- வரலாறு குறித்துப் பேசும்போது முற்போக்கு, முன்னேற்றம், முன்னே செல்லுதல் ஆகிய உருவகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் பொருள் என்னவென்றால், மனித சமூகங்கள் தாங்கள் செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்று, விரோதங்களை, வன்முறைகளைத் தவறென்று உணர்ந்து அவற்றைக் களைந்து, சீர்திருத்திச் செல்ல வேண்டும் என்பதுதான். திருத்திக்கொள்வது, செம்மைப்படுத்திக்கொள்வது என்ற அடிப்படையில்தான் இந்த முற்போக்கு, முன்னேறி செல்வது என்ற உருவகம் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு மாறாக, கடந்த காலத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்கு இன்றைக்கு பழிவாங்குவது என்ற சிந்தனை பிற்போக்கானதாகும். அதாவது, பழைய காலத்தில் தேங்கி நிற்கும் மனப்போக்கு எனலாம்.
- உதாரணமாக, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எதிரிகளின் தலைநகரமான மதுரையை அழிப்பதைப் பெருமையாகக் கருதி சோழ மன்னர்கள் மதுராந்தகன் என்று பெயர் சூட்டிக்கொண்டார்கள். அதேபோல, பாண்டியர்களும் சோழர்களை வென்ற பட்டப்பெயர்களை வைத்துக்கொண்டார்கள். ஆனால், இன்றைக்குத் தமிழர்கள் என்று அனைவரும் ஒரு பண்பாட்டு அடையாளத்தில் இணைந்துள்ளதுதான் முற்போக்கு.
- ஆயிரம் ஆண்டுகள் என்ன, எழுபதாண்டுகளுக்கு முன் பிரான்ஸைக் கைப்பற்றியது ஜெர்மனி. எதிர்த்த பிரெஞ்சுக்காரர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டார்கள். அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. அதற்கு முன் இருநூறு ஆண்டுகளாகவே பிரான்ஸும், ஜெர்மனியும் போரிட்டுவந்துள்ளன. ஆனால், இன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளாக, நேட்டோ கூட்டமைப்பின் உறுப்பினர்களாக இரண்டு நாடுகளும் சேர்ந்து இயங்குகின்றன. ஐரோப்பிய பண்பாடு என்ற கருத்தாக்கம் வலுப்பெற்று ஐரோப்பிய நாடுகளை இணைக்கக் காண்கிறோம்.
இந்திய தேசியத்தின் இரண்டு பாதைகள்
- இந்திய தேசியத்தைக் கட்டமைப்பதில் கருத்தியல் அடிப்படையில் இரண்டு போக்குகள் அல்லது பாதைகள் உருவாயின. ஒன்று அகிம்சை வழியில், இந்தியாவை பல்வேறு பண்பாடுகளின் தொகுப்பாகக் கொண்டு, ஐரோப்பிய பண்பாடுபோல இந்தியப் பண்பாடுகளின் ஒன்றியமாகக் காண்பது. இதுவே காந்தியும், அவரை அடியொற்றிய நேருவும் பின்பற்றிய வழி. இன்னொன்று இந்து அடையாளவாத, வரலாற்றுவாத வன்முறைப் போக்கு. இது சாவர்க்கரும், பிற இந்து அடையாளவாத இயக்கங்களும் பின்பற்றிய வழி.
- இந்த இந்து அடையாளவாத வன்முறைப் பாதையை நேசித்த பல முக்கிய தலைவர்கள், கருத்தியலாளர்கள் மராத்திய பகுதியைச் சேர்ந்த சித்பவன் அல்லது தேசஸ்த பிராமணர்களாக இருந்தது தற்செயலானது இல்லை. அவர்கள் பதினேழாம், பதினெட்டாம் நூற்றாண்டில் உருவான, மராத்திய பேஷ்வாக்களின் தலைமையிலான பேரரசை உருவாக்கும் முயற்சியின் தொடர்ச்சியாகவே சிந்தித்தார்கள். அதனை பாழ்படுத்தியவர்களாக முஸ்லீம்களையும், பின்னர் ஆங்கிலேயர்களையும் கண்டார்கள்.
- ஆனால், காந்தியின் பண்பாட்டு தொகுப்பே தேசம் என்ற பார்வையும், வன்முறையின்றி அகிம்சை வழியில் ஆன்மபலத்தினை நம்பி உரிமைகளைக் கோரும் முறையும் அனைத்துத் தரப்பு மக்களையும் ஈர்ப்பதாக அமைந்தது. அவரால் பிராமணர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், கிராமப்புற விவசாயிகள், எளிய மக்கள் என அனைவரையும் தன் பாதையில் ஒருங்கிணைக்க முடிந்தது.
- மத நிறுவனங்கள், சனாதன சக்திகளை காந்தி நம்பவில்லை. கடவுள் என்ற சக்தியிடம் முறையிடும் எளிய மக்களின் பக்தியைத்தான் நம்பினார். ஏற்கெனவே மத நிறுவனங்களுக்கு அப்பால் பக்தியின் மூலம் இந்து, முஸ்லீம் மக்களை ஒருங்கிணைத்த கபீர் தாஸ் உள்ளிட்ட வெகுஜன குரல்களின் தொடர்ச்சியாக காந்தி அமைந்தார்.
- காந்தியின் வழிமுறையில் முதலீட்டியத்தால் சுரண்டப்பட்ட தொழிலாளர்கள், ஜாதீயத்தால் பாதிக்கப்பட்ட, சூத்திரர்கள் என்று பிற்படுத்தப்பட்டவர்கள், தீண்டாமையால் பாதிக்கப்பட்ட தலித் மக்கள் ஆகியவர்களுக்கான தீர்வுகள் போதுமானதாக இல்லை என்று நினைத்த பல தலைவர்கள் எம்.என்.ராய், பெரியார், அம்பேத்கர் உள்ளிட்டவர்கள் காந்தியை விமர்சித்தார்கள், விலகினார்கள். ஆனால், யாருக்குமே காந்தியைக் கொல்லுமளவு வெறுப்பு தோன்ற வாய்ப்பே இருக்கவில்லை.
- மாறாக, வன்முறைப் பாதையை நேசித்த வரலாற்றுவாத, அடையாளவாத, ஆதிக்க சக்திகள்தான், அவர்கள் கருத்தியல்தான் காந்தியை இந்தியாவின் பெரும் பலவீனமாகக் கணித்து கொல்ல நினைத்தன.
- காந்தியைக் கொன்றது ஒரு பெரும் தடையை நீக்கியதுதானே தவிர தங்கள் நோக்கில் தேசத்தைக் கட்டமைக்க போதுமானது அல்ல என்பது அவர்களுக்குத் தெரியும். அதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்ததுதான் ராம ஜென்ம பூமி விவகாரம்.
அயோத்தியில் இருந்த பாபர் மசூதி
- இந்தியா சுதந்திரம் பெற்ற 1947 ஆகஸ்ட் 15 என்ற நாளுக்கும், அது அரசமைப்புச் சட்டத்தை இயற்றி ஏற்று, ஒரு குடியரசாக மலர்ந்த 1950 ஜனவரி 26 என்ற நாளுக்கும் இடைப்பட்ட காலத்தில் இரண்டு சம்பவங்கள் நிகழ்ந்தன. ஒன்று 1948 ஜனவரி 30 அன்று காந்தி நாதுராம் கோட்ஸே என்ற இந்து மகா சபா உறுப்பினரால் கொல்லப்பட்டது. இரண்டாவது 1949 டிசம்பர் 22 அன்று நள்ளிரவு இந்து மகா சபாவைச் சேர்ந்த அபிராம் தாஸ் என்ற சாது ராமர் சிலையை அயோத்தி பாபர் மசூதி வளாகத்திற்குள் இரவோடு இரவாக தூக்கிக் கொண்டுபோய் உள்ளே நிறுத்தியது!
- காந்தி கொலையைக் குறித்து வழக்கு நடந்து முதன்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்ட பிறகு, அதற்குப் பின்னணியில் நிகழ்ந்த சதி குறித்து விரிவாக ஆராய்வதற்கு கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த விசாரணை கமிஷன் சாவர்க்கர் உள்ளிட்ட பலருக்கும் இருந்திருக்கும் தொடர்பை ஆராய வேண்டும் என்று கூறியது.
- அதற்குள் மிகுந்த காலம் கடந்துவிட்டதால் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. சமீபத்தில் வெளியான ‘த மர்டரர், த மோனார்க் அண்ட் த ஃபகிர்: ஏ நியூ இன்வெஸ்டிகேஷன் ஆஃப் மகாத்மா காந்திஸ் அஸ்ஸசிநேஷன்’ (The Murderer, The Monarch and the Fakir: A New Investigation of Mahatma Gandhi’s Assassination) என்ற நூலில் அப்பு சந்தோஷ் சுரேஷ், பிரியங்கா கோடம்ராஜு ஆகிய ஆசிரியர்கள் பல முக்கிய தரவுகளைத் தொகுத்து அளித்துள்ளனர்.
- ஆனால், அயோத்தியில் மசூதி வளாகத்தினுள் ராமர் சிலை தோன்றியது தெய்வாதீனமாக நிகழ்ந்தது என்றே செய்தி பரபரப்பப்பட்டது. அபிராம் தாஸுக்கு ‘ராம ஜென்ம பூமி உத்தாரக்’ என்ற பட்டம் இருந்தாலும், அவர்தான் அந்த சிலையை டிசம்பர் 22 இரவில் மசூதிக்குள் கொண்டுபோய் வைத்தவர் என்பது மறக்கப்பட்டுவிட்டது. அவர் மேல் பதியப்பட்ட குற்றப்பத்திரிகை அவருக்கு எந்த தண்டனையும் பெற்றுத் தரவில்லை.
- அபிராம் தாஸ் அவராகவே இந்த காரியத்தைச் செய்யவில்லை; செய்திருக்கவும் முடியாது. அவருக்கு பின்னால் கோரக்பூர் மடத்தின் மஹந்த்தும், இந்து மகா சபா தலைவருமான திக் விஜய் நாத்தும், அவருக்கு துணையாக மாவட்ட மாஜிஸ்டிரேட்டாக, நிர்வாக அதிகாரியாக இருந்த கே.கே.கே.நாயர் என்பவரும், பல்ராம்பூர் சமஸ்தான மன்னரான பிரசாத் சிங் என்பவரும் செயல்பட்டதை ‘அயோத்யா, த டார்க் நைட்: த சீக்ரெட் ஹிஸ்டரி ஆஃப் ராமாஸ் அப்பியரென்ஸ் இன் பாப்ரி மஸ்ஜித்’ (Ayodhya, The Dark Night: The Secret History of Rama’s Appearance in Babri Masjid) என்ற நூலில் கிருஷ்ணா ஜா, திரேந்திர கே. ஜா ஆகியோர் விரிவான தரவுகளுடன் விளக்கி எழுதியுள்ளனர். மிக, மிக சுவாரசியமான தகவல்கள் அடங்கிய நூல் இது.
நம்பிக்கையா, வரலாறா?
- அயோத்தி என்ற நகரம் ராமர் பிறந்த நகரம் என்ற நம்பிக்கை பரவலாக இருந்தாலும், அந்த நகரில் அவர் எங்கு பிறந்தார் என்பதோ, அவர் பிறந்த இடத்தில் இருந்த கோயிலை இடித்துதான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்பதோ மக்களின் நம்பிக்கையிலோ, வாய்மொழிக் கதைகளிலோ இடம்பெற்றதில்லை. 19ஆம் நூற்றாண்டில் பாபர் மசூதியின் வெளிப்பகுதியில் ராமருக்கு ஒரு சபூர்த்தா அமைத்து வழிபட உரிமை கேட்டு பிரிட்டிஷ் ஆட்சியிடம் அயோத்தியிலிருந்து சில மத அமைப்புகள் கேட்டன. அப்போதெல்லாம் அது அந்த இடத்தைப் பகிர்ந்துகொள்ளும் வழக்காகத்தான் இருந்தது.
- மசூதியையே இடித்துவிட்டு கோயில் கட்ட வேண்டும், ஏனெனில் அங்கே கோயில் இருந்த இடத்தில்தான் அதை இடித்துவிட்டு மசூதி கட்டினார்கள் என்ற ஒரு கதையாடல் சங்க பரிவாரத்தால், 1949க்குப் பிறகே பரப்பப்பட்டது. அதுவும் 1950இல் வளாகத்திற்கு பூட்டுபோட்ட பிறகு அடக்கி வாசிக்கப்பட்டேவந்தது.
- ராஜீவ் காந்தி 1980களில் பூட்டைத் திறந்து வழிபடும் உரிமையை அளித்தார். அதைத் தொடர்ந்து பாஜக ஆதரவுடன் ஆட்சி செய்த வி.பி.சிங் மண்டல் கமிஷன் அறிக்கையைச் செயல்படுத்தத் துணிந்தார். பிற்படுத்த வகுப்பினர்களுக்கு 27% இடஒதுக்கீட்டை சட்டமாக்கினார். வட நாட்டு பிராமணர்கள் உள்ளிட்ட பல முற்பட்ட வகுப்பினர், ஆதிக்க ஜாதியினர் கொதித்து எழுந்தார்கள்.
- அந்த நிலையில் இந்து என்ற பெயரில் அனைவரையும் மீண்டும் ஒருங்கிணைக்க ராம ஜென்ம பூமி இயக்கம் முடுக்கிவிடப்பட்டது. அத்வானி 1990இல் ரத யாத்திரை தொடங்கினார். சர்வதேச அரசியலில் சோவியத் யூனியன் வீழ்ச்சி, இந்தியாவில் ராஜீவ் காந்தி படுகொலை ஆகிய பெரும் நிகழ்வுகளின் பின்புலத்தில் 1992 டிசம்பர் 6 அன்று அத்வானி முன்னிலையில் கரசேவகர்களால் பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அந்த இடத்தின் சொத்துரிமை தொடர்பான நீண்ட கால வழக்கிற்குப் பிறகு உச்ச நீதிமன்றம் அந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட அரசிடம் ஒப்படைத்துவிட்டது.
- இந்தியாவைப் பன்முகம் கொண்ட பண்பாட்டுத் தொகுப்பாக வடிவமைக்க நினைத்த காந்திய கருத்தியலுக்கு எதிராக, அதனை இந்து ராஷ்டிரமாக வரலாற்றுவாத, அடையாளவாத தேசமாக வடிவமைக்கும் பிற்போக்கு கருத்தியலின் அரசியல் பயணம் முப்பதாண்டுகளுக்கு முன் துவங்கியது. சொல்லப்போனால், 1950 முதலான நாற்பதாண்டு கால குடியரசின் பயணம் ஒரு யூடர்ன் போட்டு பின்னோக்கி செல்லத் தலைப்பட்டது எனலாம்.
- காந்தி நம்பிய இந்திய பண்பாட்டின் ஆன்ம வலு அதனை மீண்டும் பண்பாட்டு பன்மையின், சகவாழ்வின், அதிகாரப்பரவலின் பாதையில் மீட்டெடுக்குமா என்பதே நம் முன்னால் உள்ள கேள்வி!
நன்றி: அருஞ்சொல் (06 – 12 – 2022)