TNPSC Thervupettagam

ஜம்மு-காஷ்மீர்: ஜனநாயகம் நிலைக்க வேண்டும்

October 16 , 2024 93 days 114 0

ஜம்மு-காஷ்மீர்: ஜனநாயகம் நிலைக்க வேண்டும்

  • ஜம்மு - காஷ்மீரில், பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்பட்ட சட்டமன்றத் தேர்தலின் மூலம் புதிய அரசு பொறுப்பேற்கவிருப்பது, அங்கு ஜனநாயகம் முழுமையாக மீட்கப்படும் என்னும் நம்பிக்கையை அளிக்கிறது.
  • 2018இல் மாநில ஆட்சி கலைக்கப்பட்டு, 2019இல் மாநில அந்தஸ்தை நீக்கி மத்திய ஆட்சிப் பகுதியாக மாற்றப்பட்ட பிறகு ஜம்மு - காஷ்மீரில் நடத்தப்பட்டுள்ள முதல் சட்டமன்றத் தேர்தல் இது. தொகுதி மறுவரையறைக்குப் பின் 90 இடங்களுக்குத் தேர்தல் நடத்தப்பட்டது.
  • இதில் தேசிய மாநாடு, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உள்ளடக்கிய இண்டியா கூட்டணி 49 இடங்களில் வென்று ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையைப் பெற்றது. நான்கு சுயேச்சைகளையும் சேர்த்து 53 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா முதல்வராக இன்று (அக்டோபர் 16) ஆட்சிப் பொறுப்பேற்கிறார்.
  • 2019இல் சட்டமன்றத்துடன் கூடிய மத்திய ஆட்சிப் பகுதியாக அறிவிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீருக்கு, விரைவாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை அரசியல் கட்சிகள் உள்படப் பல தரப்பினரும் எழுப்பிவந்தனர். தொகுதி மறுவரையறை அறிக்கை 2020இல் வெளியானது. கடந்த ஆண்டு டிசம்பரில் உச்ச நீதிமன்றத் தலையீட்டுக்குப் பிறகே தேர்தல் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  • ஜம்மு-காஷ்மீரின் சுயாட்சி அதிகாரத்துக்காகவும் மக்களின் உரிமைகளுக்காகவும் தேசிய மாநாட்டுக் கட்சியினர் தொடர்ந்து குரல் எழுப்பிவந்தனர். காங்கிரஸ் கட்சியும் மாநில அந்தஸ்து மீட்கப்பட வேண்டும் என வலியுறுத்தியது. இது போன்ற காரணங்களால் காஷ்மீர் மக்களின் நம்பிக்கையை இண்டியா கூட்டணி வென்றெடுத்திருக்கிறது.
  • மறுபுறம், பாஜக ஆட்சி அமைக்காவிட்டாலும் ஜம்மு - காஷ்மீரில் தேர்தல் நடத்தியதே பெரிய சாதனை என்று அறிவித்துள்ளார் பிரதமர் மோடி. 63.8% வாக்குகள் பதிவானது இந்திய ஜனநாயகத்தின் மீதான ஜம்மு - காஷ்மீர் வாக்காளர்களின் நம்பிக்கையைத் தெரிவிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். ஜம்மு பகுதியில் பாஜக 29 தொகுதிகளை வென்றுள்ளது. ஒட்டுமொத்தமாக இருப்பதிலேயே அதிகபட்சமாக 25.63 வாக்கு விகிதத்தையும் பெற்றுள்ளது.
  • ஜம்மு-காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டபோதே, அது கூடிய விரைவில் மீண்டும் மாநிலமாக மாற்றப்படும் என்று மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதியிலிருந்து பாஜக இதுவரை பின்வாங்கவில்லை. தற்போது இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்திருக்கும் சூழலில், மாநில அந்தஸ்தை அளிப்பதில் தேவையற்ற தாமதங்களை மத்திய அரசு தவிர்க்க வேண்டும்.
  • ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தின் ஐந்து உறுப்பினர்களைத் துணைநிலை ஆளுநர் நேரடியாக நியமிக்கலாம் என்னும் சமீபத்திய விதிமுறையும் சர்ச்சையாகி உள்ளது. இதற்கு எதிரான வழக்கை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் குடிமைப் பணிகள். காவல் துறை ஆகியவற்றில் நேரடி நியமனத்துக்கு வழிவகுக்கும் சட்டத் திருத்தத்தைத் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அறிவித்துள்ளார். இதவும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள இதுபோன்ற அதிகாரங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தில் தலையிடுவதாக அமைந்துவிடக் கூடாது.
  • காஷ்மீரில் தீவிரவாத-பிரிவினைவாத சக்திகளின் எழுச்சியைக் கட்டுப்படுத்துவதற்காகக் கடந்த ஐந்து ஆண்டுகளாக மத்திய அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள், பதற்றச் சூழலைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளன. அதே நேரம், தமது ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படுவதாக மக்களில் சில தரப்பினரிடையே நிலவும் அதிருப்தியும், வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்சினைகளும் களையப்பட வேண்டும்.
  • இதற்கு மத்திய அரசும் ஜம்மு - காஷ்மீர் அரசும் அரசியல் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு, ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஜம்மு - காஷ்மீரில் நிரந்தர அமைதியும் முழுமையான ஜனநாயகமும் மீட்கப்படும் என்கிற நம்பிக்கை விரைவில் மெய்யாக வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (16 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்