TNPSC Thervupettagam

ஜெஃப் பிசோஸ் நிகழ்த்திய புரட்சி | அமேசான் @ 30

July 15 , 2024 184 days 155 0
  • கடந்த ஜூலை 5-ம் தேதியோடு 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது அமேசான். புத்தக விற்பனை தளமாக தொடங்கப்பட்ட நிறுவனம், கடந்த 30 ஆண்டுகளில் சில்லறை வணிகத்தில் பெரும் புரட்சி நிகழ்த்தியதோடு, உலகின் பொருளாதாரப் போக்கிலும் கலாச்சாரப் போக்கிலும் தாக்கம் செலுத்தும் சாம்ராஜ்ஜியமாக உருவெடுத்தது எப்படி?
  • ஜெஃப் பிசோஸுக்கு அப்போது வயது 30. பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மின்னணு மற்றும் கணினி அறிவியலில் பட்டம் பெற்றுவிட்டு, நியூயார்க்கில் அமைந்திருந்த டி.இ.ஷா முதலீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார். இணையம் சார்ந்த முதலீட்டு வாய்ப்புகளை அலசி ஆராய்வதுதான் அந்நிறுவனத்தில் அவருக்கான பொறுப்பு.
  • இணையம் பொதுப் பயன்பாட்டுக்கு வரத் தொடங்கிய 1990-களின் தொடக்க காலகட்டம் அது. ஆண்டுக்கு 2,500 சதவீத வளர்ச்சி அடைந்துகொண்டிருந்த இணையம், உலகையே தலைகீழாகப் புரட்டிப்போடப் போகிறது என்பதை உணர்ந்த ஜெஃப் பிசோஸ் அது சார்ந்து ஸ்டார்ட்அப் ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்கிறார்.
  • ஜெஃப் பிசோஸ் தான் வேலை பார்த்துக் கொண்டிருந்த நிறுவனத்தில் உச்சப் பொறுப்பில் இருந்தார். இணையத்தின் சாத்தியத்தை உணர்ந்த அவர், நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்கிறார். சரி, இணையத்தைப் பயன்படுத்தி என்ன செய்வது?
  • உலகம் முழுவதும் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. கடைகள் மூலமாகவே அவை விற்பனை செய்யப்படுகின்றன. கடைகள் எல்லா இடங்களிலும் இருப்பதில்லை. அப்படி இருந்தாலும், மக்கள் விரும்பும் அனைத்துப் புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைப்பதில்லை. உலகில் உள்ள அனைத்துப் புத்தகங்களும் ஒரே இடத்திலும் கிடைக்கும்படி ஒரு தளத்தை நாம் உருவாக்கலாம் என்று திட்டமிட்ட பிசோஸ், 1994-ம் ஆண்டு ஜூலை மாதம், தன் வீட்டு காரேஜில் நண்பர்களுடன் இணைந்து நிறுவனத்தைத் தொடங்குகிறார்.
  • புத்தக விநியோக நிறுவனங்களை ஒன்றிணைக்க வேண்டும். மக்கள் இணையத்தில் புத்தகத்தைத் தேடுவதும் அதை ஆர்டர் செய்வதும் எளிதாக இருக்க வேண்டும். விநியோகம் சரியாக நடக்க வேண்டும். இதற்கேற்ற வகையில் மென்பொருளை உருவாக்கும் பணியில் இறங்கியது அக்குழு.சரியாக ஓராண்டு கழித்து ‘பூமியின் மிகப் பெரிய புத்தக நிலையம்’ என்ற வாசகத்துடன் அறிமுகமானது அமேசான். இன்று மக்கள் பயன்பாட்டுக்கான அனைத்துப் பொருட்களையும் விற்பனை செய்யும் தளமாக அமேசான் உள்ளது.
  • ஆண்டுக்கு 600 பில்லியன் டாலர் (ரூ.50 லட்சம் கோடி) மதிப்பிலான பொருட்கள் அமேசான் மூலம் விற்பனையாகிறது. கிளவுட் கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், தானியங்கி கார், உணவு, விண்வெளி ஆராய்ச்சி என பலதளங்களில் கால் பதித்து செயல்படும் அமேசான், 2 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பைக் கொண்டு உலகின் மிக பெரிய நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. ஜெஃப் பிசோஸ் 216 பில்லியன் டாலர் (ரூ.18 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் உலக பில்லியனர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். முப்பதே ஆண்டுகளில் இந்த வளர்ச்சி எப்படி சாத்தியமானது?

புதிய சாத்தியங்களை உருவாக்குதல்:

  • இன்றைக்கு இ-காமர்ஸ் என்பது நம்முடைய அன்றாடத்தில் ஒன்றாக உள்ளது. ஆனால், 30 ஆண்டுகளுக்கு முன்னால், இ-காமர்ஸ் குறித்தும் அதன் சாத்தியம் குறித்தும் யாரும் பெரிதாக கற்பனை செய்ததில்லை. அமேசானுக்கு முன்பு சில இ-காமர்ஸ் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அவை வெற்றிகரமாக செயல்பட்டதில்லை.
  • இந்தச் சூழலில், வழமையான கடைகள் மூலம் நிகழும் வணிகத்தை இணையம் மூலம் மேற்கொள்வது குறித்து சிந்தித்தார் ஜெஃப் பிசோஸ். புதிதாக சாத்தியங்களை உருவாக்குவதில் தீவிர முனைப்புடன் செயல்படுபவர் பிசோஸ். அதன் நீட்சியாகவே, புத்தக விற்பனையோடு நின்றுவிடாமல், மக்கள் தங்களுக்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் வாங்கும் வகையில் அமேசானை ஒரு சந்தைத் தளமாக அவர் மாற்றினார்.
  • புதிய சாத்தியங்களை கண்டறிவதன் மீதுள்ள பிசோஸின் தீவிர வேட்கைக்கு மிகச் சிறந்த உதாரணம் ஏடபிள்யூஎஸ் என்று அழைக்கப்படும் அமேசான் வெப் சர்வீசஸ். அமேசான் என்றால், அதன் இ-காமர்ஸ் தளம்தான் பரவலாக அறியப்படுகிறது.
  • ஆனால், அமேசானின் லாபத்தில் 50 சதவீதம் அதன் கிளவுட் கம்ப்யூட்டிங் (அமேசான் வெப் சர்வீஸ்) மூலமே வருகிறது. 2000-த்தின் தொடக்கத்தில் அமேசான் தளத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது. இதனால், தரவுகளை சேமித்துப் பராமரிப்பதில் பெரும் சிக்கல் உருவானது.
  • பெரிய அளவிலான தரவுகளோடு புழங்க ஹார்ட்வேர், சர்வர், டேட்டா சென்டர் என பெரும் கட்டமைப்பு அவசியம். இந்தக் கட்டமைப்பை உருவாக்குவது செலவு மிகுந்தது மட்டுமல்ல, பயன்பாட்டுக்கு ஏதுவானதும் இல்லை. இந்நிலையில், இதற்கு மாற்றான வழிமுறையை உருவாக்க பிசோஸ் திட்டமிட்டார்.
  • தீவிர ஆராய்ச்சிக்கு பிறகு, அமேசான் நிறுவனம் பெரும் தரவுகளை கையாளுவதற்கென்று புதிய கட்டமைப்பை அறிமுகப்படுத்தியது. அதுதான் அமேசானின் கிளவுட் கம்ப்யூட்டிங். கிளவுட் கம்ப்யூட்டிங்கின் சிறப்பம்சம் என்னவென்றால், அதன் மூலம் பெரும் தரவுகளை எளிதாகக் கையாளலாம். உலகில் எந்த மூலையிலிருந்தும் அத்தரவுகளைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
  • ஐடி துறையில் கிளவுட் கம்ப்யூட்டிங்கின் தேவையை உணர்ந்த அவர், அமேசானின் பயன்பாட்டுக்கு மட்டுமல்லாது, பிற நிறுவனங்களின் பயன்பாட்டுக்கும் அதை விற்க முடிவெடுத்தார். 2002-ம் ஆண்டு அமேசான் வெப் சர்வீஸ் என்ற பெயரில் அது தனி நிறுவனமாக உருவெடுத்தது.
  • ஐடி நிறுவனங்களுக்கு அமேசானின் கிளவுட் கம்ப்யூட்டிங் சேவை வரப்பிரசாதமாக அமைந்தது. எப்படி அமேசானின் இ-காமர்ஸ் தளம் சில்லறை வணிகத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றதோ, அதுபோலவே அதன் கிளவுட் கம்ப்யூட்டிங் சேவை, ஐடி துறையின் தரவுப் பயன்பாட்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றது.
  • தற்போது ஐடி துறையில் முக்கியமானதாக மாறியிருக்கும் கிளவுட் கம்ப்யூட்டிங்கின் உலகளாவிய சந்தையில், அமேசான் பங்கு மட்டும் 30 சதவீதம் ஆகும். அதேபோல், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மிக ஆரம்பத்திலேயே அமேசான் தளத்தில் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துவிட்டார் பிசோஸ். இவ்வாறு புதிய கண்டுபிடிப்புகளின் வழியாகவும் தொழில்நுட்ப அறிமுகம் வழியாகவும் அமேசானை முன்னுதாரணமற்ற வளர்ச்சிப் பாதையில் கொண்டுசென்ற பிசோஸ் தற்போது, சாட் ஜிபிடியை உருவாக்கிய ஓப்பன் ஏஐக்கு போட்டியாக, ஏஐ கட்டமைப்பை உருவாக்கும் பணியில் இறங்கியுள்ளார்.

தொலைநோக்கும் விடாமுயற்சியும்:

  • அமேசான் இன்று மிகப் பெரிய நிறுவனமாக இருக்கலாம், ஆனால், தொடக்க காலத்தில் விற்பனை அதிகம் இருந்தபோதிலும், லாபம் ஈட்டும் நிறுவனமாக அது இல்லை. இதனிடையே டாட் - காம் குமிழியின் (dot - com bubble) போது ஐடி நிறுவனங்கள் மிகப்பெரும் சரிவைச் சந்தித்தன.
  • அமேசானும் அதிலிருந்து தப்பவில்லை. கடும் இழப்பைச் சந்தித்தார் பிசோஸ். ஆனால், அவர் பின்வாங்கவில்லை. தொலைநோக்கு அடிப்படையில் செயல் பட்டுக்கொண்டிருநதார். இனி இ-காமர்ஸ்தான் உலகின் வணிகத்தை தீர்மானிக்கப்போகிறது என்பதை உறுதியாக நம்பிய அவர், அமேசான் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்தபோதிலும், அதை விரிவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டார். அவரது கணிப்பு பொய்யாகவில்லை.
  • ஜெஃப் பிசோஸ் எதிர்காலப் போக்கை மிகத் துல்லியமாக கணித்து, அதில் களமிறங்கக்கூடியவர் என்பதற்கு அவரது விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான புளூ ஆர்ஜின் மற்றொரு உதாரணம். 1982-ம் ஆண்டு தன் பள்ளி இறுதி ஆண்டு விழாவில் பேசுகையில், எதிர்காலத்தில் மனிதர்கள் பூமியிலிருந்து வெளியேறி வேற்றுக்கிரங்களில் வசிக்கும் சூழல் உருவாகும் என்று தான் நம்புவதாக பிசோஸ் குறிப்பிட்டார். இன்று விண்வெளி ஆராய்ச்சியில் தீவிரமாக செயல்பட்டுவரும் தனியார் நிறுவனங்களில், அவரது புளூ ஆர்ஜின் நிறுவனமும் ஒன்று.

விமர்சனங்கள்:

  • அமேசானின் வளர்ச்சி குறித்து வியக்கப்பட்டாலும், அந்நிறுவனத்தின் செயல்பாடுகள் சார்ந்து பல்வேறு விமர்சனங்களும் உண்டு. ஊழியர்கள் நடத்தப்படும் விதம் தொடர்பாக அமேசான் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. பெரும் போராட்டங்களுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட அமேசான் ஊழியர் சங்கத்தில், 2022 ஏப்ரல் மாதம் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இணைந்தனர். அதேபோல், வாடிக்கையாளர்களின் தரவு பாதுகாப்பு குறித்தும் அமேசான் மீது குற்றச்சாட்டுகள் உண்டு.

அமேசான் ஏற்படுத்திய தாக்கம்:

  • முப்பது ஆண்டுகளுக்கு முன்னால், மதுரையில் உள்ள வணிகர், தன் கடை அமைந்திருக்கும் எல்லைக்கு உட்பட்டே தன் பொருட்களை விற்க முடியும். ஆனால், இன்று அவரால் இ-காமர்ஸ் தளங்கள் மூலம் நாட்டின் எந்த மூலையில் இருப்பவருக்கும் தன் பொருளை விற்க முடியும். அதேபோல், நுகர்வோரும் தங்கள் வீட்டில் இருந்தபடி, எந்த மூலையிலிருந்தும் தங்களுக்குத் தேவையான பொருட்களை எளிதில் வாங்க முடியும்.
  • சில்லறை வணிகத்தில் நிகழ்ந்திருக்கும் இந்த மாற்றம் உலகளாவிய பொருளாதாரத்தை உந்தித் தள்ளியுள்ளது. அதேபோல், தற்போது ஐடி துறை அடைந்துவரும் வளர்ச்சிக்கும் உலக அளவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பெரும் எண்ணிக்கையில் உருவாகி வருவதற்கும் அமேசானின் கிளவுட் கம்ப்யூட்டிங் சேவைக்கு முக்கியப் பங்கு உண்டு.
  • ஹென்றி போர்டு உற்பத்தித் துறையில் நிகழ்த்திய புரட்சியோடு ஒப்பிடத்தக்கது, ஜெஃப் பிசோஸ் சில்லறை வணிகத்திலும் ஐடி துறையிலும் நிகழ்த்தியிருக்கும் புரட்சி!

நன்றி: இந்து தமிழ் திசை (15 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்