- நாடு விடுதலை அடையும் தறுவாயில், 30 லட்சம் இந்தியர்களைக் கொன்று குவித்த ‘வங்கப் பெரும் பஞ்சம்’ குறித்த தகவல்கள் இன்று நம் நினைவில் இல்லை.
- மனிதனால் உருவாக்கப்பட்டது அந்தப் பஞ்சம் என்பது பல ஆய்வாளர்களின் கருத்து. அரசின் தவறான கொள்கைகள், வணிகத்தின் பேராசை, உணவு ஏற்றுமதி, உணவுக் குவியல் ஆகியவற்றால் வங்கப் பஞ்சம் உருவானது.
- பஞ்சத்திலிருந்தும் பட்டினிச் சாவிலிருந்தும் விடுதலை பெறுவதே விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் சவாலாக இருந்தது. 1946-ல் காந்தியப் பொருளியலாளர் ஜே.சி. குமரப்பாவின் தலைமையில் நாட்டின் முதல் ‘வேளாண் சீர்திருத்தக் குழு’ காந்தியின் ஆலோசனைப்படி அகில இந்திய காங்கிரஸால் நியமிக்கப்பட்டது.
- புகழ்மிக்க பொருளாதார வல்லுநர் தான்டவாலா, விவசாயப் போராளி என்.ஜி.ரங்கா, சென்னை மாகாண முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் போன்றவர்கள் அக்குழுவில் இடம்பெற்றனர். குமரப்பா 1929 முதல் காந்தியின் வழிகாட்டலில் தொடர்ந்து வேளாண்மைச் சிக்கல்கள் குறித்து வரிவான ஆய்வுகளைச் செய்துவந்தவர். அவருடைய கருத்துகள் வளர்ச்சி குறித்த எளிய மாற்றுப் பாதைகளைக் காட்டின.
- அடித்தள மக்களின் நீண்டகால அடிப்படைத் தேவைகளை மையமாகக் கொண்ட அவரின் ஆலோசனைகள், மேல்தட்டு மக்களின் ஆடம்பரத் தேவைகளை முற்றிலும் புறக்கணித்தன. எனவே, அவரின் கருத்துகள் மேல்தட்டுச் சிந்தனையாளர்களால் புறக்கணிக்கப்பட்டன.
தேங்கிக் கிடக்கும் தானியங்கள்
- தேவைக்கு அதிகமாக உணவுத் தானியங்கள் இந்தியாவில் இன்று குவிந்து கிடப்பதாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 72 மில்லியன் டன் கோதுமையும் அரிசியும், 60 லட்சம் டன் சர்க்கரையும் அரசின் கிட்டங்கிகளில் வாங்குவாரில்லாது தேங்கிக் கிடக்கின்றன.
- வல்லரசுக் கனவில் நமது தலைவர்கள் மிதக்கும் அதே வேளையில், ஆண்டுதோறும் சுமார் 25 லட்சம் இந்தியர்கள் போதிய உணவின்றிப் பட்டினியில் சாகின்றனர் என்ற தகவல்களும் வருகின்றன. உலகிலேயே பட்டினியில் வாடுபவர்கள் மிக அதிகமான நாடு இந்தியா.
- சுமார் 37% இந்தியக் குழந்தைகள் போதிய ஊட்டச்சத்தின்மையால் உடல் வளர்ச்சியும் மூளை வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுப் பரிதாபகரமான நிலையில் உள்ளனர். உலக பட்டினித் தரவரிசையில், மிகவும் மோசமாக 94-வது தரத்தில் இந்தியா நிற்கிறது. கிட்டங்கிகளில் குவிந்து கிடக்கும் உணவு, பட்டினியில் சாகும் இந்தியர்களை, பசியால் கருகும் இந்தியக் குழந்தைகளை நோக்கி நகர மறுக்கின்றது.
- சந்தை, பொதுநலனைக் காக்கும் என்ற கருத்து ஆபத்தான பொருளாதார மூடநம்பிக்கை என்பது குமரப்பா உலகுக்குத் தரும் செய்தி. இந்த மூடநம்பிக்கை திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது என அவர் கருதினார்.
- தன்னிறைவுக் கொள்கையே இந்திய வேளாண்மைக்கு நீண்ட கால நலனைத் தரும். தன்னிறைவுக் கொள்கைக்குள் நெறிப்படுத்தப்பட்டு, வேகத்தடைகளுடன் சந்தை செயல்படுவதே பொருத்தம். வேளாண் சீர்திருத்தக் குழுவின் அறிக்கையின் வாயிலாகவும், தனது நூல்கள், கட்டுரைகள் வாயிலாகவும் குமரப்பா இக்கருத்தினை மிக அழுத்தமாகக் கூறிவந்தார்.
- நிலம் உழுபவனுக்கே சொந்தமாயிருத்தல் வேண்டும். நிலம் உயிர் விளையும் ஊற்று, அது வணிகப் பண்டமில்லை; சந்தைப் பொருளல்ல. வேளாண்மையானது முதலீட்டாளர்களால் சிதையும் என்பது குமரப்பாவின் கருத்து. சிறிய, குறு விவசாயிகள் பிற்போக்கானவர்கள், வளர்ச்சிக்கான தடையாய் இருப்பவர்கள் என்ற கருத்தை அவர் நிராகரிக்கிறார்.
- குறு விவசாயிகள் நிலவளத்தைப் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பாதுகாத்துவந்துள்ளனர். உற்பத்தியும் நிலத்தின் வளமும் சமச்சீராக இருந்திடல் வேண்டும். இன்னும் பல நூறு தலைமுறைகளுக்கு நிலத்தின் வளம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், சந்தை வேளாண்மையை அனுமதிக்கக் கூடாது என்கிறார் குமரப்பா.
கால்நடைகளும் வேளாண்மையும்
- கால்நடைகள் வேளாண்மையின் மிக முக்கியமான பங்காளர்களாகக் கருதப்பட வேண்டும். கால்நடைகளையும் மனிதவளத்தினையும் பின்தள்ளி இயந்திரமயமாக்குவது ஆபத்தான நடவடிக்கையாகும். ரசாயன உரங்கள், உயிர் உரங்களுக்கு மாற்றாகாது.
- இயந்திரமயமும், ரசாயன உரங்களும் கவனமுடன், மிகமிகக் கட்டுப்பாட்டுடன் பயன்படுத்தப்பட வேண்டும். ரசாயன உரங்களுக்கு மானியங்களை அரசு அள்ளி வழங்குவதன் மூலம், உயிர் உரங்களின் உற்பத்தியை அரசு தடுக்கிறது. தற்போது மைய அரசு ஒரு டன் யூரியாவுக்கு ரூ. 14 ஆயிரம் மானியமாகத் தருகிறது.
- இதே போல உயிர் உரங்களுக்கு மானியம் தரும் கொள்கையை அரசு ஏற்றால், விளைநிலங்கள் உயிர் பெறும், கால்நடைச் செல்வம் மேம்படும், கிராமிய வேலைவாய்ப்புகள் பெருகும், கிராமத்தின் செல்வம், கிராமங்களிலேயே தங்கும். யூரியாவுக்குத் தரும் அபரிமிதமான மானியம், இயற்கை உரங்களைப் பின்தள்ளுகிறது. மாத்திரைகள் உணவுக்கு மாற்றாகாது என்பது ரசாயன உரங்களுக்கு அவர் தரும் உதாரணம். “டிராக்டர் சாணம் இடுமா? வைக்கோலை உண்ணுமா?” என்பது குமரப்பாவின் வேடிக்கையான கேள்வி.
- குமரப்பாவின் வேளாண் சீர்திருத்தக் கொள்கை, நிலம் உயிர் நிறைந்தது என்ற புள்ளியில் தொடங்குகிறது. நிலத்தைச் செழிப்பாக்குவதே வேளாண்மையில் முதல் நோக்கம். உழவன் நிலத்தின் பாதுகாவலன், நிலத்தை நேசிப்பவன், நிலம் அவனது வாழ்வின் பகுதி, அவனது வாழ்வாதாரத் தேவைகளைத் தருவது நிலம். கால்நடைகள் வேளாண்மையின் ஆணிவேர். கால்நடைகள் மேம்பாட்டை வேளாண் மேம்பாட்டிலிருந்து பிரிக்க இயலாது.
ஊட்டத்துக்கே முன்னுரிமை
- லாபத்தை அல்ல, ஊட்டமிக்க உணவினை அனைவருக்கும் தருவதற்கே வேளாண்மை உள்ளது, சிறுதானியப் பயிர்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், காய்கறிகள் வேளாண்மையின் முதல் அடுக்கில் வந்திட வேண்டும்.
- நெல், கோதுமை போன்ற பெருந்தானியங்கள் இரண்டாம் அடுக்கில் முக்கியத்துவம் பெற வேண்டும். உயிர் காக்கும் ஊட்டச்சத்து தரும் உணவுகள் முதலிடத்தையும், சுவைக்கான உணவுகள் அடுத்த இடத்தையும் பெற்றிடல் வேண்டும். ஆலைக் கரும்புகளுக்காக விளைநிலங்களையும், நிலத்தடி நீரையும் அதிக அளவில் பயன்படுத்துவதை ஜே.சி.குமரப்பா கேள்விக்குள்ளாக்கினார்.
- ஆலை சர்க்கரை உணவுப் பொருளே அல்ல என்பது அவரின் நிலைப்பாடு. ஆலை சர்க்கரைக்கு முன்னர் பனஞ்சர்க்கரையே வழக்கத்தில் இருந்தது. பனைமரங்கள், சிறுதானியங்களைப் போல் உடலுக்கு நலம் சேர்க்கும் பல்வகைப் பொருட்களைத் தருபவை.
- இடுபொருட்கள் இல்லாது, வறட்சியைத் தாங்கிப் பலன் தரும் பனைமரங்கள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றார் குமரப்பா. பனைமரங்களை முற்றிலும் புறக்கணிக்கும் அரசின் கொள்கைகள் அதேவேளையில் ரூபாய் பல்லாயிரம் கோடி அளவிலான மானியங்களைச் சர்க்கரை ஆலைகளுக்குத் தருகின்றன.
- வெளிநாட்டுக்குச் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய கடந்த மாதம் மட்டும் ரூ. 3,000 கோடியைச் சர்க்கரை ஆலைகளுக்கு மானியமாக ஒன்றிய அரசு வழங்கியுள்ளது.
கிராமியக் கைத்தொழில்கள்
- வேளாண்மைசார் கிராமியக் கைத்தொழில்களையும் அவற்றுக்கான தொழில்நுட்பங்களையும் வளர்த்தெடுக்க, குமரப்பா பெரும் முயற்சிகள் செய்தார். காந்தியின் தலைமையில் குமரப்பா அகில இந்திய கிராமத் தொழில்கள் சங்கத்தை உருவாக்கினார்.
- மரச்செக்கு, பனஞ்சர்க்கரை, கைக்காகிதம் போன்ற நாற்பதுக்கும் மேலான கிராமத் தொழில்களுக்கான தொழில்நுட்பங்களை அவர் உருவாக்கினார். வேளாண்மையும், கிராமியத் தொழில்களும் அடித்தளத்தில் இயற்கை சார்பான வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச்செல்ல வாய்ப்பு உள்ளது என அவர் எண்ணினார்.
- சந்தைப்படுத்துவது ஒன்றையே இலக்காகக் கொண்டிருக்கும் வேளாண் கொள்கைகள் அடிப்படையில் வேளாண் கொள்கைகளே அல்ல. அவை சந்தைக்குள் வேளாண்மையைச் சிறைப்பிடிக்க நினைப்பவை.
- தற்போதைய வேளாண் கொள்ளைகள் செருப்புக்கு ஏற்ற வகைளில் காலை நறுக்குவது போல, சந்தைக்கு ஏற்றவாறு வேளாண்மையைச் செதுக்க முயல்கின்றன.
- உண்மையான பொருளாதாரம் தொலைநோக்குப் பார்வையுடன், மக்கள் நலனை இலக்காகக் கொண்டிருக்கும். நிலைத்த நலன் அதன் நோக்கம். சந்தை-வணிகப் பொருளாதாரம் லாபத்தை இலக்காகக் கொண்டது, நீண்ட காலத்தில் அது பொது நன்மையைப் புறந்தள்ளுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
- சந்தையானது வேளாண்மையைச் சிதைக்கும் என்ற குமரப்பாவின் கருத்து அதிர்ச்சியைத் தந்தாலும் அதனை எச்சரிக்கைக் குரலாக எடுத்துக்கொள்வதில் தவறில்லை.
நன்றி: இந்து தமிழ் திசை (04 -01 -2021)