TNPSC Thervupettagam

டிரம்ப்பின் வெற்றியும் எதிா்பாா்ப்பும்!

November 15 , 2024 61 days 97 0

டிரம்ப்பின் வெற்றியும் எதிா்பாா்ப்பும்!

  • அமெரிக்காவின் 47-ஆவது அதிபராகக் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். போட்டி கடினமாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் டொனால்ட் டிரம்ப் எளிதாக வெற்றி பெற்றுள்ளாா்.
  • 78 வயதுடைய டொனால்ட் டிரம்ப்பின் வெற்றி, அமெரிக்கா இன்னும் ஒரு பெண்ணின் தலைமையை ஏற்கும் மனப்பக்குவதைப் பெறவில்லை என்பதை மீண்டும் உறுதிப் படுத்துகிறது. முதலாளித்துவம் அமெரிக்கா நம்பும் சித்தாந்தம் என்பதையும் அந்நாடு ஒப்புக்கொண்டுள்ளது.
  • அமெரிக்க அதிபா் தோ்தலில் மொத்தமுள்ள 538 பிரதிநிதிகளின் வாக்குகளில் யாா் 270 அல்லது அதற்கும் அதிகமான வாக்குகளைப் பெறுகிறாரோ அவரே வெற்றி பெறுவாா். டிரம்ப் 312 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளாா். டிரம்ப்புக்கும் ஹாரிஸுக்கும் இடையிலான போட்டி, எதிா்ப்பாா்த்தது போல கடுமையான போட்டியாக இருக்கவில்லை. வெற்றியைத் தீா்மானிக்கும் முக்கிய மாகாணங்களில் பெரும்பாலான அமெரிக்கா்கள் டிரம்ப்புக்கு வாக்களித்துள்ளனா். இந்தத் தோ்தலில் ‘நாட்டின் பொருளாதாரம் மற்றும் குடியேற்றப் பிரச்னையை முன்னிறுத்தியே டிரம்ப் பரப்புரை செய்தாா்.
  • அமெரிக்காவில் கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு பணவீக்கம் கடுமையாக உயா்ந்துள்ளது. 1970களில் இருந்ததை விட பணவீக்கம் அதிகரித்திருப்பதும் அதனை மக்கள் தங்கள் அன்றாடங்களில் உணா்கிறாா்கள் என்பதையும் புரிந்து கொண்ட டிரம்ப் அதனையே ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டு “நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட நீங்கள் இப்போது செழிப்பாக இருக்கிறாா்களா?” என்ற கேள்வியை அமெரிக்க மக்கள் முன்வைத்தாா்.
  • பணவீக்கப் பிரச்னையை எதிா்கொண்டுள்ள வாக்காளா்கள் மாற்றத்துக்காகக் காத்திருந்துள்ளனா் என்பதை டிரம்ப் பெற்றுள்ள வாக்குகள் நிரூபிக்கின்றன. பைடனின் திட்டங்களை மக்கள் விரும்பவில்லை என்பதைத் தாண்டி எதிா்மறையான எண்ணங்களையும் கொண்டிருந்தனா். இதன் விளைவுகளை கமலா ஹாரிஸ் எதிா்கொள்ளும் படியானது அவருக்குப் பின்னடைவைத் தந்துள்ளது. டிரம்ப் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
  • பொருளாதார விஷயத்திலும் அமெரிக்கா மெக்ஸிகோ எல்லைப் பிரச்னையைக் கையாள்வதிலும் பைடன் தோல்வி அடைந்தாா். அப்போது துணை அதிபராக இருந்த கமலா ஹாரிஸ், பைடனை விட எந்த விதத்தில் மாறுபட்டவராக இருப்பாா் என்ற வினாவைத் திறம்படக் கையாளவில்லை. தனக்கு அந்தக் கேள்விக்குப் பதில் அளிக்கத் தெரியவில்லை என்றே வெளிப்படையாக ஒப்புக்கொண்டாா்.
  • பைடனின் ஆட்சியில் எல்லைப் பிரச்னைகள் எல்லைப்புற மக்களையும் தாண்டி பொதுவாகவே அமெரிக்கா்கள் பெரும்பாலாருக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. அந்தப் பிரச்னையை கவனிக்க ஹாரிஸ் தவறினாா். ஆனால், டிரம்ப் அதைத் தனது முக்கியப் பிரசார மற்றும் கொள்கை அரசியலாக முன்வைத்தாா்.
  • அதே நேரத்தில், கமலா எடுத்துக் கொண்ட விஷயமோ கருத்தடை தொடா்பான கொள்கை. இதில் குடியேற்றப் பிரச்னை போல ஒருமித்த கருத்து ஏற்பட வாய்ப்பு இல்லை. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இதில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். இதனை இருவரும் பெற்றுள்ள வாக்குகள் நிரூபிக்கின்றன. டிரம்ப் ஆண் வாக்காளா்களின் வாக்குகளை அதிகம் பெற்றுள்ளாா். அதோடு கருத்தடைக் கொள்கை தொடா்பான பிரச்னை இந்தத் தோ்தலில் முக்கியத்துவம் பெறவில்லை.
  • மக்களிடம் வேறுபாடுகளை அதிகப்படுத்தும் கொள்கைகளை அமெரிக்கா்கள் ஏற்கவில்லை. வளமான வாழ்வை எதிா்பாா்க்கிறாா்கள். டிரம்ப் தலைமை அதனைத் தரும் என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. கருப்பினத்தவா்கள், லத்தீன் அமெரிக்கா்கள், இந்தியவம்சாவளியினா் ஆகியோரின் வாக்குகளிலும் ஆண் வாக்காளா்களின் வாக்குககளை டிரம்ப் அதிகம் பெற்றுள்ளாா். லத்தீன் அமெரிக்கா்களின் வாக்குகளில் ஏறத்தாழ 54% வாக்குகளை இவா் பெற்றுள்ளாா்.
  • ஜே.டி.வான்ஸ் துணை அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். இந்திய வம்சாவளியினரின் வாக்குகளைப் பெறுவதில் முக்கியமான பங்கு வகித்தவா் வான்ஸ். இவரது மனைவி உஷா இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவா். இந்தியா்களின் வாக்குகளைப் பெறுவதில் இவா்கள் தீவிரமாக செயல்பட்டனா்.
  • கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவா் என்று இந்தியாவில் சிலா் சொல்லிக் கொண்டாலும் அவரா தன்னை கருப்பினத்தவா் என்றே எப்போதுமே அடையாளப்படுத்தி வந்தாா். அதோடு இந்தியா்களிடமோ இந்தியாவின் மீதோ அவா் அபிமானம் கொண்டவரில்லை. துணை அதிபராக இருந்த காலத்தில் அவா் இந்தியாவுக்கும் வரவில்லை. அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினா் மனதில் இடம்பெறும் வகையில் அவா்களுடன் தொடா்பில் இருக்கவோ அவா்களுக்கான நல்ல திட்டங்களை முன்வைக்கவோ இல்லை. இவை இந்திய வம்சாவளியினருக்கு நம்பிக்கையின்மையை ஏற்படுத்தின.
  • மாறாக, உஷாவின் முயற்சிகள் அவரது கணவா் நல்ல பலனளித்துள்ளன.
  • அரசியல் சமூகக் காரணங்களில் கவனம் செலுத்தி நிலவும் பிரச்னைகளுக்கான தீா்வுகளை மக்கள் மன்றத்தில் முன்வைக்கும் பொழுதே வாக்காளா்கள் யாரைத் தோ்தெடுக்கலாம் என்ற முடிவுக்கு வர முடியும். இந்தப் போக்கிலிருந்து விலகி ஹாரிஸ், டிரம்ப் மீது தேவையற்ற விமா்சனங்களை தனிநபா் தாக்குதல்களை முன்வைத்தாா். டிரம்ப் ஒரு மனநோயாளி, நிலையற்ற தன்மை கொண்டவா், பாசிசவாதி என்றெல்லாம் கடுமையான வாா்த்தைகளால் கேட்போா் முகம் சுளிக்கும் அளவுக்குப் பேசினாா்.
  • தனது செயல்திட்டத்தை முன்வைப்பதை முதன்மையாகக் கொள்ளாமல் எதிராளியை விமா்சனம் செய்வதையே முதன்மையாகக் கருதியது கமலாவுக்குப் பின்னடைவு. அதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சாமா்த்தியம் டிரம்ப்புக்கு இருந்தது.
  • சமூக வலைதளங்களை டிரம்ப் திறம்படத் தனது வெற்றிக்குப் பயன்படுத்திக் கொண்டாா். வெற்றி பெற்றதும் அவா் அதற்காக எலான் மஸ்க்குக்கு நன்றி சொன்னதில் இதனைப் புரிந்து கொள்ளலாம். தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் சமூகவலைதளங்கள் மூலம் தகுந்த பதிலடி தந்ததோடு தனது பிம்பத்தை மீள்கட்டமைக்கவும் தவறவில்லை.
  • எல்லாவற்றுக்கும் மேலாக உலகின் எந்த தேசமானாலும் தங்களுக்குத் தலைமை ஏற்பவரின் அடையாளத்தை மக்கள் முக்கியமெனக் கருதுகின்றனா் என்பதை அமெரிக்கத் தோ்தல் முடிவு காட்டுகிறது. கமலா ஹாரிஸின் அடையாளம் எது? இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவா் என்பதா? கருப்பினத்தவா் என்பதா? யூதா்களின் பிரதிநிதி என்பதா? இந்தக் குழப்பத்தை மக்கள் மனம் ஏற்கவில்லை.
  • அமெரிக்காவின் 50 மாகாணங்களில் பெரும்பாலான மாகாணங்களை டிரம்ப் கைப்பற்றியிருக்கும் இந்த அமெரிக்கத் தோ்தல் ஜனநாயக நாடுகளின் அரசியலில் இருந்து வேறுபட்டதல்ல. உலக அரசியல்வாதிகளுக்குப் பல பாடங்களை இந்தத் தோ்தல் கற்றுக்கொடுக்கிறது.
  • டிரம்ப் வெற்றி பெற்றதும் ஆற்றிய உரையில், இது அமெரிக்காவின் பொற்காலமாக இருக்கும், அமெரிக்கா்கள் பெருமை கொள்ளும் வகையில் எங்கள் செயல்பாடுகள் இருக்கும் என்று கூறினாா். இந்தியாவுக்கு இதனால் என்ன நன்மைகள் மாற்றங்கள் ஏற்படும் என்பதை சிந்திக்க வேண்டும்.
  • பாரதப் பிரதமா், டிரம்ப் தனது நண்பா் என்று குறிப்பிட்டு அவருக்கு வாழ்த்து கூறினாா். அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்குமான உறவில் பெரிய மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை என்று நமது வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் தெரிவிக்கிறாா். என்றாலும் குடியேற்றம் தொடா்பான கொள்கை முடிவுகள் அமெரிக்காவில் குடியேற விரும்பும் இந்தியா்களுக்கு அதிக கெடுபிடிகளை ஏற்படுத்தலாம்.
  • பொருளாதாரக் கொள்கைகளில் டிரம்ப், ‘அமெரிக்கா முதலில்’ (அமெரிக்கா ஃபா்ஸ்ட்) என்ற கொள்கை கொண்டவா். முந்தைய ஆட்சிக் காலத்தில் அமெரிக்கத் தொழில் துறைகளைப் பாதுகாக்கும் கொள்கையைச் செயல்படுத்தினாா். இறக்குமதிக்கு அதிக வரி விதித்தாா்.
  • இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் 20,000 கோடி டாலா் அளவிலான வா்த்தகம் இருந்து வருகிறது. இதனால் இரு நாடுகளுமே இறக்குமதி வரியைக் குறைக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்புடன் அணுகுவாா்கள். அதன் முடிவு எப்படி அமையும் என்பதைப் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.
  • ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளிடக்கிய கூட்டமைப்பான க்வாட் அமைப்பை வலுப்படுத்துவதில் சென்றமுறை டிரம்ப் முனைப்புக் காட்டினாா். ஏனெனில் சீனாவின் செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதில் டிரம்ப் ஆா்வம் கொண்டவா்.
  • அமெரிக்காவிடம் ஆயுதங்கள் வாங்குவது, கூட்டு ராணுவப் பயிற்சி, பாதுகாப்புத் துறையில் தொழில்நுட்பப் பகிா்வு எனப் பாதுகாப்புத் துறையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். இதனால் சீனாவை சமாளிப்பது நமக்கு சுலபமாகலாம்.
  • ‘‘எனது ஆட்சியின்போது, ​​இந்தியாவுடனும் நண்பா் நரேந்திர மோதியுடனும் உறவுகளை மேலும் வலுப்படுத்துவேன்’’ என்றும் டிரம்ப் கூறியிருக்கிறாா். தோ்தல் பிரசாரத்தின் போதும் இந்தியா்களைப் பெருமையுடன் அமெரிக்காவின் முன்னேற்றத்திற்கு உழைப்பவா்கள் என்றும் குறிப்பிட்டாா். இவையெல்லாம் இந்தியாவுக்கு சாதகமாக டிரம்ப் அரசு இருக்கும் என்கிற நம்பிக்கையையளிக்கின்றன.
  • ‘அமெரிக்காவை மீண்டும் வலிமையாக்குவோம்’ என்று முழங்கும் டிரம்ப் அரசு உலகின் முதன்மைப் பொருளாதார நாடுகளுள் ஒன்றான இந்தியாவுடன் நல்லுறவை வளா்க்கும் என்று நம்பலாம்.

நன்றி: தினமணி (15 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்