- இந்தக் கணக்கைக் கவனியுங்கள். 2019-2020 நிதியாண்டுக்கு மாநிலங்களுக்குக் கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி நிவாரணத் தொகையைத் தந்துவிட்டதாக ஒன்றிய அரசு கூறுகிறது.
- ஒட்டுமொத்த நிவாரணத் தொகை ரூ.1,65,302 கோடி. ஆனால், நிவாரணத்துக்கான கூடுதல் தீர்வை நிதியாக ரூ.95,444 கோடி மட்டுமே வசூலிக்கப்பட்டிருந்தது.
- பற்றாக்குறையானது முந்தைய ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட கூடுதல் வரிகளைக் கொண்டும், மாநிலங்களுக்கு இடையிலான ஜிஎஸ்டியில் மீதமுள்ள தொகையைக் கொண்டும் ஈடுகட்டப்பட்டது. நடப்பு ஆண்டில் இந்த நிவாரணத் தொகை எப்படி வழங்கப்படும் என்ற கேள்வியை இது எழுப்புகிறது.
கூடுதல் தீர்வையின் பின்னணி
- ஜிஎஸ்டி நிவாரணக் கூடுதல் தீர்வை சுவாரஸ்யமான பின்னணி கொண்டது. ஜிஎஸ்டி பல வரிகளைத் தனக்குள் உள்ளடக்கியது; விற்பனை வரி போன்று மாநிலங்களின் வசமிருந்த வரிகள் உட்பட.
- ஆகவே, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஒரு திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இந்தத் திருத்தம் (ஒன்றிய, மாநில அரசுகளின் எல்லைகளை வரையறுக்கும்) ஏழாவது அட்டவணையில் பாதிப்பு ஏற்படுத்தியதால், இந்த சட்டத் திருத்தத்துக்கு பரவலான அரசியல் ஆதரவு தேவைப்பட்டது.
- ஜிஎஸ்டிக்கும் முன்னதாக, பிற மாநிலங்களுக்குச் சரக்குகளை அனுப்பும் மாநிலங்கள் ஒரு வரியை வசூலித்தன. ஜிஎஸ்டியானது சேருமிடம் சார்ந்த வரி.
- அதாவது, எந்த மாநிலத்தில் அந்தச் சரக்குகள் விற்கப்படுகின்றனவோ அவை வரித்தொகையைப் பெறும். உற்பத்திசெய்யும் மாநிலங்கள் கைவிடப்பட அந்தச் சரக்குகளை நுகரும் மாநிலங்கள் பலனடையும் என்பது இதன் அர்த்தமாகும்.
- உற்பத்திசெய்யும் மாநிலங்கள் ஜிஎஸ்டியை ஒப்புக்கொள்ள வைப்பதற்காக ஒரு நிவாரண வழிமுறை உருவாக்கப்பட்டது. 2014-ல் அறிமுகப்படுத்தப்பட்டு, மக்களவையில் நிறைவேற்றப்பட்ட அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா இரண்டு வழிவகைகளைக் கொண்டிருந்தது.
- முதலாவது, மாநிலங்களுக்கு இடையிலான வர்த்தகத்துக்கு 1% வரியை அது விதித்தது. அது விநியோகிக்கும் மாநிலத்துக்குச் சென்றுசேரும். இரண்டாவதாக, ஜிஎஸ்டியால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டுவதற்காக அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை அவற்றுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஒரு சட்டத்தை நாடாளுமன்றத்தில் இயற்ற அது வழிவகை செய்தது.
- எனினும், ஐந்து ஆண்டுகளுக்கு இந்த நிவாரணத் தொகை வழங்குவதற்கு உத்தரவாதம் தரப்பட வேண்டும் என்று மாநிலங்களவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட குழு பரிந்துரைத்தது. உற்பத்திசெய்யும் மாநிலங்களின் வரிவருவாய் இந்த உத்தரவாதத்தால் பாதுகாக்கப்பட்டிருந்ததால் மாநிலங்களுக்கு இடையிலான 1% வரியானது கைவிடப்பட்டது.
கூடுதல் தீர்வை நிதி
- நிவாரணக் கூடுதல் வரியின் வழிமுறைகள் ஜிஎஸ்டி (மாநிலங்களுக்கான நிவாரணம்) சட்டம் - 2017-ல் விவரிக்கப்பட்டிருந்தது. 2015-2016-ல் வசூலிக்கப்பட்ட தொகையை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாநிலத்தின் ஜிஎஸ்டி வருமானமும் 14% அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டது. இந்தத் திட்டம் ஐந்து ஆண்டுகளுக்கு, அதாவது ஜூன் 2022 வரை செல்லுபடியாகும்.
- அதையடுத்து, நிவாரணக் கூடுதல் வரி நிதியம் உருவாக்கப்பட்டது. மாநிலங்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டால், அதிலிருந்து தொகை எடுத்துக்கொடுக்கப்படும். மேலதிகக் கூடுதல் வரியானது பான் மசாலா, சிகரெட்டுகள், மற்ற புகையிலைத் தயாரிப்புகள், காற்றூட்டப்பட்ட நீர், காஃபீன் கலந்த பானங்கள், நிலக்கரி, சில பயணிகள் மோட்டார் வாகனங்கள் ஆகிய பொருட்களுக்கு விதிக்கப்படும். இந்த வகையில் வசூலிக்கப்படும் வரிவருவாய் அந்த நிதியத்தில் சேர்க்கப்படும் என்று இந்தச் சட்டம் கூறியது.
- இந்தத் திட்டத்தின் முதல் இரண்டு ஆண்டுகளில், மாநிலங்களின் பற்றாக்குறையைவிடக் கூடுதல் வரி மூலம் கிடைத்த வருவாய் அதிகமாக இருந்தது. மூன்றாம் ஆண்டில், அதாவது 2019-2020-ல், இந்த நிதியம் தேவையைவிட கணிசமாகக் குறைந்தது.
- இந்தக் கூடுதல் வரி நிதியத்துக்கு வருவாய் அளித்த மோட்டார் வாகனங்கள் உள்ளிட்ட துறைகளில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டதாலும் பொருளாதாரம் மந்தமானதாலும் வரிவசூலில் ஏற்பட்ட தேக்கநிலைதான் இதற்குக் காரணம்.
நான்கு தீர்வுகள்
- நாம் மேலே விவாதித்ததுபோல், ஒன்றிய அரசானது ஐந்தாண்டு வருவாய் இழப்புக்காக மாநிலங்களுக்கு நிவாரணம் அளிக்க அரசமைப்புச் சட்டப்படி கடமைப்பட்டிருக்கிறது. மாநிலங்களின் ஜிஎஸ்டி வருமான வளர்ச்சி 14%-ஆக இருக்கும் என்று நாடாளுமன்றம் இயற்றிய 2017 சட்டம் உத்தேசித்தது. இதற்கு ஏராளமான தீர்வுகள் இருக்கின்றன.
- முதலாவதாக, உத்தரவாதக் காலத்தை மூன்றாண்டுகளாகக் குறைத்து அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தலாம். இதை மாநிலங்கள் ஒப்புக்கொள்வது கடினம். இது மாநிலங்களின் எல்லா வரிகளையும் ஜிஎஸ்டிக்குள் கொண்டுவந்தபோது, ஒன்றிய அரசு அளித்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்குவதாகும்.
- இரண்டாவதாக, இந்தப் பற்றாக்குறையைச் சமாளிக்கத் தனது வருமானத்திலிருந்தே எடுத்துத் தரலாம். மாநிலங்கள் இந்த யோசனையை மகிழ்ச்சியாக ஏற்கும். மூன்றாவதாக, கூடுதல் வரி நிதியத்தின் சார்பில் ஒன்றிய அரசு கடன் பெறலாம்.
- இந்தக் கடனையும் இதற்கான வட்டியையும் கட்டும்வரை கூடுதல் வரியின் காலத்தை, ஐந்தாண்டுகளைத் தாண்டியும் நீட்டிக்கலாம். நான்காவதாக, 14% வளர்ச்சி என்பது எப்போதுமே நடைமுறைச் சாத்தியம் இல்லாதது என்று ஒன்றிய அரசு மாநில அரசுகளிடம் கூறி அவற்றைச் சம்மதிக்க வைக்க வேண்டும். மிதமான ஜிடிபி வளர்ச்சியை இலக்காகக் கொள்ள வேண்டும்.
- மாநிலங்களுக்கு ஏற்படும் பற்றாக்குறையை ஈடுகட்டுவதை ஒன்றிய அரசின் கடப்பாடாக அரசமைப்புச் சட்டம் நிர்ணயித்திருக்கிறது. ஒன்றிய, மாநில அரசுகளின் பிரதிநிதிகளைக் கொண்டிருக்கும் ஜிஎஸ்டி குழு, நடைமுறை சார்ந்த தீர்வைக் கண்டறிய வேண்டும்.
நன்றி: தி இந்து (26-08-2020)