TNPSC Thervupettagam

சோ.தர்மன்: கண்மாயின் ஈரம் கொண்ட எழுத்துக்காரர்!

December 20 , 2019 1850 days 942 0
  • தூத்துக்குடி மாவட்டம் உருளைக்குடி கிராமத்தில் 1952-ல் சோலையப்பன், பொன்னுத்தாய் தம்பதியருக்குப் பிறந்தவர் சோ.தர்மன். தர்மராஜ் என்பது இயற்பெயர்.
  • கோவில்பட்டியில் பஞ்சாலை ஒன்றில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். கரிசல் காட்டின் முன்னத்தி ஏர் என்றழைக்கப்படும் கி.ராஜநாராயணின் எழுத்துகளால் ஈர்க்கப்பட்டு எழுத்தாளர் ஆனவர்.
  • இன்னொரு முன்னோடி கரிசல் படைப்பாளியும், ‘அஞ்ஞாடி’ நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான பூமணி இவரது நெருங்கிய உறவினர். 1980-ல் எழுதத் தொடங்கிய சோ.தர்மன், ‘அன்பின் சிப்பி’ உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளையும், மூன்று நாவல்களையும் எழுதியுள்ளார்.

சோ.தர்மன்

  • சோ.தர்மனின் புதிய நாவல் ‘பதிமூனாவது மையவாடி’ எதிர்வரும் புத்தகக்காட்சியில் வெளிவரவிருக்கிறது. சோ.தர்மன் எழுதிய ‘வில்லிசை வேந்தர் பிச்சைக்குட்டி’ முக்கியமான ஆய்வு நூலாகும். ‘தூர்வை’, ‘கூகை’ நாவல்களின் மூலம் புகழ்பெற்ற சோ.தர்மன் எழுதிய ‘சூல்’ நாவலுக்குத்தான் 2019-க்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது.
  • விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக இருந்த கண்மாய்களின் இன்றைய நிலை குறித்து எழுதப்பட்ட நாவல் இது. குழந்தைகளையும் உயிர்களையும் பிரசவிக்கும் தாயின் உருவமாகக் கண்மாய்களை வைத்து இந்த நாவலை எழுதியுள்ளார் சோ.தர்மன்.
  • சோ.தர்மனின் கரிசல் மண் தனித்துவமானது. கி.ரா.வின் ‘கோபல்ல கிராம’த்திலிருந்தும், பூமணியின் ‘பிறகு’ நாவலிலிருந்தும், வீர.வேலுச்சாமியின் ‘மண்ணின் குரல்’, மு.சுயம்புலிங்கத்தின் ‘நாட்டுப்பூக்கள்’ ஆகியவற்றிலிருந்தும் வேறுபட்டது.
  • ஆயிரம் ஆண்டு சொல்கதை மரபில், புதர்மண்டிக் கிடந்த சருகுகளுக்குள் முட்டைகளைப் பாம்பு அடைகாப்பதுபோல பனம்பழங்களின் வாடையோடு அறிமுகமானது ‘தூர்வை’. ‘அன்பின் சிப்பி’ போன்ற சிறுகதைகள் வெட்டவெளியில், வெயிலில் நம்மை வசியத்தில் ஆழ்த்தி நிற்கும் நடுகற்களின் தூண்களாக உள்ளன.

கதைகள்

  • கழுகுமலை அடிவாரப் பாறைகளில் காணப்படும் கிறுக்கிய பல ரூபங்கள், பாதையில் போவோர் வருவோரைக் கூப்பிடும் உருவிலிகள், நரிக்குட்டி கண்ணுக்குப் படும் ஒளியுருவங்களை சோ.தர்மனின் கதைகளில் காண முடியும். சாகித்ய அகாடமி விருதுபெற்ற ‘சூல்’ நாவல், இரவில் மறையாத குறுமலைப் பாறையில் இளைப்பாறும் சூலிப் பெண்ணாக அமர்ந்திருக்கிறது.
  • எட்டாம் பிறை வடிவ ஊர்க் கண்மாயைத்தான் சூலியாக, ஒரு குறியீடாக, ஆழ்படிமமாக சோ.தர்மன் மாற்றியுள்ளார். கண்மாயை முன்வைத்து வரக்கூடிய எதிரும்புதிருமான பிரச்சினைகள்தான் நாவல். கண்மாயைச் சுற்றி நிற்கும் பனைமரங்களின் உரசல் கேட்கிறது. இப்பிராந்தியத்து மனிதர்கள் காலம்காலமாக அடைகாத்த கவலைகள் இந்த நாவலின் அத்தியாயங்களாக விரிகின்றன.
  • சோ.தர்மன் இந்த விருதைப் பெற்றிருக்கும் இந்தப் பருவத்தில்தான் அபூர்வமாக நிறையவே நிறையாத கண்மாய்கள் எல்லாம் மழையில் நிரம்பியிருக்கின்றன. நீர்ப்பறவைகள் எல்லாம் வரத்தொடங்கியுள்ளதை நடந்துபோகும்போது பார்க்கிறேன். வலசைப் பறவைகளின் கோடுகளைக் குறுஞ்சுனைகளில் பார்க்க முடிகிறது. அந்தக் குறுஞ்சுனைகள் போன்ற வெகுளியான இடங்கள்தான் சோ.தர்மனின் கதைப் பரப்பு. சாகித்ய அகாடமியும் சேர்த்து எங்கள் ஊரின் கண்மாய்களை நிரப்பியிருக்கிறது.

புனைவு மற்றும் எதார்த்தம்

  • கரிசல் காட்டின் வெக்கையும் வலியும் சுயம்புலிங்கத்தின் படைப்புகளில் படிந்திருந்தன என்றால், பெண்களின் சொல்கதையில் உள்ள கனவுப் புனைவும் எதார்த்தமும் சேர்ந்தவை சோ.தர்மனுடையது. ஊரின் மண்ணாலான குரல்வளையைக் கோதி சோ.தர்மன் தன் கதைகளைக் கேட்டு எழுதுகிறார். நடுமதியத்தின் உலர்ந்த நிலவெளியில் இயற்கையில் படிந்திருக்கும் ஆவியரோடு மரக்கிளைகளில் மறைந்திருக்கும் சிற்றூர்களை எழுதிய கலைஞர் சோ.தர்மன். அலாதியான தெருவின் வாசனையில் மண்கூரை இற்று உதிரும் ஒரு துகள் என்று ‘தூர்வை’.
  • கரிசல் காட்டில், இருநூறு வருடங்களுக்கு முன்னால் ஓடையைக் கடக்க முயன்று இறந்துபோன வள்ளியின் பெயராலான ஓடை ஒவ்வொரு ஊரிலும் உண்டு. அதைக் கடக்கும்போது சத்தமில்லாமல் ஜனங்கள் செல்வார்கள். அதுபோல இறந்துபோய், மறைந்தும் மறையாமல் உருவிலிகளாக இருப்பவர்களை அவர் கதைகளில் பார்க்கிறேன். அவர்கள் கண்விழித்துக் காட்டின் கடைக்கோடி வாசனையில் கதாபாத்திரங்களாகத் தோன்றிவருகிறார்கள். எந்தக் காற்றில் யார் வருகிறார்கள் என்ற ஆச்சரியத்தில் வாசகர்களை வைத்துக் கதையில் மாயத்தைத் தொடர்ந்து பூசிவருகிறார் சோ.தர்மன். வள்ளி ஓடையை சோ.தர்மன் கடக்கவேயில்லை.
  • எங்கள் பகுதியில் உப்பாங்காத்து, குறுமலைக் காத்து, கட்டும் ஆடையை உருவிவிடும் கயத்தாரிலிருந்து வரும் மேகாத்து என்று பல காற்றுகள் உண்டு. பெரும்பாலும் உப்பாங்காத்தில் மாட்டிக்கொண்டவர்கள்தான் சோ.தர்மனின் கதாபாத்திரங்கள்.
  • கு.அழகிரிசாமி, கி.ரா., பூமணிக்கு அடுத்த நிலையில் கரிசல் மண்ணின் ஆளுமை சோ.தர்மன். மரிக்கொழுந்தைப் போகும் வழியில் பறித்துச் சூடிப்போகும் பெண்ணின் வாசனை ‘சூல்’ நாவலில் உள்ளது. கேப்பைக் களத்தில் சுருதி நரம்பாடி வரும் குறிசொல்லிக் கலைஞர்களிடம் நற்சொல் கேட்பதற்கு வீட்டின் நிலைவாசலில் கண்ணிப்பிள்ளைச் செடியையும் வேப்பிலையையும் சொருகி வைப்பார்கள். அந்த சுபத்தன்மை சோ.தர்மனால் எங்கள் நிலத்தில் ஏற்பட்டுள்ளது.
  • சோ.தர்மனுடைய படைப்புகளில்தான் இப்போது கேப்பைக் கூடைகளோடு போகும் பெண்களின் வரிசையைப் பார்க்க முடிகிறது. சோ.தர்மன் ஒரு தான்தோன்றி ஓடை. விழுந்த பனங்காய்கள் கருப்பு மண்ணில் கம்மென்று கிடக்கும் மௌனம் அவரது படைப்புலகம்.

சோ.தர்மன் பேசுகிறார்...

  • எங்கள் தாத்தா, எங்கள் ஊரை விட்டு எங்கேயும் போயிருக்க மாட்டார். எங்கள் அய்யா 50 ஊர்களுக்குப் போயிருப்பார். டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் என நான் விமானத்தில் பறந்துகொண்டிருக்கிறேன். என் மகனோ சர்வசாதாரணமாக ஸ்பெயின், ஜெர்மன், அமெரிக்கா போய்க்கொண்டிருக்கிறான். இவையெல்லாம் உடையிலும் பேச்சிலும் பிரதிபலிக்கும். இலக்கியத்திலும் அந்தத் தாக்கம் இருக்கத்தான் செய்யும். இரண்டு கிளிகள் வைத்து ஒரு கதை எழுதினேன். வனம் அழிக்கப்பட்ட நான்குவழிச் சாலையில், கூடுகட்டிக் குஞ்சு பொரித்த பின்பாகத் தனது குஞ்சுகளுக்குக் கத்தச் சொல்லிக்கொடுக்கிறது தாய்ப் பறவை. ஆனால், வண்டியின் ஹாரன் சப்தம் கேட்டுப் பழகிய அந்தக் கிளிகள், ஹாரன்போலவே கத்தத் தொடங்கிவிடுகின்றன. சமகாலப் போக்கும் இப்படித்தான் இருக்கிறது.
  • மாடு கமலையில் இரைக்கும்போது அங்கே இரண்டு பக்கத்திலும் பூவரசு மரங்கள்தான் வைத்திருப்பார்கள். மரங்களிலேயே அதிகப்படியான ஆக்ஸிஜனை வெளியிடக்கூடிய மரம் பூவரசுதான். மாடுகள் தெவங்கி தவித்துப்போவதிலிருந்து ஆசுவாசம்கொள்ள இப்படிச் செய்திருக்கிறார்கள். இது எப்படி நமது முன்னோர்களுக்குத் தெரிந்தது? இதையெல்லாம் உரைநடைக்குக் கொண்டுவர வேண்டும். இன்றைய தலைமுறைக்கு இதையெல்லாம் சொல்ல வேண்டியது கடமை.
  • முன்பெல்லாம் பாவைக்கூத்து, காவடியாட்டக்காரர்கள், மரக்கால் குதிரையாட்டம், பொம்மலாட்டம், பொலிப் பாட்டுக்காரர்கள் என அறுவடைக் காலத்தைக் கணக்கிட்டு, பத்துப் பதினைந்து நாடோடிக் கூட்டங்கள் கிராமத்துக்கு வந்துவிடும். பூம்பூம் மாட்டுக்காரர்கள், இராப்பாடிகள், சாமக்கோடாங்கிகள் இப்போது அபூர்வமாகிவிட்டார்கள். வாழ்க்கையே கொண்டாட்டமாக இருந்தது. ஆனால், இப்போது கிராமப்புற வாழ்க்கையிலும் நகைச்சுவை அற்றுப்போய்விட்டது. கி.ராஜநாராயணன், பூமணி, பா.செயப்பிரகாசம் ஓரளவு பதிவுசெய்திருக்கிறார்கள். சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கின்றன.

நன்றி: இந்து தமிழ் திசை (20-12-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்