- கடுமையான பண வீக்கத்தாலும், விலைவாசி உயர்வாலும் உலகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. உலகப் பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கிறது என்பதைவிட தடுமாறிக் கொண்டிருக்கிறது என்பதுதான் நிஜ நிலைமை. அசாதாரணமான பொருளாதாரப் புயல் உருவாகி அதனால் பெரும்பாலான நாடுகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றன.
- கொவைட்-19 கொள்ளை நோய்த்தொற்றும், உக்ரைன்-ரஷிய போரும் மட்டுமே இதற்கு காரணமல்ல. அதற்கு முன்பே பிரச்னை தொடங்கிவிட்டது. சீனா, ஏனைய நாடுகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியதைத் தொடர்ந்து, அதற்கு எதிராக விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளும், சீனப் பொருள்கள் மீதான அதிகரித்த இறக்குமதி வரிகளும் எதிர்வினையை ஏற்படுத்தும் என்று மேலைநாடுகள் எதிர்பார்க்கவில்லை. சீன இறக்குமதிகளின் மீதான தடை, விநியோகச் சங்கிலி தடைபடக் காரணமானது.
- அதைத் தொடர்ந்து, கொள்ளை நோய்த்தொற்றுப் பரவல் பல நாடுகளின் பொருளாதாரத்தை சீர்குலைத்தது. இவை இரண்டும் போதாதென்று உக்ரைன்-ரஷிய போரும் தொடங்கியதால் விநியோகச் சங்கிலி முற்றிலுமாகச் சிதைந்து ஏற்றுமதியும் இறக்குமதியும் கணிசமாகக் குறைந்து பொருளாதார வீழ்ச்சியை உலகம் சந்திக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
- சீனா மீதான தடை, கொள்ளை நோய்த்தொற்று, உக்ரைன்-ரஷிய போர் ஆகியவற்றின் விளைவால் கடுமையான பணவீக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதைக் கட்டுப்படுத்த எல்லா நாடுகளின் மத்திய வங்கியும் வட்டி விகிதத்தை அதிகரித்தாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டன. அதன் விளைவாக விலைவாசி உயர்வு கட்டுக்கடங்காத நிலையை எட்டியிருக்கிறது.
- மேலே குறிப்பிட்ட காரணிகளால் உலகளாவிய நிலையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரத் தேக்கம் ஒருபுறம்; பணவீக்கம் போதாதென்று, ஏற்றுமதிகள் குறைந்து உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதால் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருப்பது இன்னொரு புறம். இவை அனைத்துமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.
- டாலரின் மதிப்பு அதிகரிக்கும் பின்னணியையும் நாம் கவனிக்க வேண்டும். ஏனைய செலாவணிகளுக்கு எதிரான டாலரின் மதிப்பு கடந்த அக்டோபர் மாதம் 15% முதல் 20% வரை அதிகரித்திருந்தது. தற்போது அது சற்று குறைந்திருந்தாலும்கூட, ஆறேழு ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைமையைவிட மிக அதிகம். டாலர் மதிப்பு அதிகரித்திருப்பதுதான் பெரும்பாலான நாடுகளில் விலைவாசி உயர்வுக்கு காரணமாகி இருக்கிறது.
- சர்வதேச வணிகம் பெரும்பாலும் டாலரில்தான் நடைபெறுகிறது. உணவுப் பொருள்கள், எரிபொருள் தேவைகளுக்கு இறக்குமதியை நம்பியிருக்கும் வளர்ச்சியடையும் நாடுகள், அதிகரித்த டாலர் மதிப்பால் மிகவும் பாதிக்கப்படுகின்றன. இந்தியாவின் விலைவாசி உயர்வுக்கு அதுதான் முக்கியமான காரணம். ரூ.74 ஆக இருந்த டாலரின் மதிப்பு ரூ.82 ஆக உயர்ந்தது. உக்ரைன் போருக்கு முந்தைய நிலைக்கு கச்சா எண்ணெய் விலை இறங்கினாலும்கூட, டாலர் மதிப்பு காரணமாக 12% முதல் 14% வரை அதிகமாகவே இருக்கும்.
- டாலரின் மதிப்பு அதிகரிக்க அதிகரிக்க, காரணமில்லாமல் ஏனைய நாடுகளிலிருந்து முதலீடுகள் அமெரிக்காவை நோக்கி திரும்பும். அதன்மூலம், தங்களது முதலீடுகள் பாதுகாப்பாக இருக்கும் என்று முதலீட்டாளர்கள் கருதுவார்கள். இந்தமுறை டாலரின் மதிப்பு மிக அதிகமாகியிருப்பதால் அமெரிக்காவை நோக்கி மீண்டும் திரும்பும் முதலீட்டின் அளவு மிக மிக அதிகமாகக் காணப்படுகிறது.
- இதனால் பெரும்பாலான நாடுகளின் கடன் தவணைகள் தவறுகின்றன. டாலர் மதிப்பு அதிகரிப்பால், ஏற்றுமதியால் ஏற்படும் ஆதாயத்தைவிட உற்பத்திக்கு தேவையான கச்சாப் பொருள்கள் இறக்குமதியின் மதிப்பு கூடுவதால் ஏற்படும் பாதிப்பு அதிகம். உற்பத்தி குறையும்போது ஏற்றுமதியும் குறைந்துவிடுகிறது.
- இதுபோன்ற சூழல் ஏற்படுவது புதிதல்ல. 1985-இல் உலகளாவிய அளவில் பணவீக்கம் அதிகரித்தது. அதன் விளைவாக அமெரிக்காவின் இறக்குமதிகள் அதிகரித்து முக்கியமான எஃகு, மோட்டார் வாகன துறைகள் பாதிப்பை சந்திக்க நேர்ந்தது. வெளிநாட்டு மோட்டார் வாகனங்களின் வரவால் அமெரிக்காவின் முக்கிய ஆட்டோ நிறுவனங்கள் தடுமாறின. டாலரின் மதிப்பைக் குறைப்பதன் மூலம்தான் தனது பொருளாதாரத்தைக் காப்பாற்ற முடியும் என்பதால் அமெரிக்கா உலகின் ஏனைய நாடுகளுடன் ஓர் ஒப்பந்தத்துக்கு முன்வந்தது. அதை பிளாஸா ஒப்பந்தம் என்று அழைப்பார்கள்.
- அமெரிக்காவின் இன்றைய நிலைமை அதுவல்ல. டாலரின் மதிப்பு கூடுவதன்மூலம் தனது உள்நாட்டு விலைவாசியைக் கட்டுக்குள் வைக்க நினைக்கிறது அமெரிக்கா. வளர்ச்சி அடையும் நாடுகளின் ஏற்றுமதிகள், குறைந்த விலைக்கு இறக்குமதி செய்யப்படுவதால் விலைவாசியை கட்டுக்குள் வைக்கலாம் என்பது அமெரிக்காவின் திட்டம்.
- அமெரிக்காவின் அணுகுமுறை தவறானது. பிற நாடுகளின் செலாவணிகள் 1% குறைவதால் அமெரிக்காவில் விலைகள் 0.03% தான் அதிகரிக்கிறது. ஏனைய வளர்ச்சியடைந்த நாடுகளில் 3 மடங்கும், வளர்ச்சியடையும் நாடுகளில் 6 மடங்கும் அதிகரிக்கிறது. அதனால் டாலரின் மதிப்பு குறைவதால் அமெரிக்காவில் விலைவாசி பெரிய அளவில் பாதிக்காது. ஆனால், உலகின் பிற நாடுகளில் பணவீக்கம் கட்டுக்குள் வரும்.
- டாலரின் மதிப்பு சற்று குறைவதன் மூலம்தான் உலகப் பொருளாதாரத்தை மந்த நிலையிலிருந்து மீட்டெடுக்க முடியும். உலகமயச் சூழலில் எல்லா நாடுகளும் ஏதாவது ஒருவிதத்தில் ஒன்றையொன்று சார்ந்து இருக்கின்றன. உலகின் ஏனைய நாட்டு பொருளாதாரங்கள் சீர்குலைந்தால், தனது பொருளாதாரமும் பாதிக்கப்படும் என்பதை அமெரிக்கா உணர வேண்டும்.
நன்றி: தினமணி (15 – 12 – 2022)