- மியான்மரில் ஜனநாயகத்தை நிலைநாட்ட போராடிவரும் பொதுமக்களின் மீதான ராணுவத்தின் அடக்குமுறை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.
- கடந்த சனிக்கிழமை முப்படை தினத்தைக் கொண்டாடிய ராணுவம், நூறு பேரை சுட்டுக் கொன்றது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
- மியான்மரில் அறவழியில் போராட்டம் நடத்தியவர்களில், இதுவரை நானூற்றுக்கும் மேற்பட்டோர் ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் பலியாகி இருக்கின்றனர்.
- ஏற்கெனவே ராணுவத்தால் சொல்லொணாத் துன்பத்துக்கு ஆளான கரேன் இன மக்கள் சுமார் எட்டாயிரம் பேர், தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி, காடுகளில் தஞ்சமடைந்திருப்பதால், விளைநிலங்கள் பராமரிப்பின்றிக் கிடக்கின்றன. இதனால், அங்கு கடும் உணவுப் பஞ்சம் ஏற்படும் சூழல் நிலவுகிறது.
- இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் அஹிம்சையின் அடையாளமாக காந்தி ராட்டை சுற்றினார்.
- இந்தியாவில் பிரிட்டிஷ் ஆடைகளுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் அடையாளமாக காந்தி ராட்டையைக் கையில் எடுத்தார்.
- அதே வரிசையில், தற்போது மியான்மரில் ஜனநாயகத்தை நிலைநாட்டக் கோரி, பொதுமக்கள் நீண்ட நெடிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
- இந்த வேளையில், மியான்மரில் மீண்டும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தி, ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு இந்தியா போன்ற அண்டை நாடுகளுக்கு இருக்கிறது.
- ஆனால், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு குழப்பங்களுக்கு வித்திடுகிறது.
- ஒருபுறம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடான இந்தியா, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் மியான்மரில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதில் பாராட்டத்தக்க கருத்துகளை முன்வைத்தாலும், உள்நாட்டில் அதற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.
- மியான்மரில் அடக்குமுறையை எதிர்கொண்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்த ரோஹிங்கயா இன மக்களை, மீண்டும் மியான்மருக்கே நாடுகடத்தும் முயற்சியில் மத்திய அரசு ஓசையின்றி ஈடுபட்டு வருகிறது.
- ஏற்கெனவே மியான்மரில் அடக்குமுறையை எதிர்கொண்ட அவர்களுக்கு, இந்தியாவின் இந்த நடவடிக்கை வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதாக அமைந்துள்ளது.
- மேலும், மியான்மரில் போராடிவரும் பொதுமக்கள் மீது ராணுவம் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்ட அதே வேளையில், இந்தியாவில் தஞ்சமடைந்த ரோஹிங்கயா இன மக்களை நாடுகடத்தும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியது நியாயம் அல்ல. இதற்கு தில்லியில் உள்ள ஐ.நா. உயர் ஆணைய அலுவலகமும் அதிருப்தி தெரிவித்திருக்கிறது.
அரசியல் நோக்கர்களின் எதிர்பார்ப்பு
- இது தவிர, மியான்மரிலிருந்து சட்டவிரோதமாக வருபவர்களைத் தடுத்து நிறுத்தும் வகையில், எல்லையில் கண்காணிப்பை பலப்படுத்துமாறு எல்லையோர மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதற்கு மத்திய அரசு தரும் விளக்கம்தான் வியப்பளிக்கிறது.
- அதாவது, ஐ.நா. அகதிகள் மாநாட்டில் இந்தியா கையொப்பமிடவில்லை. மேலும், மியான்மரிலிருந்து இந்தியாவுக்குள் தஞ்சம் புகுபவர்கள் "ஊடுருவல்காரர்கள்' தானே தவிர அகதிகள் அல்ல என்றும் மத்திய அரசு கூறுகிறது.
- ஆனால், உள்நாட்டில் அடக்குமுறையாலும், துன்புறுத்தலாலும் பாதிக்கப்பட்ட மக்கள், பிற நாடுகளில் புகலிடம் தேடும்பட்சத்தில் அவர்கள் "அகதிகள்' என்றே அழைக்கப்படுவர் என சர்வதேச சட்டம் குறிப்பிடுகிறது.
- அந்த வகையில், இந்தியாவில் தஞ்சம் புகும் மியான்மர் இன மக்களை அகதிகள் என்ற கோணத்தில்தான் பார்க்க வேண்டுமே தவிர, ஊடுருவல்காரர்கள் என்ற முடிவோடு அல்ல.
- ஆகையால், அவர்களை மீண்டும் மியான்மருக்கு நாடுகடத்தி, அபாயகரமான சூழலுக்குள் அவர்களைத் தள்ளுவது ஏற்புடையது அல்ல.
- ரோஹிங்கயா விவகாரத்தில் சர்வதேச சட்ட நடைமுறைகளும் நிலுவையில் இருக்கின்றன.
- மியான்மரில் ரோஹிங்கயா இன மக்கள் எதிர்கொண்ட அடக்குமுறைகளை சுட்டிக் காட்டி, மியான்மருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் காம்பியா தொடுத்த வழக்கு இன்னமும் நிலுவையில் இருக்கிறது.
- இந்த வழக்கில், கனடா, நெதர்லாந்து, மாலத்தீவு போன்ற நாடுகளும் பின்னர் இணைந்து கொண்டன.
- சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தின் வழக்குரைஞரும் ரோஹிங்கயாக்களுக்கு எதிராக இழைக்கப்பட்டுவரும் சர்வதேச குற்றங்களை விசாரித்து வருகிறார்.
- இந்த நேரத்தில் இந்தியாவில் தஞ்சமடைந்த ரோஹிங்கயாக்களை மீண்டும் மியான்மருக்கு நாடுகடத்த முடிவெடுப்பது சர்வதேச சட்டத்தை மீறிய செயலாகவே பார்க்கப்படும்.
- இது ஒருபுறமிருக்க, மியான்மரில் கடந்த 2011-ஆம் ஆண்டிலிருந்து அரங்கேறி வரும் சர்வதேச குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மீது விசாரணை நடத்தும் வகையில், சுதந்திரமான விசாரணை அமைப்பு கடந்த 2018 செப்டம்பரில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலால் ஏற்படுத்தப்பட்டது.
- இக்குழு ஒவ்வோர் ஆண்டும் தனது விசாரணை அறிக்கையை ஐ.நா. பொது சபையிலும், மனித உரிமைகள் கவுன்சிலிடமும் சமர்ப்பிப்பது வழக்கம்.
- அக்குழுவுக்கென பிரத்யேகமாக போலீஸ் படையோ, வழக்குரைஞர் பிரிவோ, நீதிபதிகளோ கிடையாது.
- எனவே தனக்கு அளிக்கப்பட்ட உத்தரவை நிறைவேற்றுவதிலும், ஆதாரங்களையும், தடயங்களையும் சேகரிப்பதிலும் ஐ.நா. உறுப்பு நாடுகளின் ஆதரவைத்தான் அக்குழு நாட முடியும்.
- அந்த அடிப்படையில்தான், மியான்மரின் அண்டை நாடான இந்தியாவின் உதவியை அக்குழு தற்போது நாடியுள்ளது. இக்குழுவின் சர்வதேச விசாரணைக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு நல்கி, போதுமான விவரங்களைப் பகிர முன்வர வேண்டும் என்பதே அரசியல் நோக்கர்களின் எதிர்பார்ப்பு.
நன்றி: தினமணி (29 – 03 - 2021)