- தமிழ்நாடு அரசு, ஒருமுறை பயன்படுத்தப்படும் ஞெகிழிப் பைகளுக்குச் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் -1986இன்படி 2018இல் தடைவிதித்து அரசாணை வெளியிட்டது. இந்தத் தடை 2019 ஜனவரியில் நடைமுறைக்கு வந்தது. ஞெகிழிப்பைகளுக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு விழிப்புணர்வுப் பிரச்சாரத்திலும் ஈடுபட்டுவருகிறது. ஆனால், ஞெகிழிப் பைகளின் பயன்பாட்டை ஒழிக்கும் செயல் இன்னும் முழுமை பெறாதது ஏமாற்றம்அளிக்கிறது.
- 2023 பிப்ரவரியில் சென்னை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலை, தியாகராய நகர் உள்ளிட்ட சில வணிகப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 2,545 கிலோ ஞெகிழிப் பைகள் பறிமுதல்செய்யப்பட்டன. அதே மாதத்தில், செங்கல்பட்டு பஜார் தெருவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஏறத்தாழ 1,000 கிலோ அளவிலான ஞெகிழிப் பைகள் பறிமுதல்செய்யப்பட்டன. ஞெகிழிப் பயன்பாடு பரவலாக நடைமுறையில் இருப்பதற்கு இந்த இரு சம்பவங்களும் தெளிவான சான்றுகள்.
- தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் 2019 - 2020 அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் உருவான ஞெகிழிக் கழிவு 4,31,472 டன். ஞெகிழித் தடைக்கு முந்தைய 2018-2019 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் உருவான ஞெகிழிக் கழிவு 4,01,091 டன். இது மொத்த ஞெகிழிக் கழிவையும் உள்ளடக்கியது என்றாலும், பொதுவாக ஞெகிழிக் கழிவில் 50% ஒரு முறை பயன்படுத்தப்படும் கழிவால் ஆனவை என கிரீன் பீஸ் அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது. தமிழ்நாட்டில் உருவான கழிவின் அளவை ஒப்பிட்டுப்பார்த்தால், தடைசெய்யப்பட்ட காலத்துக்குப் பிறகும் அது குறையவில்லை. மாறாக, 30 ஆயிரம் டன் அளவுக்கு அதிகரித்துள்ளது.
- உண்மையில், தயாரிப்பு தடைசெய்யப்படுவதாலேயே ஞெகிழிப் பயன்பாடு ஒழிந்துவிடாது. தமிழ்நாட்டில் இறக்குமதி ஞெகிழிப் பயன்பாடு அதிகரித்துவருவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ்நாடு ஞெகிழித் தயாரிப்பாளர்கள் சங்கம் சமீபத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
- உள்ளூர்த் தயாரிப்பைத் தடைசெய்வதில் அரசுக்கு ஓரளவு வெற்றியும் கிட்டியிருக்கிறது. ஆனால், ஞெகிழிப் பைகள் பிற மாநிலங்களிலிருந்து கொண்டுவரப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன என்பது கவனிக்கத்தக்கது. மஞ்சப் பை போன்ற சில விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் நடத்தப்பட்டாலும் நடைமுறையில் சிறு, குறு வியாபாரிகளிடம் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
- ஞெகிழிப் பயன்பாடு சார்ந்த தடையைக் கண்காணிக்கத் தமிழ்நாடு அரசு தனிக் குழுவையும் அமைத்துள்ளது. எனினும், எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. தடை உத்தரவு பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்தும் இந்தக் கண்காணிப்புக் குழு, ஞெகிழிப் பயன்பாட்டுக்கான மாற்று குறித்துப் பிரச்சாரம் செய்கிறதா என்பது கேள்விக்கு உரியதுதான்.
- பால், எண்ணெய் போன்ற உணவுப் பொருள் விநியோகத்தில் ஞெகிழிப் பயன்பாடு தொடர்கிறது. அந்த ஞெகிழித் தயாரிப்பால் கிடைக்கும் ஜிஎஸ்டி வருவாய் ரூ.3,200 கோடி எனவும், எனவே அதை முற்றிலும் தடைசெய்வது சாத்தியமல்ல என்றும் உயர் நீதிமன்ற வழக்கு விசாரணை ஒன்றில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஞெகிழிப் பயன்பாட்டுத் தடையில் நீடிக்கும் குழப்பத்துக்கு இது ஓர் உதாரணம்.
- ஞெகிழிப் பயன்பாட்டுக்கான மாற்றுப்பொருள்களையும், தடை சார்ந்து நிலவும் குழப்பத்துக்குத் தெளிவான விளக்கத்தையும் அரசு அளிக்க வேண்டும். அதன் வழியே முழுமையான ஞெகிழிப் பயன்பாட்டுக்கான தடையை நிறைவேற்ற அரசு உறுதிபூண வேண்டும்.
நன்றி: தி இந்து (15 – 05 – 2023)