- பதினேழாவது மக்களவை அமைந்து ஓராண்டுக்கு மேலாகியும், துணை அவைத் தலைவர் பதவி இன்னும் காலியாகவே இருப்பது இனிமேலும் தொடரக் கூடாது.
- மாநிலங்களவையிலும் துணை அவைத் தலைவர் பதவி காலியாக இருந்தது; பருவகாலக் கூட்டத்தொடர் தொடங்கியதும் ஏற்கெனவே துணை அவைத் தலைவராக இருந்த ஹரிவன்ஷ் நாராயண் சிங் மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதையடுத்து, மக்களவை துணைத் தலைவர் பதவி காலியாக இருப்பது குறித்த விவாதம் சூடுபிடித்துக்கொண்டிருக்கின்றது.
- இப்படித் துணை அவைத் தலைவர் பதவிகள் நெடுநாட்களாக நிரப்பப்படாமல் இருப்பது தொடர்பான விவாதம் எழுவதற்கு பிரதான காரணம், ஆளும் பாஜக அரசுதான் என்பதை விவரிக்க வேண்டியது இல்லை. அதேசமயம், எதிர்க்கட்சிகளுக்கும் இதில் கொஞ்சம் பங்கு இருக்கிறது.
- இந்தப் பதவிக்குரியவரைத் தேர்தல் மூலமாகவோ கருத்தொற்றுமை மூலமாகவோ தேர்ந்தெடுக்க வேண்டும் என்று செப்டம்பர் 9 அன்று அவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு மக்களவை காங்கிரஸ் தலைவரான அதிர் ரஞ்சன் சௌத்ரி கடிதம் எழுதினார்.
- இந்தப் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்கும் மரபையும் சௌத்ரி சுட்டிக்காட்டியிருக்கிறார். இது தொடர்பில் ஓம் பிர்லா நேரடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை; பாஜகவும் மௌனமாக இருக்கிறது.
- 2019 பொதுத்தேர்தல் முடிந்ததும் இந்தக் காலியிடத்தை நிரப்ப அரசு முயன்றது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸை அணுகியது; இந்தப் பதவியில் இருந்துகொண்டு ஆந்திரத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாததற்காக அரசை எதிர்த்துப் போராடுவது கடினம் என்று கருதி, அந்தக் கட்சி அந்தப் பதவியை மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.
- இந்தப் பதவி இன்னும் காலியாகவே இருப்பது குறித்து காங்கிரஸ் தொடர்ந்து கேள்வி எழுப்பிக்கொண்டிருந்தாலும், மற்ற எதிர்க்கட்சிகள் இதில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. இந்தப் பின்னணியில்தான் மாநிலங்களவைக்கு மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்ட மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் ஹரிவன்ஷ் நாராயண் சிங் துணை அவைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
- பாஜக மாநிலங்களவையில் அறுதிப் பெரும்பான்மையைக் கொண்டிருக்கவில்லை என்றாலும், முக்கியமான வாக்கெடுப்புகளில் வென்றுவருகிறது.
- அதற்கு துணை அவைத் தலைவர் தேர்தலும் விதிவிலக்கல்ல. எதிர்த்தரப்பிலிருந்து ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் மனோஜ் ஜா நின்றார். 12 கட்சிகளின் ஆதரவை அவர் பெற்றிருந்தும் அவரால் வெல்ல முடியவில்லை.
- இரண்டு அவைகளிலும் சேர்த்து பாஜக கொண்டிருக்கும் பெரும்பான்மையை முன்னிட்டு, பாஜகவானது எதிர்க்கட்சிகளை ஓரங்கட்டுவது மட்டுமின்றி, நாடாளுமன்ற நெறிமுறைகளையும் புறக்கணிக்கிறது.
- இந்தியா தனது தற்போதைய பிரச்சினைகள் பலவற்றையும் எதிர்கொள்வதற்கு எதிர்க்கட்சிகளை அரவணைத்துச் செல்வது அவசியம்; ஆனால், துணை அவைத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் விவகாரத்தில்கூட எதிர்க்கட்சியினரை பாஜக புறக்கணிக்கிறது.
- ஒருங்கிணைந்த, சீரான எதிர்வினையைப் புரிவதற்குத் திணறிக்கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகளை பாஜகவின் மேலாதிக்கம் மிகவும் பலவீனப்படுத்தியிருக்கிறது. கருத்தொற்றுமையின் அடிப்படையில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரை மக்களவையின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுப்பது தனது தவறுகளை பாஜக திருத்திக்கொள்வதற்கான வாய்ப்பாக இருக்கும்.
- இந்தப் பிரச்சினையில் அரசு பெருந்தன்மையாக நடந்துகொள்ள வேண்டும், எதிர்க்கட்சியோ ஆக்கபூர்வமாக இருக்க வேண்டும்.
நன்றி: தி இந்து (16-09-2020)