டிஜிட்டல் காலக் கருத்துருவாக்கமும் விளிம்புநிலைச் சமூகத்தின் சவால்களும்
- ஒரு சமூகம் தமது கருத்தைப் பொதுவானதாகச் சித்தரித்து அதிகாரத்தின் கவனத்தைப் பெறுவதும், அதன்வழி கிடைக்கும் அரசியல், பொருளாதார லாபத்தைத் தம் பக்கம் திருப்பிக்கொள்வதுமான நடைமுறையைச் சமூக வரலாறு நெடுகிலும் பார்க்க முடியும்.
- வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அச்சமூகமே அதிகாரமாகவும்கூட மாறும். சமூகத்தின் இயங்கியலில் இதுவொரு வழமையான உத்தி என்றபோதிலும், காலந்தோறும் அதை அனைத்துச் சமூகங்களும் பயன்கொண்டு இருக்கவில்லை.
- உத்தியை வகுப்பதும் செயலாக்குவதும் அதிகாரத்தின் பாற்பட்டது என்பதால், ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் எந்தச் சமூகம் அதிகாரத்தை அணுக்கமாக்கிக்கொண்டிருக்கிறதோ அதுவே அந்த உத்தியின் வழி பயனடைந்தது.
- ஏனைய சமூகங்கள் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டன. மையநிலைச் சமூகம் – அதிகாரம் – விளிம்புநிலைச் சமூகம் என்னும் முக்கோணத் தன்மையிலான ஊடாட்டத்தில் மையம் விளிம்பாவதும் விளிம்பு மையமாவதும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் பொருட்டே நிகழ்ந்தன.
- இந்த அம்சம், கடந்த காலத்தைப் போலவே இன்றைய டிஜிட்டல் காலத்தில் தொடர்ந்தாலும், முன்னெப்போதைக் காட்டிலும் அது நுணுக்கமான வேறுபாடுகளைக் கொண்டிருக்கிறது. விளிம்புநிலைச் சமூகங்கள் அதீத நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில், அந்த வேறுபாடுகளையும் அதற்கான காரணங்களையும் பேசியாக வேண்டும்.
கருத்துருவாக்கமும் விளைவுகளும்:
- அன்றாட வாழ்க்கையில் சமூக ஊடகங்களின் தாக்கம் ஏற்படாதவரை அதிகார அணுக்கம் கொண்ட சமூகத்தால் நிகழ்த்தப்பட்ட கருத்துருவாக்கங்களில் ஒருவித நிதானம் இருந்தது. அதன் வழி அக்கருத்துருவாக்கங்கள் கொண்டுவரும் விளைவுகளைக் கணிக்க முடிந்தது.
- விரும்பத்தகாத விளைவுகளைக் கொண்டுவரும் என்று தெரிந்தால், அந்தக் கருத்துருவாக்கம் உடனடியாகக் கைவிடப்பட்டது. சான்றாக, சமூக ஊடகங்களின் பெருக்கத்துக்கு முன்னிருந்த அச்சு ஊடகங்களில் சந்தேகத்துக்கு இடமான செய்தியை வெளியிடுவதைவிட, நிறுத்தி வைப்பது ஓர் அறமாக இருந்தது.
- இன்றைக்கு நிறுவனமாக இயங்கும் அனைத்து ஊடகங்களிலும் அந்நிலைப்பாடு தொடர்ந்தாலும் தனிநபர்களிடம் பரவியுள்ள திறன்பேசிகளின் (Smart Phones) வழியாக உண்மைத்தன்மை உறுதி செய்யப்படாத செய்திகள் அவசரகதியில் பகிரப்படுகின்றன. அவற்றின் வழியாக உருவாகும் கருத்துருவாக்கங்கள் பெரும்பாலும் சமூகத்துக்குள் குழு மனப்பான்மையின் வேறுபாடுகளை அதிகரித்து, சமூகப் பிளவை உண்டாக்குபவையாக இருக்கின்றன.
- நிதானம் தவறியிருக்கும் இன்றைய டிஜிட்டல் காலக் கருத்துருவாக்கத்தில் விரும்பத்தகாத விளைவுகளை உடனே கணிக்க முடிவதில்லை. ஆதலால், அந்தக் குறிப்பிட்ட கருத்துருவாக்கத்தைத் தொடக்க நிலையிலேயே சரிசெய்யவோ கைவிடவோ வாய்ப்பின்றிப் போய்விடுகிறது. அதன் விளைவாக மையம் x விளிம்புநிலைச் சமூகங்களுக்கு இடையிலான முரண்பாடு வளர்கிறது.
- இதற்குச் சமீப காலத்தில் நிகழ்த்தப்பட்ட அரசியல் கைதுகளையும் கொலைகளையும் சார்ந்து பரப்பப்பட்ட நிறுவனம் அல்லாத தனிக் குழுக்களின் சமூக ஊடகப் பதிவுகளைச் சான்றாகச் சொல்ல முடியும்.
- இவற்றோடு, கடந்த காலச் சம்பவங்களின்போது பகிர்ந்துகொள்ளப்பட்ட பதிவுகளையும் இணைத்துப் பார்த்தோமானால் அவை ஆதரவு, எதிர், மெளனம் என்னும் மூன்று வகைமைகளில் அமைந்திருப்பதைப் பார்க்க முடியும்.
- இவ்விடத்தில் ‘மெளனம்’ கருத்தாகுமா என்கிற கேள்வி எழக்கூடும். கருத்தாகும் என்பதே பதில். மெளனமாக இருப்பதும் கருத்தை வெளிப்படுத்தும் வகைமைக்குள் ஒன்றுதான். அது எப்போதும் அதிகாரத்தின் கருத்துருவாக்கத்துக்குத் தனது நிபந்தனையற்ற ஆதரவை வழங்கிக்கொண்டே இருக்கும்.
- அதிகார / மையநிலைச் சமூகத்தின் நடவடிக்கைகள் மக்களைப் பாதிக்குமானால், ஜனநாயகத்தை விரும்புகிற குரல் ஒருபோதும் மெளனமாக இருக்காது. இன்றைக்கு அரசியல் கட்சிகள் அனைத்துமே தமக்கென்று சமூக ஊடகப் பிரிவை வைத்துள்ளன. தம்முடைய கருத்தைப் பரப்புவது, எதிர்க் கருத்தை மறுப்பது என்னும் இரண்டு நிலைப்பாடுகள் அவற்றுக்கு இருந்தாலும் ஒப்பீட்டளவில் எதிர்க் கருத்தை மறுப்பதற்குத்தான் பெருமளவு கவனம் செலுத்துகின்றன.
- அவை பல நேரம் தமது நோக்கத்துக்கு அப்பாற்பட்டுத் தனிமனிதத் தாக்குதலாகவும் அவதூறாகவும் மாறிவிடுகின்றன. அதாவது, சரியான சொல் தேர்வு, காரண விளக்கம், தர்க்க நியாயம் ஆகியவற்றுக்குத் தேவைப்படும் பக்குவ மனம் இல்லாதிருப்பவர்களால் உருவாக்கிப் பரப்பப்படும் கருத்துகள், அக்கருத்துருவாக்கத்தின் உண்மையான நோக்கத்தைச் சிதைப்பதுடன் திசைதிருப்பும் வேலையையும் செய்கின்றன. இதனால், சமூக முரண்களும் அரசியல் பகைகளும் ஊற்றெடுக்கின்றன.
- குறிப்பாக, சமீப காலங்களில் சாதி, மதரீதியிலான மோதல்கள் அதிகரித்திருப்பதற்கு ஊடகங்களில் பகிரப்படும் சமூகப் பொறுப்பற்ற கருத்துகளும் முக்கியப் பங்கு வகித்திருக்கின்றன.
- அவை உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டிய விளிம்புநிலைச் சமூகத்தின் முக்கியப் பிரச்சினைகளைக் கூட இயல்பாக்கம் செய்து, மக்கள் குற்றவுணர்வின்றிக் கடந்து போவதற்கான வழிகளை ஏற்படுத்தும் வேலையையும் ஒருசேரச் செய்கின்றன. விளிம்புநிலைச் சமூகத்தினருக்கான பிரச்சினைகளைப் பொதுக் கவனத்திலிருந்து விலக்குவதற்காகத் திட்டமிட்டு ‘இயல்பாக்கம் செய்தல்’ டிஜிட்டல் காலத்தில் ஓர் உத்தியாகவே மாறியிருக்கிறது.
சந்தேகத்துக்கு இடமாகும் உண்மைத்தன்மை:
- டிஜிட்டல் காலக் கருத்துருவாக்கத்தின் மற்றொரு பிரச்சினை, உண்மையின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிற மாதிரியான பொய்மைகளை உருவாக்கிப் பரப்புவது. அப்படிச் செய்வதால் பொய்மைகள், உண்மையின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துவதோடு, உண்மையின் இடத்தில் தம்மை நிறுவிக்கொள்கின்றன.
- அதோடு, உறுதிப்படுத்தப்படாத ஒரு கருத்துருவாக்கத்தை கண்மூடித்தனமான சார்புநிலை காரணமாக, அது சரியல்ல என்று நன்கு தெரிந்திருந்தும் அக்கருத்துருவாக்கத்தைக் கண்மூடித்தனமாக ஆதரிப்பதும், அதுவே தங்களுக்குப் பிடிக்காத ஒன்றாக இருந்தால்... எவ்வளவுதான் உண்மையாக இருந்தாலும் மிகக் கடுமையான வார்த்தைகளால் வெறுப்பு கக்கி அதை எதிர்ப்பதும் டிஜிட்டல் பயனாளிகள் செய்யும் பெருந்தவறாகும்.
- இத்தகைய கண்மூடித்தனமான ஆதரவு அல்லது எதிர்ப்பு நிலைக்குக் கிடைக்கும் வரவேற்பு, இதைப் பரப்புபவர்களுக்கு மிகப் பெரிய பலமாக அமைந்துவிடுவதும் ஒரு அவலம்! இதிலும் விளிம்புநிலை சமூகத்திற்கு உண்டாகும் பாதிப்புகளே அதிகம்.
- ஜெர்மனியைச் சேர்ந்த தத்துவ ஆராய்ச்சியாளரும் சமூகவியல் பேராசிரியருமான ஜென் ஐக்கர்ஸ், ஆய்வாளர் மத்தியாஸ் ராத் ஆகியோர் இணைந்து எழுதிய ‘விளிம்புநிலைச் சமூகமும் டிஜிட்டல் மாற்றமும்: விளிம்புநிலைகளில் டிஜிட்டல் ஊடகத்தை நோக்கிய அணுகுமுறைகளை மாற்றுதல்’ (Digital change and Marginalized Communities: Changing Attitudes towards digital media in the margins) என்னும் கட்டுரையில் அதிகார அணுக்கம் கொண்டவர்களின் டிஜிட்டல் செயல்பாடுகள் விளிம்புநிலையினருக்கான உண்மைகள் மீது சந்தேக மனப்பான்மையையும் நம்பிக்கைப் பற்றாக்குறையையும் உருவாக்குவதாக மாறியிருக்கின்றன எனச் சுட்டியுள்ளமை இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.
- பண்பாட்டுத் தளத்தில் உண்மைகளை உண்மைகளாகவே பராமரிப்பது பல நேரம் அதிகாரத்துக்கு எதிரானதாக அமையக்கூடும். ஆதலால், அதிகாரம் ஒரு பண்பாட்டைப் புறந்தள்ளி, அதற்கு மாற்றுப் பண்பாட்டைக் கட்டமைக்க விரும்புமேயானால், ஏற்கெனவே இருக்கும் பண்பாட்டின் இருப்புக்குப் பலம் சேர்க்கும் உண்மைகளை அழிக்கும்.
- அதாவது, மாற்றுப் பண்பாட்டை விரும்புகிற அதிகாரம், எப்போதும் தமக்கு எதிரானவையாகக் கருதுவது ஏற்கெனவே இருந்துவரும் உண்மைகளைத்தான். உண்மைகளைத் திரிப்பதும் அழிப்பதுமான போக்கு சமூக ஊடகங்களில் இன்றைக்கு அதிகரித்துவிட்டது. இது அனைத்துச் சமூகங்களுக்கும் பாதிப்புகளை உண்டாக்கும் என்றாலும், கூடுதலாக விளிம்புநிலைச் சமூகங்களின் அடையாளப் பூர்விகத்துக்கும் எதிராக அமையும்.
டிஜிட்டல் ஜனநாயகத்தில் நேர்மையின் அவசியம்:
- டிஜிட்டல் ஜனநாயகத்தில் (Digital Democracy) நேர்மையை இழப்பது வணிகம், அரசியல், அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்தல் என அனைத்திலும் தனிமனித, கூட்டு ஜனநாயகத்தைப் பாதிக்கும் என்கிறார் டிஜிட்டல்மயமாக்கலின் ஆதரவாளரான ஸ்டீவன் கிளிஃப்ட். இது விளிம்புநிலைச் சமூகத்துக்கு எதிராகப் பகிரப்படும் கருத்துகளுக்கும் பொருந்தும்.
- விளிம்புநிலைச் சமூகத்துக்கு எதிராக அதிகார அணுக்கக் குழுக்களால் திட்டமிட்டுப் பகிரப்படும் கருத்துக்கள், அதிகாரத்தின் வேலையைச் சத்தமில்லாமல் செய்துவிடும் குணாதிசயம் கொண்டவையாக இருக்கின்றன என்பதைத் தனது எழுத்துக்களில் பல இடங்களில் குறிப்பிடும் ஸ்டீவன் கிளிஃப்ட், மையநிலை எதிர் விளிம்புநிலைச் சமூகங்களுக்கு இடையிலான டிஜிட்டல் உரையாடலைக் கண்காணித்து, உண்மையைத் தக்கவைப்பதற்கு அவ்விரண்டு சமூகங்களுக்கும் அப்பாற்பட்ட செயல்பாட்டுக் குழு வேண்டும் என்கிறார். விளிம்புநிலைச் சமூகங்கள் மீதான அரசியல், பண்பாட்டுத் தாக்குதல்கள் பற்றிப் படர்ந்துகொண்டு இருக்கும் சூழலில், அவரது கருத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
- எளிதாகவும் விரைவாகவும் வெறுப்பை விதைத்துவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ள இன்றைய டிஜிட்டல் காலத்தில், கருத்துருவாக்கத்தின்போது கைக்கொள்ள வேண்டிய நிதானமும் உண்மை மீதான வேட்கையுமே சமூகத்தின் நல்லிணக்கத்துக்கு வழி அமைக்கும்.
நன்றி: இந்து தமிழ் திசை (23 – 08 – 2024)