- 2020ல் 'டிஜிட்டல் கல்வி' என்ற புதிய கற்றல் முறை நம் மாணவர்களிடையே அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்துத் தரப்பு மாணவர்களிடமும் அறிமுகமாகியுள்ள இந்த புதிய கற்றல் முறை இதுவரை இல்லாத அளவிற்கு கல்விமுறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் இது ஒரு புதிய அனுபவம்தான்.
- சமூக வலைத்தளங்களின் தாக்கத்தினால் மொபைல் போன்கள் மனிதவாழ்வில் இன்றியமையாததாக மாறிவிட்டது போல தற்போது மாணவர்களின் வாழ்விலும் 'டிஜிட்டல் கல்வி' என்ற பெயரில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன இந்த ஸ்மார்ட்போன்கள். கரோனா பொதுமுடக்கத்தால் பள்ளி செல்ல முடியாத நம் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளுக்கு பழக்கப்படுத்தப்பட்டுவிட்டனர்.
- இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. ஆன்லைன் தவிர்த்து மற்ற போட்டித் தேர்வுகள் பெரும்பாலும் ரத்து செய்யப்பட்டன.
- பள்ளிகள் மூடப்பட்ட காலத்திலிருந்து ஆன்லைன் வகுப்புகள் வழியாகவே ஆசிரியர்கள்-மாணவர்கள் உரையாடல் இருந்து வருகிறது. பள்ளி வகுப்பறைகளில் இருப்பதுபோலவே காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை பாட வாரியாக ஆன்லைன் வகுப்புகள் நடக்கின்றன. இந்தியா முழுவதும் இதே நிலை தான். எல்.கே.ஜி. வகுப்புகள் தொடங்கி கல்லூரி வகுப்புகள் வரை வகுப்புகளும், தேர்வுகளும் ஆன்லைன் வழியேதான்.
- ஆன்லைன் வகுப்புகளுக்கு கூகுள் மீட், ஜூம் உள்ளிட்ட செயலிகளே பெரும்பாலாக பயன்படுத்தப்படுகின்றன. தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களாலே ஜூம் செயலி பிரபலமானது அனைவரும் அறிந்ததே.
- அடுத்ததாக தேர்வுகளுக்கும், சந்தேகங்களுக்கும் வாட்ஸ்ஆப் ஒரு பெரும்கருவியாக செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு வகுப்புக்கும் தனியே ஒரு வாட்ஸ் ஆப் குழு உருவாக்கி அதன் மூலமாக மாணவர்களுக்குத் தேவையான அறிவுரைகள் வழங்கப்படுகிறது.
- கேள்வித்தாள்களை வாட்ஸ்ஆப்பில் அனுப்பி, பதிலையும் வாட்ஸ் ஆப்பில் பெறும் நடைமுறையும் வந்துவிட்டது. வாரம் ஒருமுறை தேர்வு, ஆசிரியர்கள்- பெற்றோர்கள் சந்திப்பு இணைய வழியிலே தொடர்ந்து வரும் இந்த நிலை எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியவில்லை.
- முன்பெல்லாம், மாணவர்களின் கல்வி நலனை கருத்தில்கொண்டு பெற்றோர்களிடம் ஆசிரியர்கள் கூறும் ஒரு பொதுவான கருத்து. மாணவர்களிடம் மொபைல்போனை பயன்படுத்த, டிவி பார்க்க அனுமதிக்காதீர்கள் என்பதுதான்.
- ஆனால், இப்போதோ டிஜிட்டல் கல்வி என்ற பெயரில் மொபைல்போனும் தொலைக்காட்சியும்தான் மாணவர்களின் வாழ்வியலில் ஒன்றிணைந்து காணப்படுகின்றன. ஆன்லைன் வகுப்புகளுக்கு கணினிகளைப் பயன்படுத்தலாம் என்றாலும் உபயோகத்திற்கு எளிதாக இருப்பதால் பெரும்பாலான மாணவர்களின் தேர்வாக மொபைல்போன்களே இருக்கின்றன.
- மொபைல்போனை குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் உபயோகிக்கக் கூடாது என்றும் அதனால் கண்களுக்கு பாதிப்பு என்று மருத்துவர்கள் கூறினாலும் தற்போது அது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.
- பொதுவாகவே ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தும்போது சாதகம், பாதகம் என இரண்டும் இருக்கும். அந்தவகையில் அனைத்துத் துறைகளும் டிஜிட்டல் மயமாகி வரும் நிலையில், இந்த புதிய கற்றல் முறையையும் நாம் வரவேற்கலாம்.
- வளர்ந்துவரும் நவீன யுகத்தில் மாணவர்கள் டிஜிட்டல் தொழில்நுட்பம் குறித்து அறிய இது ஒரு வாய்ப்பாக இருக்கும். இருந்த இடத்திலிருந்தே கல்வி பெற முடியும். தங்கள் பள்ளி ஆசிரியர்கள் மட்டுமின்றி உலகின் பல பகுதிகளில் உள்ள ஆசிரியர்களின் அறிவை யுட்யூப், சிறப்பு வகுப்புகள் மூலம் பெற முடியும்.
- ஆனால் பாதகங்கள் என்று கூறினால் பல விஷயங்களைக் கூற முடியும்.
- பொதுவாக வகுப்பறைகளிலேயே மாணவர்களின் கவனத்தை ஒரேநிலையில் கொண்டுசெல்வது என்பது சற்று கடினம்தான். அப்படி இருக்க 8 மணி நேரம் தொடர்ச்சியாக ஆன்லைன் வகுப்புகள் என்றால் சொல்லவே தேவையில்லை. பல வீடுகளில் குழந்தைகளின் வகுப்புகளை பெற்றோர்கள் கவனித்து குறிப்பு எடுத்து கொடுப்பதும், மாணவர்கள் வகுப்புகளை 'ம்யூட்' செய்துவிட்டு தூங்கிவிடுவதும் அல்லது வேறு செயல்களில் ஈடுபடுவதும் சர்வசாதாரணமாகி விட்டது.
- என்னதான் ஆன்லைனில் ஆசிரியர்கள் பாடங்களை விளக்கினாலும் தெளிவான புரிதல் இல்லை என்றே பெரும்பாலான மாணவர்கள் கூறுகின்றனர். சந்தேகங்களை கேட்பது சற்று கடினமாக உள்ளது என்றும் தெரிவிக்கின்றனர். ஒருவேளை மொபைல்போன், இணையவசதி உள்ளிட்டவை இருந்தாலும் அவர்களின் வகுப்புகள் செல்போன்களின் தரம், சிக்னல் ஆகியவற்றையும் சார்ந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
- ஆன்லைன் வகுப்புகளில் எவ்வளவுதான் பாடம் எடுத்தாலும் வகுப்பறையில் ஆசிரியர்கள்- மாணவர்களின் நேரடி உரையாடலுக்கு ஈடாகாது என்பது உண்மைதான்.
- ஆன்லைன் வகுப்புகள் மூலமாக அனைத்து பாடங்களையும் மாணவர்களுக்கு தெளிவாக விளக்கிக்கூற முடியுமா என்பதும் கேள்விக்குறிதான். மாணவர்களை ஒழுங்குபடுத்துவது, செயல்முறை கற்றல், இதர கலைகள் உள்ளிட்டவற்றை மாணவர்கள் இழக்கின்றனர்.
- ஆனால், வகுப்பறைக்குச் செல்ல முடியாத சூழ்நிலையில் ஆன்லைன் வழியாக கல்வி கற்பது பரவாயில்லை என்று சில பெற்றோர்கள் கூறினாலும், ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களுக்கு சற்று மனஉளைச்சலைத் தருவதாகவே பெரும்பாலான பெற்றோர்களும், மனவியல் நிபுணர்களும் தெரிவிக்கின்றனர்.
- தொழில்நுட்ப வசதிகள் கிடைக்கப்பெற்ற மாணவர்களிடம் இந்த பிரச்னை என்றால், பொருளாதாரத்தில் நலிவடைந்த பலரோ தங்கள் குழந்தைகளின் கல்விக்காக தவணை முறையில் மொபைல் போன் வாங்கி அதற்கு மாதந்தோறும் ஆயிரக்கணக்கில் ரீசார்ஜ் செய்யும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதிலும் வீட்டில் இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் இருந்தால் நிலைமை படுமோசம் தான்.
- 2020 ஜூலை - செப்டம்பர் வரையிலான 3 ஆம் காலாண்டில் இந்தியாவில் மட்டும் இதுவரை இல்லாத அளவிற்கு 5 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை ஆகியுள்ளது.
- பொருளாதாரத்தில் செழித்த குடும்பங்களால் தங்களது குழந்தைகளுக்கு தேவையான தொழில்நுட்ப வசதிகளை எவ்வாறேனும் ஏற்படுத்தித் தர முடியும். ஆனால், ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த அதுவும் கரோனா காலத்தில் வேலை இழந்த ஒரு பெற்றோரால் உணவுக்கே வழியில்லா சூழலில் குழந்தைகளுக்கு எவ்வாறு கல்வியை போதிக்க முடியும்?
- அதிலும் இணைய வசதியே இல்லாத கிராமங்களில், மலைவாழ், பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு இம்மாதிரியான டிஜிட்டல் கல்வி முறை எப்படி கிடைக்கும்?
- தமிழகத்தைப் பொறுத்தவரை கல்வி தொலைக்காட்சி மூலமாக வகுப்புகள், பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தில் விடியோக்கள் என பல கற்றல் முறைகள் கையாளப்படுகின்றன. ஆனால் வகுப்பறைகளை விட ஆன்லைன் வகுப்புகளில் ஆசிரியர்கள் கூடுதலாக மெனக்கெட வேண்டும் என்பதுதான் உண்மை.
- பல இடங்களில் மாணவர்களின் ஏழ்மை நிலை கருதி ஆசிரியர்கள் தங்களால் இயன்ற அளவு உதவி செய்கின்றனர். பெரம்பலூரில் ஒரு கணித ஆசிரியர் தன் வகுப்பு மாணவர்கள் 16 பேருக்கு சொந்த செலவில் ஸ்மார்ட் போன்கள் வாங்கி கொடுத்தது, வட மாநிலங்களில் கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகளுக்கு அந்தப்பகுதிகளில் உள்ள ஆசிரியர்கள் நேரடியாகச் சென்று பாடம் எடுப்பது, கல்வியாளர்கள், தன்னார்வலர்கள் பலர் கிராமப்புற மாணவர்களை ஒருங்கிணைத்து சுவர்களை கரும்பலகைகளாக மாற்றி ஒரு புதிய கற்றல் முறையை ஏற்படுத்தியது என பல கல்வி புரட்சிகளும் நடந்ததை மறுக்க முடியாது.
- ஆனால், அனைத்து ஆசிரியர்களும் இதுபோன்ற ஒரு முயற்சியை எடுப்பார்களா? எடுக்க முடியுமா? ஆன்லைன் மூலமாக கல்வி கற்பிக்கப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் கூறினாலும், ஸ்மார்ட்போன் போன்ற தொழில்நுட்ப வசதி இல்லாத மாணவர்களுக்கு எவ்வாறு கற்பிக்கப்படும் என்று கூறத் தவறிவிட்டது. அரசுப்பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் இணையவழி கல்வி கிடைக்கிறதா என்பதை அரசு உறுதி செய்யுமா?
- சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல்வேறு தரப்பு மக்கள் இங்கு இருக்கும் நிலையில், டிஜிட்டல் கல்விமுறையில் உள்ள இந்த ஏற்றத்தாழ்வுகள் மாணவர்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தா வண்ணம் போதிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அவர்களின் கல்வித்திறனோடு மனநலத்தையும் மேம்படுத்த முயற்சிக்க வேண்டும்.
நன்றி: தினமணி (29-12-2020)