TNPSC Thervupettagam

ஜனநாயகத்துக்குத் துறவியின் பங்களிப்பு

September 8 , 2020 1418 days 651 0
  • கடந்த ஞாயிறு அன்று மறைந்த கேரளத் துறவி கேசவானந்த பாரதி, சர்வாதிகார ஆட்சியில் இந்தியா சிக்கிவிடாமல் பாதுகாத்த அடிப்படை உரிமைகள் வழக்கின் ஒற்றை மனுதாரர்.
  • ஆனால், அவர் அந்த வழக்கைத் தொடர்ந்ததன் நோக்கமானது அடிப்படை உரிமைகளையோ ஜனநாயகத்தையோ பாதுகாப்பது அல்ல.
  • கேசவானந்த பாரதி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு சுதந்திர இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல். என்றாலும், கேசவானந்த பாரதி கோரிய தீர்வு அந்த வழக்கில் கிடைக்கவில்லை.
  • கேரள நிலச் சீர்திருத்தச் சட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட சில திருத்தங்களை எதிர்த்து கேசவானந்த பாரதி தொடர்ந்த வழக்கில் 1973-ல் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் கேரள அரசின் திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்துவிட்டது.

விரிவடைந்த வழக்கின் எல்லை

  • துறவிக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் நானி பால்கிவாலாதான் அந்த வழக்கின் எல்லையை விரிவுபடுத்தியவர்.
  • துறவி தொடர்ந்த வழக்கானது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்ய நாடாளுமன்றத்துக்கு வரம்பற்ற அதிகாரங்களை அளிக்கும் வகையில் இந்திரா காந்தி அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட அரசமைப்புச் சட்டத் திருத்தங்களை நீதிமன்றத்தில் எதிர்ப்பதற்கான சாத்தியங்களைக் கொண்டிருப்பதை முன்னுணர்ந்திருந்தார் பால்கிவாலா.
  • மூத்த வழக்கறிஞர்கள் சோலி சோரப்ஜி, அரவிந்த் தத்தர் ஆகியோர் இணைந்து எழுதிய பால்கிவாலாவின் வாழ்க்கை வரலாற்று நூலான கோர்ட்ரூம் ஜீனியஸ்’ (நீதிமன்ற மேதை) கேசவானந்த பாரதியும் பால்கிவாலாவும் ஒரு முறைகூட நேரில் சந்தித்துக்கொண்டதில்லை, பேசிக்கொண்டதுமில்லை என்கிறது.
  • அந்த நேரத்தில், அடிக்கடி நாளிதழ்களில் தன் பெயர் குறிப்பிடப்படுவதைக் கண்டும், கேரளத்தில் குறிப்பிட்ட சில நிலச் சீர்திருத்தங்களுக்கு எதிராகத் தான் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு கிடைக்க ஏன் இவ்வளவு தாமதமாகிறது என்றும் துறவி கேசவானந்த பாரதி வியப்புற்றார்.
  • கேசவானந்த பாரதி எதிர் கேரள மாநில அரசுவழக்கானது அதில் கிடைத்த தீர்ப்பால் மட்டுமல்லாமல் புள்ளிவிவரங்களின் அடிப்படையிலும் தனித்துவம் வாய்ந்தது.
  • உச்ச நீதிமன்ற வரலாற்றில் அதிகபட்சமாக 13 நீதிபதிகளை உள்ளடக்கிய அமர்வு அந்த வழக்கை விசாரித்தது. அக்டோபர் 1972 முதல் மார்ச் 1973 வரை 68 வேலை நாட்கள் அந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. 708 பக்கங்களுக்குத் தீர்ப்பு எழுதப்பட்டிருந்தது.

ஜனநாயகத்துக்கு வெற்றி

  • கேசவானந்த பாரதி வழக்கானது அடிப்படைக் கட்டமைப்புக் கோட்பாட்டை (Basic Structure Doctrine) அறிமுகப்படுத்தியது.
  • மதச்சார்பின்மை, கூட்டாட்சித் தத்துவம் போன்ற அரசமைப்புச் சட்டத்தால் பாதுகாக்கப்பட்டுள்ள முக்கிய விழுமியங்களைப் பாதிக்கும் வகையிலான திருத்தங்களை மேற்கொள்வதற்கான நாடாளுமன்றத்தின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தியது இந்தக் கோட்பாடுதான்.
  • நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை நீதி விசாரணைக்கு உட்படுத்தும் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தை கேசவானந்த பாரதி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு உறுதிசெய்தது.
  • அரசின் மூன்று கிளைகளான நாடாளுமன்றம், நிர்வாகம், நீதிமன்றம் ஆகியவற்றுக்கிடையில் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுவதற்கான கருத்தாக்கம் இதன் மூலம் உருவானது.
  • தீர்ப்பு வழங்கப்பட்ட நாளில் 7:6 என்ற மிக மெல்லிய பெரும்பான்மையில்தான் ஜனநாயகம் வெற்றிபெற்றது. நீதிபதிகள் இரண்டு தரப்புகளாக சரிபாதியாகப் பிரிந்திருந்த நிலையில், 13-ம் நீதிபதியான ஹெச்.ஆர்.கன்னா, ‘அரசமைப்புச் சட்டத் திருத்தங்களானவை அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை மாற்றுவதாக இருக்கக் கூடாதுஎன்னும் பார்வைக்கு ஆதரவளித்தார்.
  • இந்தத் தீர்ப்பின் விளைவாக உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் ஜெ.எம்.ஷெலாட், ஏ.என்.க்ரோவர், கே.எஸ்.ஹெக்டே மூவரும் தலைமை நீதிபதி பதவிக்கான தகுதிவாய்ந்தோர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர்.
  • மூவருமே கேசவானந்த பாரதி வழக்கில் பெரும்பான்மைத் தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள். மூவருமே தங்களது நீதிபதி பதவியை ராஜினாமா செய்தனர்.
  • 1973 ஏப்ரல் 24 அன்று கேசவானந்த பாரதி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட சில ஆண்டுகளில் நெருக்கடிநிலை பிறப்பிக்கப்பட்டது.
  • அந்த இருண்ட காலத்தில் ஜனநாயகத்தின் மீதும், தனிநபர்களின் கண்ணியம் மீதும் நிகழ்த்தப்பட்ட தாக்குதலைத் தவிர்க்க அந்தத் தீர்ப்புதான் பயன்பட்டது. அந்த வகையில் மிகவும் பொருத்தமான காலத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு அது.

கேசவானந்த பாரதி யார்?

  • கேரளத்தில் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள எட்நீர் மடத்தின் தலைமைத் துறவியான கேசவானந்த பாரதி செப்டம்பர் 6, 2020 அன்று தன்னுடைய 80-ம் வயதில் மறைந்தார்.
  • ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ சங்கராச்சார்ய தோடாகாச்சார்ய கேசவானந்த பாரதி ஸ்ரீ பாதங்களவரு என்று அழைக்கப்பட்டவர், 1961-ல் எட்நீர் மடத்தின் தலைமைத் துறவியானார்.
  • கேசவானந்த பாரதி அத்வைத சித்தாந்தத்தைப் பின்பற்றியவர். ஆதி சங்கரரின் நான்கு சீடர்களில் ஒருவரான தோடாகாச்சார்யாரின் வழிவந்தவர். காசர்கோடில் கன்னட மொழிக்குச் சமமான முக்கியத்துவம் அளிக்கப்படுவதற்குத் தொடர்ந்து ஆதரவு தெரிவித்துவந்தவர்.

நன்றி:  தி இந்து (08-09-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்