TNPSC Thervupettagam

டி.என்.ஆர்.: தமிழோடு ஒரு வாழ்க்கை

April 8 , 2021 1386 days 640 0
  • தஞ்சைத் தமிழறிஞர்களில் முதன்மையாக வைத்துப் போற்றத் தக்க பண்பாளர்களில் ஒருவர் டி.என்.ராமச்சந்திரன்.
  • தமிழிலும் ஆங்கிலத்திலும் தோய்ந்த புலமை கொண்ட மொழிபெயர்ப்பாளர். ஆழங்கால் பட ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர், அரிய நூல்களின் பதிப்பாளர், பேச்சாளர், கல்வித் தகுதியால் வழக்கறிஞர், இலவச பக்தி இலக்கிய வகுப்புகள் நடத்திய ஆசான், இப்படிப் பன்முக ஆளுமை கொண்டவர் டி.என்.ஆர்.
  • பக்தி இலக்கிய வகுப்புகளில் நாயன்மார்கள் கதைகளைச் சொல்லி நடத்தும்போது, அந்தப் பாடல்களில் ஆழ்ந்து, லயித்து, உணர்ந்து அவர் சொல்கையில் அவரது கண்களில் கண்ணீர் வழிவதை நான் நேரில் கண்டிருக்கிறேன். நாக்குழறி பேச்சு நின்று சில விநாடிகள் மெளனம் விரவி நிற்கும்.
  • பெரிய புராணம், திருவாசகம், திருக்கோவையார் உட்பட சில பக்தி இலக்கியப் பனுவல்களை மொழிபெயர்த்ததோடு மட்டுமின்றி, 25 நூல்களுக்கும் மேல் எழுதியவர்.
  • 15-க்கும் மேற்பட்ட உயரிய விருதுகளைப் பெற்ற அவர் பாரதியின் ஒட்டுமொத்தக் கவிதைகளையும் மொழிபெயர்த்த பெரும் பணியையும் செய்தவர்.
  • திருவாசகத்தை மொழிபெயர்க்க மட்டும் டி.என்.ஆர். பயன்படுத்திய நூல்களின் எண்ணிக்கை 400. அவருடைய திருவாசக ஆங்கில மொழிபெயர்ப்பு 2001-ல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.
  • டி.என்.ஆரின் திருவாசக மொழிபெயர்ப்பைப் படித்த முன்னாள் ‘குடிஅரசு’த் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், அவருக்கு எழுதிய கடிதத்தில் ‘எளிமையாக மொழிபெயர்க்கப்பட்ட உங்கள் திருவாசக ஆங்கில மொழிபெயர்ப்பு தமிழின் மேன்மையை மேலும் உணர எனக்கு வழிவகுத்தது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
  • ஒரு தேனீ மலரிலிருந்து தேன் எடுப்பதைப் போல பூவுக்கு ஆபத்து நேராமல், அலுங்காமல் பின்னும் அது மலருமாறும் செய்வதைப் போல மொழிபெயர்ப்பைச் செய்ய வேண்டும் என்றும் மூலத்தின் கருத்து கசங்காமல் வர வேண்டும் என்றும் சொல்வார் டி.என்.ஆர்.
  • “ஆயிரம் வருஷத்துக்கு முந்தி இருக்கக்கூடிய பாட்டை நவீன ஆங்கிலத்துல மொழிபெயர்க்கக் கூடாது. அப்படிப் பண்ணா துரோகம். அந்த மணத்துல அந்தக் கடந்த காலத்தைக் கொண்டுவரணும். சொற்களின் எளிமை வேறு, எண்ணத்தினுடைய கனம் வேறு. மொழியின் நுட்பம் இருந்தாதான் மொழிபெயர்ப்புக்குள்ள போகணும். இல்லன்னா, மொழிபெயர்ப்பு பண்ண ஆசையே படக் கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து” என்று சொன்ன டி.என்.ஆர். தன் மொழிபெயர்ப்பில் கருத்து வேறுபாடுகள் கொண்டவர்களுக்கும் அதை விளக்கித் தெளிவுபடுத்துவாரே தவிர, கோபம் கொண்டு பேசியோ எதிரியாகப் பாவித்தோ அவர் என்றும் நடந்ததில்லை.
  • “தமிழ்ல சுளைன்னா ஒண்ணுதான். ஆனா, ஆரஞ்சு சுளைக்கு ஒரு சொல், பலாப்பழச் சுளைக்கு ஒரு சொல்னு ஆங்கிலத்தில் வரும்” என்று அதை விளக்குவார்.
  • மில்டனும் சேக்கிழாரும், ஷேக்ஸ்பியரும் சைவ சித்தாந்தமும் போன்ற தலைப்புகளில் அவர் பேசுவதைக் கேட்கும்போது, பலரும் வியப்பில் ஆழ்ந்துவிடுவார்கள்.
  • காட்டாற்று வெள்ளமாக, தெளிந்த நீரோடையாக ஆழ்ந்த சுழலாக, சொல்ல வந்த உள்ளடக்கத்துக்கேற்பப் பல ரூபம் கொள்ளும் அவர் பேச்சு வெறும் பேச்சு அல்ல. பல ரூபத்தில், பல திசைகளில் தன் ஞாபகத்தின் வழியே தேடித் திரிந்து, கருத்துகளை ஒன்றிணைத்து ஒன்றை விளக்க அவர் முற்படும்போது, அதில் ஒன்றிக் கரைந்துவிடுவார்.
  • உடலும் மனமும் சிந்தனையும் மொழியும் கூடி நிகழும் ஒரு நிகழ்த்துக் கலை போல இருக்கும் அந்த சொற்பொழிவுகளைக் கேட்டவர்கள் பாக்கியவான்கள்.
  • பழக்கத்துக்கும் அவ்வளவு எளியவர் டி.என்.ஆர். அவருடைய பழக்கத்தின் இனிமையை எந்த ராகத்தோடு ஒப்பிட்டுச் சொல்வீர்கள் என்று இசை மேதை டி.என்.சேஷகோபாலனிடம் நான் கேட்டபோது இப்படிச் சொன்னார். ‘‘சிந்து பைரவி. அதான், அவருக்கு ரொம்பப் பிடிக்கும்.
  • சிந்து பைரவின்னா என்ன, அழகு சிந்தும் பைரவி, எழில் சிந்தும் பைரவி, பாவம் சிந்தும் பைரவி, ரஸம் சிந்தும் பைரவி, அதில் இல்லாதது என்ன? என்னைத் திருப்பித் திருப்பி அவர் சிந்து பைரவி பாடச் சொல்லிக் கேட்டுக்கொண்டே இருப்பார். அந்த ராகத்தோடதான் நான் ஒப்புமை சொல்வேன்.”

அந்த ஆளுமைக்குப் பெயர்தான் டி.என்.ஆர்.

  • 18.08.1934-ல் கோனேரி ராஜபுரத்தில் காமாட்சி அம்மாள், நடராஜ ஐயர் தம்பதியருக்கு 3-வது மகனாகப் பிறந்த டி.என். ராமச்சந்திரன், ஆரம்பக் கல்வியை தில்லைஸ்தானம் பள்ளியிலும் உயர் கல்வியை திருவையாறு உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார்.
  • பின் மேல்படிப்புக்காக திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் இன்டர்மீடியட் வகுப்பில் சேர்ந்தார். பின் அதே கல்லூரியில் வணிகவியல் பயின்று பி.காம். பட்டம் பெற்றார். பிறகு, சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்து பி.எல். பட்டமும் பெற்று, 09.08.1956-ல் வழக்கறிஞராகவும் பதிவுசெய்து கொண்டார். 13.09.1956-ல் கல்யாணியம்மாளைத் திருமணம் செய்துகொண்டார்.
  • இவருடைய திருமணத்தின்போது பண்டித கோபாலய்யர் ஒன்பது நாட்கள் கம்பராமாயண உபந்யாசம் செய்தார். டி.என்.ராமச்சந்திரன் - கல்யாணி தம்பதியருக்கு சுரேஷ், கணேஷ், ரமேஷ், மகேஷ் என்று நான்கு மகன்கள் இருக்கிறார்கள்.
  • சரியான காரியம் என்று ஒன்றை நினைத்து, அதைச் செய்ய வேண்டும் என்று நினைத்துவிட்டால், எவ்வளவு உடல்நலப் பிரச்சினைகள் இருந்தாலும் அதை செய்தே முடிப்பார் டி.என்.ஆர். நான் அவரைப் பற்றி எடுத்த ஆவணப் படத்துக்காக 2011-ல் தஞ்சை சிவகங்கை பூங்காவுக்கு அழைத்துச் சென்றிருந்தேன்.
  • “சார், இந்த போட்ல நீங்க பிரயாணம் பண்ற மாதிரி காட்சி எடுத்தா நல்லா இருக்கும் சார்.”
  • “என் வயசென்ன... ஏறுக்குமாறா உள்ள இந்தப் படிகள்ல என்னால ஏறி இறங்க முடியுமா?”
  • “தமிழறிஞர்னா என்ன உக்காந்துட்டே பேசறதா? நடங்க. படில ஏறுங்க... இறங்குங்க. சுறுசுறுப்பாதான இருக்கீங்க சார். பாரதிதாசன்லாம் போட்லயே மெட்ராஸ்லேர்ந்து பாண்டிச்சேரி போயிருக்கார்னு உங்களுக்குத் தெரியாதா? உற்சாகமா வாங்க சார்.”
  • அவரது ஓட்டுநர் ஜெயப்பிரகாஷ் ‘‘ஐயாவை ஏதும் பண்ணிடாதீங்க. அவங்களுக்கு 77 வயசு. அம்மா என்னை வைக்க மாட்டாங்க” என்று பதறுகிறார்.
  • ‘பரமேஸ்வரா... பரமேஸ்வரா’ என்று இரண்டு முறை உச்சரித்துவிட்டு, அவரால் இறங்க முடியாத அந்தப் படியில் சிரமப்பட்டு இறங்கி வந்து, படகில் ஏறி ஒரு வலம் வந்தார். அந்தக் காட்சி அந்த ஆவணப் படத்தில் இருக்கிறது. தான் எடுத்துக்கொண்ட எல்லாக் காரியங்களிலும் அதே சக்தியுடன் இயங்கிச் சாதித்த அந்த ஆளுமைக்குப் பெயர்தான் டி.என்.ஆர்.

நன்றி: இந்து தமிழ் திசை (08 - 04 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்