TNPSC Thervupettagam

ஜான் சிங்: களப்பணியும் காட்டுயிர் பேணலும்

June 15 , 2024 209 days 166 0
  • கோயம்புத்தூரில் நான் பணிபுரிந்து கொண்டிருந்தபோது ஒரு நாள் எனது அலுவலகத்திற்கு ஜான்சிங் வந்தார். தற்போது ஒரு கல்லூரியில் போதித்துக் கொண்டிருப்பதாகவும், காட்டுயிரியலில் கொண்ட ஆர்வத்தினால் தனது பணிப்பாதையை மாற்ற நினைத்துக்கொண்டிருப்பதாகவும் சொன்னார். அவர் ஏற்கெனவே முடிவுசெய்துவிட்டார் என்று எனக்குப் பட்டது. ஒரு சிறிய உந்துதல்தான் அவருக்குத் தேவைப்பட்டது. ‘உங்களை ஈர்க்கின்றது என்கிற ஒரே காரணத்திற்காக ஒரு துறையில் நீங்கள் நுழைந்தால், அதில் நிச்சயம் பிரகாசிப்பீர்கள்’ என்று கூறினேன். காட்டுயிரியலில் ஜான்சிங் பதித்த தடத்தில் பலர் இன்று ஆர்வத்துடன் பயணிக்கின்றனர்.
  • நாங்குநேரிக்கு அருகே உள்ள மருதக்குளத்தில் 1945இல் பிறந்தவர் ஆசீர் ஜவஹர் தாமஸ் ஜான்சிங். அவருடைய சிறு வயதிலேயே இயற்கையின் மீதான ஆர்வத்தை அவரது பெற்றோர் வளர்த்தெடுத்தனர். எளிய குடும்பம். தாய், தந்தை இருவரும் பள்ளி ஆசிரியர்கள். அருகிலிருந்த களக்காடு காட்டுக்கு அவரது தந்தை அடிக்கடி கூட்டிச்செல்வார். மதராஸ் கிறிஸ்துவக் கல்லூரியில் விலங்கியல் முதுகலைப் பட்டம் பெற்று சிவகங்கையில் ஒரு கல்லூரியில் ஜான்சிங் விரிவுரையாளர் ஆனார்.
  • தனது ஆசானாக ஜே.சி.டேனியலை இவர் குறிப்பிடுகின்றார். பம்பாய் இயற்கை வரலாற்றுக்கழகத்தை வெகுகாலமாக நடத்தியவர் இந்த நாகர்கோவில்காரர். The Leopard in India போன்ற பல நூல்களை எழுதிய இவரை 1971 ஆண்டில் களக்காட்டில் தற்செயலாகச் சந்தித்தார் ஜான்சிங். அந்தச் சந்திப்பு அவர் வாழ்க்கையை மாற்றியது. காட்டுயிரியல் தளத்திற்கு ஜான்சிங் வர வேண்டும் என்கிற விதையை டேனியல் ஊன்றினார். எழுபதுகளில் காட்டுயிரியலாளர் மைக்கேல் ஃபாக்ஸ் (Michael Fox) பந்திப்பூரில் ஊனுண்ணிகளைப் பற்றி ஆராய வந்தபோது, ஜான்சிங்கை அவரிடம் உதவியாளராக டேனியல் சேர்த்துவிட்டார். இங்கு ஜான்சிங் நல்ல கள அனுபவத்தைப் பெற்றார். அதே நிலப்பரப்பில் செந்நாய்களைப் பற்றி ஆய்வு செய்து பின்னர் முனைவர் பட்டம் பெற்றார். காட்டுயிரியலில் ஓர் இந்தியர் பெற்ற முதல் முனைவர் பட்டம் இது.
  • அந்தக் காலகட்டத்தில் காட்டுயிரியல் என்றொரு துறை கல்விப்புலத்தில் தோன்றி யிருக்கவில்லை. நாட்டிலும் இது பற்றிய விழிப்புணர்வு சிறிதளவுகூட இல்லை. வேட்டையாடிகள் விட்ட சரடுகள் இயற்கை வரலாறு என்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த காலம் அது. வெகு சில ஆர்வலர்கள் மட்டும் காட்டுயிர் பற்றி எழுதிக்கொண்டிருந்தனர். அப்படிப்பட்டவர்களில் சென்னையில் எம்.கிருஷ்ணன், வடகிழக்கு இந்தியாவில் இ. பி. ஜீ (E. P. Gee ) தற்போது நினைவிற்கு வருகின்றனர். என்றாலும் காட்டுயிர் பற்றிய பிரக்ஞை மெதுவாக வளரத் தொடங்கி, 1982இல் டேராடூனில் இந்தியக் காட்டுயிர் நிறுவனம் (Wildlife Institute of India) தோன்றியது.

காட்டுயிர் நிறுவனத்தில்...

  • காட்டுயிரியலில் முனைவர் பட்டம் பெற்றிருந்த ஜான்சிங்கை அந்நிறுவனம் உற்சாகத்துடன் ஓர் ஆசிரியராக ஏற்றுக் கொண்டது. 2005இல் பணி ஓய்வு பெறும்வரை அங்கு அவர் பணியாற்றினார். புலத் தலைவர் பதவிக்கு (Dean) உயர்த்தப்பட்டார். “டேராடூனில் நான் கழித்த 20 ஆண்டுகள்தான் என் வாழ்வில் சிறப்பானவை” என்று ஒரு முறை கூறினார்.
  • ஜான்சிங் இரண்டு கருதுகோள்களை முன்னிறுத்தினார். முதலாவது கள ஆய்வு. அங்குதான் காட்டுயிர் பற்றிய புரிதல் கிடைக்கும் என்று நம்பினார். கணிணி முன் அமர்ந்து காட்டுயிரியல் ஆய்வு செய்பவர் அல்ல அவர். இந்தத் துறையில் களப்பணி இன்றியமையாதது என்பதை வலியுறுத்துவார். இரண்டாவது காட்டுயிர் பேணலில் அறிவியலுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். அதாவது உணர்வு வயப்பட்டு, கருணையின் பேரில், முடிவுகள் எடுக்கப்படக் கூடாது என்றார். ஒரு வேங்கைப் புலி, ஆள்கொல்லியானால் அது சுட்டுக் கொல்லப்பட வேண்டும். இதே கருத்தை சாலிம் அலி தனது சுயசரிதையில் (The Fall of the Sparrow) கூறியிருக்கின்றார்.
  • காட்டுயிர் பேணல் சார்ந்த தனது கருத்துகளைத் துணிச்சலுடன் ஜான்சிங் முன்வைத்தார். பெங்களூருவில் காட்டுயிரியல் ஆய்வு மாணவர்களுக்கான மாநாட்டில் வேட்டையை ஆதரித்து அவர் பேசியதைக் கேட்டிருக்கின்றேன். நீல்காய், காட்டுப்பன்றி போன்ற விலங்குகள் பயிர்களை நாசம் செய்வதைக் குறிப்பிட்டு, இவற்றை சுட அனுமதி தரப்பட வேண்டும் என்றார். நமீபிய நாட்டுச் சிவிங்கிப்புலிகளை இந்தியாவில் குனோ சரணாலயத்தில் விடும் முயற்சியைக் கடுமையாக எதிர்த்தார். அது சிவிங்கிப்புலிக்கு ஏற்ற வாழிடமல்ல; கோடையில் 42 டிகிரி வெயிலைச் சிவிங்கிக் குட்டிகள் தாங்காது என்பது இவர் வாதம். அதேபோல், கிர் சரணாலயத்திலுள்ள சிங்கங்களுக்குச் சீக்கிரமே வேறு ஒரு வாழிடம் தெரிந்தெடுக்கப்படாவிட்டால், அவை கொள்ளைநோயால் அழியும் வாய்ப்பு உள்ளது என்றார்.
  • தேசிய காட்டுயிர் வாரியத்தில் ( National Board of Wildlife) உறுப்பினராக இருந்த ஆண்டுகளில் நாட்டின் காட்டுயிர் தளத்தில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தினார். யானை செயல்திட்டம் (Project Elephant) உருவாக உதவினார். அதே போல் வில்லிப்புத்தூர் அருகே சாம்பல்நிற அணில் சரணாலயம் (Grizzled Squirrel Sanctuary) அவருடைய பரிந்துரையால் ஏற்படுத்தப்பட்ட து.காட்டில் வாழும் பழங்குடியினருக்காக அங்கு குரல் கொடுத்தார்.

தொடரும் தாக்கம்

  • மேற்குத் தொடர்ச்சி மலைகளை நன்கு தெரிந்து வைத்திருந்தார். அவர் கால்படாத மலைகளே இங்கில்லை எனலாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்கூட அவர் அகஸ்திய மலையில் ஏறினார். அவர் மேற்கொண்ட பல மலைநடைகளைப் பற்றி ஃபிரண்ட் லைன் இதழில் கட்டுரைகள் எழுதினார். அத்துடன் Field Days: A Naturalists Journey Through South and South East Asia (2005) போன்ற சில நூல்களையும் எழுதியிருக்கின்றார்.
  • உகாண்டா அரசின் வனத்துறைக்கு ஆலோசகராக அழைக்கப்பட்ட அவர், அங்கு காட்டுயிரியல் முதுகலைப் பட்டப்படிப்பிற்குப் பாடத்திட்டத்தை வகுத்துக்கொடுத்தார். வனச்சரகர்களுக்கும் பாடக்கோப்பு ஒன்றைத் தீட்டினார். யானைகளுக்கு ரேடியோ-கழுத்துப் பட்டை பொருத்தும் முறையை அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். அதேபோல் யானை வல்லுநர் அஜய் தேசாயுடன் சேர்ந்து காங்கோ நாட்டிலும் யானைகளுக்குக் கழுத்துப்பட்டை பொருத்தும் முறையைப் பயிற்றுவித்தார்.
  • டேராடூன் காட்டுயிர் நிறுவனத்தில் பயிற்சி பெற்ற இந்திய வனப்பணி அதிகாரிகள் (IFS) அவரது தாக்கத்துக்கு உள்ளானது, நம் சுற்றுச்சுழல் வரலாற்றில் ஒரு முக்கியப் புள்ளி. வழமையாக, காட்டுயிரினங்கள் பற்றி ஆய்வு கவைக்கு உதவாது என்று நிலைப்பாட்டை எடுத்திருந்த அதிகாரிகளுடைய பார்வையில் பெரும் மாற்றத்தை ஜான்சிங்ஏற்படுத்தினார். காட்டுயிரியல் கல்விப் புலத்திற்கும் வனத் துறைக்கும் ஒரு பாலமாக அவர் விளங்கினார்.
  • அவருடைய மாணவர்கள் அவரைப் போற்றுகின்றார்கள். எவ்வித சுடுவார்த்தையும் அவரிடமிருந்து வராது என்கின்றனர். அவர்களை அன்புடன் அரவணைத்துச் செல்லக்கூடியவர். முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுடன் அவரும் களப்பணிக்குப் போவார். அவருடைய மாணவர்கள் பலர், கல்விப் புலத்திலும் அரசு அலுவலங்களிலும் அவரது கருத்தாக்கங்களை இன்றைக்கும் ஏந்திச்செல்கின்றார்கள்.

நன்றி: இந்து தமிழ் திசை (15 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்