதவர்களில் பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவர். ராஜஸ்தானில் நடைபெற்ற ஏதோவொரு விழாவில் பங்கேற்கச் சென்றுவிட்டார். அவருக்கும் நோட்டீஸ் அனுப்பியிருப்பார்களா?
  • ஒருகாலத்தில் கூட்டத் தொடரில் பெரும்பாலான நேரம் பிரதமர்கள் அவையில் இருப்பார்கள். இந்தக் காலத்தில் பிரதமர் மோடியோ எப்போதாவதுதான் நாடாளுமன்றம் வருகிறார்; வந்தாலும் பெரிதாக எதற்கும் பதிலளிப்பதில்லை. கண்டிப்பாக உரையாற்ற வேண்டியிருக்கும் நேரத்தில் வந்து விவாதங்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பேசிவிட்டுச் செல்கிறார். இந்த முறையும் அப்படியே.
  • கூட்டத் தொடரில் போனால் போகிறதென சில சட்ட மசோதாக்களும்   நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
  • தொடர் முடிய சில நாள்களே இருக்கும்போது, மாநிலங்களவையில் அரசமைப்புச் சட்டத்தின் 75 ஆம் ஆண்டையொட்டிய விவாதத்தின் முடிவில் உரையாற்றும்போது, அரசியல் சாசனம் பற்றி காங்கிரஸ் பேசுவதை விமர்சித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்... இப்படி முழங்குவது இப்போது பேஷனாகிவிட்டது. இதற்குப் பதிலாகக் கடவுளின் பெயரை இத்தனை முறை குறிப்பிட்டிருந்தால் சொர்க்கத்தில் அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும்’ என்று குறிப்பிட்டார்.
  • பற்றிக் கொண்டது, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் எல்லாம் கிளர்ந்தெழுந்தன. மறுநாள் போராட்டம். நாடு முழுவதும் கடும் விமர்சனங்கள். அம்பேத்கரை அமித் ஷா இழிவுபடுத்திவிட்டார்; அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும், பதவியிலிருந்து விலக்கப்பட வேண்டும் எனப் பலரும் கோரிக்கைகளை முன்வைக்கத் தொடங்கினர்.
  • நாடு முழுவதும் இதுவே பேச்சாக, அடுத்த நாள் நாடாளுமன்ற நுழைவு வாயிலொன்றில் அமித் ஷா மன்னிப்புக் கேட்க வேண்டும்; பதவி விலக வேண்டும் என ஒருபக்கம் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம்; இன்னொரு பக்கம் ஆளுங்கட்சியினர் போராட்டம்.
  • ஒரே தள்ளுமுள்ளு என்கிறார்கள். யார் யாரைத் தள்ளிவிட்டார்கள், யாருக்கு எப்படிக் காயம் பட்டது? காயம் பட்டதா? யாருக்கும் தெரியாது. ஆனால், பாரதிய ஜனதா கட்சி எம்.பி.க்களில் இருவர் தாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். பிரதாப் சந்திர சாரங்கி என்கிற எம்.பி.யோ ராம் மனோகர் லோகியா அரசு  மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்.
  • இந்த தகராறின்போது ராகுல் காந்தி அந்த இடத்திலேயே இல்லை; அவைக்கு உள்ளே சென்றுவிட்டிருந்தார் என்கிறார்கள். சாரங்கி கீழே அமர்ந்திருப்பதைப் பார்ப்பதற்கு ராகுல் காந்தி செல்லும் விடியோக்கள் வலம் வருகின்றன.
  • ஆனால், தாக்கியதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இப்போது எல்லாரும் அம்பேத்கர் பற்றிய அமித் ஷாவின் பேச்சு பிரச்சினையின் தீவிரம் குறைய, இந்த ஆர்ப்பாட்டம், மோதல் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
  •  “காயமுற்றதாகக் கூறப்படும் பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. சாரங்கி தன்னுடைய வாழ்க்கையில் என்ன செய்தார் என்பது எங்களுக்குத் தெரியும், இப்போது நாடகமாடிக் கொண்டிருக்கிறார். அவருடைய நடிப்பானது என்னுடைய ஒட்டுமொத்த திரைவாழ்வில் நடித்ததைவிடவும் சிறப்பாக இருக்கிறது; உலகிலுள்ள எல்லாவிதமான விருதுகளுக்கும் பொருத்தமானவர் இவர்” என்று முன்னாள் நடிகையும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜெயா பச்சன் குறிப்பிட்டுள்ளார்.
  • அது சரி, யார் இந்த பிரதாப் சந்திர சாரங்கி? வாழ்க்கையில் என்ன செய்தார்? 1999-ல் ஒடிசாவில் இரு மகன்களுடன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரகாம் ஸ்டெயின்ஸ் பாதிரியார் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் நினைவிருக்கிறதா? அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் இவரும் ஒருவர். அந்தப் படுகொலையின்போது மாநில பஜ்ரங்தளத்தின் தலைவராக இருந்தவர் இவர்தான்.
  • உள்ளபடியே நாடாளுமன்ற நுழைவாசலில் என்னதான் நடந்தது?
  • காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் சொல்கிறார்: நாடாளுமன்ற நுழைவாசலில் என்ன நடந்தது என்பது உலகத்திற்குத் தெரிய வேண்டாமா? நுழைவாசலிலும் நாடாளுமன்ற வளாகத்திலும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் உள்ள ஒளி, ஒலிப் பதிவுகளை வெளியிட வேண்டியதுதானே? அந்தப் பதிவுகளை வெளியிடுவதற்கு அரசு ஏன் மறுக்கிறது? உண்மை என்ன, பொய் என்ன என்பதைப் பதிவுகளை வெளியிட்டால் தெளிவாகத் தெரிந்துவிடுமே?
  • சிதம்பரத்தின் கேள்வியிலேயே பதிலும் இருக்கிறது. அதனாலென்ன, இன்னும் கொஞ்ச காலத்துக்கு இதுபற்றி எல்லாரும் பேசிக்கொண்டும் விவாதித்துக் கொண்டுமிருப்பார்கள்தானே!
  • இரு அவைகளுமே சராசரியாகப் பாதி நேரமே நடந்திருக்கின்றன. மாநிலங்களவையில் 19 நாள்களில் 15 நாள்கள் கேள்வி நேரமே நடைபெறவில்லை. மக்களவையிலோ, 20 நாள்களில் 12 நாள்கள் 10 நிமிஷங்களுக்கு மேலே கேள்விநேரம் தாண்டவில்லை. முதல் ஒரு வாரத்தில் இரு அவைகளுமே திட்டமிட்ட வேலை நேரத்தில் 10 சதவிகிதத்துக்கும் குறைவான நேரமே செயல்பட்டிருக்கின்றன என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.
  • மாநிலங்களவையில் அவையின் தலைவர் ஜகதீப் தன்கர் மட்டுமே 30 சதவிகித நேரம் பேசி, புதிய சாதனையைப் படைத்திருப்பதாகக் கிண்டலடித்திருக்கிறார் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யான டெரக் ஓ. பிரையன்.
  • ‘டிச. 18 நிலவரப்படி மாநிலங்களவை மொத்தம் 43 மணி நேரம் நடைபெற்றது. இதில் மசோதாக்கள் மீது 10 மணி நேரம் விவாதம் நடைபெற்றது. அரசமைப்புச் சட்டம் தொடர்பான விவாதம்  பதினேழரை மணி நேரம் நடைபெற்றது.  மிச்சமிருக்கிற பதினைந்தரை மணி நேரத்தில் நாலரை மணி நேரம் – சுமார் 30 சதவிகித நேரம் - ஒருவர் பேசியிருக்கிறார். அவர்தான் மாநிலங்களவைத் தலைவரும் குடியரசுத் துணைத் தலைவருமான தன்கர்’ என்று குறிப்பிட்டுள்ளார் பிரையன்.
  • ஆக, ஒருவழியாக இந்தக் கூட்டத் தொடரும் முடிந்துவிட்டது. அடுத்தது பட்ஜெட் கூட்டத் தொடர்தான். இனி அதுவரையிலும் ஆளுங்கட்சியினர் அவர்கள் நினைத்தவற்றை அவர்கள் பாட்டுக்குச் செய்துகொண்டிருக்கலாம். இன்னொரு பக்கம் எதிர்க்கட்சியினர் போராடிக் கொண்டிருப்பார்கள்.
  • மக்கள்தான் பாவம், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வோட்டுப் போடுவதுடன் முடிந்துவிட்டது அவர்கள் வேலை. இனிமேல் ஐந்தாண்டுகளுக்கு வெறுமனே – நாட்டில் என்றாலும் சரி, நாடாளுமன்றம் என்றாலும் சரி - நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதுதான். வேண்டுமானால் லைவ்வாக தொலைக்காட்சிகளிலும் பார்க்கலாம்!

நன்றி: தினமணி (22 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்