TNPSC Thervupettagam

டெல்லியில் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்

April 16 , 2021 1378 days 653 0
  • “ஜனநாயகத்துக்குச் சூட்டப்படும் புகழ் மாலைகளுக்கு அடிநாதமாக இருப்பது யாரென்றால் சிறிய பென்சிலுடன், சிறிய வாக்குச்சாவடிக்குள் நுழைந்து, சிறிய பெருக்கல் குறியை, ஒரு சிறிய தாளில் வரைந்து தன் வாக்கைச் செலுத்தும் அந்தச் சிறிய மனிதர்தான்.”
  • இந்த மறக்க முடியாத வாசகம் பிரிட்டனின் அந்நாளைய பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலுடையது, அதைத்தான் உச்ச நீதிமன்றமும் சமீபத்தில் வழிமொழிந்திருக்கிறது.
  • அது கூடவே சிலவற்றையும் சொல்லியுள்ளது: “ஆள்பலத்தின் மூலமோ, தங்கள் கருத்துப்படி தாங்களாகவே முடிவுசெய்யலாம் என்று சிறிது அதிகாரம் சிறிது காலத்துக்கு வழங்கப்பட்டவர்கள் அதைச் சூட்சுமமான வக்கிரத்தோடு பயன்படுத்துவதன் மூலமாகவோ அந்தச் சிறிய, மகத்தான இந்தியர் சுதந்திரமான, நியாயமான தேர்தல் தடத்திலிருந்து கடத்தப்பட்டுவிடக் கூடாது.”
  • தேசியத் தலைநகர் பிரதேச (திருத்த) சட்டம், 2021 நாட்டின் தலைநகரின் சிறிய, மகத்தான இந்தியர்கள் வாக்குச்சாவடிக்குச் செல்வதைத் தவிர்க்கக்கூடும். ஏனெனில், அவர்களின் வாக்குகள் அர்த்தமற்றதாகிவிடும்.
  • அந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அரசமைப்புச் சட்டம் எதையெல்லாம் செய்யலாம் என்று அதிகாரம் வழங்கியிருக்கிறதோ அதையெல்லாம் அது செய்ய முடியாமல் போகும்.
  • அரசமைப்புச் சட்டத்தின் கூறு 239ஏஏ-வுக்கு உச்ச நீதிமன்றம் விளக்கம் தரும்போது என்ன சொல்லியதோ அதற்கு நேர் எதிர்மாறானதை இந்த மசோதா சொல்கிறது.

யார் அரசு?

  • முதலில், டெல்லி சட்டமன்றத்தால் இயற்றப்படும் எந்தச் சட்டத்திலும் ‘அரசு’ என்ற சொல் வருமானால், அது ‘துணைநிலை ஆளுநரை’யே குறிக்கும் என்கிறது இந்தச் சட்டம்.
  • இரண்டாவதாக, சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் மறுக்கும் அதிகாரத்தையும் புதிய மசோதா துணைநிலை ஆளுநருக்குத் தருகிறது.
  • அவர், அந்த மசோதாவில் இருப்பது சட்டமன்றத்தின் அதிகார எல்லைக்கு உட்படாத விஷயங்கள் என்று கருதினால், அந்த மசோதாவுக்கு ஒப்புதல் மறுத்து அதனைக் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக நிறுத்திவைக்கலாம்.
  • மூன்றாவதாக, அரசு எந்த நிர்வாக நடவடிக்கையையும் எடுக்கும் முன் துணைநிலை ஆளுநரின் கருத்தை, குறிப்பிடப்படும் விஷயங்களில் பெற வேண்டும் என்றும் இந்த மசோதா கூறுகிறது.
  • அரசமைப்புச் சட்டத்துக்கு விளக்கமளிப்பதில் உச்ச நீதிமன்றத்துக்குத்தான் அறுதி அதிகாரம் உள்ளது. அந்த அரசமைப்புச் சட்டக் கூறில் (கூறு 239ஏஏ) திருத்தங்கள் எதுவும் நடைபெற்றுவிடவில்லை.
  • இந்த சட்டக் கூறுக்கு மாறாகப் பேசும் எந்தச் சட்டமியற்றலும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் சட்டவிரோதமானதே.
  • உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையே அப்படி இருக்கும்போது, மசோதாவில் மேற்கொள்ளப்படும் முயற்சியானது சட்டமியற்றல் மூலமாக ஒரு தீர்ப்பை ரத்துசெய்கிறது.
  • அப்படிப்பட்ட முயற்சியானது, தனக்கு இல்லாத நீதித் துறையின் அதிகாரத்தை நாடாளுமன்றம் பயன்படுத்துவதாகும்.
  • தேசியத் தலைநகர் பிரதேச அரசு எதிர் இந்திய ஒன்றிய வழக்கில் (2018) உச்ச நீதிமன்றம் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறது,
  •  “அரசமைப்புத் திருத்தத்தின்படி, 1991 ஆண்டு சட்டம் மற்றும் நடைமுறை விதிகளின் அறிமுகத்தின் மூலம் துணைநிலை ஆளுநர்தான் உள்ளபடியே நிர்வாகி என்று எதிர்மனுதாரர்கள் குறிப்பிடுகிறார்கள்… டெல்லிக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது என்றாலும், எந்தப் புதுவித அவதாரமும் அதற்கு வாய்த்துவிடவில்லை என்றும் வாதிடுகிறார்கள். அந்த வாதமானது அடிப்படையையே, அதாவது, சிறப்பு அந்தஸ்து என்ற கருத்தையே சிதைக்கிறது. எங்கள் கருத்துப்படி அது உண்மையில் துணைநிலை ஆளுநருக்குச் சில அம்சங்களை அலங்காரமாக வழங்குகிறது. தேசியத் தலைநகர் பிரதேசமான டெல்லி முன்பு எப்படி இருந்ததோ அந்த நிலையிலேயேதான் அது தொடர்கிறது என்பதைத்தான் அது சொல்ல வருகிறது.”

தார்மிக உணர்வு

  • அதிகாரத்தைத் துணைநிலை ஆளுநரிடம் குவிப்பதை நீதிமன்றம் விரும்பவில்லை. அமைச்சர்கள் அமைச்சரவையின் முடிவுகளைத் துணைநிலை ஆளுநருக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்ற அளவுக்கு மட்டுமே நீதிமன்றம் செல்கிறது.
  • எந்த முடிவிலாவது துணைநிலை ஆளுநருக்கும் அரசுக்கும் கருத்து வேறுபாடு இருந்தால், அதனைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்க இது வழிவகை செய்கிறது.
  • குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது என்ற அதிகாரம் விதிவிலக்காகவே இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.
  • எல்லாவற்றுக்கும் மேலாக, துணைநிலை ஆளுநர் அரசமைப்புச் சட்டம் பற்றிய தார்மிக உணர்வால் வழிநடத்தப்படுவார், மேலும் முன்கூட்டியே ஒப்புதல் பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை.
  • ஏனெனில், அது பிரதிநிதித்துவ அரசு நிர்வாகம், ஜனநாயகம் ஆகியவற்றின் விழுமியங்களை மதிப்பிழந்தவையாக்கிவிடும்.
  • இந்தக் கருத்து இரண்டு பகுதிகளைக் கொண்டது. சம்ஷீர் சிங் எதிர் பஞ்சாப் மாநிலம் வழக்கில் (1974) துணைநிலை ஆளுநர் போன்ற எந்தத் தனிநபரையும் வணங்கும் தெய்வமாக மாற்றுவதற்கு எதிராகத் தீர்ப்பளிக்கப்பட்டது, அப்படிச் செய்தால் தேர்தல்களெல்லாம் உள்ளீடற்றவையாக மாறிவிடும் என்று அந்தத் தீர்ப்பு எச்சரித்தது.
  • இரண்டாவதாக, குடிமக்களின் குரலுக்கு அங்கீகாரமில்லாமல் போய்விடக் கூடாது. “சட்டத்தை இயற்றுவதற்கும் நடைமுறைப்படுத்துவதற்குமான முகமையானது குடிமக்களின் சுதந்திர விருப்பத்தின் பேரில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை உள்ளடக்கியிருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும்” என்று தேசியத் தலைநகர் பிரதேசமான டெல்லி அரசு எதிர் இந்திய ஒன்றியம் வழக்கில் உச்ச நீதிமன்றம் முழங்கியது.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் அமைச்சர்களும் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள், அவர்கள் தங்கள் கடமைகளைத் திறம்பட நிறைவேற்றுவதற்கான அதிகாரங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தியது.
  • வேறு எந்தப் புரிதலும் நடைமுறைக் கூட்டாட்சித்துவம், கூட்டுறவுக் கூட்டாட்சித்துவம் ஆகியவற்றின் கருத்தாக்கங்களை ஒன்றுமில்லாமல் செய்துவிடும் என்று நீதிமன்றம் கருதியது.

நிர்வாகக் குழப்பங்கள்

  • இருக்கும் சட்டங்களை ஒதுக்கிவிட்டு, பெரும் நிர்வாகக் குழப்பங்களுக்கு வழிவகை செய்யும் விதத்தில், சிந்தனையற்ற இந்தத் திருத்தங்களால் துணைநிலை ஆளுநர்தான் அரசாங்கம் என்று ஆக்கப்பட்டிருக்கிறார்.
  • அழகான ஜனநாயக நடவடிக்கையின் விளைவான அரசாங்கத்துக்குப் பதிலாக ஒன்றிய அரசு நியமனம் செய்யும், அந்த அரசுக்கு விருப்பம் இருக்கும்வரை பதவியில் இருக்கும் ஒரு தனி நபர் இருப்பார்.
  • இந்தச் சட்டம் அத்துடன் நின்றுவிடாமல், எல்லா விஷயங்களையும் குடியரசுத் தலைவரின் முடிவுக்கு அனுப்பும் எல்லையற்ற அதிகாரத்தையும் அந்தத் தனிநபருக்கு வழங்குகிறது.
  • வெளி உலகுக்கு, டெல்லிதான் இந்தியாவின் முகம். தலைநகரில் நிர்வாகம் ஸ்தம்பித்துப்போனால் அது ஒன்றிய அரசுக்குத்தான் அவப்பெயர்.
  • எதுவாக இருந்தாலும், டெல்லியில் உள்ள சிறிய, மகத்தான இந்திய வாக்காளர் ஏமாற்றப்படலாகாது.
  • பங்கேற்பு ஜனநாயகம், கூட்டுறவுக் கூட்டாட்சித்துவம், நாடாளுமன்றத்துக்குப் பதில் சொல்லும் கூட்டுப் பொறுப்பு, எல்லாவற்றுக்கும் மேலாக நாம் மிகவும் போற்றும் அரசமைப்புச் சட்டத்தின் தார்மீகம் ஆகிய கோட்பாடுகளைக் காப்பாற்றுவதற்காக இந்தச் சட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (16 - 04 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்