TNPSC Thervupettagam

சொல்லப் போனால்... அரசு மருத்துவமனைகளின் இன்னொரு பக்கம்!

November 17 , 2024 5 days 27 0

சொல்லப் போனால்... அரசு மருத்துவமனைகளின் இன்னொரு பக்கம்!

  • சென்னை, கிண்டியிலுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் நோயாளி ஒருவரின் மகனால் ஒரு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டது தவறு, கண்டனத்துக்குரியது. மாற்றுக் கருத்து இல்லை. தவறிழைத்தவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதையும் யாரும் தடுக்கப் போவதில்லை!
  • தாக்குதல் நடந்த தகவல் கிடைத்தவுடனேயே ஊடகங்கள் அனைத்தும் பரபரப்பாகி, செய்தியையும் பரபரப்பாக்கின. டாக்டர்கள் விரைந்தனர், அதிகாரிகள் விரைந்தனர், நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் விரைந்தார், துணை முதல்வர் உதயநிதி விரைந்தார். ‘அதெல்லாம் முடியாது, டாக்டருக்கே பாதுகாப்பு இல்லை, வேலைநிறுத்தம்தான்’ என்று அறிவித்து நடத்தவும் செய்தது மருத்துவர்கள் சங்கம்.
  • தாக்கப்பட்ட டாக்டர் பாலாஜியின் உடல்நலம் பற்றி மட்டுமல்லாது ஏற்கெனவே அவருக்கு இருக்கும் மருத்துவப் பிரச்சினைகள் அனைத்தும்கூட மக்கள் அறிந்துகொள்வதற்காக வெளியிடப்பட்டன. பின்னர், டாக்டரே தாம் குணமடைந்துவருவதாக அறிவித்தார் (பதற்றத்தைக் குறைக்கும் நோக்கில்?).
  • சம்பவ இடத்திலேயே பிடிக்கப்பட்ட இளைஞர் விக்னேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுத் தற்போது சென்னை புழல் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
  • முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட தமிழ்நாட்டில் அனேகமாக இந்த சம்பவத்தைக் கண்டிக்காத அரசியல் கட்சித் தலைவர்களே இல்லை, புதிதாகக் கட்சி தொடங்கியுள்ள சினிமா ஹீரோ விஜய் உள்பட!
  • ஆனால்...
  • ஒருவர், ஒரே ஒருவராவது மருத்துவரைக் கத்தியால் குத்திய – கொடூர வில்லன் ரேஞ்சுக்குச் சித்திரிக்கப்படுகிற - இளைஞர் விக்னேஷ் தரப்பு நியாயத்தைப் பற்றி நினைத்துப் பார்த்தார்களா? கவலைப்பட்டார்களா? அல்லது கருத்துத் தெரிவித்தார்களா?  மருத்துவ சமுதாயம் கோபித்துக்கொண்டுவிடக் கூடாது என்பதற்காக மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகளில் ஒரு துளிகூட ஏனோ ஒட்டுமொத்த மக்கள் சமுதாயத்தில் ஒருவரான விக்னேஷுக்காகவோ அவருடைய நோயாளித் தாய்க்காகவோ மேற்கொள்ளப்படவில்லை. ஏனெனில், அவர்கள் எந்தவகையிலும் அமைப்பாகத் திரண்டிருப்பவர்கள் அல்லர்; திரளக் கூடியவர்களும் அல்லர், தனிநபர்கள்! (அரசியல் பார்வையில் என்றால் வெறும் மூன்றே மூன்று வாக்குகள்!).
  • தற்போது அரசு மருத்துவமனைகள், மருத்துவர்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, அரசு சார்பில் ஏராளமான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன, நோயாளிகளின் உடன் வருவோருக்குக் கைப்பட்டைகள் அணிவிப்பது, மெட்டல் டிடெக்டர் வைப்பது, காவல் சாவடிகள் அமைப்பது உள்பட.
  • நோய்நாடி நோய் முதல் நாடி அது தணிப்ப வாய்நாடி வாய்ப்பச் செயல் என்று வள்ளுவர் சொல்லியிருப்பது ஏதோ மருத்துவர்களுக்காக மட்டும் என்று எடுத்துக்கொண்டுவிடக் கூடாது; அரசுக்கும் அமைச்சர்களுக்கும் அலுவலர்களுக்கும்கூடத்தான்!
  • உள்ளபடியே இந்தப் பிரச்சினையின் தொடக்கப் புள்ளி எங்கிருக்கிறது?
  • டாக்டர் பாலாஜியை விக்னேஷ் எதற்காகக் கத்தியால் குத்தினார்? இருவருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் தகராறோ, முன்பகையோ இல்லையே, பின்னர் எதற்காகக் குத்தினார்? சம்பந்தமில்லாமல் குத்துவதற்கு அவர் மனநோயாளியும் அல்லர். என்றால், என்ன பிரச்சினை? எங்கே பிரச்சினை? டாக்டரையே கத்தியால் குத்தும் அளவுக்கு விக்னேஷை நகர்த்தியது எது?, அதுவும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாய்க்குச் சிகிச்சை பெறுவதற்காக ஒவ்வொரு மருத்துவமனையாகச் சென்றுகொண்டிருந்த நிலையில்?
  • அறிக்கைகள் வெளியிட்ட தலைவர்களில் ஏன் ஒருவர்கூட இதைப் பற்றிக் கருதவில்லை? தவறிழைத்த விக்னேஷுக்காக வாதாட வேண்டியதில்லை, அவர் தரப்பிலுள்ள நியாயத்தைப் பற்றிக்கூட ஏன் பேச முன்வரவில்லை? பிறகு, நோயாளிகளுக்காக, நோயாளிகளின் தரப்பிலிருந்து யார்தான் பேசுவார்கள்?
  • விக்னேஷின் தாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். முதல்நிலை என்றும் நாலாவது நிலை என்றும் வெவ்வேறு தகவல்கள். முதல்நிலை என்கிறபட்சத்தில், காலத்தே முறையான சிகிச்சை அளித்தால் குணப்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது. ஏற்கெனவே, சில மாதங்களுக்கு முன்னர்தான் தந்தையை இழந்திருக்கிறார் விக்னேஷ். தாயைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகச் சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனைக்கும் அரசு மருத்துவமனைக்குமாக அலைந்துகொண்டிருக்கிறார். தாய்க்கு ஒரு ஸ்கேன் எடுத்துவரச் சொன்னதாகவும் ரூ. 3,500 செலவழித்து எடுத்தும் அதைக் குறிப்பிட்ட டாக்டர் பார்க்கவேயில்லை என்றும் கேட்டபோது, ‘நீ டாக்டரா, நான் டாக்டரா’ என்று அவர் பதிலுக்குக் கேட்டதாகவும் கூறப்படுகிறது. தாயின் உடல்நிலை மேலும் மேலும் குலைய, டாக்டரும் அலட்சியம் செய்வதாக விக்னேஷ் கருதியுள்ளார். ஏதோவொரு புள்ளியில் வெறுத்துப் போய் டாக்டரைத் தாக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார் - இவ்வாறெல்லாம் கூறப்படுகின்றன. என்றாலும் தாயின் உடல்நிலை, மருத்துவ சிகிச்சை, டாக்டரின் நடத்தை பற்றியெல்லாம் உறுதியாக எதுவும் தெரியவில்லை. ஆனால், நிச்சயம் விக்னேஷ் முன் குற்றப் பதிவுகள் உள்ளவரல்லர்.
  • உண்மையிலேயே என்ன நடந்தது என்றறிவதற்காக – விக்னேஷின் தாயைச் சந்திக்க, சனிக்கிழமை காலையில், அவருடைய வீட்டுக்குச் சென்றபோது, அவர் இல்லை. கைது செய்யப்பட்டுப் புழல் சிறையில் வைக்கப்பட்டுள்ள விக்னேஷும் இதய நோயாளி என்பதால் அதுதொடர்பான ஆவணங்களுடன் அவர் சிகிச்சை பெறும் தனியார் மருத்துவமனைக்குச் சென்றிருப்பதாகக் கூறினார் விக்னேஷின் தம்பி. டாக்டர் ஒருவரும் புகார் செய்திருக்கிறார் என்பதாகவும் இந்த சம்பவம் பற்றித் தாங்கள் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை என்றும் கூறிவிட்டார் அவர். என்னென்ன செய்தால் இவர்களைப் போன்றவர்களை எதுவும் பேச விடாமல் முடக்கிவிட முடியும் என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதானே.
  • நம் அரசு மருத்துவமனைகளுக்கு வருவோம்.
  • மிக விரிவாக ஆராயப்பட வேண்டிய மக்களின் எண்ணற்ற சமூக – பொருளாதார – வாழ்வியல் சார்ந்த காரணிகளுடன் பின்னிப் பிணைந்திருக்கின்றன நம் அரசு மருத்துவமனைகள். பெரும் பணக்காரர்கள், பணக்காரர்கள், உயர் வருவாய்ப் பிரிவினர், உயர் நடுத்தர வருவாய்ப் பிரிவினர் - இவர்களில் எவரும் பெரும்பாலும் அரசு மருத்துவமனைகளுக்கு வருவதில்லை. நடுத்தர வருவாய்ப் பிரிவினரிலும் தனியார் காப்பீட்டு வசதிகள் வைத்திருப்போர் வருவதில்லை. பெரும்பாலும் ஏழை, எளிய மக்கள், இயலாத நடுத்தர வருவாய்ப் பிரிவினர், காப்பீட்டு வசதி இருந்தாலும் அதற்கு மேல் செலவழிக்க இயலாத அளவுக்குப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள்தான் அரசு மருத்துவமனைகளைத் தேடி வருகின்றனர். இவர்கள்தான் நம் மக்களில் அதிகளவிலானோரும்கூட. வேறு வழியே அற்றவர்கள்தான் கடைசிப் புகலிடமாகவே அரசு மருத்துவமனைகளை வந்தடைகின்றனர்.
  • நம்முடைய அரசு மருத்துவமனைகளில் எல்லாவிதமான சிகிச்சைகளை அளிக்க முடியும், அளிக்கிறார்கள். எல்லாருக்கும் அளிக்க முடிகிறதா? நம் அரசுகளும் அமைச்சர்களும் (யார் ஆட்சி செய்தாலும் சரி) தருகிற, அந்த சாதனை, இந்த சாதனை என்ற ‘பில்ட் அப்’களை மட்டுமே நம்பிச் சென்றால் அவ்வளவுதான்.
  • எல்லாமே தாமதம், எங்கே சென்றாலும் அலட்சியம், எவனோ கடங்காரன் வந்துவிட்டான் என்றோர் அலட்சியப் பார்வை. அதிகாலையிலேயே ஆஸ்பத்திரிக்குச் சென்று வரிசையில் காத்திருந்து புறநோயாளிச் சீட்டு வாங்குவதிலேயே தொடங்கிவிடுகிறது பிரச்சினை. அடுத்து சம்பந்தப்பட்ட டாக்டர் இருப்பாரோ, மாட்டாரோ? உள் நோயாளியாக இருக்க வேண்டுமோ என்னவோ? எப்போது, என்ன சிகிச்சை? எதுவுமே யாருடைய கட்டுப்பாட்டிலுமே இருக்காது. ஒவ்வொன்றும் தன் விருப்பம் போலத்தான் நடந்துகொண்டிருக்கும்.
  • ஒரு நோயாளிக்கு அவசரமாக ஒரு ஸ்கேன் எடுக்க வேண்டும். எழுதிக் கொடுப்பார்கள். வரிசையில் நின்று பணம் கட்டினால் மூன்று, நான்கு நாள்களுக்குப் பிறகு வரச் சொல்லுவார்கள், ஸ்கேன் எடுக்க. அதற்குள் நோயாளிக்கு ஏதேனும் நேர்ந்துவிட்டால், அதற்கென்ன செய்வது, விதி. ஒரு நாளைக்கு இவ்வளவு பேருக்குதான் எடுக்க முடியும், இவ்வளவு கூட்டம் வந்தால் என்ன செய்வது? என்பார்கள் பணியாளர்கள். இதெல்லாம் யார் குற்றம்?
  • இதேபோல, மருத்துவமனைக் கழிப்பறைகளில் தொடங்கி, அறுவைச் சிகிச்சைக் கூடங்கள் வரையிலும் ஆயிரத்தெட்டு பிரச்சினைகள், நோயாளிகள் படும்பாடு சொல்லி மாளாதது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இறந்துபோனவர்களின் உடல்களைப் பெறுவதைப் போல துயரம் வேறெதுவுமில்லை, எத்தனை மணி நேரங்கள் அலைக்கழிப்பு! (அண்மையில் சென்னையிலுள்ள பெரிய அரசு மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த  ஒருவர் இறந்துவிட்டார். இறந்தது எல்லாருக்கும் தெரிகிறது. அதை அறிவிப்பதற்கான மருத்துவர் வருவதற்கே நான்கு மணி நேரங்கள். அதன் பிறகு உடலைப் பெறுவதற்காக மேலும் சில மணி நேரங்கள்).
  • அரசு மருத்துவமனைகளைப் பற்றி மிகப் பெரிய நம்பிக்கைகளை அரசாங்கமும் அமைச்சர்களும் அதிகாரிகளும் அளிக்கிறார்கள். உண்மைதான். இந்தியாவிலுள்ள வேறெந்த மாநிலத்தையும்விட தமிழ்நாட்டின் நிலவரம் சிறப்புதான். நம் அரசு மருத்துவமனைகளில் எல்லாமே இருக்கின்றன, கிடைக்கும்படியாகச் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால், எல்லாருக்கும் கிடைக்கின்றனவா? அதுவும் உரிய காலத்தில் கிடைக்கின்றனவா? யாராலும் உறுதி சொல்ல முடியாது. ஆனாலும், நம் மக்களுக்கு வேறு வழியுமில்லை. வந்துகொண்டுதானிருக்கிறார்கள். எல்லாராலும் தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்ல முடியாது. உயிர் பிழைத்திருக்க வேண்டுமானால், உடலைக் காத்துக்கொள்ள வேண்டுமானால், அரசு மருத்துவமனைகளுக்குத்தான் சென்றாக வேண்டும்.
  • சொன்னால் குறை நினைக்கக் கூடாது, பெரும்பாலான தருணங்களில் அலட்சியமும் அக்கறையின்மையுமே அரசு மருத்துவமனைகளின் லட்சணங்களாக இருக்கின்றன. இவ்வளவு செலவு செய்து என்ன பயன்? அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் தவறான சிகிச்சைக்காக டாக்டர் மீதும் மருத்துவமனைகளின் மீதும் வழக்குத் தொடுக்க முடியும், இழப்பீடுகளும் பெற முடியும். பிரிட்டன் போன்ற நாடுகளில் தொழில்முறைத் தவறுகளால் (சிகிச்சையில் நேர்ந்த தவறுகளால்) உயிரிழப்பு நேரிட்டால் அரசு தாமாகவே  இழப்பீடுகளை வழங்கிவிடுகிறது. தவறான சிகிச்சையே அளித்திருந்தாலும்கூட நம்முடைய சட்டங்களின்படி நம்மூர் டாக்டர்கள் மீது பெரியளவில் நடவடிக்கை எடுக்க முடியாது. சும்மா, ஆர்ப்பாட்டம் செய்யலாம், காவல்துறையினர் வந்து சமாதானப்படுத்துவார்கள், பிறகு எல்லாரும் கலைந்துபோய்விட வேண்டியதுதான்.
  • இத்தகைய சூழ்நிலையில் நோயாளியிடம் ஒரு டாக்டர் எவ்வாறு நடந்துகொள்கிறார், நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கெல்லாம் ஏதேனும் அளவுகோல்கள் இருக்க முடியுமா, அல்லது நிறுவ முடியுமா, என்ன? அவரவர் மனசாட்சிப்படி பணியாற்றினால் தவிர! (நோயாளிகளிடம் முகம் பார்த்துப் பேசுகிற டாக்டர்களே குறைவு, அவருக்குள்ள பிரச்சினைகளைத் தெளிவுபடுத்தும் டாக்டர்கள் அதனிலும் குறைவு).
  • அரசு மருத்துவமனைகள் என்பதற்காக ஒட்டுமொத்தமாக எல்லாரையும் குறை சொல்ல முடியாது, சொல்லவும் கூடாது. நல்ல டாக்டர்களும் இருக்கிறார்கள். அரசு மருத்துவமனைப் பணி தவிர வெளியே தனியாக மருத்துவம் எதுவும் பார்க்காத டாக்டர்களும்கூட இருக்கத்தான் செய்கிறார்கள் (ஆனால், இதே மக்களால்  இவர்கள் பிழைக்கத் தெரியாதவர்களாகத்தான் வகைப்படுத்தப்படுகிறார்கள்).
  • சிகிச்சைகள் முறையாகக் கிடைக்கப் பெற்றால் மருத்துவமனைக்குள் எதற்காக நோயாளிகளால் பிரச்சினை வரப் போகிறது? விரிவாக ஆராய்ந்து தீர்வு காணாதபட்சத்தில் ஒவ்வொரு நோயாளியுடனும் ஒரு போலீஸ்காரரை அனுப்பினால்கூட யாருடைய பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுவிடும் என்று சொல்ல முடியாது.
  • மருத்துவத் துறையில் - அதிகரித்துவிட்ட நோயாளிகளின் எண்ணிக்கை, அரசு டாக்டர்கள் பணிச்சுமை, தனியார் மருத்துவமனைகளில் டாக்டர்கள் பணிபுரிவது, அல்லது அவர்களே மருத்துவமனைகள் நடத்துவது எனப் பல்வேறு பிரச்சினைகள் விலாவாரியாகப் பேசித் தீர்க்கப்பட வேண்டியவை. எல்லாவற்றையும் சொல்லப் போனால் எங்கோ போய்விடும்.
  • கிண்டி மருத்துவமனையில் டாக்டரைக் கத்தியால் குத்திவிட்டு, யாரும் பிடித்துவிடப் போகிறார்களோ என்று விக்னேஷ் தப்பியோடவில்லை. மிகவும் நிதானமாகவே நடந்துசெல்கிறார். அங்கிருந்தவர்கள்தான் திரண்டு அவரைப் பிடிக்கின்றனர். சிலர் தாக்குகின்றனர். பிடிபடுவதுடன் மிகக் கடுமையாக அவர் தாக்கப்படும் விடியோ வைரலாகப் பரவியது. தாக்கியவர்களில் ஒருவர், கட்டம் போட்ட சட்டை அணிந்திருப்பவர், தொடர்ந்து விக்னேஷைக் காலால் மார்பில் மிதித்துக்கொண்டேயிருக்கிறார். இவரும் ஒரு டாக்டர் என்பதாகக் கூறுகிறார்கள், உறுதியாகத் தெரியவில்லை. விக்னேஷும் ஒரு இதய நோயாளியே. டாக்டருக்கு எதிராக விக்னேஷ் நடத்திய ‘கொலைவெறித் தாக்குதலைத்’ தொடர்ந்து, விக்னேஷ் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு என்ன லேபிள் ஒட்டப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை. இந்தத் தாக்குதல் தொடர்பாகக் காவல்துறை ஏதேனும் வழக்குப் பதிந்திருக்கிறதா? விக்னேஷைத் தாக்குகிற நன்றாக அடையாளம் தெரிகிற அந்தக் கட்டம் போட்ட சட்டைக்காரர் கைது செய்யப்பட்டிருக்கிறாரா? இந்த ஒட்டுமொத்த சம்பவங்கள் பற்றி நீதிமன்றங்கள் ஏதேனும் தாமே முன்வந்து விசாரிக்க  முன்வந்திருக்கிறதா? எதுவும் தெரியவில்லை. இந்தத் தாக்குதலில் ஒருவேளை விக்னேஷுக்கு ஏதேனும் நேர்ந்திருந்தால்... உயிர்களில் என்ன வித்தியாசம்?
  • அரசு மருத்துவமனைகள் அல்லது அரசு மருத்துவர்களின் அணுகுமுறை பற்றிய மிகப் பெரிய விவாதத்தைத் தொடங்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு சோற்றுப் பதம்தான் கிண்டி மருத்துவமனைக் கத்திக்குத்து சம்பவம். விக்னேஷ் பற்றி விசாரிப்பதுடன் டாக்டரைப் பற்றியும் சேர்த்து விசாரிப்பதுதான் முறையாக இருக்கும். இந்தப் பிரச்சினையை முன்வைத்தேனும் (வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்கிற மாதிரி) எவ்வித முன்முடிவுகளும் பக்கச்சார்புமின்றி (விக்னேஷ்களும் வெளிநாட்டுக்காரர்கள் அல்ல, நம்மவர்கள்தான்) விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். அரசு மருத்துவமனைகளுக்கும் டாக்டர்களுக்கும்கூட விரிவான வழிகாட்டு நெறிகள் வகுக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
  • கிண்டி மருத்துவமனையில் டாக்டர் கத்தியால் குத்தப்பட்டதைத் தொடர்ந்து கண்டன அறிக்கை வெளியிட்ட தலைவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் நடப்பது பற்றியெல்லாம் முழுவதுமாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. விழாக்களைத் தவிர வேறெதற்காக அவர்கள் அங்கே போகப் போகிறார்கள்? ஒரு முறை ஏதாவது மாறுவேஷத்தில் ஒரு சாமானிய மனிதனாக, பெரு நகரங்களிலுள்ள ஏதேனும் அரசு மருத்துவமனைக்குச் சென்று வெளி நோயாளிச் சீட்டு வாங்குவதில் தொடங்கி இவர்கள் நேரில் அனுபவித்துப் பார்க்க வேண்டும், கோபம் வருகிறதா, தெரிந்துவிடும்!

நன்றி: தினமணி (17 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்