TNPSC Thervupettagam

டிஜிட்டல் ஊடகங்களை முறைப்படுத்தும் நோக்கில் கூடுதல் கவனம் தேவை

September 28 , 2020 1398 days 551 0
  • டிஜிட்டல் ஊடகத்தில் சட்ட விரோதமான விஷயங்கள், தீங்கு விளைவிக்கும் தவறான தகவல்கள் போன்றவற்றுக்கு விரைவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அரசு வெளிப்படுத்திவரும் சமிக்ஞைகள் முக்கியமானவை.
  • அதேசமயம், கருத்து சுதந்திரத்துக்கு எந்தப் பாதிப்பும் நேரிடாமல் மிகுந்த ஜாக்கிரதையாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணி இது.
  • சுதர்சன் தொலைக்காட்சி விவகாரம் தொடர்பான வழக்கில் ஒன்றிய அரசு அஃபிடவிட் தாக்கல் செய்தது.
  • மின்னணு ஊடகத்தின் சுயக் கட்டுப்பாட்டு இயங்குமுறைகளை மேம்படுத்துவது தொடர்பில் பரிந்துரைகள் கூற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டதற்கு ஒன்றிய அரசு ஆற்றிய எதிர்வினையில், ‘இணையம் அடிப்படையிலான டிஜிட்டல் ஊடகத்துக்குக் கட்டுப்பாடுகள் தற்போதைய காலத்தின் கட்டாயம்என்று கூறியது.
  • எந்தத் தடையும் இல்லையென்றால் டிஜிட்டல் ஊடகம் விஷம் நிரம்பிய வெறுப்பையும் வன்முறையையும் பயங்கரவாதத்தையும் பரப்பக் கூடும்என்றும் அது குறிப்பிட்டது.
  • அதே நாளில், இதைப் போன்றதொரு விஷயத்தில் மக்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் சஞ்சய் தோத்ரே எழுத்துபூர்வமாக பதிலளித்தார்.
  • ஊடக வழங்குநர்களின் பொறுப்பேற்பை அதிகப்படுத்தும் விதத்தில் தகவல் தொழில்நுட்ப (ஊடக வழங்குநர் நெறிமுறைகள்) விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றார்.
  • இணையத்தில் நம்பகமான தகவல்களைப் பெறுவது சிரமமாக இருக்கிறது என்பதையும், பிளவுபடுத்தும் கருத்துகள், வெறுப்புப் பேச்சு, தவறான தகவல்கள் போன்றவை இணையத்தில் நிரம்பி வழிகின்றன என்பதையும் மறுக்க முடியாது.
  • இந்தியாவில் சமீப ஆண்டுகளாகத் தவறான தகவல்களால் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களில் பல உயிர்கள் பலியாகியிருக்கின்றன.
  • காலம் காலமாக உள்ள பிரச்சினைகள் இப்போது தொழில்நுட்பத்தின் தளங்கள் விரிவடைந்ததற்கேற்ப மேலும் விரிவடைந்திருக்கின்றன.
  • ஆனால், அதிகமான கட்டுப்பாடு இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக இருக்கும் என்று எண்ணுவதும் ஒரு கற்பனையே.
  • ஏனெனில், பிரச்சினைகளை ஏற்படுத்தும் விஷயங்கள், வன்முறையைத் தூண்டும் வெறுப்புப் பேச்சு போன்றவற்றை எதிர்கொள்வதற்கு ஏற்கெனவே சட்டங்கள் இருக்கின்றன.
  • வேண்டுமானால் அவற்றை சற்றுக் கடுமையாக்கிக்கொள்ளலாம். இன்னொரு பக்கம், இணையம்தான் மக்கள் தகவல்களையும் தங்கள் கருத்துகளையும் சுதந்திரமாகப் பகிர்ந்துகொள்ளும் இடம்.
  • ஆகவே, சீனாவைப் போல இணையச் சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்காமல் அதைக் கட்டுப்படுத்த முடியுமா என்பதுதான் நம் முன்னே உள்ள பெரிய கேள்வி.
  • மேலும், கூகுள், ஃபேஸ்புக் போன்றவற்றுக்கென்று புதிய விதிமுறைகளை வகுக்கும் முயற்சிகளில் மிகுந்த கவனம் தேவை. அவற்றின் மீது இதற்கு முன்பு அதிக கட்டுப்பாடுகளை விதிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளெல்லாம் சட்டத்தின் முன் நிற்கவில்லை.
  • தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-ன் பிரிவு 79(1) அந்தக் கட்டுப்பாடுகளிலிருந்து ஆசுவாசம் தருகிறது. ஆகவே, மிதமான, கவனமான குறுக்கீடுகள் மட்டுமே போதிய பலனை இவ்விஷயத்தில் தரும்.

நன்றி: தி இந்து (28-09-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்