TNPSC Thervupettagam

ஜூன் 25, 1975 - நெருக்கடி நிலை

June 25 , 2023 567 days 324 0
  • வரலாற்றில் அழியா இடம் பெற்றுவிட்ட நெருக்கடி நிலை உள்ளபடியே அறிவிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்த நாள் எது? நெருக்கடி நிலைக்குக் காரணமான மறைந்த பிரதமர் இந்திரா காந்தியைத் தவிர வேறு யாராலும் இதற்கு சரியான பதிலைத் தெரிவிக்க இயலாது என்றுதான் கூற வேண்டும்.
  • ஜூன் 26 காலைப்பொழுதே நெருக்கடி நிலையுடன்தான் விடிந்தது. ஆனால், ஆவணங்களின்படி, காலை 6 மணிக்குத்தான் பிரதமர் இந்திரா காந்தி இல்லத்தில் மத்திய அமைச்சரவையின் அவசரக் கூட்டம் கூடியது. அதைத் தொடர்ந்து செய்யப்பட்ட பரிந்துரையின் பேரில்தான் நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தார் குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது.
  • ஆனால், ஆண்டுதோறும் ஜூன் 25-தான் நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்ட    நாளாக நினைவு கூரப்படுகிறது. அதுவும் சரிதான். 25 ஆம் தேதி இரவே நெருக்கடி நிலையின் அனைத்து நடவடிக்கைகளும் தொடங்கிவிட்டன. நள்ளிரவில் பிரதமர் இந்திரா காந்தி இல்லத்தில் முக்கியமான தலைவர்கள் எல்லாம் கூடிப் பேசியுள்ளனர். தொடர்ந்து, நெருக்கடி நிலைதான்!
  • இரவு 12 மணிக்குப் பிறகு தில்லியில் பல இடங்களில், குறிப்பாக, செய்தித்தாள்கள் அலுவலகங்கள் இருக்கிற, அச்சிடப்படுகிற பகுதிகளில் முற்றிலுமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மறுநாள், ஜூன் 26 தில்லியில் நாளிதழ்கள் எதுவும் வெளியாகவில்லை.
  • பொழுது புலருமுன்னரே எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டுவிட்டனர். இந்தக் காலகட்டத்தில் வானொலி, சில பகுதிகளில் அரசு தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்கள் தகவல்தொடர்பு சாதனங்கள். நாளிதழ்களை விட்டால் செய்திகளைத் தெரிந்துகொள்ள ஒரே வழி வானொலி மட்டுமே, அதுவும் அரசு நடத்துகிற, அரசு சார்பிலான அகில இந்திய வானொலி மட்டுமே.
  • ஆனால், அன்றைய தினம் பகலில் நடந்தவை அனைத்தும் நிலைமையைக் கொதிப்பு நிலைக்கு உயர்த்தி, இப்படியெல்லாம் நடக்கவும்கூடும் என்பதையொட்டியே இருந்தன.
  • காலையில் நடந்த கூட்டத்தில் நாடு தழுவிய கிளர்ச்சிகளைத் தொடங்குவதென எதிர்க்கட்சிகள் கூடி முடிவெடுத்து அறிவித்தன. மாலையில் நடந்த எதிர்க்கட்சிகளின் பிரமாண்டமான கூட்டத்தில்தான், அரசு ஊழியர்களும் ராணுவத்தினரும் காவல்துறையினரும் நியாயமற்ற, ஒழுக்கமற்ற உத்தரவுகளுக்குப் பணியக் கூடாது என்று சர்வோதயத் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயண் அழைப்பு விடுத்தார். இப்படியெல்லாம் சிலர் பேசுகிறார்கள் என்று இல்லத்தின் முன் நடந்த கூட்டத்தில் கேலியாக பிரதமர் இந்திரா காந்தி குறிப்பிட்டாலும் இதை மிகவும் ஆபத்தான விஷயமாகவே எடுத்துக்கொண்டிருக்கிறார். ஒட்டுமொத்தமான செயல்பாடுகளின் தொடர் விளைவு - நெருக்கடி நிலை அறிவிப்பு!

பகலில் நடந்தவை என்ன?

ஜூன் 29 முதல் நாடு தழுவிய கிளர்ச்சி

  • பிரதமராக இந்திரா காந்தி தொடரலாம் என்றும் மக்களவை உறுப்பினர் என்ற வகையில் சில நிபந்தனைகளை விதித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க, பதவியில் தொடருவதென இந்திரா காந்தி முடிவு செய்ய, எதிர்க்கட்சிகள் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தன.
  • பிரதமர் இந்திரா காந்தி ராஜிநாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஜூன் 29 ஆம் தேதி முதல் நாடு தழுவிய கிளர்ச்சியைத் தொடங்குவதென எதிர்க்கட்சிகள்  திட்டமிட்டன. இந்தப் போராட்டங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நீங்கலாகப்  பிற எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
  • நாடு முழுவதும் இயக்கத்தை நடத்துவதற்காக முன்னாள் துணை பிரதமரும் பழைய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான மொரார்ஜி தேசாய் தலைமையில் மக்கள் போராட்டக் குழுவொன்றும் அமைக்கப்பட்டது. ஜனசங்கத் தலைவர் நானாஜி தேஷ்முக் செயலர். அசோக் மேத்தா பொருளாளர்.
  • இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மார்க்சிய கம்யூனிஸ்ட், திமுக பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். போராட்டத்தைக் கொள்கையளவில் ஏற்பதாகவும் இறுதி முடிவைக் கட்சித் தலைமைகள் அறிவிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
  • தில்லியில் பழைய காங்கிரஸ், ஜனசங்கம், பாரதிய லேகதளம், சோசலிஸ்ட், அகாலிதளம் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் போராட்டத்துக்கான திட்டம் முடிவு செய்யப்பட்டதாகப் பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய பழைய காங்கிரஸ் கட்சித் தலைவர் அசோக் மேத்தா தெரிவித்தார்.
  • "அரசியல் முறைமைகளையும் நெறிகளையும் கடைப்பிடிப்பதற்காகவும் ஜனநாயக உரிமைகளையும் கோட்பாடுகளையம் நிலைநிறுத்தவும்  நாடு தழுவிய போராட்டத்தைக் குழு நடத்தும்.
  • "இந்த இயக்கத்துக்கு ஆதரவாகப் பெருமளவிலான மக்கள் திரண்டெழுவார்கள். மக்களைக் குழப்புவதற்காக அகில இந்திய வானொலியையும் தொலைக்காட்சியையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்றே அருவருக்கத் தக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றையெல்லாம் மக்களைச் சந்தித்து விளக்குவதும் இந்தப் போராட்டத்தில் ஒரு பகுதியாக இடம் பெறும்.
  • "போராட்டத்தின் முதல் வாரத்தில் ஜூன் 29 ஆம் தேதி தொடங்கி, ஜூலை 5 ஆம் தேதி முடிய மாநில, மாவட்டத் தலைமையகங்களில் எதிர்க்கட்சிகள் பேரணிகளையும் பொதுக்கூட்டங்களையும் நடத்தும். இவற்றில் தலைவர்கள் உரையாற்றுவார்கள்.
  • "தில்லியில் ஜூன் 29 தொடங்கி ஜூலை 7 ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் தொண்டர்கள் அணிஅணியாகப் பிரதமரின் இல்லத்துக்குச் சென்று ராஜிநாமாவை வலியுறுத்தி சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்துவார்கள்.
  • "நாடாளுமன்றத்தில் எத்தகைய நிலைப்பாட்டை மேற்கொள்வது, எவ்வாறு அணுகுவது என்று முடிவு செய்வதற்காக வரும் ஜூலை 6 ஆம் தேதி அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும்" என்றார் அசோக் மேத்தா.
  • சர்வாதிகாரத்தை முறியடிப்போம், உத்தரவுகளுக்குப் பணியாதீர்கள்!
  • மாலையில் தில்லி ராம்லீலா திடலில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஜனதா இயக்கப் பொதுக்கூட்டத்தில்தான் இந்திரா காந்தியின் சர்வாதிகாரப் போக்கை முறியடிப்போம் என்றும் நியாயமற்ற, ஒழுக்கமற்ற உத்தரவுகளுக்கு அரசு ஊழியர்களும் ராணுவத்தினரும் காவல் துறையினரும் பணியக் கூடாது என்றும் அழைப்பு விடுத்தார் சர்வோதயத் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயண்.
  • தில்லியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயண், சுமார் 80 நிமிஷங்கள் ஆவேசமான உரையாற்றினார்:
  • "புது காங்கிரஸார் வெறுமனே அமைச்சராக இருக்க வேண்டுமென்றோ, எம்.பி.யாக இருக்க வேண்டுமென்றோ நினைக்க வேண்டாம். நாட்டில் களங்கத்துடன் கூடிய ஒருவர் பிரதமராக இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
  • "புது காங்கிரஸ் கட்சியால் குஜராத்தில் வெற்றி பெற முடியவில்லை. ஆகையால் நீங்களும் இந்திரா காந்தி வழங்கக்கூடிய டிக்கெட்டில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள் என்று உத்தரவாதம் எதுவுமில்லை.
  • "இந்திரா காந்தியிடம் தங்களுக்குள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்திவிட்டு, பதவி விலகுமாறு இந்திரா காந்தியிடம் மூத்த தலைவர்கள் ஜெகஜீவன் ராமும் தவாணும் யோசனை கூறியிருக்க வேண்டும்.
  • "இப்போது பதவி விலகிவிட்டால் மீண்டும் கைப்பற்ற முடியாது என்பதாலேயே இந்திரா விலகவில்லை என்று அவருடைய கட்சிக்காரர்களே கூறுகிறார்கள்.
  • "நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து முதல் முறையாக ஊழலால் களங்கப்பட்ட ஒருவர் பிரதமராகப் பணியாற்றுவதால் மிகவும் கவலைப்படக் கூடிய நெருக்கடியான நிலை ஏற்பட்டிருக்கிறது. நாட்டிலிருந்து ஜனநாயகம் ஒழிக்கப்படும் அபாயம் நேரிட்டுள்ளது.
  • "இன்னமும் இந்திரா காந்தி பதவியில நீடிக்க வேண்டுமா என்பதை நாட்டு மக்கள் விருப்பு வெறுப்பின்றிச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அலாகாபாத் தீர்ப்பின் அமலை முழுமையாக நிறுத்திவைக்க வேண்டும் என்ற இந்திரா காந்தியின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் தள்ளிவிட்டது. அப்படியிருக்க, இது தார்மிக, நேர்மைப் பிரச்சினை மட்டுமல்ல. அரசியல் பிரச்சினையுமாகும்.
  • "மக்களுக்குப் போதிய உணவு இல்லாமல் போகலாம். அல்லது வேலையில்லாமல் தவிக்கலாம். ஆனால், தங்கள் தலைவர்கள் நேர்மையானவர்களாக இருப்பதுடன் நேர்மையானவர்கள் என்று நம்பும்படியாகவும் இருக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள்.
  • "இந்தப் போராட்டத்தில் நானும் பங்கேற்பேன். கைது செய்யப்படுவது போன்ற கஷ்ட நஷ்டங்களுக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். இந்திரா காந்தியின் செயல் பாசிசத்தில் கொண்டுபோய்விடும் என்ற அச்சத்தை உண்டாக்குவதாக இருக்கிறது.
  • "அவைக்கு வருவதற்கு அச்சப்படுவதால் அவர் மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத் தொடரை நடத்த மாட்டார். இந்தக் கூட்டத் தொடரை நடத்த மறுத்து மரபை முறித்தாரென்றால் அவர் படிப்படியாக சர்வாதிகாரப் பாதையில் போகிறாரென்றே ஆகிவிடும். இத்தகைய அபாயத்திலிருந்து நாட்டை மக்களின் விழிப்புணர்வுதான் காப்பாற்ற முடியும்.
  • "உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தவறான வகையில் புரிந்துகொள்ளும்படியாக இந்திரா காந்தியும் அவருடைய அரசும் வானொலி, தொலைக்காட்சி மூலம் செய்தியைப் பரப்புகின்றனர். மக்கள் மனதைக் குழப்புகின்றனர்.
  • "ஊழல் கறை படிந்த ஒருவர், வெறும் உறுப்பினர் என்ற வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள ஒருவர், பிரதமர் பதவி போன்ற உயர் பதவியொன்றில் நீடிக்கலாமா?
  • "இந்திரா காந்தியின் ராஜிநாமாவுடன் மக்கள் நின்றுவிடக் கூடாது. அதற்கு அப்பாலும் பார்க்க வேண்டும். வரப்போகிற மக்களவைத் தேர்தலுக்கு மக்கள் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். புது காங்கிரஸ் மீண்டும் பதவிக்கு வராமலிருக்க உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • "இந்திரா காந்தி பதவி விலக வேண்டுமென அவர்கள் கட்சியிலேயே வலியுறுத்தும்  இளந் துருக்கியர் பாராட்டத் தகுந்தவர்கள். அஞ்சி நடந்துகொள்ளும் சூழ்நிலையை மேலிடம் உருவாக்கியுள்ள நிலையில், இவர்கள் தைரியமாக நடந்துகொள்வது பாராட்டத் தக்கது.
  • "ஜெகஜீவன் ராம், சவாண் போன்றவர்கள் ஏன் அமைதியாக இருக்கிறார்கள்? அவர்கள் ஏன் இந்திரா காந்தியிடம் அச்சப்படுகிறார்கள்? அவர் புலியா, சிங்கமா? இந்த நேரத்தில் அமைதியாக இருப்பது நாட்டுக்கும் கட்சிக்கும் நல்லதல்ல.
  • "அரசு ஊழியர்களும் ராணுவத்தினரும் காவல்துறையினரும் நியாயமற்ற, ஒழுக்கமற்ற உத்தரவுகளுக்குப் பணியக் கூடாது. (இப்படியெல்லாம் பேசுவதற்காக) என் மீது வேண்டுமானால் தேசத் துரோகக் குற்றம்சாட்ட உள்துறை அமைச்சர் பிரம்மானந்த ரெட்டி துணிவாரா? ஜெ.பி. தேசத் துரோகியாகும் நாளில், நாட்டில் தேசபக்தன் என்று சொல்லிக்கொள்ளக் கூடியவர் அரிதாகிவிடுவர்.
  • "அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் காப்பதுதான் அதன் முதல் கடமை என்று ராணுவச் சட்டம் கூறுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சட்டவிரோதமான கட்டளைக்குக் கீழ்ப்படிவோர் தண்டனைக்குள்ளாவர் என்று போலீஸ் சட்டம் கூறுகிறது. அரசு ஊழியர்களின் குறைகளைப் போக்க அரசு ஏதும் செய்யவில்லை. கோஸ்லா கமிஷன் அறிக்கை 1968-ல் வந்தபோதும் அதன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
  • "இந்திய முதலாளி வர்க்கம் மிகவும் கட்டுப்பாடாக இந்திரா காந்திக்கு ஆதரவு தருகின்றனர். ஆனால், பிறரைப் பிற்போக்காளர் என்று இந்திரா குற்றம் சாடுகிறார். இதுதான் கோயபல்ஸின் பிரசார தந்திரம்.
  • "அகில இந்திய அளவிலான போராட்டத்துக்கான வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். இப்போது நாடு முழுவதற்கும் அக்கறையுள்ள பிரச்சினை எழுந்திருக்கிறது"
  • என்றார் ஜெயப்பிரகாஷ் நாராயண்.
  • கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கிளர்ச்சித் திட்டத்தை அறிவித்து மக்களின் ஒப்புதலைப் பெற்றார் தலைமை வகித்த மொரார்ஜி தேசாய். சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கேற்க விரும்பும் தொண்டர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொள்ளுமாறும் அழைப்பு விடுத்தார் அவர்.

இன்னமும் இவர் தொடருவதா?

  • பிரதமர் பதவியிலிருந்து இந்திரா காந்தி விலக வேண்டுமென்ற கருத்துக்கு நாடு முழுவதும் பரவலான ஆதரவு பெருகத் தொடங்கிவிட்டிருந்தது.
  • நாடாளுமன்றத்தில் வாக்களிக்க உரிமையில்லை என்று கூறப்பட்டுள்ள ஒருவர், நாட்டின் பிரதமராகத் தம்மைத் திணித்துக் கொள்ள அனுமதிப்பது அரசியல் சட்ட, அரசியல் நெறிமுறைகள் அனைத்துக்கும் புறம்பானதாகும் என்று ஜனசங்கத் தலைவர் எல்.கே. அத்வானி குறிப்பிட்டார்.
  • பிரதமர் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க இனியும் முயற்சி செய்யப்படுமானால் நாட்டின். நலனையே அது பாதிக்கும். குறுகிய சுயநலம், தனிநபர் பற்றிய சிந்தனை ஆகியவற்றின் விளைவாக அவர்கள் முறையான வகையில் செயல்படத் தவறிவிட்டால், ஜனநாயக அமைப்புகள், மரபுகள், நெறிகள் ஆகியவற்றைக்  கொண்ட நெகிழ்வான இந்த அமைப்பு முழுவதுமாகக் குலைந்துவிடும் எனறு மது லிமயே குறிப்பிட்டார்.
  • உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தடை உத்தரவு இந்திரா காந்தியின் நிலையை மேம்படுத்தவில்லை. அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட புகார்களிலிருந்து அவரை விடுவிக்கவும் இல்லை என்று தி.மு.க. தலைவர்களில் ஒருவரான இரா. செழியன் குறிப்பிட்டார்.
  • உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பின் மூலம் இந்தப் புகார்களிலிருந்து விடுபடுகின்ற வரையிலேனும் அவர் பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றார் அவர்.

தார்மிக அழிவுக்கு வழி

  • அலாகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பு வந்ததுமே அவர் பதவி விலகியிருக்க வேண்டும். அவ்வாறு அவர் செய்யத் தவறிவிட்டார். இப்போது அவருக்கு இரண்டாவது வாய்ப்பு அளிக்கப் பட்டிருக்கிறது. அவர் மீண்டும் தவற விடமாட்டார் என்று பாரதிய லோகதளம் நம்புகிறது. அவர் பிடிவாதமாகப் பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பாரேயானால், நாட்டின் தார்மிக அழிவுக்கு அவர் வழிவகுப்பவராவார் என்று சரண் சிங் குறிப்பிட்டார்.

ஒட்டிக் கொண்டிருக்க வேண்டாம்

  • இந்திரா காந்திக்கு நாடாளுமன்றத்தில் வாக்களிக்கும் உரிமை இல்லை என்று நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே, இப்போதேனும் நாட்டு நலனைக் கருதி அவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று ராஜ்நாராயண் வழக்கறிஞர் சாந்திபூஷண் தெரிவித்தார்.
  • அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்ற தமது முதல் முடிவை இந்திரா காந்தி இப்போது மறுபரிசீலனை செய்ய வேண்டும். காலங்கடந்த இந்தத் தருணத்திலேனும் அவர் பதவியிலிருந்து விலக முடிவு செய்வார் என்று எதிர்பார்ப்போமாக என்றார் அவர்.

வேண்டாம் வெற்று ஆராய்ச்சி

  • சட்ட நுணுக்கங்கள் பற்றிய வெற்று ஆராய்ச்சிகளில் இனியும் ஈடுபடாமல் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, இந்திரா காந்தி பதவி விலக வேண்டும் என்று மார்க்சிய கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே. கோபாலன் குறிப்பிட்டார்.
  • அலாகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளியான பிறகு இந்திரா காந்திக்கு ஆதரவாக அரசு அமைப்புகளையும் பணத்தையும் தவறாகப் பயன்படுத்தி ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் யாவும் இந்திய ஜனநாயகத்துக்கு அழியாத கறையை ஏற்படுத்திவிட்டன.
  • நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத ஒருவர் ஆறு மாதங்களுக்குப் பிரதமராகவோ அல்லது அமைச்சராகவோ இருக்கலாம் என்ற அரசியல் சட்டப் பிரிவு, அவ்வாறு இருப்பவர் ஆறு மாதங்களுக்குள் தேர்தலில் போட்டியிடத் தகுதியுடையவராக இருப்பார் என்ற தகுதியை உள்ளடக்கியது. ஆனால், தேர்தலில் போட்டியிடத் தகுதியில்லாதவர் என்று தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவர் பிரதமராக நீடிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது முன்னெப்போதும் நிகழ்ந்திராதவொன்று என்றும் சுட்டிக்காட்டினார் கோபாலன்.

குடியரசுத் தலைவர் - இந்திரா காந்தி சந்திப்பு

  • இதனிடையே, பிற்கலில் குடியசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமதுவைச் சந்தித்து பிரதமர் இந்திரா காந்தி பேசினார். இந்தச் சந்திப்பு 10 நிமிஷங்கள் நீடித்தது. அவருடன் மேற்கு வங்க முதல்வர் சித்தார்த்த சங்கர் ராயும் சென்றிருந்தார். உச்ச நீதிமன்றத்தின் தடை உத்தரவு பற்றி அகமதுவிடம் இந்திரா காந்தி விளக்கியிருக்கலாம் எனக் கூறப்பட்டது.

இந்திரா காந்தியின் கேலி!

  • உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிய வேண்டாம் என ராணுவத்தினருக்கு சில நபர்களும் பத்திரிகைகளும் யோசனை கூறுகின்றனர் என்று பிரதமர் இந்திரா காந்தி கேலி செய்தார்.
  • மேலதிகாரியின் உத்தரவு சரியா, தப்பா என்பதைச் சந்தேகித்து, விதிகள் புத்தகத்தை ஒரு போர் வீரன் புரட்டிப் பார்க்க ஆரம்பித்தால் போர் தோல்வியில் முடிந்துவிடும் என்ற அவர் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை.
  • எப்போதும்போல இல்லத்தின் முன் ஆதரவாளர்களிடையே பேசிய அவர், வழக்கமான வறுமை ஒழிப்பு விஷயங்களைப் பேசியதுடன், எதிர்க்கட்சிகளையும் சாடினார்.
  • எதிரிக்கட்சிகள் எப்போதுமே என்னுடைய கொள்கைகளையும் வேலைத் திட்டங்களையும் பற்றிக் குறைகூறி வந்திருக்கிறார்கள். ஆனால், மாற்று யோசனைகள் எதையும் அவர்கள் சொன்னதேயில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு முன்  முற்போக்கான வேலைத் திட்டங்களைக் காங்கிரஸ் கட்சி நிறைவேற்றத் தொடங்கியதிலிருந்தே எதிர்க்கட்சிகள் ஒவ்வொரு கட்டத்திலும் இடையூறுகளைச் செய்துவந்திருக்கிறார்கள். ஆனால், இதுபோன்ற அச்சுறுத்தல்கள் மூலம் காங்கிரசை அடக்கிவிட முடியாது. இந்த அறைகூவலை காங்கிரஸ் சமாளிக்கும் என்றார் இந்திரா காந்தி.

பணிந்து விடக் கூடாது!

  • இந்தக் காலகட்டத்தில் இந்திரா காந்தியின் ஆதரவுக் குரலாக வலுவாக ஒலித்துக்கொண்டிருந்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
  • நாட்டின் வலதுசாரி பிற்போக்கு சக்திகளுக்கு இந்திரா காந்தி ஒருபோதும் பணிந்துவிடக் கூடாது. அவர் பிரதமராக நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டது.

அரசியல் தேவையை நிறைவு செய்கிறது

  • உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு திருப்திகரமாக இருக்கிறது. ஓரளவு இப்போதைய நிலைமையின் அரசியல் தேவையை நிறைவு செய்வதாகவும் இருக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் எஸ்.ஏ. டாங்கே குறிப்பிட்டார்.
  • சமூக நிர்பந்தம், தேசியத் தேவைகளைத் தொடர்ந்து, முழுமையான தடையை நான் வரவேற்றிருப்பேன். லட்சக்கணக்கான மக்களின் வாக்குகள், விருப்பங்களைவிட சட்ட நுணுக்கங்களின் மீறலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா என்பதைத் தெளிவுபடுத்தி மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று டாங்கே தெரிவித்தார்.
  • உறுப்பினர் ஒருவரின் தேர்தல் செல்லுமா, செல்லாதா என்பதை இறுதியாக முடிவு செய்வதை பிரதிநிதிகள் அவையிடமே விட்டுவிட வேண்டும் என்றும் டாங்கே குறிப்பிட்டார்.

முடிவு எடுக்கப்படவில்லை

  • உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டுவதா, வேண்டாமா என்று முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் கோகலே தெரிவித்தார்.
  • தொலைக்காட்சிக்கு அவர் அளித்த நேர்காணலில், இந்திரா காந்தி பிரதமராக நீடிப்பார் என்பது இப்பொழுது தெளிவாகியிருக்கிறது. சட்டப்படி அவர் நீடிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் முடிவு கூறியுள்ளது. அவரிடம் கட்சியும் முழு நம்பிக்கை தெரிவித்திருக்கிறது. மக்களில் பெரும்பாலானவர்கள் அவரை ஆதரிக்கிறார்கள் என்றார்.

நன்றி: தினமணி (25 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்