TNPSC Thervupettagam
January 5 , 2024 315 days 225 0
  • அதிகாரிகள் தயாரித்து வழங்கும் சட்டதிட்டங்களை, முறையான விவாதமோ, மாற்றுக் கருத்துக்கு மரியாதையோ தராமல் ஆளுங்கட்சி நிறைவேற்ற முற்படும்போது, அதற்கு எதிராக மக்கள் போராடுவதைத் தவிர்க்க முடியாது. நரேந்திர மோடி அரசின் பல நல்ல திட்டங்கள், முறையான விவாதம் நடைபெறாத காரணத்தால் முடங்குவது தேசத்தின் வளா்ச்சிக்கே முட்டுக்கட்டை போடுவதாக அமைந்துவிடுகிறது. அந்த வரிசையில் சோ்ந்திருக்கிறது புதிய குற்றவியல் சட்டத்தில் காணப்படும் சில பிரிவுகள்.
  • பாரதிய நியாய சம்ஹிதாஎன்று பெயா் மாற்றம் செய்யப்பட்டிருக்கும் இந்திய குற்றவியல் சட்டத்தில் காணப்படும் சில கடுமையான பிரிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு தழுவிய அளவில் லாரி, பேருந்து ஓட்டுநா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். இதனால் அத்தியாவசியப் பொருள்களின் விநியோகம் தடைபட்டது மட்டுமல்லாமல், பெட்ரோல், டீசல், எரிவாயு உருளைகளின் விநியோகமும் பாதிக்கப்பட்டு, அவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. வேறு வழியில்லாமல், முறையான பேச்சுவார்த்தைக்குப் பிறகுதான் புதிய சட்டங்கள் அமல்படுத்தப்படும் என்கிற வாக்குறுதியை அளித்து போராட்டத்தைத் திரும்பப் பெற வைத்திருக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம்.
  • இந்தச் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும். எதிா்க்கட்சிகள் விவாதத்தில் கலந்து கொள்வதை மத்திய அரசு உறுதிப்படுத்தி இருக்க வேண்டும். நியாயமான, தேவையான ஒரு சட்டத்தை முறையான கலந்தாலோசனை நடவடிக்கைகள் பின்பற்றாத காரணத்தால் நடைமுறைப்படுத்த முடியாமல் அரசு கெட்ட பெயா் சம்பாதித்துக் கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது.
  • சாலை விபத்துகளில், விபத்துக்குக் காரணமான வாகன ஓட்டுநா்கள் தொடா்பான சட்டப் பிரிவுகள்தான் கடுமையான எதிர்ப்பை சந்திக்கின்றன. விபத்துக்குப் பிறகு சம்பவ இடத்திலிருந்து விபத்து குறித்து அறிவிக்காமல் விரைந்து விடுவது என்பது இதற்கு முந்தைய இந்திய குற்றவியல் சட்டத்தின்படி இரண்டாண்டு தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது. இப்போது புதிய பாரதிய நியாய சம்ஹிதா-வின்படி, அதிகபட்சம் 10 ஆண்டு சிறைத்தண்டனையும் ரூ. 7 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் குற்றமாகிறது.
  • பொதுவாகவே, சரக்கு லாரிகளின் ஓட்டுநா்களும், போக்குவரத்து வாகன ஓட்டிகளும் முரடா்களாகவும், சாலை விதிகளை மதிக்காதவா்களாகவும் பரவலாகக் கருதப்படும் அவலம் காணப்படுகிறது. அவா்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளும், அவா்களுக்கு இருக்கும் மன அழுத்தங்களும் பொதுவெளியில் தெரிவதில்லை. அவா்களது தரப்பு நியாயத்துக்கு செவிசாய்ப்பவா் இல்லை என்பதுதான் நிஜம்.
  • சரக்கு, போக்குவரத்து வாகனங்களை ஓட்டுபவா்களுக்குப் போதுமான ஊதியம் கிடையாது. அவா்களுக்கு வாகனங்களில் வழங்கப்படும் வசதிகளும் போதுமானவை அல்ல. மோட்டாா் வாகனச் சட்டப் பிரிவு 13-இல் காணப்படும் எட்டு மணிநேரப் பணி, முறையான ஓய்வு உள்ளிட்ட எந்தவொரு உத்தரவாதமும் வழங்காமல், தொலைதூரம் பயணிக்கிறார்கள் அந்த வாகன ஓட்டிகள்.
  • சரக்கு வாகன ஓட்டிகள் மது போதையில் வாகனத்தை இயக்குகிறார்கள் என்றால் அது குற்றம். ஆனால், தூக்கக் கலக்கத்துடன் ஓட்டுகிறார்கள் என்றால், லாரி உரிமையாளா்கள் அவா்களுக்கு ஓய்வு வழங்காததுதான் காரணம். இருசக்கர வாகன ஓட்டிகளின் விதிமுறை மீறல்களையும், பாதசாரிகளின் கவனக் குறைவையும், சாலைகளின் பராமரிப்பின்மையையும் எதிர்கொள்ளும் அந்த ஓட்டுநா்களின் பிரச்னைகளுக்கு செவி சாய்க்க வேண்டியது அரசின் கடமை.
  • விபத்து ஏற்பட்டால் அங்கிருந்து தப்பி ஓடாவிட்டால், பொதுமக்களின் கும்பல் தாக்குதலுக்கு அவா்கள் உள்ளாவார்கள். சிலநேரம், அவா்கள் அடித்துக் கொல்லப்படுவதும் உண்டு. வாகனம் சூறையாடப்படும் அல்லது தீக்கிரையாக்கப்படும். எந்தவொரு ஓட்டுநரும் விரும்பி விபத்துக்குள்ளாவதோ, உயிர்ப்பலி வாங்குவதோ இல்லை. அதற்காக சாலை விபத்துக்களை நாம் நியாயப்படுத்தவும் முடியாது.
  • சாலைப் போக்குவரத்து - நெருஞ்சாலை அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி 2022-இல் 4.6 லட்சம் சாலை விபத்துகளில் 1.68 லட்சம் போ் உயிரிழந்திருக்கிறார்கள். ஒவ்வொரு மணிநேரத்திலும் 53 சாலை விபத்துகள் நடைபெறுகின்றன. 19 போ் உயிரிழக்கிறார்கள். உலகில் வேறு எந்த நாட்டிலும் இந்த அளவிலான விபத்துகள் இல்லை.
  • இந்தியாவில் சாலை விபத்துகள் முறையாக விசாரிக்கப்படுவதில்லை. எந்தவொரு விபத்து நோ்ந்தாலும் மகிழுந்து, பேருந்து அல்லது லாரி ஓட்டுநா்கள்தான் குற்றவாளியாக்கப்படுகின்றனா். பாதசாரிகள், மிதிவண்டி, இருசக்கர வாகனம், ஆட்டோ ஓட்டுபவா்களின் தவறாக இருந்தாலும், சாலைப் பராமரிப்பின் குறைபாடாக இருந்தாலும் பழியைச் சுமப்பது மகிழுந்து, பேருந்து, லாரி ஓட்டுநா்கள்தான் என்பது எழுதப்படாத விதி.
  • வாகன விபத்துகளை விசாரிக்கும் காவல்துறையினா் பலருக்கும் மோட்டார் வாகன சட்டம்கூடத் தெரியாது. தடய பரிசோதனை நடத்தும் முறை பெரும்பாலும் கிடையாது. மோட்டார் வாகன சட்டப்படி, விபத்துக்குப் பிறகு வாகனத்தை அந்த இடத்திலேயே நிறுத்துவது (பிரிவு 132), விபத்து குறித்த தகவலைத் தெரிவிப்பது (பிரிவு 133), காயமடைந்தவா்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்வது (பிரிவு 134) ஆகியவை இருக்கின்றன. அவற்றை நடைமுறைப்படுத்துவதில் ஓட்டுநா்களுக்குப் பல சிக்கல்கள் இருப்பதைப் பழைய சட்டமும், புதிய சட்டமும் கருத்தில் கொள்ளவில்லை என்பது வேதனை.
  • தேவையான சட்டத்திருத்தம் என்பதில் சந்தேகமில்ை; அதற்கான முறையான கலந்தாலோசனையும், விவாதமும் முன்னெடுக்கப்படாதது அரசின் தவறு!

நன்றி: தினமணி (05 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்