TNPSC Thervupettagam

ஜனமித்திரன் இதழ் : புதுக்கோட்டையின் முதல் இதழ்

June 23 , 2024 8 days 41 0
  • புதுக்கோட்டை சமஸ்தானம் பத்திரிகை இல்லாத நாடாக இருந்து வந்தது. சமஸ்தானத்தில் நடந்தேறிய பல்வேறு மாநாடுகளில் புதுக்கோட்டையில் பத்திரிகை தொடங்கப்பட வேண்டும் எனத் தீர்மானங்கள் நிறைவேறி வந்தன. பி.எஸ்.விசுவநாத அய்யர் அவரது சகோதரர் பி.எஸ்.சுப்பிரமணிய அய்யர் ஆகியோர் மூலமாகப் பத்திரிகைக் கனவு செயல்வடிவம் கண்டது. 1924ஆம் ஆண்டு அக்டோபர் 17 அன்று புதுக்கோட்டை சமஸ்தானத்தில் முதல் பத்திரிகை ‘ஜனமித்திரன்’ தொடங்கப்பட்டது. வெள்ளிக்கிழமை தோறும் வெளிவரும் வாரப் பத்திரிகை என்கிற குறிப்போடு, இந்த இதழ் வெளிவந்தது. இதே ஆண்டு புதுக்கோட்டை சமஸ்தானத்தில் மக்களைக் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சட்டசபை அமைக்கப்பட்டது. இந்த இதழின் ஆசிரியராக இருந்தவர் பி.எஸ்.சுப்பிரமணிய அய்யர். புதுக்கோட்டையில் முதலில் ஜனமித்திரன் பிரஸ் தொடங்கிய இவர், அந்த பிரஸிலிருந்து இந்த இதழைக் கொண்டு வந்தார். இந்த இதழ் சமஸ்தானக் காலத்தில் நடந்தேறிய அரசு நிகழ்வுகளை வெளியிட்டு வந்தது.
  • புதுக்கோட்டை மன்னராக இருந்த மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான் ஆஸ்திரேலியப் பெண்ணை மணந்ததால் மன்னர் பதவியைத் துறந்ததற்குப் பிறகு, அவரது மகன் சிட்னி மார்த்தாண்டாவிற்குப் பட்டம் சூட்டக் கூடாது என்றும் ஒரு இந்தியருக்கும் இந்து வாரிசுக்கும்தான் ராஜாங்கம் கிடைக்க வேண்டுமென்றும் பத்திரிகையில் எழுதி வந்ததே காரணமாக அமைந்தது. மார்த்தாண்ட பைரவர் – பிங்க் தம்பதியின் சிட்னி என்கிற ஆண் மகனை மன்னராக அறிவிக்கும் முயற்சியில் சமஸ்தானம் இறங்கியது. ‘ஜனமித்திரன்’ அதை எதிர்த்து எழுதிவந்தது.
  • ராஜாங்க விஷயத்தில் தலையிட்டு எழுதியதற்காகக் கோபம் கொண்ட சமஸ்தானம், பத்திரிகையின் மீது வழக்குத் தொடர்ந்தது. பத்திரிகை அலுவலகம், அச்சுக்கூடத்தைக் காவல் துறை பரிவாரங்களால் முற்றுகையிட்டுச் சோதனையிட்டதுடன், ஜனமித்திரன் இதழைத் தடை செய்தது. இதழின் கௌரவ ஆசிரியராக இருந்த எஸ்.விசுவநாத அய்யர் கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். நீதிமன்ற விசாரணையில் இதழின் ஆசிரியர் அரசு வழக்கறிஞர் என்பதால், அவர் இதழ் நடத்தியது தவறு என்று அமர்வு நீதிமன்ற நீதிபதி தண்டனையும் அபராதமும் விதித்தார். மேல்முறையீட்டில் தலைமை நீதிபதி அத்தீர்ப்பை ரத்துசெய்தார். இதன் பிறகும் சமஸ்தானக் காவல் துறையினர் இதழாசிரியர் மீது அடுத்தடுத்துக் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்தார்கள். அதையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பிறகு, சமஸ்தான ஏஜெண்ட் துரை மிஸ்டர் சி.டபுள்யூ.இ.காட்டன் வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொண்டதன் பேரில், பிரச்சினை முடிவுக்கு வந்தது. நீதிமன்றம் தடையை விலக்கிக்கொண்ட பிறகு, இதழ் வெளிவரப் பொருளாதார நெருக்கடி இருந்தது. ‘ஜனமித்திரன்’ இதழ் தேவையைக் கருத்தில்கொண்டு சமஸ்தானப் பகுதி, வெளிவாசகர்கள் இதழுக்கு நிதியுதவி செய்தார்கள். இதன் பிறகு மீண்டும் வெளியானது.
  • 1927ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் தேதி புதன்கிழமை மாலை 4.00 மணிக்கு திருச்சியிலிருந்து புதுக்கோட்டைக்கு மகாத்மா காந்தியடிகள் வருகைதந்தார். காந்தியடிகளோடு அவரது துணைவியார் கஸ்தூரிபாய், ராஜாஜி, மகாதேவ் தேசாய், ராமனாதன், தேவதாஸ்காந்தி, டாக்டர் ராஜன் ஆகியோர் வருகை தந்தார்கள். காந்தியின் வருகைக்கு அன்றைய புதுக்கோட்டை சமஸ்தான நிர்வாகம் எதிர்ப்புத் தெரிவித்தது. காந்தியினுடைய உரையின் சாராம்சமாகப் பசு வளர்ப்பு, கைராட்டை, கதர் இயக்கம், மது ஒழிப்பு இருந்துள்ளன. காந்தியடிகள் புதுக்கோட்டைக்கு வருகை தந்த நாளில், புதுக்கோட்டை நகரத் தொகுதிகளில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. காந்தியின் வருகையால் நகரத் தொகுதி தேர்தல்களில் வாக்குப் பதிவு பெரிதும் பாதிக்கப்பட்டது. அதாவது, 45 விழுக்காடு மட்டுமே வாக்கு பதிவானது. இப்படியான வரலாற்றுச் செய்திகளை வெளியிட்டு வந்த ‘ஜனமித்திரன்’ பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பிற காரணங்களால் 1939ஆம் ஆண்டோடு இதழ் பணியை நிறுத்திக்கொண்டது. ஆயினும் அச்சகப் பணியில் தொடர்ந்து செயலாற்றி வந்தது. புதுக்கோட்டையைச் சுற்றி நடைபெறும் நாடகங்களுக்கு விளம்பரச் சுவரொட்டிகள், நூல்கள், துண்டுப் பிரசுரங்கள் யாவும் ஜனமித்திரன் பிரஸ் மூலமே அச்சடிக்கப்பட்டன. இந்த பிரஸ் அச்சடித்த நூல்களில் ‘ஸ்ரீராஜகோபால விஜயம்’ மிக முக்கியமான நூலாகும். இந்த இதழ் இந்தியாவிலுள்ள நூலகங்களில் புதுக்கோட்டை ஞானாலயா நூலகத்தில் மட்டுமே ஆவணமாக இருக்கிறது. இத்தகைய இதழ்களை அரசு மின் ஆவணமாக மாற்ற வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (23 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்