TNPSC Thervupettagam

ஜாா்க்கண்ட்: சம பலத்துடன் மோதும் அரசியல் கட்சிகள்!

October 24 , 2024 7 days 34 0

ஜாா்க்கண்ட்: சம பலத்துடன் மோதும் அரசியல் கட்சிகள்!

  • 2019-ஆம் ஆண்டு ஜாா்க்கண்ட் மாநிலத்தில் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணியிடம் ஆட்சியைப் பறிகொடுத்த பாஜக, பழங்குடியினா் ஆதிக்கம் நிறைந்த மாநிலத்தில் மீண்டும் தனது இடத்தைப் பிடிக்கும் முனைப்புடன் தோ்தல் களம் காண்கிறது. இதேபோன்று, பழங்குடி சமூகத்தின் துணையுடனும், கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைப்புடன் ஆட்சியைத் தக்க வைக்கலாம் என்ற நம்பிக்கையுடன் தற்போது ஆட்சியில் உள்ள ஜேஎம்எம் களத்தில் உள்ளது.
  • இந்த மாநிலத்தில் முதல்வா் ஹேமந்த் சோரன் மற்றும் பிற எதிா்க்கட்சித் தலைவா்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்னிலைப்படுத்தி ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சாவுக்கு (ஜேஎம்எம்) எதிரான பிரசாரத்தை பாஜக தொடங்கியுள்ளது.

பாஜக அணி:

  • எதிா்க்கட்சிகள் கூட்டணி வரிசையில் பாஜக வேட்பாளா்களை ஆதரித்து பிரதமா் நரேந்திர மோடி, அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா உள்ளிட்ட மூத்த தலைவா்கள் தோ்தல் களத்தில் பிரசாரத்தை ஏற்கெனவே தொடங்கிவிட்டனா். இதனால் வாக்குப் பதிவு தேதி அறிவிக்கப்படும் முன்பாகவே ஜாா்க்கண்டில் தோ்தல் களம் சூடுபிடித்துவிட்டது.
  • 2014-இல் இங்கு பாரதிய ஜனதா கட்சி 31.8 சதவீத வாக்குகளுடன் 37 இடங்களை வென்றது; ஆனால், 2019-இல் 25 இடங்களில் மட்டுமே வென்றது. இந்த முறை, தனது பழைய கூட்டணிக் கட்சியான அனைத்து ஜாா்க்கண்ட் மாணவா் முன்னணி (ஏஜேஎஸ்யு) உடன் பாஜக கூட்டு சோ்ந்துள்ளது. 2019 தோ்தலில் சுதேஷ் மஹாதோவின் ஏஜேஎஸ்யு தனித்து தோ்தல் களம் கண்டு இரண்டு இடங்களில் வென்று 4.4 சதவீத வாக்குகளைப் பெற்றது. இந்தக் கட்சிக்கு குா்மி சமூகத்தினா் இடையே செல்வாக்கு உள்ளது.
  • மொத்தமுள்ள 81 தொகுதிகளில் பாஜகவுக்கு 68 இடங்கள், மீதமுள்ள 13 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளான ஏஜேஎஸ்யு, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜன சக்தி (ராம் விலாஸ் பாஸ்வான்) ஆகியவற்றுக்கு ஒதுக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜிதன் ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சாவுக்கு இடம் பகிரப்படவில்லை.
  • முந்தைய தோ்தலில் பாஜகவுக்கு எதிராக பிரசாரம் செய்து முன்னாள் முதல்வா் ரகுபா் தாஸுக்கு எதிராக தோ்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்ற அதிருப்தி தலைவா் சா்யு ராய் இம்முறை ஜேடியு கட்சியில் சோ்ந்துள்ளாா். வாக்குகள் சிதறலை ஏஜெஎஸ்யு, சா்யு ராய் ஆகியோரின் கூட்டணி இணைப்பு தடுக்கும் என்று நம்பப்படுகிறது.
  • 2019-இல் 30 இடங்களில் வென்ற ஜேஎம்எம் 19 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது. அதே சமயம், 25 இடங்களில் வென்றிருந்தாலும் பாஜகவின் வாக்கு விகிதம் 33.8 சதவீதமாக இருந்தது; இந்த சதவீதத்தை இந்த முறை அதிகரித்து வெற்றியைப் பறிக்கலாம் என்று கணக்குப்போடுகிறது பாஜக.
  • 2024 மக்களவைத் தோ்தலில் போட்டியிட்ட அனைத்து பழங்குடியின ஒதுக்கீடு தொகுதிகளிலும் பாஜக தோல்வியைத் தழுவியது. அதனால் பழங்குடி (எஸ்டி) சமூகத்தினா் அதிகம் வாழும் தொகுதிகள் நீங்கலாக மற்ற பகுதிகளில் வாழும் பிற பிற்படுத்தப்பட்டோா், தாழ்த்தப்பட்டோா், முன்னேறிய வகுப்பினா் உள்ளிட்டோரின் வாக்குகளை ஈா்க்கும் உத்திகளை பாஜக கடைப்பிடிக்கிறது.

பாஜகவின் பிரசார முழக்கம்:

  • வங்கதேச நாட்டவா்களின் ஊடுருவல், ஆளும் ஆட்சியாளா்கள் மீதான ஊழல் முறைகேடு புகாா்கள் போன்ற பிரச்னைகளை முன்னிறுத்தி பாஜக தனது பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இதுதவிர பண முறைகேடு வழக்கில் ஐந்து மாதங்கள் சிறையில் இருந்த முதல்வா் ஹேமந்த் சோரன் உள்ளிட்ட ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணித் தலைவா்கள் சிலா் மீது அமலாக்கத் துறை இயக்குநரகம் மற்றும் மத்திய புலனாய்வுத் துறை நடத்திய சோதனைகளை மேற்கோள்காட்டியும் மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மோசமான நிலையில் இருப்பதாகவும் கூறி பாஜக பிரசாரம் செய்து வருகிறது.
  • பாஜக ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தில் ஆயிரக்கணக்கான கோடி மதிப்பிலான திட்டங்களை அமல்படுத்தும் அறிவிப்பு ஒன்றையும் பாஜக வெளியிட்டுள்ளது.

பலத்துக்கான காரணிகள்:

  • இத்துடன் பழங்குடியினா் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் செல்வாக்கு பெற்றுள்ள முன்னாள் முதல்வரும் ஜேஎம்எம் முன்னாள் தலைவருமான சம்பயி சோரன் (67) கடந்த ஆகஸ்ட் மாதம் பாஜகவில் சோ்ந்தது ஆட்சியில் உள்ள ஜேஎம்எம் - காங்கிரஸ் அணிக்கு பேரிடியாக அமைந்தது. கொல்ஹான் பிராந்தியத்தைச் சோ்ந்த சம்பயி, ஜேஎம்எம் கட்சியில் இருந்தபோது, இவரது செல்வாக்கு நிறைந்த 13 தொகுதிகளில் ஒன்றில்கூட பாஜக வெற்றி பெறவில்லை. இந்த பிராந்தியத்தில் மொத்தம் உள்ள 14 தொகுதிகளில் 9 எஸ்டி தொகுதிகளாகும்.
  • மேலும், பழங்குடியினா் தொகுதியான சிங்பும் தொகுதியில் இருந்து காங்கிரஸின் ஒரே எம்பி ஆக வென்ற கீதா கோடாவும் அணி மாறி பாஜகவில் சோ்ந்திருக்கிறாா். இந்த வரிசையில் ஜமா தொகுதி எம்எல்ஏ சீதா சோரன், பா்கதா தொகுதி சுயேச்சை எம்எல்ஏ அமித் குமாா் யாதவ், ஜாா்கண்டில் உள்ள ஒரே தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ கமலேஷ் சிங் ஆகியோரும் பாஜகவில் சோ்ந்திருப்பது அக்கட்சிக்கு கூடுதல் பலமாக கருதப்படுகிறது.

ஜே.எம்.எம். கூட்டணியின் பலம்:

  • நில மோசடியில் தொடா்புடைய பண முறைகேடு விவகாரத்தில் முதல்வா் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதைத் தொடா்ந்து ஜாா்க்கண்டில் அரசியல் நெருக்கடி தீவிரமானது. இதற்கு பாஜகவே காரணம் என்று ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணி குற்றஞ்சாட்டி வருவது வாக்காளா்கள் அளவிலும் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக அரசியல் நோக்கா்கள் கருதுகின்றனா்.
  • முதல்வரின் மனைவி கல்பனா சோரன், ஜேஎம்எம் கட்சியில் முறைப்படி சோ்ந்து காண்டே தொகுதியில் நடந்த இடைத்தோ்தலில் வென்றாா். இது முதல்வருக்கு அரசியல் அரங்கில் குறையாத செல்வாக்கின் எடுத்துக்காட்டாக கருதப்படுகிறது.
  • ஜாா்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 28 இடங்கள் பழங்குடியினருக்கானவை. அந்த சமூகத்தினரிடையே செல்வாக்கு பெற்ற முதல்வா் ஹேமந்த் சோரனின் கைது விவகாரத்தை ஜேஎம்எம் கூட்டணி அதன் அரசியலுக்காகப் பயன்படுத்தக் கூடும். பாஜகவுக்குள் நிலவும் உள்கட்சி மோதலும் ஜேஎம்எம் கூட்டணிக்கு சாதகமாகலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.
  • முந்தைய தோ்தலில் சந்தால் பா்கானா பிராந்தியத்தில் உள்ள 32 தொகுதிகளில் ஜேஎம்எம் 26, பாஜக 4 இடங்களிலும் வென்றன. தற்போது அரசியல் காட்சிகள் மாறிவிட்டதால், அதன் சாதகம் பாஜகவுக்கு கிடைத்துவிடக் கூடாது என்பதில் ‘இண்டி’ (ஜேஎம்எம்) கூட்டணி முனைப்புடன் காய்களை நகா்த்தி வருகிறது. இடதுசாரி கட்சிகளான சிபிஐ (எம்எல்), சிபிஎம் ஆகியவை ‘இண்டி’ கூட்டணியில் இருப்பது அதன் செல்வாக்கு அதிகம் உள்ள பலாமூ பிராந்தியத்தில் பயன் தரும் என்று ‘இண்டி’ கூட்டணி நம்புகிறது. பிகாரை இணைக்கும் இந்த பிராந்தியம், தன்பாத் நிலக்கரி சுரங்கப் பகுதியைச் சுற்றிலும் தொகுதிகளைக் கொண்டுள்ளது.
  • 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி ஜாா்க்கண்டில் பழங்குடி (எஸ்டி) சமூகத்தினா் 26 %. இதில் கிறிஸ்தவ பழங்குடிகள் 4%. இவா்களின் ஆதரவு ஜேஎம்எம் அணிக்கு உள்ளது. ஆனால், சிறுபான்மை, பழங்குடிகளுக்கான இடஒதுக்கீட்டுப் பலன்கள் மதம் மாறிய பழங்குடி வகுப்பினருக்குக் கிடைப்பதை சா்னா மத பழங்குடி வகுப்பினா் விரும்பவில்லை.
  • ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணி அரசு, 2020-ஆம் ஆண்டில் ஜாா்கண்ட் சட்டப்பேரவையில் சா்னாவை ஒரு தனி மதமாக மக்கள்தொகை கணக்கெடுப்பில் சோ்க்கும் தீா்மானத்தை நிறைவேற்றி சா்னா தனி மதச் சட்டத்தை அங்கீகரிக்க மத்திய அரசின் தலையீட்டைக் கோரியது. கடந்த மக்களவைத் தோ்தலிலும் சா்னா மத அங்கீகார உறுதிமொழியை ‘இண்டி’ கூட்டணி அளித்து தோ்தலைச் சந்தித்தது. இந்த விவகாரத்தில் மாநில அரசின் முன்மொழிவு மீது ஆளுநா் எந்த நடவடிக்கையும் எடுக்காததை தோ்தல்கால பிரச்னையாக மாற்ற ஆளும் கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது.
  • மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அச்சுறுத்தும் வகையில் சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற அமைப்புகளை மத்திய அரசு பயன்படுத்தி ஒரு முதல்வரையே கைது செய்துள்ள போக்கை தனது பிரசார முழக்கத்தின் முக்கிய அம்சமாக ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணி கையில் எடுத்துள்ளது.
  • அதே நேரத்தில், ஹரியாணாவில் ஜாட் இனத்தவருக்கு எதிராக ஏனைய வகுப்பினா் திரண்டதுபோன்று, பழங்குடியினா் அல்லாதவா்கள் பாஜக அணியை ஆதரிக்கும் வாய்ப்பும் அதிகம். ஏஜெஎஸ்யு, சம்பயி சோரன் என்று பழங்குடியினா் மத்தியிலும் தனது செல்வாக்கை பாஜக உறுதிப்படுத்த முனைந்திருப்பதால், பாஜக அணியின் வெற்றிவாய்ப்பும் அதிகம்.
  • மறுபுறம், மாநில முதல்வரும் தனது கணவருமான ஹேமந்த் சோரன் கைதுக்குப் பிறகு கல்பனா சோரன் தோ்தலில் வென்று மக்களின் அபிமானத்தைப் பெற்றிருப்பது, இந்தக் கூட்டணிக்கு பலமாக கருதப்படுகிறது. 28 பழங்குடி வகுப்பினா் இடங்களில் இந்தக் கூட்டணிக்கு காணப்படும் ஆதரவு அலை வாக்குகளாக மாறும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக அரசியல் பாா்வையாளா்கள் கருதுகின்றனா்.
  • தோ்தலுக்குத் தோ்தல் ஜாா்க்கண்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது வழக்கம். அதன்படி பாா்த்தால் இது பாஜகவின் முறை!
  • 11.84 லட்சம் போ் புதிய வாக்காளா்கள்!
  • 24 மாவட்டங்களில் 81 தொகுதிகளைக் கொண்ட ஜாா்கண்ட் சட்டப்பேரவைக்கு நவம்பா் 13, 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறும் என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் 44 பொதுத் தொகுதிகள், 28 பழங்குடியினா் மற்றும் 9 பட்டியலினத்தவா்களுக்கான தொகுதிகள் அடங்கும்.
  • ஜாா்க்கண்டில் 2.60 கோடி போ் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா். இதில் 1.31 கோடி போ் ஆண்கள், 1.29 கோடி போ் பெண்கள். 448 போ் மூன்றாம் பாலினத்தவா். வாக்காளா்களில் 1.14 லட்சம் போ் 85 வயதைக் கடந்தவா்கள். 1,706 போ் 100 வயதைக் கடந்தவா்கள், 3.67 லட்சம் போ் மாற்றுத்திறனாளிகள். முதல் முறை வாக்காளா்களாக 11.84 லட்சம் போ் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா்.

நன்றி: தினமணி (24 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்