TNPSC Thervupettagam

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியிலிருந்து தப்பிப்பது எப்படி?

October 7 , 2024 49 days 45 0
  • ஆன்லைன் மோசடி போய் 'டிஜிட்டல் அரெஸ்ட்' எனும் புதிய மோசடி அதிகரித்து வருகிறது. மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், நிறுவனத்தின் தலைவர்கள், ஓய்வு பெற்றவர்கள் உள்ளிட்டவர்களை தொடர்பு கொண்டு, உங்கள் பெயரில் சட்டவிரோத செயல் நடைபெறுகிறது என பொய் கூறி மிரட்டி பணம் பறிப்பதுதான் டிஜிட்டல் அரெஸ்ட். இந்த மோசடி பொதுவாக வீடியோ காலில் தொடங்கும். மோசடி ஆசாமிகள் சம்பந்தப்பட்ட தனிநபருக்கு வீடியோ கால் செய்து, அவர்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளதாக தெரிவிப்பார்கள்.
  • அமலாக்கத் துறை அல்லது சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளிலிலிருந்து பேசுவதாக கூறும் அவர்கள், அதற்கேற்ற சீருடை அணிந்திருப்பார்கள். அடையாள அட்டையை காட்டுவார்கள். அவர்களின் பின்னணியில் புலனாய்வு அலுவலகம் இருக்கும். இதனால், உண்மையான அதிகாரிகள்தான் தங்களை அழைக்கின்றனர் என நம்பி விடுகின்றனர். அதன் பிறகு, இருக்கும் இடத்தை விட்டுநகரக்கூடாது என்றும் மொபைல் போனின் மைக்ரோபோனை ஆன் செய்து வைக்க வேண்டும் என்றும் மிரட்டுகின்றனர். நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்ததாகக் கூறி காட்டுகின்றனர்.
  • பண மோசடி, போதைப் பொருள் கடத்தல் போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாகவும், நாங்கள் சொல்வதற்கு ஒத்துழைக்காவிட்டால் சிறை தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் மிரட்டுகின்றனர். இதை உண்மை என நம்பி பீதியடையும் அவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணத்தை கறந்து விடுகின்றனர். இப்படித்தான் ஒரு கும்பல் வர்த்தமான் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான எஸ்.பி. ஓஸ்வாலிடம், பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி 7 கோடி ரூபாயை பறித்துள்ளது.
  • சென்னையைச் சேர்ந்த 72 வயது பெண் பொறியாளரிடம் ரூ.4.7 கோடியை சுருட்டி உள்ளனர். அவரது ஆதார், செல்போன் எண்ணை பயன்படுத்தி பல்வேறு வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் ஹவாலா பணப்பரிமாற்றம் நடந்ததாகவும் கூறி அவரை ஏமாற்றி உள்ளனர். இது தொடர்பாக 13 பேரை சென்னை காவல் துறை கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.50 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளது. இதுபோல தமிழ்நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் ஜெயந்தி ரூ.10 லட்சத்தை இழந்துள்ளார். சென்னையைச் சேர்ந்த மற்றொரு பெண் ரூ.4 லட்சத்தைப் பறிகொடுத்துள்ளார்.
  • கடந்த 2 ஆண்டுகளில் இதுபோன்று ரூ.10,100 கோடி மோசடி நடந்துள்ளதாக மத்திய அரசின் புள்ளிவிவரம் கூறுகிறது. சென்னையில் மட்டும் ரூ.132 கோடி மோசடி நடந்துள்ளது.

உதவி எண்:

  • மத்திய உள் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய சைபர்கிரைம் ஒருங்கிணைப்பு மையம் (I4சி), சைபர் கிரைம் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுபோன்ற மிரட்டல் வீடியோ அழைப்பு வரும்போது, அதை துண்டித்து விடலாம். அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. பின்னர் சைபர் கிரைம் ஹெல்ப்லைன் எண் 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் உடனடியாக புகார் அளிக்க வேண்டும்.

சட்டத்தில் இடமில்லை:

  • விசாரணை அமைப்புகள் டிஜிட்டல் அரெஸ்ட் நடவடிக்கையை மேற்கொள்வதற்கு இந்திய அரசியல் சாசனத்தில் இடம் இல்லை. எந்தவொரு நபரும் அவர்களின் வீடியோ அழைப்பை ஏற்கும்படியோ அழைப்பை துண்டிக்கக் கூடாது என்றோ யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. இதனை உணர்ந்து கொண்டாலே இப்பிரச்சினைக்கு பெருமளவு முடிவு கட்டிவிடலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (07 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்