TNPSC Thervupettagam

சொல்லப் போனால்... ஆளைக் கொல்கிறார்கள், கட்டடத்தை இடிக்கிறார்கள்... சட்டம் யார் கையில்?

September 9 , 2024 130 days 102 0

சொல்லப் போனால்... ஆளைக் கொல்கிறார்கள், கட்டடத்தை இடிக்கிறார்கள்... சட்டம் யார் கையில்?

அநியாயமாக ஆரியன் மிஸ்ர என்ற பிளஸ் 2 மாணவரைத் தில்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்படும் ‘பசுப் பாதுகாவலர் கும்பல்’ சுட்டுக் கொன்றிருக்கிறது. மனிதர்களின் உயிர்களைவிடவும் இவர்களுக்கு மாடுகள்தான் மிகவும் முக்கியமாகப் படுகின்றனவோ?

ஆக. 24 - இரவு பின்னேரத்தில் ஏதோ மாலில் நண்பர்களுடன் சாப்பிட்டுவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்த ஆரியனை அவருடைய காரில் மாட்டிறைச்சி இருப்பதாக யாரோ சொல்ல, இந்த கும்பல், ஆக்ரா நெடுஞ்சாலையில் சுமார் 29 கி.மீ. தொலைவு விரட்டிச் சென்று சுட்டிருக்கின்றனர்.

ஆரியன் காயமுற்ற நிலையில் காரை நிறுத்தியபோதும் மிக நெருக்கத்திலிருந்து இரண்டாவது முறையாகச் சுட்டதில் ஆரியன் மிஸ்ர உயிரிழந்தார். காரில் ஒரு வெங்காயமும் இல்லை.

பரீதாபாத் காவல்நிலையங்களில் பசு கடத்தல் தொடர்பான சில வழக்குகளில் கொலையாளியான அனில் கௌசிக்கே புகார்தாரராகவோ அல்லது சாட்சியாகவோ இருக்கிறாராம். ஆனால், காவல்துறையினரோ அதெல்லாம் தங்களுக்குத் தெரியாது என்கின்றனர்.

இதேமாதிரிதான் கடந்த ஆண்டில் ராஜஸ்தானில் பரத்பூரைச் சேர்ந்த நாசிர், ஜுனைத் என்ற இருவரைத் துரத்திச் சென்று பசுப் பாதுகாவலர்கள் கொலை செய்தனர். இந்த இரட்டைக் கொலைக்காக மோனு மனேசர் என்பவரைக் காவல்துறை கைது செய்தது. அனேகமாக அவர் இன்னேரம் ஏதோவொரு வகையில் வெளியே வந்துவிட்டிருக்கக் கூடும். அல்லது ஏதாவதொரு கட்சியில் பதவிப் பொறுப்பைக்கூட அலங்கரிக்கலாம்; தெரியவில்லை.

ஹரியாணாவில் சில நாள்களுக்கு முன், ஆக. 27 ஆம் தேதி பிகாரிலிருந்து வந்த புலம்பெயர் தொழிலாளியான சபீர் மாலிக் என்பவரை மாட்டிறைச்சி சாப்பிட்டதாக சந்தேகத்தின் பேரில் பசுப் பாதுகாப்பு கும்பல் ஒன்று அடித்தே கொன்றுவிட்டது.

ஆரியன் மிஸ்ர தவறாக அடையாளம் காணப்பட்டதில் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டதாக சிலர் செய்திக்குத் தலைப்பு வைக்க, அப்படியென்றால், ஒருவேளை அவர் முஸ்லிமாக இருந்து கொன்றிருந்தால் நியாயமானதாகிவிடுமா? என்று பலரும் கொந்தளித்தனர். ஆனால், கொல்லப்பட்டவர் ஹிந்து என்பது தெரியாமல் போய்விட்டது என்று பசுப் பாதுகாப்பு கோஷ்டியினரும் வருந்தியிருக்கின்றனர்.

பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் இதுநாள் வரை – நாடு முழுவதும் எத்தனை பேர் கொல்லப்பட்டுள்ளனர்? எத்தனை பேர் காயப்படுத்தப்பட்டுள்ளனர்? இந்த வன்செயல்களுக்காக எத்தனை பேர் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்? எத்தகைய தண்டனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன? இன்னமும் எத்தனை வழக்குகள் விசாரணையில், நீதிமன்றங்களில் கிடக்கின்றன? இவற்றுக்கெல்லாம் ஏதாவது கணக்கு வழக்குகள் இருக்கின்றனவா?

[இந்த இடத்தில் ஒரு நகைமுரணை நினைத்து வேண்டுமானால் கமுக்கமாகப் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். உலகில் அதிகளவில் மாடுகளைக் கொன்று இறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் நாலாவது இடத்தில் இருப்பது இந்தியா! இந்தத் தொழிற்சாலைகளை நடத்துகிறவர்களில்  பெரும்பாலானவர்கள் ஹிந்துக்கள்தான்].

புல்டோசர்களும் புனித நீதியும்!

என்ன பெரிய கணக்கு வழக்கு?

கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக பாரதிய ஜனதா கட்சி ஆளும் மத்தியப் பிரதேசத்திலும் உத்தரப் பிரதேசத்திலும் மற்றும் தில்லியிலும் வகுப்பு மோதல்கள் – வன்முறைகள் நேரிடும் பகுதிகளில் எல்லாம் புல்டோசர்கள் மூலம் வீடுகளும் கட்டடங்களும் இடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன – இவற்றில் பெரும்பாலானவை முஸ்லிம்களுடையவை.

திடீரென இதுபற்றிய ஒரு வழக்கொன்றில், இவ்வாறு வீடுகள் - கட்டடங்கள் இடிப்புக்குக் கண்டனம் தெரிவித்திருப்பதுடன், ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டதாலேயே எப்படி அவருடைய கட்டடங்களை இடிக்க முடியும்? குற்றவாளி என்றாலேகூட முடியாதே? என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது (புல்டோசர்கள் மூலம் இதுவரை 1.5 லட்சம் வீடுகள் / கட்டடங்கள் இடிக்கப்பட்டு இன்ஸ்டன்ட் தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது).

உதய்பூரில் பள்ளிக்கூட பசங்க இரண்டு பேர் சண்டை போட்டுக்கொண்ட விவகாரத்தில் ஒரு பையன் குடும்பத்தினர் வாடகைக்குக் குடியிருந்த வீட்டை இடித்திருக்கிறார்கள் என்றால் புல்டோசர் நீதி போகிற போக்கைப் புரிந்துகொள்ள முடியும். இந்தக் கட்டடங்களெல்லாம் சட்ட விரோதமானவை என்பதாகக் காரணம் கூறப்படுகிறது; அப்படியே என்றாலும் இவ்வளவு அவசரமாக இடித்துத் தள்ளுவார்களா? அல்லது நாடு முழுவதும் இப்படித்தான் இடித்துத் தள்ளிக்கொண்டிருக்கிறார்களா?

கட்டட இடிப்புகளுக்கு நெறிமுறைகள் வகுக்க வேண்டும் என்றிருக்கிறது உச்ச நீதிமன்றம். ஆனால், நம் நாட்டில் நம்முடைய அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுடைய சொல்பேச்சை வேதவாக்காகக் கேட்கும் நம்முடைய அதிகாரிகள் முன்னால் இவையெல்லாம் ஜுஜுபி. எளிதில் ஏமாற்றிவிடுவார்கள் – சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பொறுப்பாக்காத வரை! (இவ்வளவுக்கும் நடுவில் என்னைத் தவிர வேறு யாரால் புல்டோசர்களைக் கையாள முடியும் என்று பெருமைப்பட்டிருக்கிறார் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்).

புல்டோசர் நீதியை நீதிமன்ற அவமதிப்பாகக் கருதி, நாட்டில் எங்கே நடந்தாலும், சட்ட விரோதம் என்று அறிவித்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பொறுப்பாக்கி, பணி நீக்கம், ஓய்வூதிய நிறுத்தம் உள்பட தக்க நடவடிக்கைகள் எடுத்து அவர்களிடம் இழப்பையும் வசூலிப்பதாக இருந்தால் ஒருவேளை உச்ச நீதிமன்றத்தின் எண்ணம் பலிக்கக் கூடும். இல்லாவிட்டால் எத்தனையோ எச்சரிக்கைகளில் இதையுமொன்றாகக் கழித்துப் போட்டுவிடுவார்கள்.

59-வது அரிவாள்!

கொல்கத்தாவில் மருத்துவமனையில் இரவுப் பணியிலிருந்த பயிற்சி பெண் மருத்துவர் வல்லுறவுக் கொலையில் – வழக்கு விசாரணையை எல்லாம்வல்ல மத்திய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைத்த பிறகும்கூட இன்னமும் ஒரு வெண்டைக்காயும் நடைபெறவில்லை.

12 மணி நேரத்துக்குள் கொல்கத்தா காவல்துறையே கைது செய்துவிட்ட ஒரு நபரைத் தாண்டி ஒரு கதையும் நடக்கவில்லை; இன்னமும் எப்ஐஆர்கூட போடவில்லை. நகராமல் ஒரே இடத்தில் நின்றுகொண்டு லோகலில் முதல்வர் மமதா பானர்ஜி அரசுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சிக்காரர்கள் நடத்திக் கொண்டிருக்கும் போராட்டங்களுக்கு நெய்யூற்றித் தொடரச் செய்வதற்கான வாய்ப்புகளை தந்துகொண்டிருக்கிறது சி.பி.ஐ.!

ஆனால், வடையை எண்ணச் சொன்னால் துளையை எண்ணுவதைப் போல மெயின் மேட்டரை விட்டுவிட்டு விஷயத்தைத் திசை மாற்றி் வேறெங்கோ இழுத்துச் சென்று நிதி முறைகேடுகள் குற்றச்சாட்டுகளின் பேரில் அந்த மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷைக் கைது செய்திருக்கிறார்கள். இந்த வழக்கும் சிபிஐயிடம் நீதிமன்றம் ஒப்படைத்ததுதான், இதற்கும் வல்லுறவுக் கொலைக்கும் சம்பந்தமில்லை. இதற்கு முன்னதாகவே ஒப்படைக்கப்பட்டது வல்லுறவுக் கொலை வழக்கு.

பெண் மருத்துவர் வல்லுறவு கொலை வழக்கில் இன்னமும் ஏன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யத் தாமதிக்கிறது? தேவைப்பட்டால் பிறகு மற்றொரு கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாமே? இந்த வழக்கில் சி.பி.ஐ. இப்போது என்னதான் செய்துகொண்டிருக்கிறது?

வல்லுறவுக் கொலையில் குற்றவாளிகளை எப்போது கூண்டில் நிறுத்துவீர்கள்? எப்போதுதான் தண்டனை வாங்கித் தருவீர்கள்?

இவற்றுக்கு நடுவே, ஏற்கெனவே சொன்னதைப் போலவே முதல்வர் மமதா பானர்ஜி, பெண்கள் வன்கொடுமைக் குற்றச்செயல்களுக்கு எதிரான – மரண தண்டனைக்கு வழிவகுக்கும் அபராஜிதா சட்ட முன்வரைவை மேற்கு வங்க சட்டப் பேரவையில் நிறைவேற்றியிருக்கிறார். ஏற்கெனவே அறிவித்தபடி ஒரு மாதத்திற்குள் ஒப்புதல் அளிக்காவிட்டால் ஆளுநர் மாளிகையையும் முற்றுகையிடுவார் என எதிர்பார்த்திருந்தால் ஆளுநரோ ரொம்ப வெவரம், அப்படியே அதைக் குடியரசுத் தலைவருக்கு பார்வர்ட் செய்துவிட்டார். பந்து இப்போது தில்லியில். மமதா இனி தில்லிக்குத்தான் போக வேண்டியிருக்குமோ என்னவோ? பார்க்கலாம்.

உள்ளபடியே, தில்லியில் நிர்பயா வல்லுறவுக் கொலைக் காலத்திலேயே, வல்லுறவுக் குற்றத்துக்கு மரண தண்டனை விதிக்கவும் சட்டத்தில் வழிசெய்யப்பட்டுவிட்டது. பிரச்சினை என்னவென்றால், அதைச் செயல்படுத்துவதில்தான். இந்தியாவில் வல்லுறவு வழக்குகளில் 10-க்கு 7 வழக்குகளில் யாரும் சிறைக்குச் செல்வதில்லை; அதாவது தண்டிக்கப்படுவதில்லை. அதுவும் எத்தனையோ ஆண்டுகளுக்கு வழக்கு விசாரணை இழுத்தடிக்கப்பட்ட பிறகும்.

வல்லுறவு வழக்குகளில் அரசுகளும் காவல்துறையும் நீதிமன்றங்களும் எந்த அளவு வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதில் இருக்கிறது எல்லா இம்சைகளும் துயரங்களும் பரிதாபங்களும்!

தேசிய குற்றப் பதிவுகள் அமைப்பின் (நேஷனல் கிரைம் ரெகார்ட்ஸ் பீரோ - என்சிஆர்பி) தகவல்கள்படி – 2022 - ஓராண்டில் மட்டும் இந்தியா முழுவதும் சுமார் 32 ஆயிரம் (!) வல்லுறவு வழக்குகள் காவல்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளன. அல்லாமல் முந்தைய ஆண்டுகளில் குற்றம் நடந்து விசாரித்து முடிக்காமல் நிலுவையில் இருப்பவை ஏறத்தாழ 13 ஆயிரத்துக்கும் அதிகம். ஆக, காவல்துறை கவனிக்க வேண்டியவை மொத்தம் கிட்டத்தட்ட 45 ஆயிரம் சம்பவங்கள், அதாவது வல்லுறவுகள்!

ஆனால், நிலுவையிலுள்ளவற்றையும் சேர்த்து விசாரணையை முடித்து, 2022-ல் காவல்துறை, குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தவை வெறும் 26 ஆயிரம் மட்டுமே; அதாவது 60 சதவிகிதத்துக்கும் குறைவு! இதுல எவ்வளவு கேஸ் நிற்கும், எத்தனை புட்டுக்கும் என்பது போலீஸுக்கும் நீதிமன்றத்துக்கும்தான் வெளிச்சம்!

இவையெல்லாமே காவல்நிலையங்களுக்கு வந்துசேர்ந்த குத்துமதிப்பான கணக்குதான். உள்ளபடியே எவ்வளவு அத்துமீறல்கள் - வல்லுறவுகள் நடந்துகொண்டிருக்கின்றன, எத்தனை பேர் புகார் செய்கிறார்கள் அல்லது புகார் செய்யக்கூடிய நிலையில் இருக்கிறார்கள்? புகார் செய்தாலும் எவ்வளவு வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன? பிறகு – நீதிமன்றங்களில் எவ்வளவு காலம் இழுத்துப் பறிக்கப்பட்டு, எத்தனை வழக்குகளில் எப்போது தீர்ப்பைச் சொல்கிறார்கள்? எத்தனை பேர் தண்டிக்கப்படுகிறார்கள்? இந்தக் காலகட்டம் முழுவதும் பாதிக்கப்பட்ட பெண்கள், இந்த ஸோ கால்ட் நாகரிக மக்கள் சமுதாயத்தால் எப்படிப் பார்க்கப்படுகிறார்கள்?

[இன்றைய நிலவரம் - நாடு முழுவதும் உயர் நீதிமன்றங்களில் மட்டும் நிலுவையில் உள்ள வழக்குகள் - 58.59 லட்சம். இவற்றில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீதி வேண்டிக் காத்திருப்பவை - 62 ஆயிரம்! உச்ச நீதிமன்றம் உள்பட நாடு முழுவதுமுள்ள அனைத்து வகையான நீதிமன்றங்களிலும் நீதிக்காக வரிசையில் நிற்கும் வழக்குகளின் மொத்த எண்ணிக்கை - 5 கோடி பிளஸ்! - தேசிய நீதித்துறைத் தரவுத் தொகுப்பு].

எனவே, மமதா பானர்ஜியின் அபராஜிதாவில் சொல்லிக்கொள்கிற அம்சம் – காவல்துறைக்குக் கால வரையறை நிர்ணயிப்பதும் விரைவு நீதிமன்றங்களில் விரைவில் விசாரித்து முடிப்பதும்தான். இதை மட்டுமாவது தில்லியிலும் பிற மாநிலங்களிலுமுள்ள அதிகார பீடங்கள் கவனத்தில்கொண்டு, சம்பந்தப்பட்டவர்களைப் பொறுப்பாக்கிக் காலாகாலத்தில் நாடு முழுவதற்கும் நடைமுறைப்படுத்தலாம் (இப்போ லேட்டஸ்ட்டா, மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனியில் நடுத்தெருவில் பட்டப்பகலில் நடந்த வல்லுறவு சம்பவம் ஊடகங்களில் டிரெண்ட் ஆகிக் கொண்டிருக்கிறது! பாருங்க, பயபுள்ளைக குற்றத்த தடுத்து நிறுத்தறதுக்குப் பதிலா விடியோ எடுத்துப் போட்டுக்கிட்டு இருந்திருக்கானுக!).

இல்லாவிட்டால், அபராஜிதா என்ன, அல்லிராணி, ஜான்சிராணி என்ன, எத்தனை சட்டங்களை, யார் யார், எங்கே நிறைவேற்றினாலும் அறுக்க மாட்டாதவன் இடுப்பில் செருகப்பட்ட 59-வது அரிவாளாகத்தான் போய் முடியும்!

கொடுத்து வச்சவங்க!

இருந்தாலும் இருக்கணும் இந்தம்மா மாதிரி இருக்கணும் என்று நம்ம நாட்டுப் பெண்கள் யாரைப் பார்த்துப் பெருமைப்படுவார்கள் அல்லது பொறாமைப்படுவார்கள்? தப்பு ஒன்னுமில்ல, இந்த செபி தலைவர் மாதவி புரி புச் மாதிரி இருந்தால் நாமளும் மாசம் ஆயிரம் ரூபாய்க்குக் காத்துக் கிடக்காமல் எங்கேயோ வேற லெவலுக்குப் போய்விடலாம்.

இந்தியாவில் கிட்டத்தட்ட 10 கோடி பேர், பங்குச் சந்தையில் முதலீடு செய்திருக்கிறார்கள். இங்கே எந்த முறைகேடும் நடந்துவிடாமல் – யாரும் யாருக்கும் சாதகமாக இருந்து மடை மாற்றிவிடக் கூடாது என்பதற்காக -  கண்காணிப்பதற்காக - மக்கள் பணத்தை உத்தரவாதப்படுத்தும் இடத்தில் இருக்கிற செபி அமைப்பின் தலைவரான இந்த மாதவி மேலேயே தொடர்ச்சியான முறைகேடு குற்றச்சாட்டுகள். அவ்வளவும் ஆதாரங்களுடன்தான்.

அதானி நிறுவன முறைகேடுகளை விசாரிக்க செபியிடம் சொன்னால், அதானி நிறுவனங்களுடனேயே செபியின் தலைவருக்கு அதாவது மாதவிக்குத் தொடர்புகள் இருப்பதாக ஹிண்டன்பர்க் அம்பலப்படுத்தியது. ஒன்னும் நகரல. ஐசிஐசிஐ வங்கியில் ‘முறையற்ற’ கூடுதலான பணப் பயன் பெற்றது பற்றி இப்போது மீண்டும் பரபரப்பான தகவல்கள். ஆவணங்களுடன் வெளிப்படுத்தப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டுக்கு செபி அமைப்பு, மாதவி புரி புச், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதித் துறை அமைச்சகம், ஐசிஐசிஐ வங்கி எல்லாரும் பதில் சொல்லனும், ஆனால், யாரும் எதுவும் சொல்லவும் இல்ல, கண்டுக்கவும் இல்ல. இப்பவும்கூட எதுவும் நகரல.

மாதவி பற்றி யாரு என்ன சொன்னாலும் யாரும் கண்டுகொள்வதில்லை. ஒருவேளை இதெல்லாம் நம்ம ஏரியா இல்லன்னு நம்ம அரசு நினைக்கிறதோ என்னவோ? ஹிண்டன்பர்க் தொடங்கி காங்கிரஸ்காரர்களான பவன் கெராவும் ஜெய்ராம் ரமேஷும் இன்னும் கொஞ்சம் பேரும் விடாமல் இவங்கள அம்பலப்படுத்துறாங்க. ஆனால், கண்டுக்குறதுக்குதான் ஆளில்ல. கருமான் வீட்டு நாய் சம்மட்டி சப்தத்துக்கெல்லாம் அச்சப்படுமாங்கற கதையா அவங்களும் எதைப் பத்தியும் கவலைப்படாம தொடர்ந்து கலக்குறாங்க.

யார் செய்தது பாவம்? யாருக்கு லாபம்?

திடீரென்று ஒரு நாள் காவல்துறை கலக்குன கலக்கலின் தொடர்ச்சியாக சென்னைப் புறநகர்ப் பகுதியிலுள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்கும் கோண்டா சீனிவாசன் நிகில் என்ற மாணவன் தற்கொலை செய்துகொண்டிருக்கிறான். என்ன, ஏது என்று எதுவும் எழுதியும் வைக்கவில்லை.

பொத்தேரி பகுதியில் ஒரு நாள் அதிகாலையில் சுமார் ஆயிரம் காவலர்கள், 168 குழுக்களாகக் குவிக்கப்பட்டனர், ஏதோ தினமும் தமிழ் மீனவர்களைத் தாக்கிக் கொண்டிருக்கிற இலங்கை மீது போர் தொடுக்கப் போகிற மாதிரி அல்லது படுபயங்கர ஆயுதங்களுடன் திரண்டிருக்கிற தீவிரவாதிகளைத் தடுத்துப் புரட்சியை முறியடிக்கப் போகிற மாதிரி.

இப்படியொரு காட்சியை இந்தப் பகுதி மக்கள் மட்டுமல்ல, டிவியிலகூட நிறைய பேர் பார்த்திருக்க மாட்டார்கள். அவ்வளவு பரபரப்பு. எதற்காக என்று யாருக்கும் முதலில் தெரியவில்லை. பிறகுதான் தெரிந்தது, இந்தப் பகுதியில் குடியிருப்புகளில் தங்கியிருக்கும் கல்லூரி மாணவர்கள் போதைப் பொருள்கள் பயன்படுத்துகிறார்களாம், அவர்களையும் போதைப் பொருளையும் கண்டுபிடிக்கத்தான் இந்த நடவடிக்கையாம். சபாஷ், என்ன மாதிரி பக்காவான பிளான்!

கடைசில கண்டுபிடிச்சது அரை கிலோ கஞ்சா, 6 கஞ்சா சாக்லேட், 20 மி.லி. கஞ்சா ஆயில், 5 பாக்கெட் பாங், 7 ஹூக்கா சாதனம், 6 கிலோ ஹூக்கா பவுடர்! பிறகு தனியா ஒரு ரௌடியையும் இரண்டேகால் கிலோ கஞ்சாவுடன் கண்டுபிடிச்சு கைது செஞ்சுருக்காங்க (மாணவர்களுக்கு கஞ்சா விற்றதாகக் கூறப்படும் நபரை இதுவரை எந்தக் காவலருக்குமே தெரியாது; கேள்விப்பட்டதுகூட இல்லை என்று நாமும் பச்சப்புள்ளயாட்டமா நம்புவோம்).

மாணவர்கள் 11 பேரைக் கைது செய்துவிட்டுப் பிறகு ‘எதிர்காலம் கருதி’ அனுப்பிவிட்டார்கள். இவர்களுடன் காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, வழக்கு எதுவும் பதியாமல், கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு திருப்பி அனுப்பப்பட்ட ஒரு மாணவன்தான் இப்போது செத்தும் போய்விட்டான்.

எலியைப் பிடிப்பதற்காகவா டைனமைட் எல்லாம் வைத்து மலையைக் கெல்லுவார்கள்? எந்தக் கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த  மாணவர்கள் மத்தியில் போதைப் பழக்கம் இல்லை? எங்கிருந்து எங்கே செல்கின்றன என்பதெல்லாம் காவல்துறைக்குத் தெரியவே தெரியாதா? குறிப்பாக, இந்தப் பல்கலைக்கழகத்தையொட்டி, அதிகாலையில் ஆயிரம் காவலர்களைக் குவித்து அதிரடி காட்ட வேண்டிய அவசியம் என்ன? மாணவர்களிடம் போதைப் பழக்கத்தை முறியடிக்கத்தான் என்றால் ஏன் அதே நாளில் சென்னையிலேயே வேறெந்த பல்கலைக்கழகப் பகுதிகளிலும் இத்தகைய சோதனைகள் நடத்தப்படவில்லை?

ம். யாருக்கு யார் மீது வன்மமோ? எதற்காக வன்மமோ? யார் யாருக்கு செக் வைக்க முயன்றார்களோ? விலை ஒரு உயிர்! (காவல்துறையின் இந்த அணுகுமுறை பற்றிப் பிற கல்வி நிறுவனங்களேகூட ஏனோ கொஞ்சமும் முணுமுணுக்கக்கூட இல்லை).

ஒன்னும் புரியல!

சென்னை மாநகருக்கு மத்தியிலேயே இருக்கிற எப்போதும் நல்ல ரிசல்ட் தருகிற அரசு பெண்கள் பள்ளியொன்றில் ஒரு தனி நபர் விசிட் அடித்து பாவ புண்ணியங்கள் பற்றியெல்லாம் புள்ளைங்களுக்கு விழிப்புணர்வூட்டியது பற்றி எப்படியோ திடீரென அரசுக்குத் தெரிய வந்துவிட்டிருக்கிறது. சமூக ஊடகங்களிலும் சொந்தக் கட்சிக்காரர்களுமே சேர்ந்து கழுவிக் கழுவி ஊற்றிய நிலையில், ஏதோ கேஸைப் போட்டு பார்ட்டியைக் கைது செய்திருக்கிறது காவல்துறை! இன்னொரு பக்கம், இதே ஆன்மிகப் பேரொளி, அதே பள்ளிக் கல்வித் துறை அமைச்சரில் தொடங்கி இன்னும் சில அமைச்சர்கள் உள்பட பலருடனும் போஸ் கொடுத்துக்கொண்டிருக்கும் புகைப்படங்களும் வைரலாகிக் கொண்டிருக்கின்றன.

ஒரு பக்கம் பள்ளிகளில் என்.சி.சி. முகாம்கள் நடக்கிறதும் தெரியல, இன்னொரு பக்கம் நிறைய சுயம்புகள் கிளம்பி பள்ளிக்குள் புகுந்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வூட்டிக் கொண்டிருப்பதும் தெரியல. ம். என்னதாங்க நடக்குது நம்ம நாட்டில?

நன்றி: இந்து தமிழ் திசை (09 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்