TNPSC Thervupettagam

ஜம்மு மற்றும் காஷ்மீரில் மீண்டும் மலரும் ஜனநாயகம்

June 28 , 2021 1130 days 470 0
  • ஜம்மு மற்றும் காஷ்மீரில், நடைமுறையில் உள்ள குடியரசுத் தலைவர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரவும், ஒன்றியப் பிரதேசத்தின் சட்டமன்றத் தேர்தலை விரைவில் நடத்தவும், அந்தப் பிராந்தியத்தில் உள்ள முன்னணி அரசியல் தலைவர்களுடனும் கருத்தொற்றுமையை ஏற்படுத்தவும் ஒன்றிய அரசு கொண்டிருக்கும் அக்கறையை காஷ்மீர் தலைவர்களுடனான பிரதமரின் சந்திப்பு வெளிப்படுத்தியுள்ளது.
  • ஜம்மு மற்றும் காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் நால்வர் உள்ளிட்ட 14 முக்கிய அரசியல் தலைவர்கள் இந்தச் சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.
  • ஒருங்கிணைந்த ஜம்மு மற்றும் காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவ்வளவு எளிதில் காஷ்மீர் தலைவர்கள் விட்டுத் தந்துவிட மாட்டார்கள் என்றாலும் அவர்கள் சட்டமன்றத் தேர்தலில் பங்கேற்க முன்வந்திருப்பதே அந்தப் பிராந்தியத்தின் முக்கியத் திருப்புமுனையாக இருக்கும்.
  • ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் மொத்தம் 87 உறுப்பினர்களை உள்ளடக்கிய சட்டப் பேரவை இருந்தது.
  • காஷ்மீர் பகுதியில் 46 தொகுதிகளும், ஜம்முவில் 37 தொகுதிகளும் இருந்தன. தற்போதைய லடாக் ஒன்றியப் பிரதேசத்தில் நான்கு சட்டமன்றத் தொகுதிகள் மட்டுமே இடம் பெற்றிருந்தன.
  • எனவே, லடாக் பிரதேசத்துக்குச் சட்டமன்ற வாய்ப்பு அளிக்கப்படவில்லை. சட்டமன்ற மேலவை கலைக்கப்பட்டுவிட்டது.
  • நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் மார்ச் 2020-ல் நியமிக்கப்பட்ட ஜம்மு மற்றும் காஷ்மீர் தொகுதி மறுசீரமைப்பு ஆணையம், இன்னும் சில மாதங்களில் தனது பணியை முடித்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • தொகுதிகளின் எண்ணிக்கையிலும் ஏழு தொகுதிகள் புதிதாக இணையவிருக்கின்றன. தொகுதி மறுசீரமைப்பைத் தொடர்ந்து, ஒன்றியப் பிரதேசமான ஜம்மு மற்றும் காஷ்மீரில் 90 தொகுதிகளுக்குச் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படும்.
  • இந்தப் பிராந்தியத்தின் ஐந்து மக்களவை உறுப்பினர்களுடன் இணைந்து செயல்படும் வகையில்தான் இந்த மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
  • எனினும், மாநிலமானது ஒன்றியப் பிரதேசமாக்கப்பட்டதைக் கண்டிக்கும் வகையில், தேசிய மாநாட்டுக் கட்சியினர் இதுவரை ஆணையக் கூட்டங்களில் பங்கேற்காமல் தவிர்த்து வருகின்றனர்.
  • தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி இரண்டுமே ஜம்முவும் காஷ்மீரும் ஒன்றியப் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ளவில்லை.
  • மாநில அந்தஸ்து, சிறப்பு அந்தஸ்து இரண்டையும் திரும்ப அளிக்க வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாக இருந்துவருகிறது. எனினும், இந்தக் கோரிக்கைகளில் முன்பிருந்த வேகமும் தீவிரமும் கடந்த சில மாதங்களில் சற்றே மட்டுப்பட்டிருக்கிறது.
  • காஷ்மீர் தலைவர்கள் சிறப்பு அந்தஸ்துக்கான கோரிக்கையை விட்டுக்கொடுத்து, மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க முன்வரும்பட்சத்தில் இந்தப் பேச்சுவார்த்தைகள் இருதரப்புக்குமே வெற்றிகரமாக முடியும் என்று தோன்றுகிறது.
  • காஷ்மீர் வரலாற்றில் இதுவரை ஒன்றிய அரசின் பேச்சுவார்த்தைகள் பெரிதும் பயங்கரவாத அமைப்புகளுடனேயே நடத்தப்பட்டிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தை என்ற வகையில் ஒன்றிய அரசின் முன்னெடுப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (28 - 06 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்