ஞெகிழி ஒழிப்பு: உடன்படாத உலக நாடுகள்
- ஞெகிழி (பிளாஸ்டிக்) 1950கள் முதல் புழக்கத்துக்கு வந்தாலும் உலகமயத்துக்குப் பிறகே வளரும் நாடுகளில் ஞெகிழிப் பொருள்கள் பெருமளவு புழங்கத் தொடங்கின. இன்றைக்குக் காலநிலை மாற்றத்தைப் போல பூதாகரப் பிரச்சினையாக ஞெகிழி மாசு உருவெடுத்துள்ளது. காலநிலை மாற்றத்தைக் கையாள்வதற்குக் காலநிலை மாநாடுகள் ஆண்டுதோறும் நடத்தப்படுவதைப் போல ஞெகிழி மாசைக் கட்டுப்படுத்தவும் மாநாடுகள் நடைபெற்றுவருகின்றன.
- தென் கொரியாவின் பூசன் நகரில் ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் சார்பில், ஞெகிழி மாசுபாட்டைக் குறைப்பதற்கு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தக் குழுவின் ஐந்தாவது மாநாடு நடைபெற்றது. 170 நாடுகள் பங்கேற்ற இந்தப் பேச்சுவார்த்தைகளில் ஞெகிழி மாசுபாட்டைக் குறைப்பதற்கான உடன்படிக்கை எட்டப்படவில்லை. பிளாஸ்டிக் என்பது பெட்ரோலிய உற்பத்தியின் உபபொருள். அதனால் பிளாஸ்டிக் உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதை பெட்ரோலிய உற்பத்தி நாடுகள் ஏற்கவில்லை.
- அது மட்டுமல்லாமல் உலகின் மிகப் பெரிய ஞெகிழி மாசுபாட்டாளரான இந்தியாவும் பிளாஸ்டிக்குக்கு மாற்றான பொருள்களை உற்பத்தி செய்வதை முழுமையாக ஏற்கவில்லை. காரணம் இந்தியாவும் பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்களைப் பெருமளவு கொண்டிருப்பதுதான். இந்த மாநாட்டில் உறுதியான முடிவுகள் எதுவும் எட்டப்படாதது குறித்து சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
நன்றி: இந்து தமிழ் திசை (07 – 12 – 2024)