TNPSC Thervupettagam

ஜிஎஸ்டி இழப்பீட்டை நீட்டிக்கும் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப் படுமா

January 12 , 2022 935 days 387 0
  • அடுத்து வரும் நிதிநிலை அறிக்கைக்கு முன்பாக நடத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டத்தில், ஜிஎஸ்டி இழப்பீட்டை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையைச் சில மாநிலங்கள் எழுப்பியுள்ளன.
  • மாநிலங்கள் தங்களது மறைமுக வரிகளை விட்டுக்கொடுத்து, ஜிஎஸ்டி என்ற ஒற்றைக் குடையின் கீழ் வர ஒப்புதல் தெரிவித்தபோது, அவர்களது வருவாய் இழப்பை ஈடுகட்டும் வகையில் ஐந்தாண்டு காலத்துக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவதற்கு முடிவானது.
  • இழப்பீட்டுக் காலம் வருகின்ற ஜூன் 2022 வரையில் முடியவிருக்கும் நிலையில், பெருந் தொற்றின் காரணமான பொருளாதார நெருக்கடிகளையும் வருவாய் இழப்பையும் காரணம் காட்டி, இந்த இழப்பீடு மேலும் தொடர வேண்டும் என்ற கோரிக்கையைச் சில மாநிலங்கள் வலியுறுத்தியுள்ளன.
  • இழப்பீட்டை நீட்டிக்கும் கோரிக்கையை விடுத்துள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் உள்ளடங்கும். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மட்டுமின்றி, ஆளுநர் உரையிலும் இந்தக் கோரிக்கை எதிரொலித்துள்ளது.
  • முந்தைய மதிப்புக் கூட்டு வரி முறையில், வரி வருவாய் வளர்ச்சிநிலையில் இருந்த தமிழ்நாடு ஜிஎஸ்டி நடைமுறைக்குப் பிறகு, அந்நிலையை மீண்டும் எட்ட இயலவில்லை என்பது ஆளுநர் உரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
  • எனவே, குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கேனும் ஜிஎஸ்டி இழப்பீட்டைத் தொடர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
  • தமிழ்நாடு தவிர கேரளம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களும் இழப்பீடு நீட்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளன.
  • அவற்றில் பெரும்பாலானவை ஐந்தாண்டுகளுக்கு இழப்பீட்டை நீட்டிக்க வேண்டுகின்றன.
  • பாஜக அல்லாத மற்ற கட்சிகள் ஆளும் மாநிலங்களிலிருந்து இந்தக் கோரிக்கை எழுந்தாலும், அக்கட்சி ஆளும் மாநிலங்களும்கூட இதே வருவாய் நெருக்கடி என்கிற சவாலை எதிர்கொண்டுள்ளன.
  • அனைத்து மாநிலங்களுமே தங்களது அத்தியாவசிய பணிகளைத் தொடர்வதோடு, பொதுச் சுகாதாரம் தொடர்பில் புதிதாக எழுந்துள்ள சிக்கல்களையும் சமாளிக்கக் கூடுதலாகச் செலவிட வேண்டியுள்ளது.
  • மாநில அரசுகள் எதிர்கொள்ளும் அதே வரிவருவாய்ப் பற்றாக்குறையை மத்திய அரசுமே எதிர் கொண்டுள்ளது. எனினும், வரியல்லாத இதர வருவாய்கள் மத்திய அரசுக்கு மிக அதிக அளவில் உள்ளன.
  • பெருந்தொற்று காரணமாக நாட்டின் ஒட்டுமொத்த நிதிப் பற்றாக்குறையையும் சமாளிப்பதற்குத் தேசிய பணமாக்கல் திட்டம் (என்எம்பி) செயல்படுத்தப்பட்டது.
  • அரசுக்குச் சொந்தமான சொத்துகளை நீண்ட காலக் குத்தகைக்கு விட்டு, அதிலிருந்து வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி திரட்டும் அந்தத் திட்டத்தைக் குறிப்பிட்ட சில முதலாளிகளுக்கு அனுகூலமாக நடந்துகொள்ளும் திட்டம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
  • ஜிஎஸ்டி இழப்பீட்டுக்குப் பதிலாக மத்திய அரசே மாநில அரசுகளுக்குக் கடன்களைத் திரட்டித் தந்த போதும் விமர்சனங்கள் எழுந்தன.
  • இந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான சிறப்புத் தீர்வை மேலும் ஐந்தாண்டுகளுக்கு ஏற்கெனவே நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • அதுபோலவே, ஜிஎஸ்டி இழப்பீட்டுக் காலத்தையும் நீட்டிப்பதற்தான சட்டத்திருத்தம் குறித்து எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. மாநிலங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய இழப்பீட்டு நிலுவைகள் தாமதமாவதும் தவிர்க்கப்பட வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (12 - 01 - 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்