TNPSC Thervupettagam

ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி - பயங்கரவாத முகம் மாறுமா - கடந்து வந்தப் பாதை!

October 9 , 2024 98 days 85 0
  • ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கூட்டணி 48 தொகுதிகளை வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது.
  • ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி 42 தொகுதிகளைப் பிடித்துள்ளது. இதனுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட காங்கிரஸ் 6 இடங்களில் வென்றுள்ளது. இதன் மூலம், ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையவிருக்கிறது.
  • அடுத்து பாஜக 29 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. தனித்துப் போட்டியிட்ட மக்கள் ஜனநாயக கட்சி 3 இடங்களில் வென்றிருக்கிறது. அடுத்து ஜம்மு-காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி ஆகியவை தலா ஒரு தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கின்றன.
  • ஜம்மு-காஷ்மீர் என்றாலே வெள்ளைப் போர்வை போர்த்திய மலைப் பகுதிகளும், அழகிய இயற்கைக் காட்சிகளும்தான் நினைவுக்கு வர வேண்டும், ஆனால் பயங்கரவாதப் பிடியினால் துப்பாக்கிச் சப்தங்களும், பாதுகாப்புப் படையினரின் தேடுதல்களும்தான் கண் முன் வந்துப்போகின்றன.
  • ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் பயங்கரவாத அமைப்புகளில் சில, ஜம்மு - காஷ்மீர் சுதந்திரம் அடைய வேண்டும் என்றும், சில பயங்கரவாத அமைப்புகள் ஜம்மு -காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்றும் அங்குள்ள மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் எதிரான தொடர் பயங்கரவாதச் செயல்களை ஊக்குவித்து வருகின்றன. ஜம்மு-காஷ்மீரின் மண்ணின் மைந்தர்களை, பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்புகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றும் வேலையை செயது வருகிறது.
  • இதனால்தான் பயங்கரவாதம் எனும் மனித இனத்துக்கு எதிரான சக்தி, ஜம்மு-காஷ்மீரை ஆட்டிப்படைத்து வருகிறது. இதனை நமது அண்டை நாடே நம் மீது திணிக்கும்போது அதை எதிர்கொண்டு போராடி வருகிறது பாதுகாப்புப் படை. ஒருபக்கம் பயங்கரவாதம், மறுபக்கம் அதனை ஒடுக்கும் பாதுகாப்புப் படையின் நடவடிக்கைகளுக்கு இடையே மீண்டும் ஜனநாயகத்தை மலரச் செய்யும் வகையில், தற்போது அங்கு பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிவுகள் வெளியாகியுள்ளன.
  • ஜம்மு-காஷ்மீருக்கு புதிய ஆட்சி அமைக்கப்பட்டு, அங்கு ஜனநாயகம் ஓங்கும்போது, பயங்கரவாதம் ஒழியும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதனால்தான், அதிக அளவில் மக்கள் ஆவலுடன் வந்து வாக்களித்திருந்தார்கள்.

இதுவரை ஜம்மு - காஷ்மீர் சந்தித்த பிரச்னைகள்...

  • காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு எதிரான வன்முறை..
  • பல ஆண்டுகளாக நீடித்து வந்த, காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு எதிரான வன்முறை 1989ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விஸ்வரூபம் எடுக்கிறது.
  • பிப். 11: காஷ்மீர் விடுதலை முன்னணி என்ற அமைப்பை நிறுவிய மக்பூல் பட்-டுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. அவரது உடல் திகார் சிறையிலேயே புதைக்கப்படுகிறது.
  • செப்.14ல்.. இதற்கு எதிர்வினையாக, மூத்த வழக்குரைஞரும், பாஜகவின் மாநில துணைத் தலைவருமான டிகா லால் தப்லு பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்படுகிறார்.
  • நவம்பர் 4ல்.. காவல்துறை அதிகாரி கொலை வழக்கில், மக்பூல் பட்டுக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி நீல்கந்தா கஞ்ஜு ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்படுகிறார்.
  • டிச. 8ல்.. பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள், மத்திய உள்துறை அமைச்சர் முஃப்தி முகமது சயீத்தின் 23 வயது மகள் ரூபியா சயீத்தை கடத்திச் செல்கிறார்கள். 6 நாள்களுக்குப் பிறகு, இருதரப்பு பேச்சுவார்த்தையில், ஐந்து பயங்கரவாதிகள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டபின், ரூபியாவை பயங்கரவாதிகள் விடுதலை செய்கிறார்கள்.
  • இந்த ஆண்டு முழுக்க பயங்கரவாதிகளின் கை மேலோங்கி நிற்கிறது. அதன் எதிரொலியாக.. காஷ்மீரை விட்டு பண்டிட்டுகள் வெளியேறத் தொடங்குகிறார்கள்.
  • 1990ஆம் ஆண்டு ஜனவரி முதல் பயங்கரவாதச் செயல்கள் காரணமாக, ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதிகளிலிருந்து காஷ்மீர் பண்டிட்டுகள் படிப்படியாக வெளியேறத் தொடங்கி ஐந்து மாதங்களில் ஒருவர் கூட இல்லாத நிலை உருவாகிறது.
  • இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் நடத்திய மிகப்பெரிய தேடுதல் வேட்டையில் சந்தேகப்படும் 27 பயங்கரவாதிகள் கைதாகிறார்கள்.
  • தொடர்ந்து பயங்கரவாதிகளின் அட்டூழியமும் அதிகரிக்கிறது. இந்திய விமானப் படை அதிகாரி உள்ளிட்டோர் படுகொலை செய்யப்படுகிறார்கள். பலர் படுகாயம் அடைந்தனர். இதற்கிடையே பயங்கரவாத ஊடுருவல்கள், பதுங்கல்கள் என பல சம்பவங்கள் நடக்கின்றன.

அடுத்து சீக்கியர்கள் மீது

  • சித்திச்சிங்போரா படுகொலை
  • 2000ஆவது ஆண்டு மார்ச் 20ல், காஷ்மீரில், முதல் முறையாக சீக்கியர்களுக்கு எதிரான தாக்குதலில் பயங்கரவாதிகள் இறங்குகிறார்கள். வீடுகளில் இருந்த 35 சீக்கிய மக்கள் குருத்வாரா அருகே உள்ள சுவர் பக்கத்தில் அழைத்துவரப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டனர்.

2003ஆம் ஆண்டு இந்துக்கள் மீது..

  • மார்ச் 24ஆம் தேதி, தெற்கு காஷ்மீரின் பின்தங்கிய கிராமங்களுக்குள் புகுந்த பயங்கரவாதிகள் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த 24 இந்துக்களை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர்.
  • இந்த சம்பவம், முஃப்தி தலைமையிலான அரசு ஜம்மு-காஷ்மீரில் ஆட்சிப்பொறுப்பேற்று சுமார் 3 மாத காலம் நிலவி வந்த அமைதிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. ஜம்மு - காஷ்மீர் பகுதியை மீண்டும் அச்சுறுத்தலுக்கான பகுதியாக மாற்றியது. இவையெல்லாம் ஜம்மு -காஷ்மீரில் நடந்த ஒரு சில சம்பவங்கள் மட்டுமே..
  • இந்த நிலையில்தான், ஆகஸ்ட் 5, 2019ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 370 சட்டப்பிரிவை ரத்து செய்து மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசின் இந்த முடிவை உச்ச நீதிமன்றம் 2023ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி உறுதி செய்தது.
  • 2024-ஆம் ஆண்டு ஜம்மு - காஷ்மீருக்கு தேர்தல் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டு, மூன்று கட்டங்களாக தேர்தல் நடந்து இன்று முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஜம்மு - காஷ்மீர் சந்தித்த தேர்தல்கள் - வெற்றி பெற்ற கட்சி

  • 1962 - ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி
  • 1967 - காங்கிரஸ் வெற்றி
  • 1972 - காங்கிரஸ் வெற்றி
  • 1977ஆம் ஆண்டு - ஜம்மு - காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி
  • 1983 ஆம் ஆண்டு - ஜம்மு - காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி
  • 1987 - தேசிய மாநாட்டுக் கட்சி - காங்கிரஸ் கூட்டணி
  • 1991ஆம் ஆண்டு தேர்தல் நடத்தப்படவில்லை.
  • 1996ஆம் ஆண்டு - ஜம்மு - காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி.
  • 2002ஆம் ஆண்டு - காங்கிரஸ் - மக்கள் ஜனநாயகக் கட்சி - ஜம்மு-காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி கூட்டணி
  • 2008-ஆம் ஆண்டு - தேசிய மாநாட்டுக் கட்சி - மக்கள் ஜனநாயகக் கட்சி கூட்டணி
  • 2014ஆம் ஆண்டு - பாஜக - மக்கள் ஜனநாயகக் கட்சி கூட்டணி.
  • 2018ஆம் ஆண்டு ஜம்மு - காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி உடனான கூட்டணியை பாஜக முறித்ததால், ஆட்சி கவிழ்ந்தது.
  • அதன்பிறகு ஜம்மு - காஷ்மீர் நிர்வாகம் ஆளுநர் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.
  • 2019ஆம் ஆண்டு ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. தொடர்ந்து குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்றது. இறுதியாக 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு, 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதுக்குப் பின் 2024ஆம் ஆண்டு பேரவைத் தேர்தல் நடைபெற்றுள்ளது.
  • ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக (செப்.18, 25, அக்.1) தேர்தல் நடைபெற்றது. இதில் ஒட்டுமொத்தமாக 63.88 சதவீத வாக்குகள் பதிவாகின. ஜம்மு - காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் பேரவைத் தேர்தல் நடைபெற்றுள்ளது.
  • கடந்த 2019ஆம் ஆண்டில், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக, - ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகியவை பிரிக்கப்பட்டன. இவ்விரு யூனியன் பிரதேசங்களுக்கும் தேர்தல் முடிந்து, இன்று காலை வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிந்தது.
  • இந்த தேர்தலில் காங்கிரஸ் - தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும், பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தனித்தும் போட்டியிட்டன. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என கருத்துக் கணிப்புகள் வெளியான நிலையில், காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது.

நன்றி: தினமணி (09 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்