TNPSC Thervupettagam

சொல்லப் போனால்... செந்தில் பாலாஜியும் 4.34 லட்சம் விசாரணைக் கைதிகளும்!

September 29 , 2024 58 days 62 0

சொல்லப் போனால்... செந்தில் பாலாஜியும் 4.34 லட்சம் விசாரணைக் கைதிகளும்!

  • நீதிதேவன் மயக்கம் - திராவிடர் கழகத்தில் இருந்த காலத்தில், அண்ணா எழுதிய எண்ணற்ற நாடகங்களில் ஒன்று.
  • இராவணனை இரக்கமற்ற அரக்கன் என்று குறிப்பிட்ட கம்பருக்கு எதிரான வழக்கில் மேல் உலகத்தில் நீதிதேவன் முன் நடக்கும் விசாரணையில் தன் தரப்பில் இராவணனே வந்து வாதிடுகிறான். அடுக்கடுக்கான வாதங்கள் என்ற பெயரில் புராணங்களில் கூறப்படும் விஷயங்களுக்கு எதிராக இராவணனுக்குள் தான் புகுந்து கேள்விகளை எழுப்புவார் அண்ணா. கடைசியில் இராவணனின் கேள்விகளுக்கு விடை தெரியாமல் மயங்கிச் சாய்வார் நீதிதேவன் – இதுதான் சுருக்கக் கதை!
  • இதைப் புராண நம்பிக்கைகளுக்கு எதிரான திராவிட இயக்கப் பிரசார நாடகம் எனலாம். இப்போது இந்தப் புத்தகம் அச்சில் இருக்கிறதா, விற்பனைக்குக் கிடைக்கிறதா, பவள விழாக் காலத்தில் தி.மு.க.வின் இளைய தலைமுறையில் எவ்வளவு பேருக்கு இந்த நூலைத் தெரியும்? எத்தனை பேர் படித்திருப்பார்கள்? சொல்வதற்கில்லை.
  • நீதி என்றதுமே சும்மா நினைவுக்கு வந்த ஒரு விஷயம் இது, அவ்வளவுதான். மற்றபடி நீதிதேவன் மயக்கத்துக்கும் இனி வரும் விஷயத்துக்கும் எந்தவிதத் தொடர்புமில்லை.
  • தமிழ்நாட்டில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, 15 மாதங்கள், மிகச் சரியாகச் சொன்னால் 471 நாள்கள் சிறை வைக்கப்பட்டு (சிறையில் இருந்த காலத்திலேயே இதய அறுவைச் சிகிச்சையெல்லாமும் நடந்தது), சில நாள்களுக்கு முன் உச்ச நீதிமன்றத்தால்  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
  • இந்த வழக்கு விசாரணை எவ்வளவு காலம் நடைபெறும்? எப்போது தீர்ப்பு வரும்? தொடர்ந்து, ஏதாவதொரு தரப்பின் மேல் முறையீடுகள் எல்லாம் விசாரிக்கப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர் எப்போது தண்டிக்கப்படுவார்? அல்லது விடுவிக்கப்படுவார்? ஒருவருக்கும் தெரியாது, ஒருவராலும் உறுதியாகக் கூற முடியாது.
  • வழக்கு விசாரணையில் ஒரு முன்னேற்றமும் இல்லாமல் இவ்வாறு நீண்ட காலம் சிறையில் இருந்துவிட்டுப் பிணையில் வெளிவருவதில் செந்தில் பாலாஜி ஒன்றும் புதியவரல்ல. இவரைப் போல இந்தியாவில் நிறைய பேர் இருக்கிறார்கள்.
  • இதேபோலத்தான், 2 ஜி ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. இராசா கைது செய்யப்பட்டு, செந்தில் பாலாஜியைவிட சில நாள்களே குறைவு – 466 நாள்கள் – சிறையில் இருந்துவிட்டுப் பின்னர் பிணையில் வெளியே வந்தார். இதே வழக்கில் கனிமொழியும் ஆறு மாதங்கள் சிறையில் இருந்துவந்தார். கடைசியில் நீதிமன்றத்தில் இந்த வழக்கே நிற்கவில்லை; அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்!
  • ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் நாட்டின் முன்னாள் நிதியமைச்சரான ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டுச் சிறை வைக்கப்பட்டார்; 106 நாள்கள் கழித்து உச்ச நீதிமன்றம் அளித்த பிணையில் அவர் வெளிவரும்போது ஒரே ஒரு குற்றச்சாட்டுகூட பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை.
  • இவர்கள் எல்லாம் இந்தியா முழுக்க அல்லது தமிழ்கூறும் நல்லுலகம் முழுவதும் அறிந்த, தெரிந்த மிகச் சிலர். ஆனால், இப்படியெல்லாம் சொல்லிக்கொள்ள முடியாத – எத்தனையோ மாறுபட்ட வழக்குகளில் சிக்கி – இப்போதும் இந்தியாவின் சிறைகளில் விசாரணைக் கைதிகளாகவே  இருந்துகொண்டிருப்பவர்கள் எத்தனை பேர்?
  • தேசிய குற்றப் பதிவுகள் அமைப்பின் (நேஷனல் கிரைம் ரெகார்ட்ஸ் ப்யூரோ - என்சிஆர்பி) கணக்கின்படி, 2022, டிசம்பர் 31 ஆம் தேதி நிலவரம்:
  • இந்தியா முழுவதுமுள்ள சிறைகளில் 4 லட்சத்து 34 ஆயிரத்து 302 பேர் விசாரணைக் கைதிகளாக இருக்கின்றனர். சிறையிலுள்ள கைதிகளின் மொத்த எண்ணிக்கையான 5 லட்சத்து 73 ஆயிரத்து 220 பேரில், இவர்கள் மட்டுமே 76 சதவிகிதம்! (தில்லி திகார் சிறையில் இருக்கும் கைதிகளில் 90 சதவிகிதத்தினர் விசாரணைக் கைதிகள்தானாம்).
  • கடைசியாக வெளியான தேசிய குற்றப் பதிவுகள் அமைப்பு தொகுத்தளித்த, 2022 ஆம் ஆண்டுக்கான ‘இந்திய சிறை புள்ளிவிவரங்களை’ மேற்கோள் காட்டி, இந்த ஆண்டு பிப்ரவரியில் நாடாளுமன்றத்தில் பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ர, 5 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணைக் கைதிகளாக 11,448 பேர் இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
  • மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை 25,869 பேர், இரண்டு முதல் மூன்றாண்டு வரை 33,980 பேர், ஓராண்டு முதல் இரண்டாண்டு வரை 63,502 பேர் சிறையில் விசாரணைக் கைதிகளாக இருப்பதாகவும் அமைச்சர் கூறினார் – ஆக, ஓராண்டுக்கும் மேலாக விசாரணைக் கைதிகளாக இருப்பவர்கள் மட்டுமே 1,34,799 பேர்! (இன்றைய சிறை நிலவரம் பற்றித் தெரியவில்லை, இரு ஆண்டுகளுக்குப் பிறகு தெரிவிக்கப்படலாம்).
  • _ இப்படிச் சிறையிலுள்ள இவர்களின் வழக்கு விசாரணைகள் எல்லாமும் எப்போதுதான் முடியும்?
  • _ எப்போது தண்டிக்கப்படுவார்கள்? அல்லது விடுதலை செய்யப்படுவார்கள்?
  • _ விடுதலை செய்யப்பட்டால், விடுதலை செய்யப்படுவோரைப் பொருத்தவரை,  இத்தனை ஆண்டுகள் இவர்கள் சிறையில் கழித்ததற்கு என்ன பொருள்?
  • _ இவற்றுக்கெல்லாம் யார்தான் பொறுப்பு?
  • _ இதனால் இவர்களும் இவர்கள் குடும்பத்தினரும் இழந்தவற்றை யாரால், எவ்வாறு மீட்டுத் தர இயலும்?
  • வடகிழக்கு தில்லியில் நடந்த வகுப்புக் கலவரங்களுக்குக் காரணமானவர்களில் ஒருவர் எனக் குற்றம் சாட்டப்பட்டு, சாட்டப்பட்டு மட்டும்தான், நான்கு ஆண்டுகளுக்கு முன் உபா சட்டத்தின் கீழ்  கைது செய்யப்பட்ட தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் உமர் காலித் இன்னமும் – அதாவது 4 ஆண்டுகளாகவே - சிறையில்தான் இருக்கிறார், விசாரணையும் இல்லை, பிணையும் இல்லை! கேட்பதற்கும் யாருமில்லை.
  • உத்தரப் பிரதேசத்தில் ஹத்ராஸில் 19 வயது தலித் பெண்ணொருவரின் வல்லுறவுக் கொலை பற்றி செய்தி சேகரிப்பதற்காகச் சென்ற கேரள செய்தியாளர் சித்திக் கப்பன், 2020 அக். முதல் 2022 செப். வரை – இரண்டாண்டுகள் - சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்; பின்னர் உச்ச நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
  • இப்படியாக விசாரணைக் கைதிகளால் நிரம்பிவழியும் சிறைகளைக் கொண்ட நாட்டில் – கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இரு வேறு தருணங்களில் - வழக்குகளில் – பிணைதான் விதி, சிறை என்பது விதிவிலக்கு (Bail is the rule, Jail is the exception)  என்று தெரிவித்திருக்கிறது உச்ச நீதிமன்ற அமர்வுகள்! உபா வழக்குகளுக்கும் பண மோசடி வழக்குகளுக்கும்கூட இது பொருந்தும் என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறது.
  • குற்றமிழைத்தவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவதில் எவ்வித மாற்றுக் கருத்தும் யாருக்கும் இருக்க முடியாது; ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்ற நிலையிலேயே மாதக்கணக்கில் தண்டனையைப் போலவே சிறை வைக்கப்படுவதில்  என்ன நீதி இருக்கிறது என்பதுதான் புரியவில்லை.
  • (நாடு முழுவதும் தீவிரவாதம், வகுப்புவாதம் போன்றவற்றின் பெயரால் தொடுக்கப்பட்டுள்ள எண்ணற்ற வழக்குகளில் ஆயிரக்கணக்கானோர் எவ்வித கணக்கு வழக்குமின்றி, விசாரணை, வழக்காடல் இன்றி சிறையில் இருக்கின்றனர். இவற்றையெல்லாம் குறிப்பிடப் போனால் எங்கேயே நீண்டு சென்றுவிடும்).
  • கர்நாடகத்தில் இந்நாள் முதல்வராக இருக்கும் சித்தராமையாவுக்கு எதிரான ஊழல் வழக்கிலும், முன்னாள் முதல்வரான எடியூரப்பாவுக்கு எதிரான போக்சோ சட்ட வழக்கிலும் ஒரே மாதிரியான அணுகுமுறைதானா கடைப்பிடிக்கப்படுகிறது? பாலியல் குற்றமிழைத்த முன்னாள் பிரதமர் தேவ கௌடவினுடைய மகன், பேரன்களின்  வழக்குகளின் விசாரணைகள் என்னவாயின?
  • மாநிலங்களிலுள்ள உயர் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகளின்போதும், தீர்ப்புகளிலும் நிறைய கருத்துகளை நீதிபதிகள் தெரிவிக்கிறார்கள். பின்னர், அதே கருத்துகள் உச்ச நீதிமன்றத்தால் திரும்பப் பெறப்படுகின்றன அல்லது கண்டிக்கப்படுகின்றன. அப்படியானால், யாருடைய கருத்து சரி? நீதியாகப்பட்டது யாது?
  • எத்தனையோ சம்பவங்களைத் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் நீதிமன்றங்களின் கண்களுக்குச் சில விஷயங்கள் மட்டும் தெரியாமலேயே போய் விடுகின்றன.; எத்தகைய அளவுகோல்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன என்பதும் புரிவதில்லை.
  • செந்தில் பாலாஜியைப் போல, சிதம்பரத்தைப் போல, ஆ. இராசாவைப் போல  எத்தனை பேரால், எளிய மக்களால் பிணை தேடி உச்ச நீதிமன்றம் வரை சென்று வாதாட முடியும்? போராட முடியும்? எல்லாரும் மனிதர்கள்தானே? சிறைகளில் இருக்கும் இத்தனை லட்சம் விசாரணைக் கைதிகளுக்கான தீர்ப்பு எப்போது? - Bail is the rule, Jail is the exception!

எமர்ஜென்சியையும் தாண்டி...

  • சிறையிலிருந்து வெளிவரும் செந்தில் பாலாஜியை வரவேற்று, ‘எமர்ஜென்சி காலத்தில்கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது. அரசியல் சதிச் செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன. கைது செய்து சிறையிலேயே வைத்துவிடுவதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியைக் குலைக்க நினைத்தார்கள். முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!’ என்று செய்தி வெளியிட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
  • இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டபோது (1975 ஜூன் 25/26), கருவில்  ஆறு மாதக் குழந்தையாக இருந்திருப்பார், தற்போது பிணையில் சிறையிலிருந்து மீண்டிருக்கும் செந்தில் பாலாஜி.
  • நாட்டில் நெருக்கடி நிலைக் காலத்தில் மிகப் பெரிய துன்பங்களை – ஆட்சிக் கலைப்பு உள்பட - எதிர்கொண்டது திராவிட முன்னேற்றக் கழகம். ஏராளமானோர் சிறைப்பட்டனர்; உயிரை, உடைமைகளை இழந்தனர்.
  • சுமார் ஐம்பதாண்டுகளை நெருங்குகிறது நெருக்கடி நிலைக் காலம். திமுகவில் நெருக்கடி நிலையை நேரில் கண்டவர்களும் கொடுமைகளை அனுபவித்தவர்களும் தற்போது குறைந்துவிட்டாலும் இன்னமும் இருக்கிறார்கள் – ஆனால், இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலினே நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்; சிறை வைக்கப்பட்டவர். எங்கே குத்தினால் யாருக்கு வலிக்கும் என்பதறிந்தே குத்தப்பட்டவர்.
  • சிறையிலிருந்து வரும் செந்தில் பாலாஜியைக் கட்சித் தலைவர் என்ற முறையில் ஸ்டாலின் வரவேற்பதை யாரும் விமர்சிக்க மாட்டார்கள். ஆனால், எதற்காக எமர்ஜென்சி காலத்தில்கூட இவ்வளவு நாள்கள் சிறை வாழ்க்கை கிடையாது என்று ஒப்பிட்டார் என்பது புரியாமல்தான் பலரும் திகைத்திருக்கின்றனர், எமர்ஜென்சியில் திமுகவினர் சிறை சென்றதும் இப்போது செந்தில் பாலாஜி சிறை சென்று வருவதும் ஒன்றா? என வியந்து!

நன்றி: அருஞ்சொல் (29 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்