TNPSC Thervupettagam

சொல்லப் போனால்... உயிரின் விலை என்ன?

October 13 , 2024 95 days 106 0

சொல்லப் போனால்... உயிரின் விலை என்ன?

  • கார்த்திகேயன் என்ற பெயரை யாருக்காவது நினைவிருக்கிறதா? அனேகமாக வாய்ப்பில்லை. அதுவும் சரிதான், அவரவருக்கு ஆயிரத்தெட்டுப் பிரச்சினைகள், இந்தப் பெயரை மட்டும் நினைவு வைத்திருந்து ஆகப் போவதென்ன?
  • சென்னை மெரீனா கடற்கரையில் 15 லட்சம் மக்கள் திரண்டு நிற்கின்றனர். விண்ணில் விமானங்களின் பெரும் சாகசங்கள். வானத்திலிருந்து பெரும் பிரவாகமாகப் பொங்கிவழிந்து கொண்டிருக்கிறது பெருமிதம். ஆனால், குடிக்கத் தண்ணீர் மட்டும் கிடைக்கவில்லை தரையில் நிற்கும் கூட்டத்துக்கு. சுற்றிலும் நினைத்துப் பார்க்க முடியாத நெரிசல்.
  • ஒருகட்டத்தில் கூட்டத்தின் அளவைப் பார்த்து மிரண்டுபோன திருவொற்றியூரைச் சேர்ந்த மேற்சொன்ன கார்த்திகேயன் (34 வயதுதான்), தன்னுடைய மனைவி சிவரஞ்சனியையும் மூன்று வயதுக் குழந்தையையும் அழைத்துக்கொண்டு முன்னதாகவே கடற்கரையிலிருந்து வெளியேறுகிறார். இருவரையும் அண்ணா சதுக்கம் பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கச் சொல்லிவிட்டு, நேப்பியர் பாலத்தருகே நிறுத்தியிருந்த தன்னுடைய மோட்டார் சைக்கிளை எடுத்துவருவதாகச் சொல்லிச் செல்கிறார்.
  • சொல்லிச் சென்ற இடத்திலேயே கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்துக்கும் மேலாகக் குழந்தையுடன் காத்திருக்கிறார் சிவரஞ்சனி. சென்றவர் சென்றவர்தான் திரும்பி வரவேயில்லை. எத்தனை முறை முயன்றும் சிக்னல் கிடைக்காததால் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. பிற்பகல் 3.20 மணிக்கு யாரோ ஒருவர் அந்த போனை எடுத்தவர்தான், சாலையில் கார்த்திகேயன் மயங்கிவிழுந்து கிடப்பதாகக் கூறுகிறார். அந்தப் பக்கம் சென்ற ஒருவரின் உதவியுடன் கணவன் விழுந்துகிடந்த இடத்துக்குக் குழந்தையுடன் செல்கிறார் சிவரஞ்சனி. கூட்ட நெரிசலால் ஆம்புலன்ஸ் வருவதிலும் தாமதம். மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற சிறிது நேரத்திலேயே கார்த்திகேயன் இறந்துவிட்டார் என அறிவிக்கப்பட்டது.
  • மனைவி சிவரஞ்சனிக்கும், தந்தையின் முகத்தை நினைவாகக்கூட தேக்கிவைத்துக்கொள்ள முடியாத அந்த மூன்று வயதுச் சின்னக்  குழந்தைக்கும்தான் கார்த்திகேயன் என்பது இனி எப்போதுமே மறக்க முடியாத – ஆனால் - வெறும் பெயராக மட்டுமே நிலைத்திருக்கும்.
  • வல்லமை மிக்க இந்தியத் திருநாட்டின் விமானங்களின் சாகசங்களை வேடிக்கை பார்க்க வந்து செத்துப்போன கார்த்திகேயன் என்ற ஒருவர் பற்றிய நீளமான ஒன்லைன் மட்டும்தான் இது, வீட்டுக்குச் சென்று விசாரித்தால் இன்னும் பெருங்கதை இருக்கும். இதேபோல மறக்க முடியாத அந்த மோசமான நாளில் வேடிக்கை பார்க்க வந்தவர்களில் மேலும் 4 பேர் செத்துப்போய்விட்டார்கள், ஒருவரைத் தவிர எல்லாருமே இளைய - நடுத்தர வயதினர். எல்லாருக்குமே நிச்சயம் இப்படியொரு பின்னணியிருக்கத்தானே செய்யும்.
  • இந்த மரணங்களுக்கு யாருமே பொறுப்பேற்கவில்லை. வானத்தில் சாகசம் படைத்த விமானப் படையினருக்கு இதுபற்றித் தெரியுமா என்றே தெரியவில்லை, இரங்கல் குறிப்புகூட வெளியிடவில்லை. உண்மையில் சம்பந்தப்பட்டவர்கள் அல்லது பொறுப்பேற்க வேண்டியவர்கள் எல்லாருமே அவரவர் பாட்டுக்கு அவரவர் வேலையைத் தொடரச் சென்றுவிட்டார்கள்.
  • இந்த சாவுகளை அரசியலாக்க வேண்டாம் என்று தமிழ்நாடு அமைச்சர் மா. சுப்பிரமணியம் கேட்டுக்கொண்டார். மறுநாள் இரங்கல் தெரிவித்ததுடன் இறந்தவர்கள் குடும்பத்துக்குத் தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார் (காலையில் கடற்கரைக்குக் குடும்பத்துடன் வந்து சாகசங்களைப் பார்த்த பிறகு அந்த நாள் மாலையில் கதீட்ரல் சாலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுடன் கலைஞர் நூற்றாண்டு பூங்கா திறப்பு விழாவில் பங்கேற்றார் முதல்வர் ஸ்டாலின்!).
  • இந்த சாவுகளுக்குப் பின்னால், ஸாரி, சாகசத்துக்குப் பின்னால் எத்தனையோ  கேள்விகள். யாருக்காக இந்த சாகசம்? இந்த சாகசத்தால் சாதித்தது என்ன? மக்களைக் குதூகலப்படுத்துவதுதான் நோக்கம் என்றால், ஒரே நேரத்தில் 15 லட்சம் பேரை (எல்லாருமாகச் சொல்லிக் கொண்டிருப்பதுதான் இந்த எண்ணிக்கை, என்றாலும், நிச்சயமாக 10 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கலாம்) இந்த இடத்தில் திரளச் செய்யலாமா? திரளுவது பாதுகாப்பானதுதானா? இதுபற்றியெல்லாம் உளவுத் துறை உள்பட ஏன் ஒருவருக்குக்கூட தோன்றவில்லை? யோசிக்க முடியாத அளவுக்கா சாகசங்கள் கண்ணை மறைத்துவிட்டன?
  • இத்தனை லட்சம் பேர் திரளுகிறார்களே? எப்படி இங்கே வருவார்கள்? வரும்போது என்றால்கூட கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேர்ந்துவிடுவார்கள். முடியும்போது ஒரே நேரத்தில் எல்லாரும் புறப்படுவார்களே, எப்படி வெளியேறுவார்கள்? ஒருவேளை எதிர்பாராமல் நெரிசல் ஏற்பட்டால் மாற்று ஏற்பாடுகள் என்னென்ன?
  • உள்ளபடியே ஒரு நல்ல அரசும் நிர்வாகமும் இந்த விமான சாகச வேடிக்கையைப் பார்க்க அதிக அளவில் திரண்டு வந்துவிடாமல் மக்களைத் தடுக்கும் வழிகளைத்தானே பார்த்திருக்க வேண்டும். வீட்டிலிருந்தே பாருங்கள், தொலைக்காட்சிகளில் நேரலையில் காணுங்கள், கொளுத்துகிற வெய்யிலில் அநாவசியமாக வெளியே வராதீர்கள் என்றல்லவா அறிவுறுத்தியிருக்க வேண்டும்?
  • நல்லவேளை இத்தனை பெரிய கூட்டத்தில் ஆங்காங்கே நேரிட்ட நெரிசல்கள் யாவும் சில மணி நேரங்களில் நெகிழ்ந்துவிட்டன. ஒருவேளை மக்கள் பீதியுற்றிருந்தால் எவ்வளவு உயிர்களை இழக்க நேரிட்டிருக்கும்? நினைக்கவே பதைக்கிறது.
  • கெடுவினையாக, இறந்தவர்கள் அனைவருமே கூட்டத்திலிருந்து வெளியே வந்த பிறகுதான் இறந்திருக்கின்றனர். டிஹைட்ரேஷன்! நன்றாகத் தண்ணீர் குடித்திருந்தால், குடிக்கக் கிடைத்திருந்தால் ஒருவேளை இவர்கள் பிழைத்திருக்கவும் கூடும். இணை நோயாளிகளாக இருப்பது குற்றமா? இதையும் சாவுக்குக் காரணமாகக் கூறிக் கொண்டிருக்கின்றனர்.
  • விமான சாகசத்தை வேடிக்கை பார்க்க வந்து உயிரைப் பறிகொடுத்தவர்களின் இறப்புக்கு வெப்ப வாதம்தான் காரணம் என்று உடற்கூராய்வுக்குப் பின் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. உயிரிழப்பின் காரணத்தை இன்னமும் ‘துல்லியமாக’ அறிவதற்காக வயிற்றிலிருந்தவற்றின் மூலம் ‘விஸ்ஸெரா’ சோதனைகளும் நடத்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளனர் (என்ன கொடுமை இது? ஒருவேளை, எல்லா சோதனைகளுக்கும் பிறகு, விமான சாகச வேடிக்கைக்கும் இவர்களுக்கும் சம்பந்தமில்லை. இவர்கள் ஐந்து பேருமே ‘இந்தப் பெரும் சாதனையின் புகழைக் குலைக்கும் வகையில்’ ஏதோ சொந்த காரணங்களால் விஷம் குடித்துவிட்டு இங்கே வந்து தற்கொலைதான் செய்துகொண்டிருக்கின்றனர் என்று யாரும் கூறிவிடப் போகிறார்களோ என்றுகூட அச்சமாக இருக்கிறது). என்னவொரு  துயரம்?
  • விமான சாகசத்தை வேடிக்கை பார்க்க வந்து, நீர்ச்சத்துக் குறைபாடு போன்ற காரணங்களால் ‘பொறுப்பு இல்லாமல்’ உயிரிழந்துவிட்ட இவர்களுடைய குடும்பத்துக்கு இழப்பீடாக – இவர்களுடைய உயிரின் விலையாக – தலா ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டிருக்கிறது. ஒப்பிட வேண்டாம் என்றாலும் இந்தத் தருணத்தில் ஒப்பிடுவதிலும் எவ்விதத் தவறுமிருப்பதாகத் தோன்றவில்லை. கள்ளச் சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு அரசு, ரூ. 10 லட்சம் வழங்குகிறது. வயிற்றுப் பிழைப்புக்காக உழைக்கச் சென்ற இடத்தில் பட்டாசுகள் வெடித்து உயிரைப் பறிகொடுத்து, ஒட்டுமொத்த குடும்பத்தையும் நடுத்தெருவில் விட்டுச் சென்றவர்களுக்கு தலா ரூ. 3 லட்சம். சாலை விபத்துகளில் இறந்தால் ரூ. 2 லட்சம், பாம்பு கடித்து செத்தால் ரூ. 2 லட்சம்.
  • இழப்பீடுகள் என்ற பெயரால் இறந்துபோகும் உயிர்களுக்கான விலையாக அவர்களை நம்பியிருப்பவர்களுக்கு அரசால் தரப்படும் தொகையில் என்ன ஏற்றத்தாழ்வு? எதற்காக இந்த ஏற்றத்தாழ்வு? உயிர்களில் என்ன பேதம் இருக்க முடியும்? உண்மையில் உயிரின் விலைதான் என்ன? யார் இந்த விலையை நிர்ணயிக்கிறார்கள்? அதை மதிப்பிடுவதற்கான அளவுகோல்கள் எங்கே கிடைக்கின்றன? இந்த அளவுகோல்கள் எல்லாம் ஓருயிருக்கு உருக்கிலும் மற்றொன்றுக்கு ரப்பரிலும் இருப்பது ஏன்? யோசிக்க யோசிக்கப் பிடிபடாத புதிர்தான் இது. மெரீனா கடற்கரைக்கு வந்து செத்துப்போனவர்களுக்கு தரப்பட்ட ரூ. 5 லட்சத்துக்கு என்ன அடிப்படை? எதுவும் புரியவில்லை.
  • ஆனால், மக்கள்தான் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ளவும் அறிந்துகொள்ளவும் வேண்டும், தங்களுடைய உயிருக்கு என்ன விலை என்பதை! சிவரஞ்சனிக்கும் அந்தக் குழந்தைக்கும் இந்த விலையால் கார்த்திகேயனின் இழப்பை ஈடுசெய்ய முடியுமா? இன்னமும் மீதியிருக்கும் காலத்தை இவர்கள் எவ்வாறு வாழ்ந்து கழிக்கப் போகிறார்கள்? விமானங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியுமா? மனைவி, குழந்தையுடன் கடற்கரைக்குப் புறப்படும் முன் ஒரே ஒரு கணம் தன்னுடைய உயிரின் விலையையும் தனக்குள்ள கடமைகளையும் ஒப்பிட்டு கார்த்திகேயன் யோசிக்க வாய்த்திருந்தால்...

தற்கொலைப் ‘படை’!

  • கொஞ்சம்கூட யோசிக்காமல் செய்து தங்களுடைய எதிர்காலத்தை மட்டுமின்றித் தங்களை நம்பியிருக்கும் குடும்பங்களின் எதிர்காலத்தையும் தொலைக்கிறார்கள்  இந்த மாணவர்கள்!
  • சென்னையில் காலங்காலமாக மாணவர்களிடையே தொடர்ந்துவரும் மகா மட்டமான வெட்கக்கேடுகளில் ஒன்று ‘ரூட் தல’ என்ற வெட்டி பந்தா. சென்னை மாநகருக்குப் புறநகர்ப் பகுதிகளிலிருந்து, வெளியூர்களிலிருந்து வரும் ஒவ்வொரு ரயிலிலும் அல்லது பேருந்திலும் வருகிற மாணவர்களில் யார் பெரியவன்? யார், யாருக்கு அடங்கிப் போக வேண்டும்? எந்தக் கல்லூரி மாணவன் வஸ்தாது? என்று தீர்மானிப்பதில் தொடங்கி மாணவர்களை ஆட்டுவிப்பது வரை ஒவ்வொரு நாளும் பதற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பது இந்த ரூட் தல வழக்கம்.
  • சில நாள்கள் முன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வாசலில் நேரிட்ட மோதலில் மாநிலக் கல்லூரி மாணவர் சுந்தர் என்பவரை பச்சைப்பன் கல்லூரி மாணவர்கள் (எல்லாருமே திருத்தணி, திருவள்ளூர்ப் பகுதிகளிலிருந்து ரயிலில் சென்னைக்குப் படிக்க வருபவர்கள்தான்) தாக்கியிருக்கின்றனர். தலைக்காயமுற்ற சுந்தர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். தாக்கிய மாணவர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டுக் கொலை வழக்கு பதியப்பட்டிருக்கிறது.
  • இந்த முட்டாள்தனமான மோதலால், தாக்கப்பட்ட ஒரு மாணவனுடைய வாழ்க்கையே முடிந்துவிட்டது. கொலை வழக்கில் கைது செய்யப்பட்டதன் மூலம் தாக்கிய ஐந்து மாணவர்களின் எதிர்காலமும் பாழாகிவிட்டது. இதில் பெரிய கொடுமை என்னவென்றால், இவர்கள் எல்லாருமே சாதாரண, அல்லது நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான். படித்து முடித்து வந்து தங்களைக் காப்பாற்றுவார்கள் என்று இவர்களை எதிர்பார்த்திருக்கின்றன இவர்களின் குடும்பங்கள்; இப்போது காவல்நிலையங்களுக்கும் நீதிமன்றத்துக்கும் அலையத் தொடங்கியுள்ளன.
  • சென்ட்ரல் ரயில் நிலையம் முன் இவர்கள் தாக்கிக் கொண்டபோது, சில காவலர்கள் உள்பட பெரும்பாலோர் பார்த்துக்கொண்டுதான் இருந்ததாகக்  கூறுகின்றனர். இவர்கள் திருந்தப் போவதில்லை, அவர்களே அடித்துக்கொண்டு செத்தால் சாகட்டும் என்ற வெறுப்பு மனநிலைக்கு காவல்துறையினரும்  வந்துவிட்டிருப்பதுதான் காரணம். அநியாயம் நடந்தாலே தட்டிக்கேட்க முன்வராத நம் மக்கள்தானா, அடிதடியைத் தட்டிக் கேட்கப் போகிறார்கள்?
  • ஆக, இவர்களைப் பற்றி இந்த சமுதாயத்தில் யாருக்குமே கவலையில்லை; அக்கறையுமில்லை, இருக்க வேண்டிய அவசியமுமில்லை. ஆனால், அவரவருக்கும் அவரவர் குடும்பங்களுக்கும் இருக்கத்தானே வேண்டும்? (20, 25 வயதுகளிலேயே பெரிய ரௌடிகள் எங்கிருந்து உருவாகிறார்கள்? என்பதையும் இதனுடன் இணைத்தே யோசிக்க வேண்டும்). ம். இனியொரு கொலை விழாமல் இருக்க வேண்டும்!

அதானே, விட்டுடுவோமா!

  • என்ன, கொஞ்ச நாளாகப் பெரிதாக எதுவுமில்லையே; எல்லாம் சீராகிவிட்டிருக்கிறது போல என்று நினைத்தது தப்பாகிவிட்டது. அப்படியெல்லாம் இல்லை, ஒரு சின்ன பிரேக், அவ்வளவுதான் என்று ஒட்டுமொத்தமான ஒரு விடுமுறை நாளான ஆயுத பூஜையன்று இரவில் கவரப்பேட்டையில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது மைசூர் – தர்பங்கா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் மோதியிருக்கிறது. சரக்கு ரயில் நின்றுகொண்டிருந்த லூப் லைனிலேயே அதிவேகமாகச் செல்லும் எக்ஸ்பிரஸும் எப்படிச் சென்றது? நம்முடைய சூப்பர் ரயில்வே நிர்வாகம் இனி  நிறைய காரணங்களைச் சொல்லும், எல்லாருமாகக் கேட்டுக்கொள்ள வேண்டியதுதான். நடந்த விபத்தின் கோரத்தைப் பார்க்க மிகப் பெரிய அழிவு நேரிட்டிருக்க வேண்டும்; நல்லவேளையாக பயணிகள் பெட்டிகள் அல்லாமல், சரக்கு ரயிலின் பெட்டிகள் தீப்பற்றியதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டிருக்கிறது. காயங்களுடன் பயணிகள் தப்பிவிட்டனர்.
  • என்ன கொடுமை என்றால், நோய் நாடி நோய் முதல் நாடுவதற்குப் பதிலாக, விபத்து நடந்த பகுதியில் தேசிய புலனாய்வு முகமையினரும் (என்.ஐ.ஏ.) ஆய்வு மேற்கொண்டதுதான். சரியான காரணம் கிடைக்காவிட்டால் மிக எளிதாக ஏதோ தீவிரவாதிகளின் சதி என்று குறிப்பிட்டுவிடலாம் என நினைக்கிறார்களோ என்னவோ?
  • விபத்துக்கு ஒவ்வொரு முறையும் ஒரு காரணத்தைக் கண்டுபிடிப்பதற்குப் பதிலாக, நாட்டில் ரயில்களைப் பாதுகாப்பாக இயக்குவதில் என்னென்னதான் பிரச்சினை? என யாருமே யோசிக்க மாட்டார்களா?
  • இத்தனை விபத்துகள் நடந்துகொண்டிருக்கின்றனவே, ஏன், ரயில்வேக்கும் சேர்த்து அமைச்சர் பொறுப்பு வகிக்கும் அஸ்வின் வைஷ்ணவ் எதற்குமே பொறுப்பேற்றுக் கொள்வதில்லை? (பாவம், அந்தக் காலத்தில் ராஜிநாமா செய்து முன்னுதாரணமாக முயன்ற ரயில்வே அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி ஏமாந்துபோய்விட்டார். அவருக்குப் பின் ஒரே ஒருவர்தான், நிதீஷ்குமார், 1999-ல் அசாமில் நடந்த ரயில் விபத்துக்காகப் பதவி விலகினார். பிறகென்ன, தற்காலம் விபத்து வேறு, பொறுப்பு வேறு, பதவி வேறு என்றாகிவிட்டது).
  • ரயில்வேக்காக இருந்த தனி பட்ஜெட்டைத்தான் ஒழித்துக்கட்டினார்கள், தனியாக முழு நேர ரயில்வே அமைச்சரையாவது நியமிக்கலாமே? எதற்காக வைஷ்ணவிடம் இத்தனை பொறுப்புகள்?
  • இப்படியே மக்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருக்க வேண்டியதுதான், அடுத்த ரயில் விபத்து வரைக்கும், பிறகு... பிறகென்ன, மறுபடியும் முதலில் இருந்துதான்!

நன்றி: தினமணி (13 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்