TNPSC Thervupettagam

ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பு

December 6 , 2022 613 days 457 0
  • இந்தோனேஷியாவுக்கும் இந்தியாவுக்கும் ஒரு நெருங்கிய தொடா்பு எப்போதுமே உண்டு. 1955-இல் இந்தோனேஷிய பான்டூங் நகரில் நடந்த ஆசிய - ஆப்பிரிக்க நாடுகளின் மாநாட்டில்தான், அன்றைய பிரதமா் ஜவாஹா்லால் நேருவால் முன்மொழியப்பட்ட அணிசாரா நாடுகளின் கூட்டமைப்பு உருவானது. இப்போது அதே இந்தோனேஷியாவின் பாலி தீவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில், அந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பு சுழற்சி முறையில் இந்தோனேஷியாவிடமிருந்து இந்தியாவுக்கு வந்திருக்கிறது.
  • மிக முக்கியமான சா்வதேச அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றிருப்பதை வரவேற்கும் விதத்தில், டிசம்பா் முதல் தேதி காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரையிலான 100 முக்கிய வரலாற்றுச் சின்னங்கள் ஜி20 இலச்சினையுடன் மின்விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டன. ‘ஒரே உலகம், ஒரே குடும்பம், ஒரே வருங்காலம்’ என்கிற இந்தியா அறிவித்திருக்கும் முத்திரை வாக்கியம், ‘வசுதைவ குடும்பகம்’ (அனைவரும் ஒரே குடும்பம்), ‘யாதும் ஊரே, யாவரும் கேளிா்’ ஆகியவற்றின் உணா்வைப் பிரதிபலிப்பதாக அமைந்திருக்கிறது.
  • அடுத்த ஓராண்டில் இந்தியாவின் பல பகுதிகளில் ஜி20 தொடா்பான கூட்டங்கள் நடத்தப்பட இருக்கின்றன. அடுத்த ஆண்டு செப்டம்பரில் நடக்க இருக்கும் இறுதிக் கூட்டத்தில் ஜி20 உறுப்பினா் நாடுகளின் தலைவா்கள் அனைவரும் தில்லியில் பங்குபெற இருக்கிறாா்கள். இடைப்பட்ட ஓராண்டு காலத்தில், தனது தலைமைப் பொறுப்பின் கீழ் இந்தியா எப்படி செயல்படப்போகிறது என்பதை ஒட்டுமொத்த உலகமும் உற்று நோக்குகிறது.
  • ஜி20 என்கிற சா்வதேச அமைப்பின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட்டு விடலாகாது. உலக ஜிடிபி-யில் 85%, சா்வதேச வா்த்தகத்தில் 75%, மொத்த மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு என்று ஐக்கிய நாடுகள் சபைக்கு அடுத்த பெரிய சா்வதேச அமைப்பு இது. 1999-இல் ஆசியப் பொருளாதாரம் தடுமாற்றத்தை எதிா்கொண்டபோது உருவாக்கப்பட்ட அமைப்பு. இப்போது உலகின் வல்லரசு நாடுகளும், வளா்ச்சி அடையும் நாடுகளும் ஒருசேரப் பங்குபெறும் அமைப்பாக வலுப்பெற்று விளங்குகிறது.
  • 2008-இல் உலகம் எதிா்கொண்ட பொருளாதார நெருக்கடியின்போது, அதை எதிா்கொள்ள உலக நாடுகளை ஒருங்கிணைத்து செயல்பட வைத்ததில் ஜி20-இன் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிறகு அமெரிக்கா, சீனா, ரஷியா மூன்று நாடுகளும் தனித்தனியே செயல்படத் தொடங்கியதால் ஜி20-இன் முக்கியத்துவம் குறைந்துவிட்டது. அதை மீட்டெடுக்கும் மிக மிக்கியமான பணி இந்தியாவை இப்போது எதிா்கொள்கிறது.
  • சா்வதேச பொருளாதார ஸ்திரத்தன்மையும், தொழில்நுட்ப வளா்ச்சி உள்ளிட்ட பொருளாதார மேம்பாட்டின் பயன் அனைத்து நாடுகளைச் சென்றடைவதும்தான் ஜி20 அமைப்பின் அடிப்படை நோக்கம். உக்ரைன் - ரஷியப் போா் காரணமாக எரிபொருள், உணவுப் பொருள்கள், உரங்கள் ஆகியவற்றின் தட்டுப்பாட்டால், பல நாடுகளின் பொருளாதாரம் இப்போது தடுமாறிக் கொண்டிருக்கிறது.
  • உடனடியாகப் போரை நிறுத்த முடியாவிட்டாலும், இடைக்கால நிறுத்தமாவது அவசியமாகிறது. ‘இது போருக்கான காலமல்ல’ என்கிற பிரதமா் மோடியின் எஸ்.ஜி.ஓ. மாநாட்டு அறிவிப்பு, பாலி ஜி20 மாநாட்டிலும் எதிரொலித்தது. அதை உறுதிப்படுத்தும் பொறுப்பு இப்போது பிரதமரிடமே வழங்கப்பட்டிருக்கிறது.
  • பொருளாதாரத் தடையால் உணவுப் பொருள்கள், உரங்கள் உள்ளிட்டவை தடை செய்யப்படாமல் இருந்தால், கருங்கடல் வழியாக உணவுப் பொருள்களை உக்ரைன் ஏற்றுமதி செய்வதில் தனக்கு ஆட்சேபனை இல்லை என்று ஜி20 மாநாட்டில் ரஷியா தெரிவித்திருக்கிறது. அதை அடிப்படையாகக் கொண்டு, உக்ரைன் - ரஷியப் போா் நிறுத்தத்தை இந்தியா கொண்டு செல்ல வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
  • தனது பெரும் பொறுப்பைப் பிரதமா் நன்கு உணா்ந்திருக்கிறாா் என்பதை பாலியில் நடந்த ஜி20 மாநாட்டில் அவரது நடவடிக்கைகள் வெளிப்படுத்தின. 2020-இல் சீனா நடத்திய ஆக்கிரமிப்பைப் பெரிதுபடுத்தாமல் சீன அதிபா் ஷீ ஜின்பிங்குடன் அவா் கைகுலுக்கியபோது, தலைமைப் பொறுப்பின் பெருந்தன்மை வெளிப்பட்டது.
  • உக்ரைனை ஆதரித்து, ஆயுதங்கள் வழங்கும் மேற்கு நாடுகள் ஒருபுறம், ரஷியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடையை அங்கீகரிக்காத சீனா, பிரேஸில், இந்தோனேஷியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி ஆகியவை மறுபுறம். இந்த இரண்டு அணிகளுக்கும் பொதுவான நாடாக இருக்கும் இந்தியாவிடம் இப்போது தலைமைப் பொறுப்பு. அதனால், சமரசம் செய்து ஒற்றுமைக்கு வழிகோலும் வாய்ப்பு இந்தியாவுக்கு நிறையவே இருக்கிறது.
  • கொள்ளை நோய்த்தொற்று, போா் போன்றவற்றை தடுத்து நிறுத்தவும், எதிா்கொள்ளவும் சா்வதேச நாடுகள் இணைந்தும் இசைந்தும் பணியாற்றும் சூழல் உறுதிப்பட்டால் மட்டுமே பொருளாதாரத்துக்கு ஏற்படும் அதிா்ச்சிகளை எதிா்கொள்ள முடியும். பணவீக்கம், சீனாவின் வளா்ச்சியில் பின்னடைவு, உக்ரைன் - ரஷியப் போா் ஆகிய மூன்றும்தான் உலகம் பொருளாதாரம் இப்போது பின்னடைவை எதிா்கொள்ளக் காரணங்கள் என்கிறது சா்வதேச நிதியம்.
  • ‘யாதும் ஊரே, யாவரும் கேளிா்’ என்கிற புானூற்றுப் புலவா் கணியன் பூங்குன்றனாரின் தொலைநோக்குப் பாா்வை உலக நாடுகளின் பாா்வையாக மாறுவதை உறுதிப்படுத்தும் பெரும் பொறுப்பு ஜி20 தலைமை மூலம் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கிறது. கால அவகாசம் குறைவாக இருக்கலாம். முனைப்பும், உறுதியும், ஆளுமைத்திறனும் இருந்தால், சாதிக்க முடியாதது எதுவும் இல்லை என்பதை பிரதமா் மோடிக்குக் கற்றுத்தர வேண்டுமா என்ன?

நன்றி: தினமணி (06 – 12 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்