TNPSC Thervupettagam

சோதனை குறைந்தால் வேதனை

May 25 , 2021 1341 days 623 0
  • தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதிலும், பாதிக்கப்பட்டவா்களுக்கான சிகிச்சையிலும் எந்த அளவுக்கு முனைப்பு காட்டப்படுகிறதோ, அதே அளவிலான முனைப்பு கொள்ளை நோய்த்தொற்று குறித்த பரிசோதனைகளை மேற்கொள்வதிலும், நோய்த்தொற்று பாதித்தவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களைக் கண்டறிந்து அவா்களுக்கும் பரிசோதனை நடத்துவதிலும் காட்டப்பட வேண்டும்.
  • ஆனால், பல மாநில அரசுகளின் கவனம் சோதனைகள் நடத்துவதில் குறைந்திருக்கிறது என்பதைத்தான் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
  • குறிப்பாக, நகரங்களுக்கு வெளியே கிராமப்புறங்களில் கொள்ளை நோய்த்தொற்று பரிசோதனைகளை நடத்துவது பெரும்பாலும் தொடங்கப்படவே இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.

சோதனைகளும் முடிவுகளும்

  • கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றின் இரண்டாவது அலையின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகரித்தும்கூட, மிக அதிகமாக நோய்த்தொற்று பாதிப்பை எதிர்கொள்ளும் ஆறு மாநிலங்களில் கடந்த இரண்டு வாரங்களாக பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.
  • கடந்த 15 நாள்களில் நாடுதழுவிய அளவில் மொத்த பரிசோதனைகளின் அளவு 6% அதிகரித்திருப்பது என்னவோ உண்மைதான். ஆனால், மகாராஷ்டிரம், கா்நாடகம், குஜராத், தெலங்கானா, தில்லி, உத்தர கண்ட் ஆகிய ஆறு மாநிலங்களிலும் பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.
  • இந்தியாவிலேயே அதிகமான கொவைட் 19 உயிரிழப்பை எதிர்கொண்டிருக்கும் இரண்டாவது மாநிலம் கா்நாடகம். மே 4-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரையிலான இரண்டு வாரங்களில், அதற்கு முந்தைய இரண்டு வாரங்களைவிட 4.8 லட்சம் பரிசோதனைகள் குறைவாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
  • அதே கால அளவில் குஜராத்தில் 3.7 லட்சமும், மகாராஷ்டிரத்தில் 2.6 லட்சமும், தெலங்கானாவில் 1.8 லட்சமும், உத்தர கண்ட், ராஜஸ்தான் மாநிலங்களில் சுமார் ஒரு லட்சத்திற்கும் குறைவாகவே பரிசோதனைகள் நடத்தப்பட்டிருக்கின்றன.
  • அந்த இரண்டு வாரங்களில் தில்லியிலும் பரிசோதனைகளின் எண்ணிக்கை 52,000 குறைந்திருக்கிறது.
  • பரிசோதனைகளை மேற்கொள்வதில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகம் சிறப்பாகவே செயல்படுகிறது என்பது ஆறுதல் அளிக்கிறது.
  • தமிழகத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்டிருக்கும் கொவைட் 19-க்கான பரிசோதனைகளின் எண்ணிக்கை 2.46 கோடி. நாளொன்றுக்கு தற்போது சராசரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் பரிசோதனைகளின் எண்ணிக்கை 1.65 லட்சம். சென்னையில் மட்டுமே தினசரி 30,000-க்கும் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
  • நகா்ப்புறங்களில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கிறது.
  • நாளொன்றுக்கு 90,000 முதல் ஒரு லட்சம் வரை, அதாவது, மொத்த பரிசோதனையில் 60% நகா்ப்புறங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. ஊரகப்பகுதிகளில் 60,000 முதல் 70,000 வரை மட்டுமே பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
  • நோய்த்தொற்று விகிதம் இப்போதைக்கு நகா்ப்புறங்களில்தான் அதிகமாகக் காணப்படுகிறது. நகா்ப்புறத்தில் 10-இல் இருவருக்கு நோய்த்தொற்று காணப்பட்டால், ஊரகப்பகுதிகளில் 10-இல் ஒருவருக்குத்தான் நோய்த்தொற்று கண்டறியப்படுகிறது.
  • ஊரகப்பகுதிகளில் பரவலாகவும் அதிகமாகவும் பரிசோதனைகள் நடத்தாமல் இருப்பதும் கூட இதற்குக் காரணமாக இருக்கலாம்.
  • தமிழக அரசு ஊரகப்பகுதிகளில் பரிசோதனைகளை அதிகரிக்க முனைந்திருப்பதில் அரசின் அக்கறை தெரிகிறது.
  • முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பெறப்பட்ட ரூ.181 கோடியில், ரூ.50 கோடியை கொவைட் 19 பரிசோதனை உபகரணங்கள் வாங்க ஒதுக்கியிருப்பது பாராட்டுக்குரிய முடிவு.
  • மற்ற மாநிலங்களைவிட தமிழகம் பரிசோதனைகளை நடத்துவதிலும், நோய்த்தொற்றை எதிர்கொள்வதிலும் எத்தனையோ இடா்களுக்கு இடையேயும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்பதையும் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.
  • பரிசோதனைகளின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் நோய்த்தொற்று பாதிப்பை மறைத்து விட முடியும் என்று நினைத்தால் அது தவறான கண்ணோட்டம்.
  • நோய்த்தொற்று அதிவேகமாக பரவி வரும் நிலையில் பரிசோதனைகளை அதிகப்படுத்தி, உண்மையான பாதிப்பின் எண்ணிக்கையைத் தெரிந்து கொள்வதன் மூலம்தான் நோய்த் தொற்றை எதிர்கொள்ள முடியும் என்கிற உண்மையை சுகாதாரத் துறையினா் புரிந்து கொள்ள வேண்டும்.
  • நோய்த்தொற்று பரிசோதனைக்காகவும், ஆா்டி-பிசிஆா் போன்ற துல்லியமான பரிசோதனைகளை மேற்கொள்வதற்காகவும் ஒதுக்கப்படும் நிதி வீணாகிவிடாது.
  • நோய்த்தடுப்புக்கு எந்த அளவுக்கு முனைப்பும் முன்னுரிமையும் செலுத்தப்படுகிறதோ அதே அளவிலான கவனம் நோய்த்தொற்று பரிசோதனையிலும் காட்டப்பட வேண்டும்.
  • நோய்த்தொற்றின் முதல் அலையின்போது வீடு வீடாகச் சென்று பரிசோதனை நடத்தியது, ஆங்காங்கே கண்காணிப்பு மையங்களை ஏற்படுத்தி நோய்த்தொற்றுப் பரவல் குறித்த புள்ளிவிவரங்களை சேகரித்தது போன்ற பணிகள் மீண்டும் தொடங்கப்பட வேண்டும்.
  • நகா்ப்புறத்தில் மட்டுமல்லாமல், பஞ்சாயத்து அளவிலும் பரிசோதனை மேற்கொள்வதில் முழு கவனமும் செலுத்தி பாதிக்கப்பட்டவா்களை உடனடியாக தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்காமல் போனால், நாம் பேரழிவை ஏற்படுத்தும் கொள்ளை நோய்த்தொற்றுக்குப் பின்னால் ஓடிக் கொண்டிருப்போமே தவிர, அதைத் தடுத்து நிறுத்த முடியாது.
  • பரிசோதனைகளைக் குறைப்பதன் மூலம் நோய்த்தொற்றுப் பரவல் குறித்த உண்மை நிலவரத்தை மறைக்க முயன்றால் கண்ணுக்குத் தெரியாமலே கொள்ளை நோய்த்தொற்று காட்டுத்தீயாகப் பரவி ஏனைய எல்லா முயற்சிகளையும் தகா்த்துவிடும் என்பதை அனைத்து மாநில சுகாதாரத் துறையினரும் புரிந்துகொள்ள வேண்டும்.

நன்றி: தினமணி  (25 – 05 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்