TNPSC Thervupettagam

ஜனநாயகத் தடுமாற்றமா நேபாளத்தில்?

December 25 , 2020 1487 days 618 0
  • நேபாள நாடாளுமன்றத்தைக் கலைக்கலாம் என்று அந்நாட்டின் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலீ பரிந்துரைத்திருப்பதும், அதற்கு அந்நாட்டின் அதிபர் வித்யா தேவி பண்டாரி அனுமதி அளித்திருப்பதும் இளம் ஜனநாயக நாடான நேபாளத்தை அரசமைப்புரீதியிலான நெருக்கடியிலும் அரசியல் கொந்தளிப்பிலும் தள்ளிவிட்டிருக்கிறது.
  • ஒலீ அரசு சமீபத்தில் கொண்டுவந்த ஒரு அவசரச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று அவரது கட்சிக்குள்ளிருந்தே கடும் நெருக்கடியை அவர் சந்தித்த சூழலில் நாடாளுமன்றத்தைக் கலைப்பது என்ற முடிவை எடுத்திருக்கிறார்.
  • அந்த நாட்டில் தொங்கு நாடாளுமன்றம் அமைந்தாலோ, எந்தக் கட்சியும் அரசமைக்க முடியாமல் போனாலோதான் ஒரு ஆட்சி ஐந்தாண்டு காலத்தை நிறைவுசெய்வதற்கு முன்னால் அதைக் கலைப்பதற்கு நேபாளத்தின் 2015 அரசமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது.
  • ஒலீயின் பரிந்துரைக்கு அதிபர் அனுமதி கொடுத்துவிட்டதால், இந்தப் பிரச்சினைக்கு அந்த நாட்டின் உச்ச நீதிமன்றத்தில்தான் முடிவு காணப்படும்.
  • ஒலீயின் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் 2017-ல் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தபோது அது ஒரு புதிய தொடக்கமாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நேபாளம் பல்வேறு துயரங்களுக்கு இடையே அரசாட்சியிலிருந்து ஜனநாயகத்துக்கு மாறிய தருணம் அது.
  • அடுத்த ஓராண்டுக்குள், அந்நாட்டின் மாபெரும் கம்யூனிஸ சக்தியாக நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உருவெடுத்தது. துளிர்த்துவரும் ஜனநாயகத்தை அதன் பெரும் நெருக்கடிகளிலிருந்து மீட்பது என்பது நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்கு, குறிப்பாக ஒலீக்கு ஒரு வரலாற்று வாய்ப்பாகும்.
  • ஆனால், இந்தக் கட்சிகளின் சங்கமமானது நேபாள கம்யூனிஸ்ட் கட்சிகளின் இரு பிரிவுகளுக்கு இடையிலான அடிப்படை வேறுபாடுகளைத் தீர்க்கவில்லை. ஒலீயின் எதேச்சாதிகாரப் போக்கும், அதிகாரத்தை மாவோயிஸப் பிரிவினருடன் பகிர்ந்துகொள்ள மறுத்ததும் நிலைமையை மேலும் மோசமாக்கின. உள்கட்சி ஆதரவையும் ஒலீ இழந்துவிட்டார்.
  • பிரச்சினையின் தீவிரத்தன்மையை வைத்துப் பார்க்கும்போது பிளவைத் தவிர்க்க முடியாது என்று தெரிகிறது. எனில், நேபாளம் மறுபடியும் அரசியல் ஸ்திரமின்மை நோக்கித் தள்ளப்பட்டுவிடும். ஏற்கெனவே, கரோனாவால் பல்வேறு சவால்களை அந்த நாடு எதிர்கொண்டிருக்கிறது.
  • ஒரு நல்ல அரசியல் தலைவராக வரலாற்றில் இடம்பிடிக்க வேண்டிய ஒலீயின் அதிகார வேட்கையால், தான் இணைந்து உருவாக்கிய கட்சியின் சிதைவுக்கு அவரே காரணமாகும் சூழல் எழுந்திருப்பது கெடுவாய்ப்பு என்றே கூற வேண்டும்.

நன்றி: தி இந்து (25-12-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்