TNPSC Thervupettagam

சொல்லே மருந்தாகும்..!

October 5 , 2024 100 days 124 0

சொல்லே மருந்தாகும்..!

  • மொழியின் ஆதி, ஒலி; ஒலியின் (வரி) வடிவம், எழுத்து; எழுத்தின் கூட்டு, சொல். எழுத்தின் கூட்டு, சொல் என்றாலும் எப்படி வேண்டுமானாலும் – தாறுமாறாகக் - கூட்டான எழுத்துகள் சொல்லாகா என்பதறிவோம். எழுத்துகள் இணைந்து பொருள் சுட்டினால்தான்  ‘சொல்' எனும் தகுதியைச் சூடிக்கொள்ள முடியும். தமிழில் ஓரெழுத்தும் சொல்லாகிப் பொருள் குறிக்கும் வளமுள்ளதால், ‘ஓரெழுத்து தனித்து நின்றோ, ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகளோடு புணர்ந்தோ 'பொருள்' அறிவுறுக்குமாயின் அது 'சொல்' எனப்படும்’ என்று எளிதாகச் சொல்லிச் செல்கிறோம். தமிழில் ‘சொல்’ என்பது பெயரும் ஆகும்; வினையும் ஆகும். பல பொருள் காட்டும் ஒரு சொல் பல உண்டு. ஒரு பொருள் தரும் பல சொல்லும் உண்டு. இத்தகு நிலைகளில், சொல்லப்படும் சொல்லின் பொருளைக் கேட்போர் தக்கவாறு அறிவதில்தான் மாந்தர் வாழ்வில், வரலாற்றில் நலந்தரு நிகழ்வுகளும் அஃதில்லா எதிர்வினைகளும் (‘ஆக்கமும் கேடும்’ – குறள் 642) விளைந்து விடுகின்றன என்பது தொன்றுதொட்டு உணரப்பட்டுள்ளது.
  • ‘சொல்’லின் ஆற்றலைச் சொல்லாற் சொல்ல இயலாது முழுதாக, எளிதாக, அளப்பரிய ஆற்றலுடைய ‘சொல்’ குறித்துப் பழங் கருத்துகள் பல இருப்பினும், அண்மைக் காலத்தில் சொல்லின் முதன்மை குறித்து யாழ்ப்பாணம், சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர் அவர்கள் கூறி வைத்திருக்கும் கருத்து நம் நினைவிலிருத்திக் கொள்ள வேண்டியதாகிறது.
  • ‘‘சொல்லெனப்படுஞ் சோதி தோன்றாதாயின்
  • எல்லை நீர் ஞாலத்தில் எப்பொருள்தான் புலப்படும்?’’
  • என்று கேட்டு நிற்கும் அவரது வினாவிற்கு விளக்கமாக அவரது கூற்றையே காட்டலாம். சொல்லால் நமக்கு விளக்கப்படாவிட்டால், ‘நாம் ஆதி பகவனையோ, ஆகமங்களையோ அறியப் போவதில்லை; அறம், பொருள் முதலியவற்றை அறிவதற்கும் வாய்ப்பு இல்லாது போகும்; அவற்றை வலியுறுத்தும் பழஞ்சரிதங்களை அறியவும் இயலாது. தங்கருத்தைப் பிறர் அறியச் செய்ய இயலாது; பிறர் கருத்தைத் தாம் அறியவும் முடியாது. அறியாமையே யாண்டும் தலைப்படும்; உலகம் தலை தடுமாறும். ஆதலால், உலகை வழங்கிவரச் செய்வது சொல்லெனப்படுஞ் சோதியென்றே சொல்லுக'' என்றார் அவர். ‘நீரின்றி அமையாது உலகு’ (குறள் 20) என்பது எத்துணை அறிவார்ந்த உண்மையோ, அதுபோலவே சொற்களின்றி உலகியக்கமே இல்லை என்பதும் உறுதி; உண்மை.
  • முதன் நூலாக நமக்குக் கிடைத்திருக்கும் ‘ஒல்காப் புகழ்’ தொல்காப்பியம்,‌ “எல்லாச்‌ சொல்லும்‌ பொருள்‌ குறித்தனவே” (சொல். நூற்பா 157) என்கிறது. இதனுட்பொதிவைப் பற்றிக்கொண்டு நாமுணர்ந்து வினையாற்றத் தக்கது என்னவென்றால்‌, நமது ஒவ்வொரு சொல்லும்‌, சொல்லக் கருதிய பொருளைக்‌ கேட்போருக்குச் சரியாகக் கடத்திப் புரியச்செய்து, கேட்போரிடம்‌ நாம் விழையும் சரியான விளைவை ஏற்படுத்தும் ‘திறனறிந்து சொல்லுக சொல்லை' (குறள் 644) என்பதாகும். ஆகவேதான் ஒவ்வொருவருக்கும் சொல் தேர்வு, சொற் காப்பு, கவனம் முதலியன உள்ளுறையும் ‘சொல் வன்மை’ மிக மிக அவசியம் என்று மரபாகவும் முன்னோர் நூல்களின் வாயிலாகவும் நமக்கு வலியுறுத்தப்பட்டுள்ளன.
  • ‘இன்சொல் இனிது’ எனக்காட்டி அவ்வகைச் சொல் ஆளுமையே அனைவருக்கும் அவசியமென வலியுறுத்தும் திருவள்ளுவர், இனியவை கூறல் எனப் பத்துக் குறள் பதித்தொரு அதிகாரம் அமைத்திருப்பதோடு, குறள் பரப்பின் பிற இடங்களில், மிக வலுவான எச்சரிக்கைகளும் ( ‘நா காக்க’ - குறள் 127; ‘ஆறாதே, நாவினால் சுட்ட வடு’ - குறள் 129), கட்டளைகளும் (‘சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல்.’- குறள் 200); ’...பிறிதோர் சொல் அச்சொல்லை வெல்லும் சொல் இன்மை அறிந்து' சொல்லுக- குறள் 645) பிறப்பித்துள்ளார். மேலும், அமைச்சியல் அதிகாரத்தில் ‘சொல்வன்மைக்கு உள்ள சிறப்பு வேறு எதற்குமில்லை. எனவே அது செல்வங்களில் எல்லாம் சிறந்த செல்வமாகும்’ (குறள் 641-க்குக் கலைஞர் உரை) என்பதை வலியுறுத்தி, ‘நாநலம்’ அதன் ஆற்றல், பயன் எனக் குறளாசான் பலவாறு விரித்து நமக்கு வழங்கியுள்ளார். சொற்களை அளந்து ‘குறுகத் தறித்த’ திருக்குறளிலேயே மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது ‘சொல்’ எனும் சொல் (82 இடங்கள்) என்ற செய்தியானது, ‘உலகியகத்தின் அச்சாணி’யான சொல்லின் முதன்மைக்கு ஆதியிலேயே வள்ளுவர் வழங்கியிருக்கும் சான்றெனக் கொள்ள உரித்தாகும்.
  • குறள் வழியில், ‘’இன்சொலால் அன்றி இருநீர் வியன் உலகம் / வன் சொலால் என்றும் மகிழாதே’’ (நன்னெறி ) என்றுரைக்கும் சிவப்பிரகாசர் வழிகாட்டுதலும், யாரிடத்தும் நயமாகவும், சோர்வும் பிழையும் இல்லாமல் தெளிவாகவும் சொல் வழங்கப்பட வேண்டும் - ‘ஞயம்பட உரை’, ’சொற்சோர்வு படேல்’, ‘பிழைபடச் சொல்லேல்’, ’மொழிவதற மொழி’ (ஆத்திசூடி) - என்றெல்லாம் ஔவைப்பிராட்டியின் அறிவுறுத்தலும் நாம் மறக்கக் கூடாதவையன்றோ? யாவருமறிந்திருக்கும் வழக்காற்றில், ‘ஒருசொல் வெல்லும், ஒருசொல் கொல்லும்’ என்ற எளிதான வாசகத்தைவிடச் சொல்லின் பேராற்றலை வேறெது கூடுதலாக விளக்கிவிட முடியும்? பன்முகப் பரிமாணமும் பயனும் நிறை பொதியாகக் கொண்டிருக்கும் ‘சொல்’, பண்பட்ட வாழ்நிலையில் மருந்தாகவும் பயனாகும் என்றால் இரு விழிப் புருவங்கள் ஏறுகின்றனவா வியப்பில்?
  • ‘மருந்து என்றாலென்ன? அது எப்படி இருக்க வேண்டும்? என்று நம் முன்னோர்கள் நன்கு அறிந்து வைத்திருந்தனர். ‘நோயாளியின் பெருந்துன்பத்தையும், கடும் வேதனையையும் தீர்ப்பது மருந்து’ - “அருந்துயர் அவலம் தீர்க்கும் மருந்து” – என்கிற நற்றிணைப் பாடலையும் (140), அதே கருத்தினை, “அருந்துயர் ஆரஞர் தீர்க்கும் மருந்து”, எனக் கலித்தொகை (கலி.குறி.20-21) கூறியிருப்பதையும் எடுத்துக்காட்டுகளாக முன்வைக்கலாம். மருந்தானது, ‘நோய்த்துயரையும் வேதனையையும் மட்டுமல்ல, மேலொருபடிசென்று, ‘உயிரையே காப்பது’ என்பதையும் நம்மவர்கள் உணர்ந்திருந்ததை “இன்னுயிர் செய்யும் மருந்து” (கலி.பாலை.31:14). என்ற பாடல் வரி உறுதிப்படுத்துகிறது. வந்த நோயினைத் தீர்க்கவும், நோய் வாராமல் தடுக்கவும் உடலை வளர்க்கவும் மருந்து பயன்படுகிறது என்ற பொதுக்கருத்துடன் ஒத்திருக்கிறது திருமூலரின் திருமந்திரக் கூற்று.
  • மறுப்ப துடல்நோய் மருந்தென லாகும்
  • மறுப்ப துளநோய் மருந்தெனச் சாலும்
  • மறுப்ப தினிநோய் வாரா திருக்க
  • மறுப்பது சாவை மருந்தென லாமே
  • திருமந்திரம்
  • அதாவது, மருந்தென்பது ‘உடல், உள்ளத்து நோய்களைப் போக்குவதுடன், நோய்களே வராமல், ஏன்? சாவையும்கூட வர ஒட்டாமல் தடுப்பதாக இருக்க வேண்டும்’ என்கிறார் திருமூலர்.
  • ‘மருந்து’ என்றால், நாம் பெரும்பாலும் ஏதோ ஒரு மூலிகையாகவோ, அதன் சாறு, பொடி போன்றவையாகவோ அல்லது விகிதாச்சாரப்படி கலந்து முறைப்படியான செய்முறைகளை மேற்கொண்டு தயாரிக்கப்பட்ட பல பொருள்களின் கூட்டாகவோதானே இருக்கும் எனக் கருதுவோம். ஆனால், உடலுக்கும் ஆன்மாவிற்கும் இனிய சொற்களே மருந்தாகும் என மொழியும் நீதிமொழிகள் (அதிகாரம்16:24)
  • ‘’இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு இன்பமும், எலும்புகளுக்கு மருந்துமாகும்’’
  • என வாசகம் பதித்து வைத்திருப்பதும் - நபிகள் நாயகத்தின் திருவாய்ச் சொல் ஒன்றே உயிர் வளர்க்கும் அமுதமாகும் என்பதாக உமறுப்புலவர் மொழிந்திருப்பதும் (சீறாப்புராணம்) -
  • ‘ஆர் அமுது அனைய சொல் அரிய வாய் திறந்து
  • ஓர் மொழி நம் நபி உடும்பை கூவலும்..’ (சீ.பு.1622)
  • நீதி வெண்பா, “அன்பறிவு சாந்தம்‌ அருளுடையார்‌ நல்வசனம் இன்பமிகும் சீதளமாமே” (நீ.வெ -94) என்று அறிவுறுத்துவதும் சொல்லே இன்னுயிர் காக்கும் மருந்துமாகும் எனும் கருத்துக்கு இணைந்து வலுவூட்டுகிற வகையிலுள்ளதைக் காண்கிறோம்.
  • தமிழின் பக்தி இலக்கியங்களில், இறைவனது திருநாமமே (பிறவிப்) பிணிக்குப் பெருமருந்து என்ற கருத்து பெரிதும் உரைக்கப்பட்டுள்ளதறிவோம். ‘நாராயணா’ என்னும் சொல்லே (நாமமே) மானிடரின் துயர் யாவும் நீக்கி உயர் நலம் தரும் சொல் என்று ‘’அடியார்படுதுயர் ஆயினவெல்லாம் / நிலம்தரம் செய்யும் நீள்விசும்பருளும் / நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் / நாராயணா என்னும் நாமம்’’ எனப் பரவசம் காட்டுகிறார் வைணவரான திருமங்கையாழ்வார். சைவர்களுக்கு ‘நமசிவாய’ என்பது ஐந்தெழுத்து மந்திரம், மருந்து யாவுமாகிறது. மாணிக்கவாசகர் பாடிய திருவிடைமருதூர் பதிகத்தில், திருவிடைமருதூர் இறைவனை, ‘மருந்தவன்’ என்றே குறிப்பிடுகிறார்.
  • மருந்தவன் வானவர் தானவர்க்கும் / பெருந்தகை பிறவினொடு இறவுமானான் ( பதிகம் 03, பாடல் 1)
  • மேலும், அவரே திருமழபாடி தலத்தின் மீது அருளிய பதிகத்தில் (2.9.4) பெருமானை ‘மழபாடி மேய மருந்து’ என்றும் அழைத்துள்ளதை அறிவோம். இவற்றுடன், ஒளவைப் பிராட்டி, “சிவாய நம என்று சிந்திப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை’’ என அறுதியிட்டு உறுதியளிப்பதும், இறைவன் திருப்பெயராகிய ஒரு சொல்லே ‘ஆதிமந்திரம்’, ‘காக்கும் மருந்து’ என்றுணர்ந்த பக்தி நிலையின் முற்றிய உறுதியைக் காட்டுகின்றன.
  • இவற்றைக் கடந்து, இலக்கியச் சோலையுள்ளே சொல்லே மருந்தாவது குறித்த பாடல்களாக மலர்ந்து மனம் நிறைக்கும் மலர்கள் சிலவற்றையும் கண்டு நுகர்ந்து வரலாம்... வாங்க.
  • தமிழர் வாழ்வின் அகம், புறம் என்ற இரு பெரும் பகுப்புகளில் முதலில் ஒரு புறத்திணைக் காட்சிக்குச் செல்வோம்.
  • தொல்காப்பியர் வகுத்துள்ள பதின்மூன்று துறைகளைக்‌ கொண்ட ‘வஞ்சி’ என்னும்‌ புறத்திணையின்‌ கடைசித்‌ துறையாகிய ‘அழிபடை தட்டோர்‌ தழிஞ்சி” என்னும்‌ துறை சார்ந்தது நாம் காணவுள்ள காட்சி. இத்துறையானது, போர்க்களத்தில் பகைவர் ஏவிய ஆயுதங்களைத் தடுத்து நின்று புறமுதுகிடாது சமர் செய்ததில் விழுப் புண்களேற்று மீண்டுள்ள வீரர்களைப் பாசறைக்கு மன்னன் நேரில் சென்று பார்த்து ஒவ்வொருவரையும் நலம் கேட்டல் என்ற பண்பு நெறியைக் கூறுவதாகும். இத்துறை அமைக்கப்பட்டிருப்பதன் வாயிலாகத் தமிழரின் குறிப்பிட உரிய புற (மற) வாழ்வு மாண்பின் ஒளிர்விடு அம்சம் ஒன்று வெளிப்படுகிறது எனலாம்.
  • ‘மக்கட்கு இறை’யெனப் போற்றப்படும் மன்னன்‌ ‌ தன் படைவீரர்களுக்குத் தேவைப்படும் படைக்கலன்கள், பல்வகையுணவு (பெருஞ்சோறு) முதலிய வசதிகளை வற்றாது அளித்துப் போருக்கு அழைத்துச்‌ சென்றால்‌ மட்டும்‌ போதாது; போர் முடிந்த பின்னர் அவர்களுக்குப் பொன்னும்‌ பொருளும் மண்ணும் உள்ளிட்டவை (தண்ணடை) வழங்குவதும் போதாது. தன்னுயிருங் கருதாமல், களம்புகுமுன் வேந்தர் முழங்கிய வஞ்சினமே தலைக்கொண்டு, வீரஞ்செறியக் களத்தில் போரிட்டு விழுப்புண்பட்டு மீண்டு பாசறைக் குடில்களில் சிகிச்சையில் கிடக்கும் மறவர்களை - நெடுநெல்வாடை காட்டுவது போல – ‘நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான், சிலரொடு திரிதரும் வேந்தன்’- நேரில்‌ சென்று நலம்‌ வினாவித் தானும் அவர்களில்‌ ஒருவன் என்பதைத் தன் இயல்பாக மன்னன் வெளிப்படுத்தும் பண்பு நிலை காட்டுவதாகும் இத்துறை.
  • ‘அழிபடை தட்டோர்‌ தழிஞ்சி” துறையில் காட்டப்படும் பண்பு நிலையானது, பழமொழி 400 பாடலொன்றுடன் (167) ஒப்பிட்டுக் காணத் தகும் கருத்தாகும். அப்பாடலில் கூறப்படும் மையக் கருத்து என்னவென்றால், மற்றெல்லாவற்றையும்விட நோயாளியிடம் கனிவோடு இனிய ஆறுதல் சொல் பகிர வேண்டியது மிக அவசியமாகும் என்பதே.
  • உடுக்கை மருந்துறையுள் உண்டியோ டின்ன
  • கொடுத்துக் குறைதீர்த்தல் ஆற்றி விடுத்தின்சொல்
  • ஈயாமை என்ப எருமை எறிந்தொருவர்
  • காய்க்கு உலோபிக்கு மாறு. (பழமொழி,167 )
  • நோய்ப்பட்ட ஒருவனுக்கு உடுத்த உடை, மருத்துவமனையில் இடம், நோயைப் போக்கச் சிகிச்சை, மருந்து உணவு, மற்ற அனைத்து வசதிகளையும் அளித்தாலும், ஆறுதல் தரும் இனிய சொற்களை அவனிடம் பேசாவிட்டால், எதிர்பார்க்கும் நல்விளைவு ஏற்படாதென்பதை (சமையலுக்கான பெருங்காயம் வாங்க நன்கு பயன்தரும் எருமையைக் கொன்று அதன் இறைச்சியை விற்றது போல மூடத்தனம்’ என்ற) அரியதொரு உவமையொடு, மேற்கண்ட பாடல் அறிவுறுத்துகிறது.
  • புறத்திரட்டு வாயிலாக நாம் காணப்போகும் காட்சிக்கு அறிமுகமே இவ்வளவும்.
  • போர்‌ முடிந்து விழுப்புண்களாற்ற வீரர்கள்‌ தத்தம்‌ பாசறைக்‌ குடில்களில்‌ கிடக்கிறார்கள். அவர்களோடு முன் நின்று களமாடிய மன்னன், காலம் கருதாது, பாசறை சென்று தம் ‌ வீரர்கள் ஒவ்வொருவரையும்‌ நேரில் கண்டு இனியன சொல்லி ஆற்றுவிக்க விழைகிறான். கொடியுடை மன்னனே தம்மைக் காண வந்து அன்பான ஆறுதல் சொல்லும் வழங்கினால் - காயம்பட்டுக் கிடக்கும் வீரர்களது புண்களையும், அப்புண்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் உடல், மன வருத்தத்தையும் ஒருசேர ஆற்றும் மருந்தாகும் அச்சொற்கள் என்கிறது பாடல்.
  • ‘‘தழிச்சிய வாட்புண்ணோர் தம்மில்லந் தோறும்
  • பழிச்சியசீர்ப் பாசறை வேந்தன் - விழுச்சிறப்பிற்
  • சொல்லிய சொல்லே மருந்தாகத் தூர்ந்தன
  • புல்லணலார் வெய்துயிர்க்கும் புண்.’’
  • (பெரும்பொருள் விளக்கம். புறத்திரட்டு.1273.பாசறை 6)
  • இப்பாடலில் “விழுச்சிறப்பில்‌ சொல்லிய சொல்லே மருந்து” என்று வரும்‌ தொடர் குறிப்பிட உரியதாகும். பாசறைக் குடில்களில் புண்‌பட்டுக் கிடக்கும் வீரர்கள் சாதாரண நோய்வாய்ப்பட்ட வீரர்களல்லர். தம் மன்னனுக்காக - செறுமுகம் ஏகும்போது மன்னன் கூறிய வஞ்சினத்தை நிறைவேற்ற – களமாடி விழுப்புண்‌பட்ட வீர மறவர்கள். அவர்களை நேரில் கண்டு ஆறுதல் சொல்ல மன்னன் வருகை தருவதே அவர்கள் மனதில் மகிழ்வூறச் செய்யுந்தான். இருப்பினும் அச்சமயத்தில், மன்னன் தன் வீரர்களைப் பார்த்துப் பொதுவான ஆறுதலாகச்‌ சொல்லும்‌ சாதாரணச் சொற்கள் சுகந்தரா. தன் வீரர்களின் ஆற்றல்‌ சான்ற போர்க்களத்து வீர தீர நிகழ்ச்சிகளை – பிறிதோரிடத்திலே (புறநானூறு) புலவர் ஓரம்போகியார் பாடியிருப்பது போல -
  • அருஞ்சமம்‌ தாங்கி, முன்னின்று எறிந்த
  • ஒருகை இரும்பிணத்து எயிறு மிறையாகத்‌
  • திரிந்த வாய்வாள்‌ திருத்தாத்
  • தனக்குஇரிந்‌ தானைப்‌ பெயர்புறம்‌ நகு... (புறம் 284.)
  • நின்ற காட்சிகளை - விழுப்புண்களேற்றுக் கிடக்கும் தன் வீரர்களது செறுகளச் சிறப்புகளை- மன்னன் தன் வாயால் மீண்டும் வியந்து எடுத்தியம்பிப் பாராட்டும்‌ சொற்களாக - “விழுச்சிறப்பில்‌ சொல்லிய சொல்‌” – ஆக வெளிப்படும் போது, அச்சொற்களே வீரர்களின் விழுப்புண்களுக்கும் அப்புண்களாலேற்பட்ட உடல் வலிக்கும், மனச் சோர்வுக்கும் ஒருசேர மருந்தாகுமாம். (சொல்லே மருந்தாக - தூர்ந்தன புல்லணலார் வெய்துயிர்க்கும் புண்) எவ்வளவு கூர்ந்த உளவியல் நுட்பம் வெளிப்படுகிறது இங்கே? மன்னர்களுக்கு வலியுறுத்தப்படுகின்ற பண்பு நலன் சிலிர்க்க வைக்கிறதல்லவா நம்மை?
  • இப்புறத்திணைக் காட்சிக்குப் பின் அகத்திணைக்குள் மெல்லச் செல்வோம். வாங்க... அங்கும் சொல் மருந்தாகி நிற்கும் காட்சிகள் பல விரிகின்றன.
  • ஒரு சொல்லால் உயிரே போய்விடும் என்றால் நம்ப முடிகிறதா?
  • மற்றொரு சொல்தான் உயிர்காக்கும் மருந்தாகும் என்றால் வியப்பாகிறதா?, இல்லையா?
  • பொருள்வயின் பிரிய விழைகிறான் தலைவன் ஒருவன். எல்லோரிடமும் சொல்லியாயிற்று. தயங்கித் தயங்கித் தலைவியிடம் வந்து நின்று தடுமாற்றமுடன் தன் எண்ணத்தை எடுத்துக் கூற முற்படுகிறான். ஆரம்பத்திலேயே சமாதான அடித்தளத்தை வலுவாக அமைத்து முயற்சிக்கலாம் எனக்கருதி, ‘வினை முடித்த நொடியே வில்லிலிருந்து புறப்பட்ட அம்பென நேராக உன்னிடம் விரைந்து வந்து சேர்ந்து விடுவேன்,’ என்ற அவனது ‘உறுதிமொழியாக - ‘வல்வரவு’- முன் வருகிறது. ஆனால், ஒற்றைச்சொல் வேண்டி, அவள் நிற்கும் உறுதிமிக்க நிலைப்பாட்டின் முன் உதிர்ந்து வீழ்கிறது அவனது ‘வல்வரவு’ வாக்குறுதி. ஒரு சொல்தான் கேட்கிறாள் அவள், அவனிடமிருந்து - ‘செல்லாமை’ எனுஞ்சொல். அச்சொல்லன்றி - ‘வல்வரவு’ என்பது உள்ளிட்ட - வேறு எச்சொல்லும் அவளுயிரைத் தக்கவைக்கவோ, தாங்கி நிறுத்தவோ வல்லதல்ல.
  • ‘செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
  •      வல்வரவு வாழ்வார்க் குரை’ (குறள் -1151).
  • என்று இறுகி, ஆனால் இற்று விழப் போகிறவளாய் நிற்பவளைக் காட்டுகிறது குறள். ‘செல்லேன்’ என அவன் சொல்லானாகில், இல்லை இவளுயிர் இக்கணமே என்பதுதான் ஆங்கே நிதர்சனம். அவளுயிர் காக்கும் ஒற்றைச்சொல் மருந்து ‘செல்லேன்’ என்ற அவன் சொல்லே.
  • பிரிவாற்றாமையின் பெருவருத்தம் விளைவித்திருக்கும் இத்தகையதொரு உயிர்கழியும் நிலையைத்தான் நற்றிணைப் பாடலின் (19) ஈற்றடிகளும் நம் கண்முன் விரித்து வைக்கின்றன. இங்கும், தான் ‘பொருள்வயின் பிரிதல் மிகக் சிறிது காலமே; வெகு சில நாட்களுக்குள்ளே விரைந்து மீள்வேன்’ என உறுதி கூற முற்படும் தலைவனது சமாதானக் கொடியைச் சட்டென்று இறக்கிச் சுருட்டுகிறது தோழியின் அபாய அறிவிப்பு. ‘’தலைவா, செல்வதற்கு முன் ஒரு உண்மையை உணர்ந்துகொள், நீ எவ்வளவு விரைவாக வினை முடித்து மீள இங்கே வந்தாலும் எந்தப் பயனுமிருக்காது, தெரிந்துகொள். இவளிருக்கமாட்டாளே தன் உயிர்தாங்கி’ என்ற பாங்கில், தோழி உரைத்த அபாய எச்சரிக்கை இதோ.
  • "வருவை யாகிய சின்னாள் வாழாளாதல் நன்கறிந்தனை சென்மே" (நற். 19)
  • இதைப்போன்றே ஒரு அபாய எச்சரிக்கை அகநானூற்றுத் தோழி ஒருவளாலும் “நாள் இடைப் படின் என்தோழி வாழாள்’ (அக. 112.9-13) என்று ‘வான்தோய் வெற்ப’த் தலைவனுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த எச்சரிக்கைகளுக்குப் பின்னரும் தத்தம் தலைவியரைப் பிரிந்து செல்லத் துணிந்திருப்பார்களா அவர்கள்?
  • நாமிங்கு கண்ட நற்றிணைத் தலைவனைப் போலவே, தலைவி மேல் மாறாப் பற்றும் காயாக் காதலுங் கொண்டிருக்கும் கலித்தொகைத் தலைவனொருவனது பொருள்வயின் பிரிந்து செலக் கருதிய எண்ணம் - தலைவியின் தோழி புகட்டிய மருந்தால்- மருந்துச் சொல்லால் - நெம்பிப் பெயர்த்தெறியப்பட்டுப் பிரியாது தலைவியொடு இணைந்து தொடர்வதையே அவன் தேர்ந்தான் என்ற செய்தி நுட்பமானது.
  • ‘’பொருந்தி யான்‌ தான்‌ வேட்ட பொருள்வயின்‌ நினைந்த சொல்‌,
  • திருந்திய யாக்கையுள்‌ மருத்துவன்‌ ஊட்டிய
  • மருந்து போல்‌, மருந்து ஆகி, மனன்‌ உவப்ப –
  • பெரும்‌ பெயர்‌ மீளி - பெயர்ந்தனன்‌ செலவே.
  • - (கலி.பாலை.16:17-20)
  • என்று துள்ளி வருகிறது தோழியின் மகிழ்ச்சி அறிவிப்பு. தலைவனின் மனத்தை அப்படி அடியோடு மாற்றும் மருந்தென்ன புகட்டினாள் இத்தோழி?
  • ‘’தலைவனே, கேள். நிலவு தேய்ந்தால்‌ மீண்டும்‌ வளரும். ஆனால், உனைப் பிரிவதால் இவள்‌ அழகு வாடும்;‌ மீளாது இளமை நலம்‌. உன் காதலால், பேரன்பால் இவளை மலரச்‌ செய்த நீயே இவளை வதங்கி வாடச்செய் கூற்றாகலாமோ? உன்னோடு கூடிப்பெற்ற உறவே, அதன் மகிழ்வே உன் பிரிவால் அவளுக்கு அழிவைத்‌ தருவதாகலாமா?” என்று தலைக்குள் நுழையும் மருந்து புகட்டியிருக்கிறாள் இத்தோழி!
  • தலைவன் மனமோ தலைவியின்பால் ஈர்ப்பு நிறைந்து தளும்பும் பேரன்புத் திருத்தலம்.‌ எனவே – நன்கு பேணப்பட்டதொரு உடம்பில் மருந்து விரைந்து வேலை செய்வது போல் - தோழியின் சொல் மருந்து தலைவனின் நேய மனத்தில் விரைந்து நன்கு வேலை செய்தது. பொருள் தேடப் பிரிந்து செல்ல முளைத்த அவனது எண்ணத்தை அடியோடு அம்மருந்து அறுத்துப் பெயர்த்தது, இருவரும் – மருந்து கொடுத்தவரும், மருந்து கொண்டவரும் - மகிழுமாறே. இதனால் தலைவிக்கு நேரும் பெருமகிழ்வு சொல்மருந்தின் கூடுதல் பலனாகும்.
  • மெல்ல வாங்க, குறுந்தொகையில் இன்னொரு காட்சிக்கு. இளமகள் ஒருவள் தன் தலைவனைக் காணாத பகல் நேரம் நீள்கிறது. நேரம் நீள, நீள, அழகிய இளையோளின் நெற்றியில் பற்றிப் படர்கிறது பசலை நோய். ‘வருவேன்’, ‘வரைவேன்’ (‘மணப்பேன்’) எனும் ஒரு சொல்லுக்காகப் பெரிதுழக்கும் பாவை அவள். அப் பாவையின் பசலையும் வருத்தமும் அவளது தோழியரையும், புலவரையும் சேர்த்தே வாட்டுகிறது. அவளுக்கு ஏற்பட்டிருக்கும் ‘நன்னுதல் பசலை நீங்க வன்ன’, அவள் விரும்பும் - ‘வரைவேன்’ எனும் ஒற்றை மருந்துச் சொல் - நசையாகு பண்பின் ஒருசொல் - உரைக்க மாட்டானோ அவளுக்கிந்த பசலை நோய் பரவக் காரணமான அந்தத் தலைவன்? என வாடும் பெண்ணோடு தானுங் கசிகிறார், பாடும் பெண்பாற் புலவர் பூங்கணுத்திரையார்.
  • ‘’.... ..... பெரி துழக்கும்
  • நன்னுதல் பசலை நீங்க வன்ன
  • நசையாகு பண்பின் ஒருசொல்
  • இசையாது கொல்லோ காதலர் தமக்கே.’’
  • -  (குறுந். பாலை. 48. 4-7)
  • ‘நன்னுதல் பசலை நீங்க வன்ன/ நசையாகு பண்பின் ஒரு சொல் இசையாது கொல்லோ காதலர் தமக்கே’ என மருகும் பூங்கணுத்திரையாரின் ஆதங்கத்தில், ‘‘நோய்க்குக் காரணமானவரே நோய்க்கு மருந்தாக வேண்டுமென நிற்கும்" குறள் (1091, 1102) கருத்தும், கலித்தொகைக் (145) கருத்தும் கலந்திணைந்து எதிரொலிக்கக் கேட்கிறோம் அல்லவா?
  • அதென்ன? குறள் (1091, 1102 ) கருத்தும், கலித்தொகை (145) கருத்தும் கூறாமல் செல்கிறீர்களே? எனக் கேட்பது கேட்கிறது.
  • இதோ அக்காட்சிகள் - செழித்து நிலைத்திருக்கும் தமிழ் இலக்கியச் சோலையின் பிற பகுதிகளில் பூத்திருக்கும் நய வியப்புகள்.
  • முதலில் குறள் காட்சி காண்போம். அவள் ஒருமுறை பார்த்தாள் அவனை. அது ‘அம்புப் பார்வை’யாம். அது நேர்சென்று தைத்ததாம் அவன் நெஞ்சில். (‘நோக்கு வர்மம்’ கற்றவளோ அவள்?) விளைவு? தலைவனுக்குப் பற்றிப் பரவியது காதல் நோய். சரி, நோய்க்கு மருந்து என்ன? அவளது மற்றொரு (அன்பு) நோக்கேதான் மருந்தாகுமாம்! இது வள்ளுவர் அளிக்கும் மருந்துப் பரிந்துரைச்சீட்டு (prescription).
  • இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய் நோக்கொன் றந்நோய் மருந்து.   (குறள் - 1091)
  • ‘முள்ளை முள்ளால் எடுப்பது போல’ அல்லவா இருக்கு இந்த மருத்துவம்?
  • நோய்களைத் தீர்க்கும் மருந்துகள் பல இருந்தாலும், காதல் நோயைத் தீர்க்கும் மருந்து அந்தக் காதல் நோய் தந்த காதலியே ஆவாள்  என்ற முந்தைய கருத்தினை மற்றொரு குறளும் தெளிவுபடுத்துகிறது.
  • ‘’பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
  •               தன்நோய்க்குத் தானே மருந்து’’ - குறள் (1102).
  • இது போலவே, அடுத்த காட்சியாகக் கலித்தொகையில் நெய்தல் கலி பாடிய நல்லந்துவனார் பாடலொன்றாலும் (145) இவ்வகை (காதல்) நோய்க்கு மருந்து, நோய் செய்தவரேயன்றி வேறெவரும் (மருந்து) வழங்கிக் காத்தலரிது எனும் கருத்து நமக்கு அறியக் கிடைக்கிறது.
  • துணையைப் பிரிந்து ‘துயர் செய் கள்வன்’ அவன்; அல்லும் பகலும் அவள் படும் ‘அல்லல் அறியான் (‘உறீஇயான்’) அவன். அக்கள்ளத் தலைவனை நினைந்து கலங்குகிறாள் தலைவி. ‘வானும், நிலனும், திசையும், துழாவும்’ தலைவியின் பட்டறிந்த ‘ஆனாப் படர் மிக்க நெஞ்சு’ ஆணியடித்தாற் போலுறுதியாக உரக்கச் சொல்கிறது, அவனைத் தவிர வேறு மருந்தில்லை என்பதை.
  • …… ..... அருளான் துறந்த
  • அக்காதலன் செய்த கலக்குறு நோய்க்கு ஏதிலார்
  • எல்லாரும் தேற்றர், மருந்து  . (கலி.145, 48-50)
  • என்று கலங்கி நின்று உருகுகிறாள்.
  • கலித்தொகையிலேயே விரிந்திருக்கும் மற்றொரு காட்சியையும் நாம் காணாமல் அகல இயலாது. தலைவனது ‘நெஞ்சில், நினைப்பில் நீக்கமற நிறைந்துள்ளாள் ஒருத்தி (தலைவி). அவள் நினைப்பே அவனுயிரை நலியச் செய்து வருகிறது. அவளின் திருமுகம் ஒருமுறை(யாவது) காண்பதன்றி இனி ‘என்னுயிர்க்கு எம்மருந்தும் இல்லை’ என மருகி நிற்கும் கையறு நிலைத் தலைவன் ஒருவனைக் காண்கிறோம். ‘உன்முகமே மருந்து; அதனை உள்ளருந்தவோ உதடருந்தவோகூட வேண்டியதில்லை; ஒருமுறை என் கண்ணருந்தினாலே போதுமென்பதாக’-
  • ஆர் அஞர் எவ்வம் உயிர் வாங்கும்
  • மற்று இ நோய் தீரும் மருந்து அருளாய் ஒண்_தொடீ
  • நின் முகம் காணும் மருந்தினேன் என்னுமால்
  • நின் முகம் தான் பெறின் அல்லது கொன்னே
  • மருந்து பிறிது யாதும் இல்லேல் -(முல்லைக்கலி 60)
  • என்று (மருந்தாகும்) அவள் முகங் காணத் துடிக்கிறான். இத் தலைவனுக்குத் தன் நேசத் தலைவியின் திருமுகங்காணும் அந்த ஒருகணத்தில்தான் ‘உயிர்காக்கும் மருந்து’ உட்செல்லும் போல. அவன் விழையும் ‘சாவாமருந்து’ விரைவில் கிட்டி அவனுயிர் தங்கட்டும் என நாமுங் கனிகிறோம்.
  • மூலிகை மருந்து, கூட்டு மருந்து போன்ற வகைகள் மட்டுமில்லாது, ‘முகமே மருந்து’, ‘நோக்கே மருந்து’ என்ற அரிய வகை உணர்வுப் பூர்வ மருந்துகளுடன் கூடுதலாகப் - பண்பட்ட தமது அக வாழ்க்கையிலும், (பக்தி வாழ்விலும்) புற வாழ்விலும் - ‘ஒரு சொல்’ கூட மருந்தாகும் மந்திரத்தை – சூட்சுமத்தை - நம்முன்னோர்கள் அறிந்து, தோய்ந்து, துய்த்து வாழ்ந்து வந்திருக்கின்றனர் என்பதற்கான எண்ணறு இலக்கியச் சான்றுகளில் சிலவே (அளவு கருதி) இக்கட்டுரையில் எடுத்தளிக்கப்பட்டுள்ளன.
  • நவில்தொறும் நூல் நயம்போல் இனிமைதரும் நமது பண்பாட்டில், ‘சொல்லே மருந்தாகும்’ செழுமைக் காட்சிகள் இன்னும் பல இலக்கியச் சோலைகளுள்ளே இனிதுலாவிக் காணலாம் யாவரும். ஆதலால் பயணிப்பீர் ஆங்கு.

நன்றி: தினமணி (05 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்