- நீதிக் கட்சி உருவாவதற்குக் காரணமான முதல் மூவருள் முதல்வர் சி.நடேசனார்.
- 1875-ல் பிறந்த இவருடைய பிறந்த நாளும் மாதமும் இன்னதென்று தெரியவில்லை. நடேசனார் தனது சிறு பருவத்தில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டார்.
- அக்காலத்தில் சென்னையில் தெலுங்கைப் பயிற்சி மொழியாகக் கொண்ட பள்ளிகளே அதிகமாக இருந்தன என்பதால், நடேசனாரும் தெலுங்கு மொழி மூலமாகவே கல்வி கற்றார்.
- அம்மொழியிலேயே சென்னைப் பல்கலைக்கழகத்தில் பட்டமும் பெற்றார். பிறகு, மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்தார். அக்காலத்தில், எம்பிசிஎம் என்பதே மருத்துவப் பட்டத்தில் முதல்தரப் பட்டம். இப்பட்டம் பெற நடேசனார் பல முறை முயன்றும் முடியவில்லை. எல்எம்எஸ் என்ற மருத்துவப் பட்டத்தைப் பெற்றே அவரால் மருத்துவராக முடிந்தது என்றாலும் வைத்திய நிபுணர் என்றும், கைராசிக்காரர் என்றும் மக்களிடம் அவர் நன்மதிப்பைப் பெற்றார்.
- சென்னை ராஜதானியின் அப்போதைய அரசியல் நிலைகளால் உயர் சாதியினரால் அரசுப் பணிகளிலுள்ள இதர வகுப்பார் பாதிக்கப்படுவதும், உயர் சாதியினர் வெள்ளையர்களோடு சேர்ந்துகொண்டு சலுகைகள் பெறுவதும் தவிர்க்க முடியாததாய்த் தொடர்ந்தன. இந்நிகழ்வுகள் நடேசனாரைப் பொதுவாழ்க்கையில் ஈடுபட வைத்தன.
- பாதிக்கப்படுகிற வகுப்பாருக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணத்தில், ஓர் அமைப்பை உருவாக்க எண்ணம் கொண்டு 1912-ல் ‘சென்னைத் திராவிடர் சங்கம்’ உருவாக்கினார். இவ்வமைப்பு சென்னையில் பொதுமக்களின் அமைப்பாக இயங்கிவந்தது என்பதற்கான சான்றுகள் உள்ளன. இச்சங்கம் தொடங்கப்பட்டதன் விளைவாகத்தான் நடேசனாரின் நட்பு திரு.வி.க.வுக்குக் கிடைத்ததாக அவரது வாழ்க்கைக் குறிப்பு கூறுகிறது.
- அரசு அலுவலகங்களில் பணியாற்றிவந்த பிராமணரல்லாதார், மாலை நேரங்களில் திராவிடர் சங்கத்தில் கூடி, தமக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்துப் பேசித் தீர்வு கண்டனர். இது மட்டுமன்றி சிந்தனையாளர் சிங்காரவேலர், பேராசிரியர் லட்சுமி நரசு, எல்.டி.சாமிக்கண்ணு, திரு.வி.க. போன்ற அறிஞர்களின் சொற்பொழிவுகள் திராவிடர் சங்கத்தில் அடிக்கடி நடைபெறும்.
திராவிடர் இல்லம்
- இப்படித் தொடங்கிய திராவிடர் சங்கத்தின் பணிகள்தான் பின்னர் நீதிக் கட்சி தோன்றுவதற்கு அடிப்படையாய் அமைந்தன. 1919-ல் இங்கிலாந்து நாடாளுமன்றக் கூட்டு ஆய்வுக் குழுவினர் திராவிடர்களின் நிலையைப் பற்றி எடுத்துக் கூறுவதற்கென ஒரு பிரதிநிதியை அனுப்பிவைக்குமாறு இச்சங்கத்தினரைக் கேட்டுக்கொண்டதன் பேரில் சர் கே.வி.ரெட்டி நாயுடு அனுப்பிவைக்கப்பட்டார். திராவிடர் சங்கம் நடத்தியதுபோலவே ‘திராவிடர் இல்லம்’ என்கிற மாணவர்களுக்கான விடுதியையும் நடேசனார் நடத்தினார். திராவிட சமூக மாணவர்களின் பிற்போக்கான நிலையைக் கண்டு வருந்திய அவர் இவ்விடுதியைத் தொடங்கினார். அங்கே ஏழை மாணவர்கள் பணம் செலுத்தாமலேயே உணவருந்தினார்கள். சர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார் போன்ற பெருமக்களை நாட்டுக்கு அறிமுகம் செய்துவைத்த பெருமை திராவிடர் சங்கத்தைச் சார்ந்ததாகும்.
- நடேசனார் காங்கிரஸ் கட்சியில் இருந்தது இல்லை. தான் தோற்றுவித்த அமைப்பின் மூலம் பிராமணரல்லாதாருக்கு உழைத்துவந்தார்.
- இந்த நிலையில் பிராமணரல்லாதார் இயக்கத்துக்கு அரசியல் வடிவம் கொடுத்த பிட்டி தியாகராயரும், டாக்டர் டி.எம்.நாயர் போன்றவர்களும் காங்கிரஸில் பற்றுதலும் நம்பிக்கையும் கொண்டு உழைத்துவந்தனர். அவர்களது நம்பிக்கையை காங்கிரஸின் நடைமுறை தகர்த்தெறிந்தது. நடேசனார் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு திராவிடர்களின் இழிநிலையைப் போக்க தியாகராயரையும் நாயரையும் கண்டு தம் கருத்தை வெளியிட்டார்.
- அதன் தொடர்ச்சியாக, இருவரையும் கொண்டு ஓர் அரசியல் கட்சி உருவெடுக்கக் காரணமாக இருந்தார்.
- நடேசனார் முயற்சி இல்லையானால், நீதிக் கட்சி என்ற பிராமணரல்லாதார் இயக்கம் ஏற்பட்டிருக்க முடியாது. நடேசனார் கூட்டிய மாநாடுகளும் கூட்டங்களும் எண்ணிலடங்காதவை. இவற்றுக்கு நடேசனார் தனது கைப்பொருளையே செலவழித்தார்.
- டி.எம்.நாயர் லண்டன் பயணப்பட்டபோது, நீதிக் கட்சியின் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. டி.எம்.நாயரும் தியாகராயரும் காலமான பிறகு, தனியாக இருந்து நீதிக் கட்சியை நடத்திய பெருமை மிக்கவர் நடேசனார். ஆர்க்காடு ராமசாமி முதலியார் நீதிக் கட்சியின் மூளையாக விளங்கினாலும், நடேசனார் அக்கட்சியின் இதயமாகச் செயல்பட்டார்.
சட்டமன்றப் பணிகள்
- 1920-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெருவாரியான வாக்குகளைப் பெற்றார் நடேசனார். 1920 முதல், இடையில் ஒரு தடவை மட்டும் தோல்வியடைந்தாலும் 1937 வரை நடேசனாரின் சட்டமன்றப் பணி தொடர்ந்தது. அதாவது, அவர் இறக்கும் வரையில் சட்டமன்ற உறுப்பினராகவே இருந்தார். சட்டமன்றத்தில் நீதிக் கட்சியின் சீரிய குறிக்கோள்களுக்கும் கொள்கைகளுக்கும் அவர் வாதாடினார். அரசுப் பணிகளில் இருப்போருக்கு வகுப்புரிமைக்காக அடிக்கடி கேள்விகள் கேட்டும் வகுப்புரிமை கையாளப்படாததைச் சுட்டிக்காட்டியும் பிராமணரல்லாதார் நலம் பெறப் பெரிதும் உழைத்தார். இவர் கொண்டுவந்து நிறைவேற்றிய தீர்மானங்களிலேயே மிகச் சிறந்தது ‘பார்ப்பனர் அல்லாதார் யார்?’ என்பதைப் பற்றிய வரைவுதான்!
- நீதிக் கட்சியின் போராட்டத்தின் விளைவாக 1919-ல் மாண்டேகு செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தத்தில், சட்டமன்றங்களில் பிராமணரல்லாதார் வகுப்புவாரி முறையில் இடம்பெற வகைசெய்யப்பட்டிருந்தது.
- இந்தச் சமூகப் பாதுகாப்புகளால் ஊக்கம் பெற்ற நீதிக் கட்சி, அரசு சார்ந்த பொது வாரியங்களிலும் நிர்வாகக் கழகங்களிலும் சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிக் குழு போன்ற அமைப்புகளிலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறையை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என்று கோரியது.
- மேலும், 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னைப் பல்கலைக்கழகம் தாய்மொழிப் படிப்பை அலட்சியப்படுத்திவந்தது. நடேசனார் கொண்டுவந்த தீர்மானம்தான் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தாய்மொழிப் படிப்பை அறிமுகப்படுத்துவதற்குக் காரணமாக இருந்தது.
உட்கட்சி அரசியல்
- முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே (1920) சென்னை மாநகரத்தில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றும் நடேசனாரை நீதிக் கட்சி அமைச்சராக்கவில்லை. அவர் இறப்பதற்கு ஒரு ஆண்டுக்கு முன்புதான் சட்டசபையின் துணைத் தலைவர் ஆக்கப்பட்டார். இப்பதவியை அவர் பெறுவதற்குக்கூட ‘சண்டே அப்சர்வர்’ பி.பாலசுப்பிரமணியத்தின் பரிந்துரை தேவையாக இருந்தது. எந்த வகையில் அவர் தகுதி குறைவானவர் என்று நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் சட்டமன்றத்தில் நிகழ்த்திய உரைகள் எல்லாம் திராவிட இயக்கக் கொள்கைகளை எதிரொலிப்பனவாக இருந்தன.
- நடேசனாருக்கு நீதிக் கட்சி பெரும் பொறுப்பு எதையும் தந்து சிறப்பிக்கவில்லை. தொழிலில் முதல் தர டாக்டர் பட்டம் பெற முயன்றார், முடியவில்லை. ஒரே மகன்; கல்லூரியில் படித்துவந்தபோது இறந்துபோனான். சென்னை மாநகராட்சியின் தலைவராக இரண்டு முறை போட்டியிட்டார்; ஆக முடியவில்லை. சென்னை மாநகரின் முதல் மேயராக வர வேண்டும் என்று நினைத்தார்; முடியவில்லை. இத்தனைக்கும் அவர் நீதிக் கட்சியை உருவாக்கிய மூவருள் ஒருவர்.
- இரக்கமும் பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமும் இயல்பிலேயே உடையவர் நடேசனார். ஆனால், நீதிக் கட்சியின் உட்கட்சி அரசியலில் பிட்டி.தியாகராயர், சர்.ஏ.ராமசாமி முதலியார், முத்தையா செட்டியார் போன்றோர் இவர் மீது பகை கொண்டதற்கு உரிய காரணங்கள் எதுவும் நமக்கு இதுவரை தெரியவில்லை.
- டாக்டர் நடேசனார் மரணம் அடைந்தபோது ‘குடி அரசு’ இதழில் பெரியார் எழுதிய இரங்கல் குறிப்பைப் படித்துப் பார்த்தால் நடேசனாரின் கபடமற்ற தன்மையைப் புரிந்துகொள்ளலாம்:
- “டாக்டர் நடேச முதலியார் நலிந்தார் எனும் சேதி கேட்டு நம் நாட்டில் வருந்திடாத பார்ப்பனர் அல்லாத தமிழ் மக்கள் எவரும் இருந்திட மாட்டார்கள். அவரது சேவையைப் பாராட்டி, அவருக்கு நன்றி விசுவாசம் காட்டக் கடமைப்படாத தமிழ் மகன் எவரும் நாட்டில் இருக்க மாட்டான். தோழர் நடேச முதலியாரிடம் உள்ள அருங்குணங்களில் சூது, வஞ்சகமற்ற தன்மையே முதலாவதும் இரண்டாவதும் மூன்றாவதும் ஆகும்.”
நன்றி: இந்து தமிழ் திசை (18-02-2020)