TNPSC Thervupettagam

ஜார்க்கண்டில் வெற்றி யார் பக்கம்?

November 13 , 2024 73 days 85 0

ஜார்க்கண்டில் வெற்றி யார் பக்கம்?

  • “ஹேமந்த் பாபு. உங்கள் ஆட்சியின் நாள்கள் எண்ணப்​படு​கின்றன. உங்கள் தோல்வி உறுதி” – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜார்க்​கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு விடுத்​திருக்கும் சவால் இது. “ஒரு பழங்குடி முதல்​வரிட​மிருந்து பதவியைப் பறிப்​ப​தற்கு முழுமூச்சுடன் பாஜக முயல்​கிறது; அக்கட்​சியின் வேட்பாளர்​களின் எண்ணிக்கை​யைவிட அதிக எண்ணிக்கையிலான பாஜக தலைவர்கள் பிரச்​சா​ரத்தில் ஈடுபட்​டிருக்​கின்​றனர்” என்று இண்டியா கூட்டணித் தலைவர்கள் பதிலடி கொடுக்​கின்​றனர்.
  • “பழங்​குடி​யினரின் நிலங்​களைப் பறித்​துக்​கொள்ள வங்கதேச சட்டவிரோதக் குடியேறிகளை ஹேமந்த் சோரன் அரசு அனுமதிக்​கிறது” என்று பாஜக குற்றம்​சாட்ட, “ஜார்க்​கண்டின் கனிம வளங்களைக் கொள்ளை​யடிக்கவே ஆட்சியைப் பிடிக்க பாஜக முயல்​கிறது” என இண்டியா கூட்டணி புகார் கூறுகிறது.
  • இன்று (நவம்பர் 13) நடைபெறவுள்ள ஜார்க்​கண்ட் சட்டமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்​பதிவு பெரும் எதிர்​பார்ப்பை ஏற்படுத்​தி​யிருக்​கிறது. 2000ஆம் ஆண்டில், பிஹாரிலிருந்து தனி மாநிலமாக ஜார்க்​கண்ட் பிரிந்த பின்னர், நீண்ட​காலம் அங்கு ஆட்சியில் இருந்த பாஜக, தற்போது மீண்டும் அரியணை ஏற பிரம்மப் பிரயத்தனம் செய்கிறது.
  • மறுபுறம், இண்டியா கூட்டணி வலுவிழந்​து​வருவதாக முன்வைக்​கப்​படும் விமர்​சனங்​களுக்குப் பதிலடியாக ஹேமந்த் சோரனின் ஆட்சியைத் தக்கவைத்​துக்​கொள்ள அக்கூட்டணி கடும் முயற்​சியில் ஈடுபட்​டிருக்​கிறது. எப்படி இருக்​கிறது சூழல்?

மாறிய களம்:

  • 2019 மக்களவைத் தேர்தலில், அனைத்து ஜார்க்​கண்ட் மாணவர் சங்கத்​துடன் (ஏ.ஜே.எஸ்​.யூ.) கூட்டணி அமைத்து 12 இடங்களில் வென்ற பாஜகவால், அதே ஆண்டின் இறுதியில் நடந்த ஜார்க்​கண்ட் சட்டமன்றத் தேர்தலில் தனித்துக் களம் கண்டு - மொத்தம் உள்ள 81 தொகுதி​களில் 25 இடங்களைத்தான் வெல்ல முடிந்தது.
  • அந்தத் தேர்தலில், காஷ்மீரில் 370 ஆவது சட்டக்கூறு ரத்து, ராமர் கோயில், தேசியக் குடிமக்கள் பதிவேடு, குடியுரிமைத் திருத்தச் சட்டம் என பாஜக முன்வைத்த தேர்தல் விவகாரங்கள் எடுபட​வில்லை. இவற்றுக்கும் ஜார்க்​கண்ட் அரசியல் களத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஹேமந்த் சோரன் முன்வைத்த பதிலடி வியூகம் பாஜகவுக்குத் தோல்வியைத் தந்தது.
  • இந்த முறை, வங்கதேசத்​திலிருந்து வரும் சட்டவிரோதக் குடியேறிகளால் ஜார்க்​கண்​டுக்குப் பல்வேறு பிரச்​சினைகள் ஏற்படுவதாக பாஜக தொடர்ந்து குற்றம்​சாட்​டிவரு​கிறது. ஜார்க்​கண்ட் மக்கள்​தொகையில் பழங்குடிகள் 28%, முஸ்லிம்கள் 14.05%. இந்தச் சூழலில், முஸ்லிம்​களைப் பழங்குடி​யினருக்கு எதிராக நிறுத்தும் உத்தியை பாஜக கையாள்​கிறது.
  • 2014 சட்டமன்றத் தேர்தலில் 28 பழங்குடித் தனித்​தொகு​தி​களில் 12ஐ பாஜக கைப்பற்றியது. எனினும் 2019 சட்டமன்றத் தேர்தலில் வெறும் இரண்டே இடங்களில்தான் பாஜக வென்றது. பழங்குடி​யினரின் நிலங்​களைப் பிறர் வாங்கு​வதைத் தடைசெய்யும் சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம், சந்தால் பர்கானா குத்தகைச் சட்டங்​களில் 2016இல் திருத்தம் மேற்கொண்டது ரகுவர் தாஸ் தலைமையிலான பாஜக அரசு.
  • இதன் மூலம் பழங்குடி​யினர் பகுதி​களில் பள்ளிகள், மருத்​துவ​மனைகள் உள்ளிட்ட உள்கட்​டமைப்பு​களைக் கொண்டு​வரு​வதுடன், தனியார் நிறுவனங்கள் தொழில் தொடங்க அனுமதி​யளிக்​கவும் அரசு திட்ட​மிட்டது. பழங்குடி​யினர் நிலங்கள் கையகப்​படுத்​தப்​பட்டன. இதைக் கண்டித்து ‘பத்தல்கடி’ எனும் இயக்கத்தை ஆரம்பித்து பழங்குடி​யினர் போராடினர். அவர்கள் மீது வழக்கு தொடர்ந்தது அரசு. 10,000 பேர் மீது தேசத் துரோக வழக்குகள் தொடரப்​பட்டன. பழங்குடி​யினரின் அதிருப்​தியும் கோபமும் 2019 சட்டமன்றத் தேர்தலில் எதிரொலித்தன.
  • இந்நிலை​யில், இந்தத் தேர்தலில் பழங்குடிகளின் வாக்கு​களைக் கவர்வதில் முழுமூச்​சுடன் பாஜக இறங்கி​யிருக்​கிறது. இந்தப் பணியில், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா களமிறக்​கப்​பட்​டிருக்​கிறார். வங்கதேச சட்டவிரோதக் குடியேறிகள் மேற்கு வங்கம் வழியாக, ஜார்க்கண்டுக்கு வருவதாக பாஜக தொடர்ந்து குற்றம்​சாட்​டிவரு​கிறது.
  • அந்நியர்கள் மீதான பழங்குடி​யினரின் எதிர்ப்பைக் கொள்கை​யாகவே வைத்திருந்த சுதந்​திரப் போராட்ட வீரர் பிர்ஸா முண்டாவை பாஜகவினர் போற்றிப் புகழ்​கின்​றனர். பொது சிவில் சட்டத்தைக் கொண்டு​வருவது; அதில் பழங்குடி​யினருக்கு விலக்கு அளிப்பது என இதிலும் பழங்குடிகள் எதிர் முஸ்லிம்கள் என்னும் வியூகத்தை பாஜக முன்வைக்​கிறது.
  • மறுபுறம், வங்கதேச சட்டவிரோதக் குடியேறிகள் ஊடுரு​வு​கிறார்கள் என்றால் மத்திய அரசும் உள் துறையும் என்ன செய்து​கொண்​டிருக்​கின்றன என இண்டியா கூட்டணி கேள்வி எழுப்பு​கிறது. அத்துடன், ‘பத்தல்கடி’ போராளிகள் மீதான வழக்குகளை ரத்துசெய்தது, பழங்குடி​யினர் மத்தியில் ஹேமந்த் சோரன் மீதான செல்வாக்கைத் தக்கவைத்​திருப்​ப​தாகக் கருதப்​படு​கிறது.

ஊழல் குற்றச்​சாட்டுகள்:

  • இன்னொரு​புறம், ஊழல் குற்றச்​சாட்டுகளை முன்வைத்து ஹேமந்த் சோரன் அரசு மீது மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் நடத்திவரும் சோதனைகள் பேசுபொருளாகி​யிருக்​கின்றன. 8.86 ஏக்கர் நிலத்தைச் சட்டவிரோத​மாகக் கையகப்​படுத்​தியதாக ஹேமந்த் சோரன் மீது 2023இல் அமலாக்கத் துறை குற்றம்​சாட்டிய நிலையில், அவர் ராஜினாமா செய்ய நேர்ந்தது. கைதுசெய்​யப்பட்ட அவர் பிணையில் வெளிவந்து மீண்டும் முதல்​வ​ராகிவிட, அவருக்குப் பதில் முதல்வராக இருந்த சம்பயி சோரன் அதிருப்​தி​யடைந்து பாஜகவில் ஐக்கிய​மாகி​விட்​டார். தேர்தல் நெருக்​கத்​தில், ராஞ்சியில் ஹேமந்த் சோரனின் உதவியாளர் சுனில் ஸ்ரீவஸ்தவாவின் வீடு உள்ளிட்ட 9 இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடத்தியது பரபரப்​பாகப் பேசப்​பட்டது.
  • சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்​படும் என இண்டியா கூட்டணி முன்வைத்​திருக்கும் வாக்குறு​திக்குத் தனது பாணியில் பாஜக பதிலடி கொடுத்து​வரு​கிறது. 1990களில் ஓபிசி சமூகத்​தினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்ட நிலையில், அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியால் மக்களவைத் தேர்தல்​களில் 250 இடங்களைக்கூடப் பெற முடிய​வில்லை என்று விமர்​சித்திருக்கும் மோடி, சாதிவாரிக் கணக்கெடுப்பை முன்வைப்பதன் மூலம் எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமூகங்​களுக்கு இடையிலான ஒற்றுமையைக் குலைக்க இண்டியா கூட்டணி முயல்​வ​தாகக் குற்றம்​சாட்​டி​யிருக்​கிறார்.
  • காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிவந்த 370ஆவது சட்டக்கூறு திரும்பக் கொண்டு​வரப்​படும் என ஓமர் அப்துல்லா அரசு கொண்டுவந்த தீர்மானம், ஜார்க்​கண்ட் தேர்தல் களத்திலும் அதிர்​வுகளை ஏற்படுத்​தி​யிருக்​கிறது. “இது பாகிஸ்​தானின் அஜெண்டா” என்று விமர்​சிக்க பிரதமர் மோடி தயங்க​வில்லை.

மகளிர் வாக்குகள்:

  • ஜார்க்​கண்ட் வாக்காளர்​களில் 40%க்கும் மேற்பட்டோர் பெண்கள். முதல் முறை வாக்காளர்​களில் 56% பேர் பெண்கள். இந்நிலை​யில், ‘மைன்யா சம்மான் யோஜனா’ என்னும் திட்டத்​தின்கீழ் மகளிருக்கு மாதம் ரூ.1,000 என வழங்கப்​பட்டுவந்த உதவித்​தொகை, ரூ.2,500 ஆக உயர்த்​தப்​படும் என ஜார்க்​கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி வாக்குறுதி அளித்​திருக்​கிறது.
  • 10 லட்சம் இளைஞர்​களுக்கு வேலைவாய்ப்பு, ஒவ்வொரு நபருக்கும் மாதம் தலா ஏழு கிலோ உணவு தானியம், ரூ.15 லட்சத்​துக்கான சுகாதாரக் காப்பீடு, ரூ.450-க்கு எரிவாயு சிலிண்டர் எனப் பல்வேறு வாக்குறு​திகளை இண்டியா கூட்டணி முன்வைத்​திருக்​கிறது. இலவசத் திட்டங்களை எதிர்க்கும் பாஜகவும், மகளிருக்கு மாதம் ரூ.2,100 உதவித்தொகை, ரூ.500க்கு எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட வாக்குறு​திகளை அளித்​திருக்​கிறது.
  • ஹேமந்த் சோரன் கைது செய்​யப்​பட்​டதைத் தொடர்ந்து அவரது மனைவி கல்பனா சோரன் அரசியல் பயணத்தைத் தொடங்​கினார். கல்பனா சோரன் கலந்து​கொள்ளும் கூட்டங்​களில் அதிக அளவிலான மக்கள் - குறிப்பாக, பெண்கள் கூடுவது கவனம் ஈர்த்திருக்​கிறது.

கூட்டணி நிலவரம்:

  • ஜார்க்​கண்​டில், ஜார்க்​கண்ட் முக்தி மோர்ச்சா 43 தொகுதி​களிலும் காங்கிரஸ் 30 தொகுதி​களிலும் போட்டி​யிடு​கின்றன. சத்தர்​பூர், பிஷ்ரம்​பூர், தன்வர் ஆகிய மூன்று தொகுதி​களில் ‘நட்பார்ந்த மோதல்’ என்ற பெயரில் இண்டியா கூட்டணிக் கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்​தி​யிருக்​கின்றன. ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கு வெறும் ஆறே இடங்கள் ஒதுக்​கப்​பட்டது அக்கட்சியை அதிருப்​திக்கு உள்ளாக்கி​யிருக்​கிறது. இண்டியா கூட்ட​ணியில் இடம் கிடைக்​காததால் 21 தொகுதி​களில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்களை நிறுத்​தி​யிருக்​கிறது. இது வாக்குகள் பிரிய வழிவகுக்​கலாம் என்றும் பேசப்​படு​கிறது.
  • ஜார்க்​கண்ட் மக்கள்​தொகையில் 15% பங்கு வகிக்கும் குர்மி சமூகத்தைச் சேர்ந்த ஜெயராம் மஹதோ என்னும் இளம் தலைவர் இந்தத் தேர்தலில் கவனம் ஈர்த்திருக்​கிறார். 2022இல் போஜ்புரி, மகஹி மொழிகளை ஜார்க்​கண்டின் பிராந்திய மொழிகளின் பட்டியலில் இணைப்​ப​தற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராடிய ஜெயராம் மஹதோ, ஜார்க்​கண்ட் லோக்தந்​திரிக் கிராந்​திகாரி மோர்ச்சா (ஜேஎல்​கேஎம்) என்னும் கட்சியைத் தொடங்கி மக்களவைத் தேர்தலில் போட்டி​யிட்டுத் தோல்வியடைந்​தார்.
  • எனினும் அவரது கட்சி​யினருக்குக் கிடைத்த வாக்குகள் அவரது முக்கி​யத்து​வத்தை உணர்த்தின. பாஜகவுக்​கும் இண்டியா கூட்ட​ணிக்கும் சற்றே அச்சுறுத்தலாக இவர் கருதப்​படு​கிறார். அதேவேளையில் அக்கட்​சியைச் சேர்ந்த வேட்பாளர்​களில் சிலர் ஜேஎம்எம், கட்சியில் சேர்ந்​து​வருவது கவனிக்​கத்​தக்கது. குர்மி சமூகத்தைச் சேர்ந்​தவரும் அனைத்து ஜார்க்​கண்ட் மாணவர் சங்கம் கட்சித் தலைவருமான சுதேஷ் மஹதோ, இந்த முறை பாஜக பக்கம் இருப்பது அக்கட்​சிக்கு அனுகூலம் எனக் கருதப்​படு​கிறது.
  • காங்கிரஸைப் பொறுத்தவரை இந்தத் தேர்தலில் முழு மூச்சாகப் பிரச்​சாரம் மேற்கொள்ள​வில்லை. அக்கட்​சியின் தேர்தல் பொறுப்​பாளரான குலாம் அஹ்மத் மீர், சமீபத்தில் நடைபெற்ற காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் வென்றவர். காஷ்மீர் சட்டமன்ற நடவடிக்கை​களில் காட்டும் ஈடுபாட்டை, ஜார்க்​கண்ட் தேர்தலில் அவர் செலுத்​தவில்லை என்கிற விமர்சனம் உண்டு.
  • “இண்டியா கூட்டணி நமுத்துப்போன பட்டாசு, பாஜக ராக்கெட் வேகத்தில் ஜார்க்​கண்டை முன்னேற்றும்” எனப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருக்​கிறார். கடந்து​போ​யிருக்கும் தீபாவளி யாருக்கு வெற்றியைப் பரிசளிக்கும் என நவம்பர் 23 இல் தெரிந்​து​விடும்​.

நன்றி: இந்து தமிழ் திசை (13 – 11 – 2024)

Be the first to Comment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்

PrevNext
SuMoTuWeThFrSa
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
Top