TNPSC Thervupettagam

ஜிஎஸ்டி வரி விதிப்பது மத்திய அரசா மாநில அரசா

December 30 , 2024 13 days 56 0

ஜிஎஸ்டி வரி விதிப்பது மத்திய அரசா மாநில அரசா

  • பொதுவாக முன்பெல்லாம் மத்திய பட்ஜெட் வந்த பிறகுதான் எந்தப் பொருளின் விலை உயரும்; எவற்றின் விலை இறங்கும்; எவற்றுக்கு மாற்றமில்லை. எது சரி எது தவறு? என்பது போன்ற விவாதங்கள் நடக்கும். இப்போது அடிக்கடி நடப்பது போல சிலருக்கு தோன்றலாம். காரணம், ஆண்டுக்கு ஒரு முறை என்றில்லாமல் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடுகிற ஜிஎஸ்டி கவுன்சிலும் அதன் முடிவுகளும்.
  • தனிநபர் வருமான வரி, கார்ப்பரேட் வரி, சர்வீஸ் டேக்ஸ் போன்ற நேரடி வரிகளையும், உற்பத்தி மீதான கலால், வாட் போன்ற சில மறைமுக வரிகளையும் மத்திய அரசு விதித்துக்கொண்டிருந்தது. அதேபோல, உற்பத்தி மீதான கலால் வரி, விற்பனை வரி போன்ற சில மறைமுக வரிகளை மாநில அரசுகள் வசூலித்துக் கொண்டிருந்தன.
  • இவை எல்லாம் அரசியல் அமைப்புச் சட்டம் கொடுத்திருந்த உரிமைகள். 2000-வது ஆண்டு அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைப்படி, 2016-ம் ஆண்டு அந்தப் பிரிவு திருத்தப்பட்டு, பிரிவு 279A-வின் கீழ், மறைமுக வரிகள் ஒன்றிணைக்கப்பட்டு, நாட்டின் ஒரே மறைமுக வரியாக ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின் வசூலிக்கும் போதே மத்திய அரசுக்கு 50% மாநில அரசுக்கு 50% என பிரித்தே வசூலிக்கப்படுகிறது.
  • இதுபோல, வரி விதிப்பில் அவ்வப்போது மாற்றம் செய்வது குறித்து பரிசீலிக்க மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகள் அடங்கிய ஜிஎஸ்டி கவுன்சில் அமைக்கப்பட்டது. அதன்படி, ஜூலை 2017 முதல், நாடு முழுவதற்கும் பொருந்தும் ஜிஎஸ்டி வரியை முடிவு செய்துகொண்டிருப்பது, மத்திய அரசு அல்ல. மாநில அரசுகளும் அல்ல. இரண்டின் பிரதிநிதிகளும் சேர்ந்திருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில். எத்தனை விதமான வரிகள் (ஸ்லாப்), எவற்றுக்கு ஜிஎஸ்டி இல்லை, எவற்றுக்கு எவ்வளவு? போன்றவற்றை எல்லாம் ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்கிறது.
  • அந்த கவுன்சிலின் தலைவராக மத்திய நிதி அமைச்சர் இருப்பார். இதுதவிர, மத்திய அரசின் பிரதிநிதியாக மத்திய வருவாய் துறை அமைச்சர் இருப்பார். ஜிஎஸ்டி கவுன்சிலில் வாக்களிக்கும் பலம் (வெயிடேஜ்), மொத்த வாக்குகளில் மூன்றில் ஒரு பங்கு மத்திய அரசுக்கு உள்ளது.

மாநிலங்களின் பலம் 3-ல் 2 பங்கு:

  • மேலும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் என 31 நபர்கள் இந்த குழுவில் இடம் பெறுவார்கள். நிதி அமைச்சர்களுக்கு பதிலாக மாநில முதலமைச்சர் வேறு அமைச்சரையும் நியமிக்கலாம். மாநில அமைச்சர்களின் வாக்கு (வெயிட்டேஜ்) பலம் மூன்றில் இரண்டு பங்கு ஆகும்.
  • தற்போது தமிழகத்தின் ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினராக மாநில நிதி மற்றும் மனிதவளத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இருக்கிறார். முன்பு பிடிஆர் பழனிவேல் ராஜன் இருந்தார். அதிமுக ஆட்சியின்போது முதலில் ஜெயக்குமாரும் பின்னர் மாபா பாண்டியராஜனும் இருந்தார்கள். இவர்களுக்கு உதவியாக தலா ஒரு செயலாளர் ரேங்க் ஐஏஎஸ் அதிகாரி இருப்பர்.
  • ஜிஎஸ்டி கவுன்சிலில் விவாதித்து ஒருமனதாக முடிவுகள் எடுக்கப்பட்டு, வரிகள் போடப்படுகின்றன. அல்லது மாற்றி அமைக்கப்படுகின்றன. ஜிஎஸ்டி கவுன்சிலில் குறிப்பிட்ட முடிவு குறித்து ஒருமித்த கருத்து வராவிட்டால், அந்த முடிவு, வாக்கெடுப்புக்கு விடப்படும். அப்படி வாக்கெடுப்புக்கு விடப்படும்போது அவற்றில் குறைந்த பட்சம் மொத்த உறுப்பினர்களின் 50 சதவீதம் பேர் இருக்க வேண்டும். வாக்குகளில் 75% ஆதரவு (வெயிடேஜ்) கிடைத்தால் மட்டுமே, முடிவு நடைமுறைக்கு வரும்.

ஒருமனதாக எடுக்கப்படும் முடிவு:

  • ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட ஜூலை 2017-லிருந்து 37-வது கூட்டம் வரை எந்த முடிவுக்கும் வாக்களிப்பு தேவைப்படவில்லை. ஒருமனதாகவே எடுக்கப்பட்டன. அதன் பின் எடுக்கப்படும் முடிவுகளும் அப்படியே. 38-வது கூட்டத்தில், லாட்டரி சீட்டுகள் மீது ஒரே அளவாக 28% வரி என்பதற்கு 7 மாநிலங்கள் ஒப்புக்கொள்ளாததால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பின்னர் பெரும்பான்மை அடிப்படையில் 28% ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • ஜிஎஸ்டி கவுன்சில் எடுக்கும் முடிவுகள், தனிநபரோ தனி அரசோ எடுக்கும் முடிவுகள் அல்ல. மத்திய, மாநில அரசு குழு உறுப்பினர்களின் கலந்துரையாடல்களுக்குப் பிறகு ஒருமனதாக எடுக்கப்படுபவை. தவிர, குறிப்பிட்ட பொருள் அல்லது சேவை மீதான ஜிஎஸ்டி வரியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து கூடுதல் ஆய்வு தேவைப்பட்டால், தரவுகள் திரட்டி, நன்மை தீமைகளை ஆராய்ந்து முடிவெடுக்க ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்படுகின்றன. இவற்றுக்கு ’குரூப் ஆஃப் மினிஸ்டர்ஸ்’ (GoM-அமைச்சர்களின் குழு) என்று பெயர். இது ஜிஎஸ்டி கவுன்சிலில் இருப்பவர்களில் ஒருவரை தலைவராகவும் இன்னும் சிலரை உறுப்பினர்களாகவும் கொண்ட அமைப்பு ஆகும்.

அமைச்சர்கள் குழு:

  • இதுவரை மொத்தம் 35 வெவ்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் பல குழுக்களின் விவாதங்கள் முடிவுக்கு வந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விட்டன. இன்னும் சில குழுக்கள் நடப்பில் இருக்கின்றன. சூதாட்டம், குதிரைப் பந்தயம், ஆன்லைன் ரம்மி போன்றவற்றின் மீது விதிக்கப்பட வேண்டிய அல்லது தவிர்க்க வேண்டிய ஜிஎஸ்டி வரிகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவில் பிடிஆர் பழனிவேல் ராஜன் உறுப்பினராக இருந்தார். கடந்த வாரம் நடந்து முடிந்த 55-வது ஜிஎஸ்டி குழு கூட்டத்தில் சில முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
  • வேறு சில முடிவுகளை இப்போது எடுக்கவில்லை. தள்ளி வைத்திருக்கிறோம் என்று அறிவித்திருக்கிறார்கள். ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்டபோது மத்திய நிதி அமைச்சராக இருந்த மறைந்த அருண் ஜேட்லி சொல்லியது போல, மத்திய, மாநில அரசு பிரதிநிதிகள் கூடி பேசி, நாடு முழுவதுக்குமான மறைமுக வரிகளை முடிவு செய்து, வசூலித்து, பங்கிட்டுக் கொள்வது ’கோ ஆப்பரேட்டிவ் ஃபெடரலிச’த்துக்கான நல்ல எடுத்துக்காட்டு ஆகும். மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து, எதற்கு எவ்வளவு என்று முடிவு செய்வது, வசூலிப்பது, வரி வருமானத்தை சமமாக பிரித்துக் கொள்வது ஆகியவற்றை செய்கிற ஒரு வரி, ஜிஎஸ்டி வரி.

நன்றி: இந்து தமிழ் திசை (30 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்